இலக்கிய விமர்சனம்
வினாவிடை
1. இலக்கிய விமரிசனம் என்ற கட்டுரையில் ஆசிரியர் கூறவந்த விடயம் என்ன?
இலக்கிய விமரிசனம் ஒரு கலை என்றும் அது மனித அனுபவத்தைக் கூறவேண்டுமேயன்றி காட்சிப் பொருளை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்றும் உண்மையும் தீரமும் உறுதியும் படைத்த இலக்கிய விமரிசனமே தமிழுக்கு தேவை என்பதே ஆசிரியர் கூறவந்த விடயமாகும்.
2. அதனை எவ்வாறு எடுத்துரைக்கின்றார் என்பதை புலப்படுத்துக?
இலக்கியப் பரிச்சயமுள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்த நக்கீரன் கதையை அறிமுகப்படுத்தி எடுத்துரைத்தல்.
வாசகரோடு நேரடியாக எடுத்துரைத்தல். உரையாடும் பாங்கில்
கட்டுரையை விரித்துரைப்பதற்கு இலக்கிய, இலக்கண, உரையாசிரியர்களின் மேற்கோள்களுடன் தர்க்கரீதியாக எடுத்துரைத்தல்.
விமரிசனக் கலையை வகைப்படுத்தி எடுத்துரைத்தல்.
இலக்கியத்தின் பெருமையை உணர்த்துவதற்கும் அதனை அனுபவிப்பதற்கும் விமரிசனம் அவசியமானது என எடுத்துரைத்தல்.
3. கொங்குதேர் வாழ்க்கை என்ற செய்யுளில் நக்கீரனின் குற்றம் குற்றமே என்ற விமரிசனம் தவறானது என்பதற்கு ஆசிரியர் கூறும் நியாயங்கள் எவை?
நக்கீரன் இலக்கியத்தின் இயல்பை உணரவில்லை.
பாடல் மனித அனுபவத்தைக் கூறியதுது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை.
காட்சிப் பொருளை காட்சிப் பொருளாக அல்ல கருத்தை எழுப்பிய கருவியாகவே இலக்கியம் பேசும் என்பதையும் அவர் அறியவில்லை.
உள்ளத்தில் எழும் பல்வேறு சிந்தனைகளை உணர்ச்சி களை பாவனைகளையே இலக்கியம் சித்திரிக்கின்றது.
4. இலக்கிய விமரிசனம் தொடர்பாக பழைய இலக்கண ஆசிரியர் களின்
கொள்கைகள் எவை?
இலக்கியம் கண்டதற்கு ஏற்பவே இலக்கணம் இயம்பும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல.
நாடக வழக்கு - இலக்கிய வழக்கு புது நிகழ்ச்சிகளைப் பொறுத்தமட்டில் உலகியல் நடைமுறையினின்று மாறு படுவது தவறல்ல.
5. இலக்கிய விமரிசனத்தில் காணப்படும் பொதுவான குறைபாடுகள் தொடர்பாக கட்டுரையாசிரியர் கூறுமாற்றை எடுத்துக் காட்டுக?
இலக்கிய விமரிசனம் என்றால் குற்றம் காணுதலே எனப் பலர் நினைத்தல்.
விமர்சகன் தடைகளை எழுப்புவதும் இலக்கிய கருத்தா அதற்கு சமாதானம் கூறுவதும் நீண்டகால குறைபாடாக உள்ளமை.
சாற்று கவிகள் ஒரு நூலின் பெருமையை பொதுப்படக் கூறுகின்றனவேயல்லாமல் விமர்சனமாக கருத்தை முன்வைப்பதில்லை.
பழைய உரையாசிரியர்களோ மொழியில் கவனம் செலுத் தினரேயன்றி இலக்கியத்தை மறந்துவிடுகின்றனர்.
6. இலக்கிய விமரிசனத்தில் உரையாசிரியர்கள் விடும் தவறுகள் பற்றி
கட்டுரையாசிரியர் கூறுவனவற்றை துலக்குக?
சொல்லின் பொருளையும், யாப்பையும், அணிகளையும் பேசிக்கொண்டு பாட்டை மறந்துவிடுகிறார்கள். சில சமயம் மறைத்தும் விடுகிறார்கள்.
இலக்கியத்திற்கு கருவியாகும் மொழியோடு மட்டும் நின்றுவிடுகின்றனர்.
தத்துவ ரீதியில் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதுமில்லை. இலக்கிய விசாரத்தை விரிவாக செய்வதும் இல்லை.
7. இலக்கிய விமரிசனம் எவ்வாறு அமையவேண்டும்?
குறிப்பிட்ட ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இலக்கியத்தின் பெருமையை உணர்வதற்கும் அனுபவிப் பதற்கும் விமரிசனம் வழிகாட்டியாக அமைய வேண்டும்.
இலக்கியத்தில் உள்ள அனுபவத்தை தெளிவாக்கி, சொற்களில் தேங்குவதை எடுத்துக்காட்டி, அது கலையாகும் விதத்தைக் கூறி தத்துவ ரீதியில் ஆராய்ந்து வாசகரை மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
இலக்கியப் பொருள்களின் தன்மையை மேல்நாட்டில் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இன்றுவரை ஆராய்ந்தது போல ஆராயவேண்டும்.
8. உள்ளத்தில் எழும்
உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் இலக்கிய விமரிசனம் முதன்மை கொடுக்கவில்லை என்பதற்கு கட்டுரை ஆசிரியர் தரும்
சான்றுகள் எவை?
கொங்குதேர் வாழ்க்கை என்ற குறுந்தொகை செய்யுளில் காதலன் ஒருவன் காதலி மீது கொண்ட அன்பின் காரணத்தால் காதலி கூந்தலில் நறுமணம் உள்ளது என்பதை நக்கீரன் பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் இல்லை என மறுத்தமை.
மல்லிகை மலரை சங்காகக் கொண்டு வண்டு ஊதிற்று என புகழேந்தியார் வர்ணித்ததை சங்காக ஊதுவதானால் காம்பில் அல்லவா ஊதவேண்டும் என தடையெழுப்பி யமை.
9. இலக்கிய விமரிசனத்தில் பழைய இலக்கிய விதிகள் தொடர்பாக கட்டுரையாசிரியர் கூறுவதென்ன?
இலக்கியத்தின் கருவியாகிய மொழி பற்றியனவாக உள்ளனவே அன்றி பொருளின் தன்மையை ஆராய வில்லை.
விமரிசகன் தடை எழுப்புதவற்கும் இலக்கிய கருத்தா சமாதானம் கூறுதற்கும் இலக்கண விதிகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளுதல்.
10. இடைக்கால விமரிசன போக்கின் இயல்புகள் எவை?
"இலக்கியத்திற்குயிராதாரமான கொள்கையை புறக் கணித்துவிட்டு நக்கீரனார் போல குற்றம் காணுதல்.
விமரிசகர் தடைகளை எழுப்புவதும் கருத்தா சமாதானம் கூறுதலும் முக்கியமான இயல்புகளாக இருந்தன.
11. கட்டுரையாசிரியர் கூறும் இலக்கிய விமரிசன வகைகள் எவை?
தத்துவ ரீதியான இலக்கிய விமரிசனம் :
இது இலக்கியத்தின் கருவியான மொழியின் பண்பை அடிப்படையாகக் கொண்டது.
சரித்திர ரீதியான இலக்கிய விமரிசனம் :
குறித்த ஒரு கால இலக்கியத்தையும் அதனைத் தொடர்ந்து வரும் கால இலக்கியத்தையும் ஒப்பு நோக்கி புதிய இலக்கிய வகைகள் தோன்றியதன் காரணத்தை ஆராய்தல்.
வாழ்க்கை சரித ரீதியிலமைந்த இலக்கிய விமரிசனம் :
இலக்கியம் சமுதாயத்திலிருந்து தோன்றுவதால் மனிதனது வாழ்க்கை வரலாற்றுத் தாக்கங்களை ஆராய்வது.
ஒப்புமை ரீதியான இலக்கிய விமரிசனம் :
இலக்கியப் பண்பின் புலவர்களுக்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வது.
12. இலக்கிய விமரிசனம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?
இலக்கிய விமரிசனம் என்பது ஒரு கலை. அது இலக்கிய அனுபவத்தை ஆராய்ந்து, சொல்லில் எவ்வாறு தேங்கிநிற்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் கலை. கலைஞனுக்கும் வாசகனுக்குமிடையே ஒன்றிணைக்கும்
சக்தியை ஏற்படுத்தும் கலை. தத்துவ உணர்வோடு தர்க்க ரீதியாக மற்ற இலக்கியங்களோடு ஒப்பிட்டு காரணம் காட்டும் கலை என்று கூறலாம்.
இலக்கியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது விமரிசனம். இலக்கிய வளர்ச்சிக்கு மிக இன்றியமையாத சாதனம். அதுவே அதன் முக்கியத்துவ மாகும்.
13. கட்டுரையாசிரியரின் மொழிநடைச் சிறப்பினை விளக்குக?
தனது எண்ணக்கருத்துக்களையும் அனுபவங்களையும் சுற்றிவளைத்துக் கூறாமல் இயல்பாக விபரிக்கும் தெளிவான செந்தமிழ் நடையாக அமைந்துள்ளது.
கருத்துக்களை தர்க்க ரீதியாக மறுத்துக் கூறி பரிச்சயமான உதாரணங்களுடன் விளக்கிச் செல்லும் ஆற்றொழுக்கான மொழிநடை.
வாசகரை முன்னிலைப்படுத்தி கூறும் உரையாடல் பாங்கான மொழிநடை. உதாரணமாக, "உங்களுக்கு தெரிந்ததை மறுபடியும் சொல்கிறேன் ; 'அருமையான பாட்டென்று நீங்களும் நானும் நினைக்கிறோம் போன்ற தொடர்களைக் குறிப்பிடலாம்.
தூய்மையான தமிழ் சொல்லாட்சியுடன் இடையிடையே அக்கிரகாரப் பேச்சு வழக்கில் இடம்பெறும் வடசொற் களும் பின்பற்றப்பட்டுள்ளன.
உ-ம் : சஹ்ருதயன், சமத்காரம்
பொருளால் புலப்ப டுத்திச் செல்லும் நீண்ட வாக்கிய அமைப்புடையதாயினும் சிறிய வாக்கியங்களும் கொண்ட மொழிநடை.
ஆங்கிலப் பேராசிரியரான கட்டுரையாசிரியர் பழகு தமிழ் பண்புடன் கூடிய இலக்கண வரம்பு கடவாது செல்லும் மொழிநடையை கையாண்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக