கன்று தன் பயமுலை
பாடல் :- கன்று தன் பயமுலை
பாடியவர் :- கபிலர்
திணை :- குறிஞ்சி
துறை :- வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. அதாவது திருமணம் செய்வேன் என்று கூறிப் பிரிய முயன்ற தலைவனுக்கு திருமணத்தை உறுதி
செய்யுமாறு கடிந்து தோழி கூறியது.
பாடல் :
கன்று தன் பயமுலை மாந்த முன்றில்
தினை பிடி யுண்ணும் பெருங்கல் நாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்தமையா யாயின் மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலி மென் கூந்த லுரியவால் நினக்கே.
பதவுரை :
கன்று தன் பயமுலை மாந்த - (யானையின்) கன்றானது தாயின் முலையிலிருந்து பாலைக் குடிக்க; முன்றில் தினை பிடி உண்ணும் - வீட்டு முற்றத்தில் வளர்ந்துள்ள தினைப் பயிரை அப் பெண்யானை உண்ணும்; பெருங்கல் நாட இத்தகைய பெரிய மலைகளை உடைய நாட்டின் தலைவனே; கெட்ட இடத்து உவந்த உதவி - தான் பலமிழந்த காலத்தில் மகிழ்வுடன் பிறரின் உதவி பெற்று; கட்டில் வீறு பெற்று அரசு கட்டில் சிறப்புடன் ஏறப்பெற்று; மறந்த மன்னன் போல் - தனக்கு உதவி செய்தவர்களை மறந்திடும் மன்னனைப் போல; நன்றி மறந்து அமையாய் ஆயின் நீ நன்றி மறந்தவனாக அமையவில்லையாயின்; மென்சீர் மெல்லிய அழகினை உடைய; கலி மயில் கலாவ ஒலிக்கின்ற மயிலின் தோகை போன்ற; இவள் ஒலி மென் கூந்தல் - தலைவியின் அடர்ந்த மெல்லிய கூந்தல்; உரியவால் நினக்கே உரிமை உடையதாகும். உனக்கே
அருஞ்சொற்கள் :
மாந்த - குடிக்க;
முன்றில் - முற்றம்;
வீறு - சிறப்பு;
சீர் - அழகு;
கலி - ஒலி;
கலாவம் - தோகை;
ஒலி - அடர்ந்த/ தழைத்த
பொருள்:
யானைக் கன்று தாயின் முலையில் இருந்து பாலைக் குடிக்க வீட்டு முற்றத்தில் வளர்ந்துள்ள தினைப் பயிரை அப்பெண் யானை உண்ணும் பெரிய மலைகளை உடைய நாட்டின் தலைவனே, தனக்கு கேடு வந்த காலத்தில் மகிழ்வுடன் பிறரின் உதவியைப் பெற்று அரசு கட்டில் சிறப்புடன் ஏறப்பெற்று பின்னர் தனக்கு உதவி செய்தவர்களை மறந்திடும் மன்னனைப் போல நீ நன்றி மறந்தவனாக அமையவில்லையாயின் மெல்லிய அழகினை உடைய ஒலிக்கின்ற மயிலின் தோகை போன்ற தலைவியின் அடர்ந்த மெல்லிய கூந்தல் உனக்கே உரியதாகும்.
விளக்கவுரை :
கன்று பசியால் வருந்தாதபடி பாலை ஊட்டிக்கொண்டே தனக்கு வேண்டிய தினையையும் பிடி உண்ணுகின்றது. தலைவியும் பிரிவுத்துன்பம் உழவாதவாறு அருள் செய்து கொண்டே வரைவிற்கு வேண்டிய பொருளை ஈட்டிக் கொள்வாயாக என்னும் குறிப்புப்பொருள் உடையது. மேலும் காலத்தை நீட்டிக்கும் வகையில் தங்கிவிடாமல் விரைவாக வந்து திருமணம் செய்து கொள்வாயாக. முற்றத்தில் வளர்ந்த தினை என்பது வரை பொருள் நிமித்தம் தூர இடம் செல்ல வேண்டாம் என்பதையும் உணர்த்தியது.
ஒரு மன்னன் தனது அரசு கட்டிலை இழந்து விடும்படி கேடுற்ற பொழுது பிறர் தாமே வலிய வந்து உதவி செய்து அவ்வரசுரிமையை அவனுக்கே உரியதாக்கினர். அரசுரிமை பெற்ற பின்னர் அவ்வுதவியை மறந்துவிட்ட மன்னனைப் போல நீயும் யாம் செய்த உதவியை மறந்துவிடலாகாது. அதுபோல நன்றியை மறந்து அவ்விடத்தே தங்கிவிடாது மீண்டுவந்து வரைந்து கொள்வாய். மறப்பீராகையால் இவள் இறந்துவிடுவாள் என்பதையும் குறிப்பால் உணர்த்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக