புறநானூறு
புறம் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது புறநானூறு. பாடல்களில் பெரும்பாலானவை அகவற் பாவினாலும் சிறுபான்மை வஞ்சிப்பாவினாலும் ஆனவை.
தமிழகம் எங்கும் இருந்த பெருவேந்தர், குறுநில மன்னர், கொடை வள்ளல்கள், சால்பமைந்த பெரியோர், புலவர்கள் எனப் பலரையும் குறிப்பதாக அமைகின்றது. இந்நூலில் நூற்று ஐம்பத்து ஏழு புலவர்களால் பாடப் பெற்றோர் நூற்று எழுபத்து எண்மராவர். அறநெறி தவறாது போர் புரிந்து மார்பில் வேலேந்திய இளைஞரின் வீரப் பெருமைகளும் மூவேந்தரின் குடிமை முதலான பண்புகளும், குறுநில மன்னர்களின் ஆண்மை, ஈகை, ஒப்புரவு முதலான சால்புகளும், போர்க்களத்தில் மைந்தரின் உடல்கண்டு பெருமிதமெய்திய தாயாரின் மறக் குணங்களும், உலக உறவுப் பண்புகளும் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றது. அரசன் பிற நாட்டின் மேல் படையெடுத்து கொள்ளையடிப்பதையும் ஆநிரை கவர்தலையும் அக்காலப் போர் அறமாக சங்க இலக்கியம் காட்டுகின்றது.
திணை :- காஞ்சி
துறை :- வஞ்சினக் காஞ்சி
தம்மை உயர்த்தி தன்னைப் பழித்தவர்களை முரசுடன் வெல்லாவிடின், "நான் பழிக்குரியவனாவேன்; புகழுக்கும் செல்வத்திற்கும் அருகதை அற்றவனாவேன் என்று தன் வீரம்
புலப்படும்படி நெடுஞ்செழியன் சபதம் செய்வதாக அமைவதால் இது வஞ்சினக் காஞ்சி எனப்பட்டது.
பாடல் ஆசிரியர் - தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாடல்:
நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென வுளையக் கூறிப்
படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையுந் தேரு மாவும்
படையமை மறவரு முடையம் யாமென்
றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறு சொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோவே னாகுக
ஓங்கிய சிறப்பினுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவனாக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன் கண்கூர
இரப்போர்க் கீயா வின்மையா னுறவே.
பதப்பிரிப்பு:
'நகுதக் கனரே,
நாடு மீக்கூறுநர்;
இளையன் இவன்' என உளையக் கூறி,
'படுமணி இரட்டும் பா அடிப் பணைத் தாள்
நெடு நல் யானையும், தேரும் மாவும்,
படை அமை மறவரும்,உடையம் யாம்' என்று
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை,
அரும் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேன் ஆயின் - பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது,
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக.
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நில வரை;
புரப்போர் புன்கண் கூர.
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
பதவுரை
நகுதக்கனரே நாடு மீக் கூறுநர் என இவன் ஆளும் நாட்டை உயர்வாகப் புகழும் புலவர்கள் நகைப்பிற்கு இடமானவர்கள் எனவும்; இளையன் இவன் என இவன் மிகவும் இளையவன் எனவும்; உழையக் கூறி - என் மனம் நோகுமாறு கூறி;
படு மணி யிரட்டும் - ஒலிக்கும் மணிகள் இரு புறமும் ஒன்றோடு ஒன்று மாறி இசைக்கும்; பா அடிப் பணைத்தாள் - பரந்த அடியினையும் பெரிய கால்களையும் உடையதுமான; நெடு நல் யானையும் உயர்ந்த நல்ல யானைகளையும்; தேரும் மாவும் - தேர், குதிரை போன்றவற்றையும்;
படை அமை மறவரும் ஆயுதங்களுடன் கூடிய வீரர்களையும்; உடையம் யாம் என்று - கொண்டவர்கள் நாங்கள் என்று; உறு துப்பு அஞ்சாது எனது மிக்க வலிமைக்கு அஞ்சாது; உடல் சினம் செருக்கி பகைத்து சினம் செருக்கி; சிறு சொல் சொல்லிய இழிவான வார்த்தைகளைக் கூறிய; சினம் கெழு வேந்தரை சினம் பொருந்திய அரசர்களை; அருஞ்சமம் சிதையத் தாக்கி -அரிய போரிலே சிதைவுறும்படி தாக்கி; முரசமொடு ஒருங்கு அகப்படேனாயின் அவர்களது முரசத்தோடு அவர்களையும் ஒன்றாக கைப்பற்றுவேன். அவ்வாறு செய்யாவிடின்; பொருந்திய என் நிழல் வாழ்நர் பொருந்திய என் குடை நிழலில் வாழும் குடிமக்கள்; செல் நிழல் காணாது சென்று தங்குதற்குரிய நிழல் காணாது; கொடியன் எம் இறை என எம் அரசன் கொடியவன் என்று கருதி; கண்ணீர் பரப்பி கண்ணீர் விட்டு; குடி பழி தூற்றும் கோலேனாகுக - குடிமக்கள் பழி தூற்றும் கொடுங்கோலை உடையவனாவேன்; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி சிறந்த புகழையும் உயர்ந்த அறிவையும் உடைய;
மாங்குடி மருதன் தலைவனாக மாங்குடி மருதனை தலைவனாகக் கொண்ட; உலகமொடு நிலைஇய உலகத்தோடு நிலைபெற்ற (புகழால்); பலர் புகழ் சிறப்பின் புலவர் பலராலும் புகழப்படுகின்ற சிறப்பினை உடைய புலவர் பலரும்; பாடாது வரைக என் நில வரை என் நில எல்லையை பாடாது நீங்குக; புரப்போர் புன் கண் கூர -என்னால் பாதுகாக்கப்படும் சுற்றத்தார் துயரம் மிக; இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உற - இரந்து கேட்கும் போது அவர்களுக்கு கொடுக்க இயலாத வறுமை நிலையை யான் அடைவேனாக.
அருஞ்சொற்கள் :
நகுதக்கனர் - ஏளனம் செய்தவர்;
மீக்கூறுநர் - மிகைபடக் கூறுவோர்;
இரட்டும் - ஒலிக்கும்;
மா - குதிரை;
வரைக - நீங்குக;
புன்கண் - துயரம்
துப்பு - வலிமை;
பொருள்:
இவனுடைய நாட்டை உயர்வாகப் புகழும் புலவர்கள் நகைப்பிற்கு இடமானவர்கள், இவன் மிகவும் இளையவன் என்றெல்லாம் என் மனம் நோகுமாறு கூறி,
ஒலிக்கும் மணிகள் இரு புறமும் கட்டப்பட்டதும், பரந்த அடியோடு கூடிய பரந்த கால்களை உடையதுமான உயர்ந்த யானை,தேர், குதிரை போன்றவற்றையும் ஆயுதங்களுடன் கூடிய வீரர்களையும் கொண்டவர்கள் தாங்கள் என்று எனது வலிமைக்கு அஞ்சாது பகைத்து சினம் பெருக்கி இழிவான வார்த்தைகளை கூறிய சினம் பொருந்திய அரசர்களை அரிய போரிலே சிதைவுறும்படி தாக்கி, அவர்களது முரசத்தோடு அவர்களையும் ஒன்றாக கைப்பற்றுவேன். அவ்வாறு செய்யாவிடின் எனது குடைநிழலில் பாதுகாப்பாக வாழும் குடிமக்கள் சென்று தங்குவதற்குரிய நிழல் காணாது எம் அரசன் கொடியவன் என்று கருதி குடிமக்கள் பழி தூற்றும் கொடுங்கோலை உடையவனாவேன். சிறந்த புகழையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதனை தலைவனாகக் கொண்ட, உலகில் நிலைபெற்ற பலராலும் புகழப்படுகின்ற புலவர் பலரும் என் நில எல்லையை பாடாது நீங்குக என்னால் பாதுகாக்கப்படுவோர் துயரம் மிகுந்து இரந்து கேட்கும்போது அவர்களுக்கு கொடுக்க இயலாத வறுமை நிலையை யான் அடைவேனாக.
பாடல் பாடிய
சந்தர்ப்பம் :
பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் சிற்றரசரும் பேரரசருமாகிய எழுவருக்கும் தலையாலங்கானம் என்னுமிடத்தே பெரும் போர் உண்டாயிற்று. அச் சந்தர்ப்பத்தில் இவன் வயதில் இளையவனாக இருந்தான். படை கொண்டு வந்த அரசரும் இவன் இளையவன் தானே என இகழ்ந்து பேசினர். நால்வகைப் படையையும் உடையோம் என்று தருக்கினர். அச் சொற்களைக் கேட்ட வேளையிலேயே நெடுஞ்செழியன் இத்தகைய நெடுமொழிகளைக் கூறினான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக