04. மேற்கணக்கு நூல்களுக்கும் கீழ்க்கணக்கு நூல்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுக?
கணக்கு என்பது முதலில் எண்ணையும் பின்னர் எழுத்தையும் அதன்பின்னர் இலக்கியத்தையும் குறிக்க வழங்கியது. இவ்வகை யிலே மேற்கணக்கு கீழ்க்கணக்கு என நூல்கள் தோன்றின. இரண்டு தொகுதிகளுக்குமிடையில் அதிக வேறுபாடு காணப்பட்டது.
முன் தோன்றியவை என்ற பொருளில் மேற்கணக்கு நூல்கள் என்றும் அவற்றைத் தொடர்ந்து பின் அமைந்தவை என்ற பொருளில் கீழ் கணக்கு நூல்கள் எனவும் இவை பெயர் பெற்றன.
நிமிர்ந்த அடிகளால் ஆகிய பாடல்கள் மேற்கணக்கு என்றும் அடி நிமிர்பில்லாச் செய்யுட்கள் கீழ்க்கணக்கு என்றும் அழைக்கப்பட்டன.
மேற்கணக்கு நூல்கள் சங்க காலத்துக்குரியதாகவும் கீழ்க் கணக்கு நூல்கள் சங்க மருவிய காலத்திற்குரியதாகவும் கொள்ளப்பட்டன.
மேற்கணக்கு நூல்கள் காதலையும் போரையும் சிறப்பாக பாடின. கீழ்க்கணக்கு நூல்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினையும் எடுத்துக்கூறின.
மேற்கணக்கு நூல்களில் செவியறிவுறுத்தலாகவும் பொருண் மொழிக் காஞ்சியாகவும் வாழ்த்தாகவும் அறகருத்துக்கள் ஆங்காங்கே தனிப்பாடல்களில் கூறப்பட்டாலும் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்களாக காணப்பட்டன.
மேற்கணக்கு நூல்கள் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் எனக் கூற கீழ்க்கணக்கு நூல்கள் மக்கள் எப்படி வாழவேண்டும் என எடுத்துக் கூறின.
மேற்கணக்கு நூல்கள் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உலகியல் இன்ப நுகர்ச்சியைக் கூற கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் காலத்தில் அறநீதி ஆசார ஒழுக்கங்களை கூறின.
மேற்கணக்கு நூல்கள் தனிநிலைச் செய்யுட்களாகக் காணப் பட்டன. அவற்றில் குறும்பாடலும் உண்டு. நெடும்பாடலும் உண்டு. கீழ்க்கணக்கு நூல்கள் யாவும் தொடர்நிலைச் செய்யுட்களாக காணப்பட்டன.
மேற்கணக்கு நூல்களில் பெரும்பாலான அகவற்பாவால் ஆக்கப்பட்டன. வஞ்சி. கலிப்பா, பரிபாட்டு முதலான யாப்பு வடிவங்களும் பின்பற்றப்பட்டன. ஆனால் கீழ்க்கணக்கு நூல்கள் யாவும் வெண்பா யாப்பினால் மட்டுமே பாடப்பட்டது.
மேற்கணக்கு நூல்கள் யாவும் பிறமொழிக் கலப்பில்லாத தூய தனித்தமிழ் நடையில் இறுக்கமான மொழிநடையில் அமைந்தன. கீழ்க்கணக்கு நூல்கள் மணிப்பிரவாள நடையில் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக அமைந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக