கிருட்டிணன் தூதுச் சருக்கம்
01. மகாபாரதத்தை சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் யார்? அதனை தமிழில் மொழி பெயர்த்து எழுதியவர் யார்?
சமஸ்கிருத மொழியில் எழுதியவர் வியாசர்
தமிழில் மொழி பெயர்த்தவர் வில்லிபுத்து ஆழ்வார்
02. மகாபாரதத்தில் கிருட்டினன் தூதுச் சருக்கம் எப்பகுதிக்குள் அடங்கியுள்ளது?
உத்தியோகப் பருவத்தின் நான்காவது பிரிவாக கிருட்டினன் தூதுச் சருக்கம் அமைந்துள்ளது
03. கிருட்டினன் தூதுச்சருக்கம் கூறும் பிரதான விடயம் யாது?
வனவாசமும், அஞ்ஞாதவாசமும் முடித்த பாண்டவர்கள் 'உப்பிலவியம்' என்ற ஊரில் இருந்து கொண்டு கண்ணனை துரியோதனிடம் தூது செல்ல அனுப்புகின்ற செய்தயினைக் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.
04. கிருட்டினன் தூதுச்சருக்கம் கூறும் செய்தியினைச் சுருக்கமாக குறிப்பிடுக.
வனவாசமும், அஞ்ஞாதவாசமும் முடித்த பாண்டவர்கள் ஐவரும், திரௌபதியும், கிருட்டினனும், சாத்தகி என்ற அவன் தம்பியும் கூடியிருந்து துரியோதனிடம் தூது போகும் விடயத்தினை கலந்தாலோசித்தல்
தருமன் சமாதானம் பேசுமாறு கேட்டல், சமாதானத்துக்கு துரியோதனன் சம்மதிக்கா விட்டால் அவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுதலே சிறந்தது என கிருட்டினன் கூறுதல்
அதற்குப் பதிலாக தருமன் அறநெறிகளைக் கூறுதல், அதனைக் கிருட்டினன் மறுத்துக் கூறுதல் கிருட்டினனை தூது செல்லுமாறு தருமன் வேண்டல், தருமனின் உரையை தம்பியாகிய வீமன் மறுத்துரைத்தல், வீமனை அமைதிப்படுத்தி மேலும் தருமன் சமாதானம் உரைத்தல்
தருமனின் வார்த்தைக்கு உடன்படாத வீமன் போரை வலியுறுத்தி தன்னை துரியோதனிடம் தூதனுப்புமாறு கூறுதல் போன்ற செய்திகளைக் குறிப்பிடப்படுகின்றது.
05. பாண்டுவின் புதல்வர்கள் யாவர்? அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
தருமன், வீமன், அருச்சுணன், நகுலன், சகாதேவன் பஞ்சபாண்டவர்கள் என அழைக்கப் படுகின்றனர்
06. திருதராட்டினன் புதல்வர்கள் யாவர்? அவர்கள் எவ்வாறு அழைக்கப் படுகின்றனர்?
துரியோதனனும் அவனது சகோதரர்கள் நூறுபேரும் கௌரவர்கள் என அழைக்கப் படுகின்றனர்
07. இப்பகுதியில் கிருட்டினன் எனக் குறிப்பிடப் படுபவர் யார்?
தேவர்களின் தலைவனாக விளங்குகின்ற கண்ணன்
08. இப் பகுதியில் கிருஷ்ணன் துரியோதனனிடம் தூதாக சென்று எவற்றை வேண்டுமாறு தருமன் கூறுகின்றான்?
துரியோதனனிடம் கிருஷ்ணனை தூது அனுப்ப முடிவு செய்த பாண்டவரில் மூத்தவனான தருமன் அஸ்தினாபுரம் சென்று துரியோதனனிடம் பின்வருவனவற்றை வேண்டுமாறு கூறுகின்றான்.
உழவரின் இல்லங்களின் முற்றங்களில் சங்குகள் தவழுகின்ற நீர்வளம் மிக்க குரு நாட்டின் பாகத்தை அளிக்குமாறு வேண்டுதல்
அதனை துரியோதனன் தர மறுத்தால் பாண்டவர் ஜவருக்கும் ஜந்து ஊர்களை தருமாறு வேண்டுதல்.
அவற்றையும் துரியோதனன் தர மறுத்தால் பாண்டவராகிய தமக்கு ஐந்து இல்லங்களையாவது தருமாறு வேண்டுதல்.
இவை எதனையும் துரியோதனன் தர மறுத்தால் இரு பக்கத்தவர்களும் மோதுகின்ற கொல்வதற்குரிய போரினை வேண்டுமாறும் தருமன் கிருஷ்ணனிடம் கூறுகின்றான்.
09. கிருட்டினனை தூது அனுப்புவதற்கு தருமன் உடன் பட்டமைக்கான காரணங்கள் யாவை?
துரியோதனனிடம் பாண்டவருக்கான இராட்சியத்தை வழங்கும் படியும் அவனது இறுதியான முடிவினையும் கேட்டு வரும் பொருட்டும் துாது அனுப்பும் முயற்சியில் தருமன் இறுதியில் கிருஷ்ணனையே தூது அனுப்ப முடிவு செய்கின்றான். அதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்
தர்மம், நீதி என்பன பற்றி நன்கு அறிந்தவன் கிருஷ்ணன்.
பாண்டவர் நலனில் மிகுந்த அக்கறை உடையவன் கிருஷ்ணன்.
அனைவருக்கும் நீதியை எடுத்துரைப்பதில் வல்லவனாக திகழ்பவன்
கிருஷ்ணனின் வார்த்தைகளை துரியோதனன் மறுக்கமாட்டான் என்பது தருமன் எண்ணம்.
சாம, பேதம், தான, தண்டம் என்பவற்றில் தேர்ச்சியுடையவன் கண்ணன்
கொடுமையான போரினால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதனால் சமாதானம் கொண்டு கௌரவர்களும் பாண்டவர்களும் குருநாட்டில் சேர்ந்து வாழ வழிசெய்யும் வகையில் கண்ணனை தருமன் தூது அனுப்ப முற்படுகின்றான். இதனை
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால்...
கயிரவமும் தாமாரையும் கமழ்பழனக் குருநாட்டில்
கலந்து வாழ உயிர் அனையாய் சந்துபட
உரைத்தருள் என்றான் அறத்தின் உருவம் போல்வான்..."
போன்ற பாடல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
10. இப்பகுதியிலே தருமனின் சமாதான மனப்பாங்கு,
பொறுமை என்பன எவ்வாறு வெளிக்காட்டப் பட்டுள்ளது?
கிருஷ்ணன் தூதுச்சருக்கம் எனும் இப்பகுதியில் தருமனது சமாதானத்தை விரும்பும் மனநிலையும். அவனது பொறுமையும் அழகுற வெளிப்படுகின்றது. போரினால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப்பார்த்து குரு இராட்சியத்தில் தமக்கான பங்கினை சமாதானமாக பெறுவதற்கு முற்படுகின்றார் தருமன். இவ்வாறு தருமனது பொறுமையும் சமாதான மனப்பாங்கும் வெளிப்படும் தன்மையினை இங்கு நோக்குவோம்.
போர் புரியாது குருநாட்டில் கௌரவர்களுடன் ஒன்றாக கலந்துவாழ விரும்பியவன். சான்றோர்களையும் உறவினர்களையும் ஒரு குலத்து சகோதரர்களையும் கொன்று ஆட்சியை பெறுவதை காட்டிலும் காட்டில் சென்று வாழ்வதே மேல் என கருதியவன்.
பகைமையான கொடிய தீயினை மூட்டி வளர்த்தால் மூங்கில் காடு தானே அழிவதைப் போல கடுமையான கோபத்துடன் போர் செய்தால் நாமும் கௌரவர்களும் இறந்துவிடுவோம். ஆதலால் இருவரும் கூடி வாழும்படி தூது செல்வாயாக என்று கிருட்டினனை வேண்டுதல்
குளிர்ச்சி பொருந்திய குருநாடாகிய அஸ்தினாபுரியை பெறும் பொருட்டு கிருஸ்ணனை சமாதான தூது அனுப்ப முடிவுசெய்தவன்
முதலில் சமாதானத்தை மேற்கொண்டு அது நிறைவேறாத சந்தர்ப்பத்தில் போர் செய்வது பழியை ஏற்படுத்தாது எனக் கருதியவன்
துரியோதனனிடம் படிப்படியாக தமக்குரிய ஆட்சி உரிமையை வேண்டும் படி கிருஸ்ணனிடம் வேண்டுகின்றான்
குருநாட்டின் பாகத்தை தருமாறு வேண்டுதல், ஐந்து ஊர்களை தருமாறு வேண்டுதல், ஐந்து இல்லங்களை தருமாறு வேண்டுதல் இது தருமனின் பொறுமையினை வெளிப்படுத்தும் சிறப்பான இடமாகும்
வீமன் கோபம் கொண்டு போரினை வலியுறுத்தி உரைக்கும் போது அவன் மீது கோபம் கொள்ளாது அவனை சமாதானப்படுத்தியவன்
பெரிய நாட்டின் காரணமாக போர் செய்வது இரு பக்கத்தவர்களுக்கும் பெரும் பழியை ஏற்படுத்தும் என பணிவாக வீமனுக்கு உரைத்தவன்.
மேலும் தமக்கு துன்பம் இழைத்த துரியோதனன் முதலிய கௌரவர்களையும் தம்முடன் பிறந்த தம்பியராய் கருதி அவர்கள் அன்று சபையில் செய்த செயல்களை அவமானமாக கருதக்கூடாது என்பதை வீமனுக்கு உரைத்தவன்.
போர் தொழிலானது மன்னர் குலத்தவர்களின் இறுதி உபாயமாகவே விளங்க வேண்டும் என்பதும் தருமனின் பொறுமையை வெளிக்காட்டும் கூற்றாகும். இவ்வாறு தருமனின் பொறுமையானது இப் பகுதியின் வாயிலாக சிறப்புற வெளிப்படுத்தப் படுகின்றது.
11. இப்பகுதியிலே வீமனது வீர வார்த்தைகள்,
வெஞ்சின உணர்வுகள் எவ்வாறு வெளிக்காட்டப்பட்டுள்ளது?
பாண்டவர்களில் இரண்டாமவனும் பெரும் பலம் பொருந்தியவனும் வாயுவின் மைந்தனுமாகிய வீமனது வீரம் அல்லது வெஞ்சினம் வெளிப்படும் தன்மை பற்றி வில்லிபுத்தூராழ்வார் இங்கு அழகுற எடுத்துக் காட்டியுள்ளார். அதனை பின்வருமாறு எடுத்து நோக்கலாம். போர் புரியாது சமாதானமான முறையில் தமக்குரிய ஆட்சி உரிமையை பெறுவதற்கு தருமன் விருப்பங்கொண்டு கிருஷ்ணனை சமாதானத்தூது அனுப்பும் வகையிலான சமாதானமான வார்த்தைகளை கேட்ட அத்தருமனது இரண்டாவது தம்பியும் மிகுந்த வலிமை உடையவனுமாகிய வீமன் அண்ணனின் சமாதான வார்த்தைகளை வெறுத்து போரினை வலியுறுத்தி கோபமான வார்த்தைகளை கூறுகின்றான். தருமனின் சமாதானப் பேச்சினை கேட்டு தன் உள்ளத்தில் அடக்க முடியாத கோபமானது அதிகரிக்க குற்றமில்லாத சொற்கள் குளறும் படியாக சினம் கொண்டான். என்பதனை
"மூத்தோன் இவ்வாறு உரைப்ப இளையோன் வெஞ்சினம் மனத்திலே மூளமூள
நாத்தோம் இல் உரை பதற...." எனும் பாடலடிகள் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்.
அதாவது தமக்கு ஏற்பட்ட அவமானங்களை மறந்து சமாதானத்தை விரும்புகின்ற தருமனை மானமில்லாதவன் இவ்வாறு உரைப்பதற்கு என்ன செய்வது என வீமன் கண்ணனிடம் கூறுகின்றான். இதுவும் வீமனின் கோபத்தின் வெளிப்பாடேயாகும். மேலும் வீமன் கோபம் கொண்டு தருமனை நோக்கி பின்வரும் கோப வார்த்தைகளை உரைக்கின்றான்.
திரௌபதி சபையில் துகிலுரியப்படும் வேளையில் வெட்கமடைந்து அழுது எம்மிடம் முறையிட்ட போது தனித்தனியாக எம் நால்வரையும் (வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்) கோபிக்க வேண்டாம் என தடுத்தாய். அச் செயலால் எமக்கும் எம் குலத்துக்கும் தீராத பெரும் பழியை ஏற்படுத்தி விட்டாய்.
கொடிய காட்டிலே பன்னிரண்டு ஆண்டுகள் கழித்த பின்னரும் ஓராண்டு மறைந்து வாழ்ந்த காலப்பகுதி (அஞ்ஞாதவாசம்) என்பன நீங்கிய பிறகும் பகைவர்களான துரியோதனாதியர்களை கொல்வதற்கு பின் நிற்கின்றாய். என வீமன் தருமனை நோக்கி கோபத்துடன் இவ்வார்த்தைகளை உரைக்கின்றான். மேலும் தம்மை காட்டிற்கு அனுப்பிய துரியோதனனை போரிலே கொன்று அவன் நம்மிடம் இருந்து பெற்றுக்கொண்ட நாடு மற்றும் செல்வங்கள் அனைத்தையும் பெற்றுத்தருவதுடன் துரியோதனன் வெறுப்படையா வண்ணம் அவனுக்கு இந்திரனின் தலைநகராகிய அமராவதி நகரை வழங்குவேன் என தன் வீரத்தினை வெஞ்சினமாக வீமன் வெளிப்படுத்துகின்றான்.
இது மட்டுமன்றி தருமனை நோக்கி அவன் செய்து முடிக்கவேண்டிய விடயங்களை நினைவுபடுத்தும் வகையில் அவை அனைத்தையும் செய்து முடித்து விட்டான் என மறைமுகமாக அதாவது வஞ்சகப் புகழ்ச்சியாக தன் கோபத்தினை வெளிப்படுத்துகிறான். அவற்றை நோக்கும் போது,போரினை முடித்துவிட்டான், திரௌபதியின் அவிழ்ந்த கூந்தலை முடிந்து விட்டான், அன்று அஸ்தினாபுர சபையில் தம்பியர் செய்த சபதங்களை நிறைவேறச் செய்துவிட்டான், நிலைத்து நிற்கின்ற பழியற்ற பெரும் புகழைப் பெற்றுவிட்டான்.
இவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமாயின் போரானது நிகழவேண்டியது அவசியம் என்பதையும் வீமனது கோபம் உணர்த்துகின்றது. இதனை
போர் முடித்தான் அமர் பொருது புலம்புறு சொல்
பாஞ்சாலி புந்தண் கூந்தல் கார் முடித்தான்..." எனும் பாடல் விளக்குகின்றது.
மேலும், வீரம் கொண்டு இருபக்கத்து படைகளும் அணிவகுத்து வரும் போரில் துரியோதனனுக்கு துணையாக வருகின்ற அரசர்களை கொன்று எமது பகையை அழித்து எமக்குரிய ஆட்சி உரிமையுடைய நாட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். எனவும் தருமனிடம் கோபம் கொண்டு வீமன் உரைக்கின்றான்.
அணிந்து வரும் சமரில் எதிர்த்து அரவு உயர்த்தோனுடன்
அரசர் உடலம் எல்லாம் துணிந்து இரண்டு படப் பொருது..."
இவ்வாறு கிருஷ்ணன் தூதுச் சருக்கம் எனும் இப்பகுதியின் வாயிலாக வீமனது கோபமும் ஏற்பட்ட அவமானத்திற்கு பழி தீர்க்கும் வகையில் போரினை விரும்பும் அவனது மனநிலையும் கண்ணன் மீது கொண்ட பக்தியும் இங்கு தெளிவுறுகின்றது.
12. இப்பகுதியிலே வெளிப்படும் கிருட்டினனின் பெருமைகள்,
சிறப்புக்கள் என்பவற்றைக் குறிப்பிடுக?
கிருட்டிணன் தாதுச்சருக்கத்தில் கிருஷ்ணனது பெருமைகள் வெளிப்படுவதை இப் பகுதியில் காணலாம். மகாபாரதத்தின் பிரதான பாத்திரங்களில் ஒன்றாக விளங்குவது கிருஷ்ணன் எனும் பாத்திரமாகும். அத்தகைய கிருஷ்ணனது பெருமைகளை பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.
இந்திரன் உட்பட்ட (முப்பத்து முக்கோடி) தேவர்களின் தலைவனாக தேவாதி தேவனாக விளங்குபவன். "அருள் புரிந்தான் அமரர் கோமான்...
எமக்கெல்லாம் தலைவனாக விளங்குபவன். "கடன் என்றான் எம்பிரானே.
மிகுந்த மாயை உடையவன். மாயங்கள் புரிவதிலே அசுரர்களை விடவும் வல்லமை கொண்டவன். ஆகையால் மாயவன், மாயோன் எனவும் பெயர்களை பெறுகின்றவன். "மாமாயன் கூறல் உற்றான்..."
குவலயபீடம் எனும் யானையின் கொம்பினை ஒடித்தவன். செங்கண் மாலே..." சிந்துரத்தின் மருப்பு ஒசித்த
சிவந்த கண்களையுடையவன் என கூறப்படுபவன். செங்கண் மாலே..."
உலகம் முழுவதையும் தனது நாபிக்கமலத்தில் (கொப்பிழிலிருந்து) இருந்து உண்டாக்கியவன். "ஞாலம் எல்லாம் தீத்தோனே..."
செந்தாமரையில் வீற்றிருக்கின்ற திருமகளாகிய மகாலட்சுமி விருப்பமுடன் அமர்ந்திருக்கின்ற. உறைந்திருக்கின்ற மார்பினை உடையவன் கௌத்துபம் எனும் மணியை அணிந்த மார்பினை உடையவன். "தீத்தவிசில் தீவை புணர் மணி மார்பா..."
அடியவர்களின் துன்பங்களை எல்லாம் நீக்கி அருள்கின்றவன். - "புன்மை யாவும் தீர்த்தோனே...
சிவபிரானது இரத்தல் தொழிலை (பிச்சைத் தொழில்) இல்லாமல் செய்தவன்/இல்லாது ஒழித்தவன். கடவுள் கங்கை நீர் முடித்தான் இரவு ஒழித்த நீ அறிய..."
தனது திருமுடியில் வாசணை மிகுந்த துளசி மாலையை சூடியிருப்பவன்/அணிந்திருப்பவன். சூடுகின்ற துழாய் முடியோன்..."

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக