இளமை பாரார் வினாவிடை
1. இச் செய்யுளில் ஆசிரியர் கூறவந்தது யாது?
கார்காலத்தில் மீண்டு வருவேன் என்று பொருள் தேடச் சென்ற தலைவன், குறித்த காலம் வந்தும் அவன் வராமை கண்டு தலைவிக்கு ஏற்பட்ட துன்பம்.
2. இதனை ஆசிரியர் எவ்வாறு வெளிப்படுத்துகின்றார்?
☆ தனது பிரிவுத் துன்பத்தை தோழிக்கு கூறுவது போலக் கூறல் .
☆ தலைவன் வருவதாக கூறிய கார்காலத்தை அறிமுகப் படுத்தி, முல்லையின் அரும்புகளை பற்களாகக் கொண்டு கார்காலம் சிரித்து ஏளனப்படுத்துவதாக கூறல் .
☆ உவமையணியினூடாகவும் வெளிப்படுத்தல்.
3. கார்காலம் தன்னைப் பார்த்து சிரிப்பதாக தலைவி கூறுவதனூடாக நீர் அறிந்து கொள்வது என்ன?
இளமை நிலையில்லாதது. அதனை மீளப் பெறமுடியாது. பொருள் எக்காலத்தும் தேடக்கூடியது. இளமைக்காலம் கழிந்தபின் வாழ்க்கை என்ன பயனுடையது. உன் தலைவர் சொன்ன காலத்தில் வரவில்லை. அவர் எங்குள்ளாரோ? என்று கேட்டு தலைவியை ஏளனம் செய்கிறதாம் கார்காலம் என்னும் பெண் சிரித்து ஏளனம் செய்ய பயன்படுத்தும் பற்களாக முல்லைப்பூக்கள் காணப்பட்டன.
4. இச் செய்யுளில் இடம்பெற்ற அணி யாது?
உவமை அணி :
முல்லையில் அரும்புகள் தோன்றுதல் கார்காலம் சிரிப்பது போல உவமிக்கப்பட்டது.
உருவக அணி :
முல்லை அரும்புகள் கார்காலத்தின் பற்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.
5. இச் செய்யுளில் இடம்பெற்ற அகப்பொருள் மரபினை எடுத்துக் காட்டுக?
☆ இச் செய்யுள் அகப்பொருள் மரபில் அன்பின் ஐந்திணைக் குரியதாகும்.
☆ முதல் கரு உரிப் பொருள்கள் பின்பற்றப்பட்டுள்ளன.
☆ அன்புடைக் காமப் பாடல்கள் கூற்றுக்களாக அமைவது போல இச் செய்யுள் தலைவி கூற்றாக அமைந்துள்ளது.
☆ தலைவன் தலைவியினது பெயர் சுட்டப்படவில்லை.
☆ பிறமொழிக் கலப்பில்லாத தூய தமிழ் சொற்களால் ஆக்கப்பட்டது.
6. இச் செய்யுளில் இடம்பெற்ற முதல், உரி, கருப் பொருள்களை எடுத்துக்காட்டுக?
முதற்பொருள் நிலமும் பொழுதும்
நிலம் - முல்லை
பொழுது கார்காலம்; சிறுபொழுது மாலை
கருப்பொருள் - முல்லைக்கொடி, அதன் அரும்புகள்
உரிப்பொருள் - இருத்தல்
7. இச் செய்யுளில் வெளிப்படும் சமூக நிலைப்பாடு பற்றி குறிப்பிடுக?
i. பொருளீட்டுவதற்காக தலைவன் பிற ஊர் செல்வது ஓர் சமூக வழக்கமாகும்.
ii. இளமை நிலையில்லாதது என்பது எடுத்துக்காட்டப் பட்டுள்ளது.
8. இச் செய்யுளில் தலைவனின் வருகை தாமதித்தது தொடர்பாக தலைவி அடைந்த துன்பத்தைத் துலக்குக?
கார்காலத்து மழை பெய்தவுடன் முல்லைக் கொடிகள் செழித்து அரும்பு ஈன்று விளங்குவது மற்றவர்களுக்கு அழகான காட்சியாக இருக்கும். ஆனால் அந்தக் கார்காலத்தின் புதிய அழகினை நுகரமுடியாமல் தலைவனை நினைந்து ஏங்கும் தலைவிக்கு அது வருத்தமாகவுள்ளது. இளமை நிலையில்லாதது. அது போனால் அதனைத் திரும்பப்பெறமுடியாது. தலைவன் பிரிந்து சென்றது பொருள் காரணமாக வரும் வளமான வாழ்க்கையை யான் விரும்பவில்லை. கார்காலம் அவன் இவ்விடத்து வரவில்லை. எவ்விடத்து உள்ளானோ என்பதில் தலைவியின் ஏக்கம் வெளிப்படுகின்றது. இளமையின் அருமைப்பாட்டை அவர் எண்ணிப்பார்க்கவில்லை. முல்லைக்கு மழையைக் கொடுத்த மேகங்கள் தனக்கு இப்பொழுது பகையாய் வந்துவிட்டதே என்று வருந்துகிறாள். இந்தக் கார்காலம் தன் செழுமைச் செருக்கினால் என் வாட்டத்தைக் கண்டு எள்ளிநகைக்கின்றது. அதோ அந்த முல்லை அரும்புகள் கார்காலத்தின் பற்கள். அந்தப் பற்களைக் காட்டிச் சிரிப்பது எனக்கு துன்பத்தை கொடுக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக