11.10.25

A/L இலக்கிய விமர்சனம்

இலக்கிய விமர்சனம்

 

பழைய கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றங் குற்றமேயென்று தமிழ்ப்புலவன் நக்கீரன் சிவபெருமானிடம் பேசிய இரசமான கதை

இன்றும் நம்முடைய தமிழ் நாட்டிற் புலமையினஞ்சாத உறுதிக்கு எடுத்துக்காட்டாக நக்கீரன் நிற்கிறான்.

தமிழன் இன்றும் நக்கீரனைப் பாராட்டுவதில் வியப்பொன்றுமில்லை. குற்றத்தைச் சொன்னால் நெற்றிக்கண்ணைத் திறக்குஞ் சிவபெருமான்கள் இந்தக் காலத்திலும் நம்மிடையே வாழ்கிறார்கள். தாம் கண்ட உண்மைக்கு உண்மையாய் நிற்கும் நக்கீரர்களை மட்டும் அதிகமாகக் காணோம். இலக்கிய விமரிசனமென்பது ஒரு கலை: இலக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது இலக்கிய விமரி சனம்; இலக்கிய வளர்ச்சிக்கே இந்த விமரிசளம் இன்றியமையாத சாதனம்: உண்மை யும் தீரமும் உறுதியும் படைத்த இலக்கிய விமரிசனம் இப்போது தமிழுக்குத் தேவையென்பதுதான் என்னுடைய கட்சி, ஆகவேதான் நக்கீரர்கள் வேண்டுமென் கிறேன்.

இதனாலே கதையிலே தோன்றும் நக்கீரன் செய்யும் இலக்கிய விமரிசனஞ் சரியான தென்பது என்கருத்தன்று. அந்தக் கதை உண்மை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிறதோ, என்னவோ, கதையைக் கட்டியவன் மனதில், அதாவது தமிழனுடைய மனதில், ஒருகாலத்தில் நக்கீரன் கட்சி நியாயமானது; நக்கீரன் கையாண்ட விமரிசனமுறை ஒழுங்கானது என்ற எண்ணமிருந்திருக்கவேண்டும். இப்போதும் பல தமிழறிஞர் களிடையே இந்த எண்ணம் இருந்து வருகிறது. நக்கீரன் கட்சி நியாயமானதா என்று முதலிற் பார்ப்போம்.

கதைதான் உங்களுக்குத் தெரியுமே. தருமியென்ற ஏழைப் பார்ப்பானொருவன் பாட்டொன்றோடு பாண்டியன் சபைக்கு வந்து சேர்ந்தான்; பாட்டைப் பாடினான்.

"கொங்குதேர் வாழ்க்கை

யஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது

கண்டது மொழிமோ"

என்று தொடங்குகிறது பாடல்.

பூவின் வாசத்தை ஆராயும் வாழ்க்கை நடத்துந் தும்பி/ அழகிய சிறகையுடை யாயே, எனக்காக ஒருதலைப்பட்சமாக நான் விரும்புவதைக் கூறாமல் நீ கண்டதைச் சொல் என்று ஒருவன் கேட்கிறான். அப்படிக் கேட்பது யார்? என்ன நிலையிலே கேட்கிறான் ? என்ன கேட்கிறான் ? பாட்டைத் தொடர்ந்து பார்ப்போம்.

"கொங்குதேர் வாழ்க்கை

யஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது

கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய

நட்பின் மயிலியற்

செறியெயிற் தரிவை கூந்தலின்

நறியவு முளவோ

நீயறியும் பூவே'

பாட்டிலே பேசுவது ஒரு காதலன். தன் காதலி தன்னோடு பலகாலம் பழகியதை யெண்ணுகிறான். மயில் போன்ற அவள் சாயலை எண்ணுகிறான். அவளுடைய நெருங்கிய பல் வரிசையை எண்ணுகிறான். அட, தும்பி, எத்தனையோ பூக்களைப் பார்த்திருக்கிறாயே, என் காதலியின் கூந்தலைவிட வாசனை பொருந்திய பூக்களை நீ கண்டதுண்டோ, சொல், என்று கேட்கிறான். காதலனொருவனுடைய அன்பின் வேகம் பாட்டில் வடிவாகிறது. அருமையான பாட்டென்று நீங்களும் நானும் நினைக்கிறோம்.

ஆனால், நக்கீரன் சொன்னது தெரியுமல்லவா? கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா. என்று கேட்டுப் பாட்டைக் குறை கூறினான் நக்கீரன். இதற்கு இறைவனாலுஞ் சமாதானங் கூற முடியவில்லையென்று சொல்லும்போது நக்கீரனெழுப்பிய தடை நியாயமானதென்ற கருத்து உதயமாகிறது. உண்மையில் இந்தக் கதையில் வரும் நக்கீரன் இலக்கியத்தினியல்பை உணரவில்லை. இலக்கியம் எதைப்பற்றிப் பேசியபோதிலும், உண்மையில் அது பேசுவது மனித அனுபவத்தைப் பற்றியே என்பதை இந்த நக்கீரன் எண்ணவில்லை. உலகத்திலே உள்ள காட்சிப் பொருள்களைப் பற்றியெல்லாம் இலக்கியம் பேசுகிறது. உண்மைதான், ஆனால், எந்த முறையிலே, எந்த நோக்கோடு பேசுகிறது என்பதை அவதானிக்கவேண்டும். காட்சிப் பொருளைக் காட்சிப் பொருளாக அல்ல; கருத்தை எழுப்பிய கருவியாகவே இலக்கியம் பேசும். ஆகவே, இலக்கியத்திற் காதலியின் கூந்தல் மணமுடையதாகும்; இதுபோலவே தாமரை விளக்கத் தாங்கும்; கொண்டல் முழவம் பரிமாறும்; மயில் பரதநாட்டியம் புரியும்: குவளை கண்விழித்து நோக்கும்; கவிஞன் கற்பனையிலுதித்த மருதமென்ற அரசி கொலுவீற்றிருப்பாள்.

இலக்கிய உலகிலே சென்றால் இவைபோன்ற அற்புதங்களெத்தனையோ அங்கங்கே கண்ணில் தென்படும். உள்ளதை அதாவது வெளியில் உள்ள காட்சிப்பொருள்களை, புறநிகழ்ச்சிகளை அல்ல. அவற்றைக் காணுமுள்ளத்திலெழும் பல்வேறுவிதமான சிந்தனைகளை, உணர்ச்சிகளை, பாவனைகளை அல்லவா இலக்கியம் சித்திரிக்கிறது?

இதை நம்முடைய கதையிலே தோன்றும் நக்கீரனுணரவில்லை. இறையனாரும் உணரவில்லை. ஆனால், பழைய இலக்கண ஆசிரியர்கள் ஒருவாறு உணர்ந்திருந்தார் கள். அவர்களுடைய கொள்கையில் மூன்று அருமையான அம்சங்களிருப்பதைக் காணலாம். ஒன்று, இலக்கியங் கண்டதற்கிலக்கணமியம்புவது; இரண்டாவது, பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; மூன்றாவது, நாடக வழக்கு, அதாவது இவக்கிய வழக்குப் புற நிகழ்ச்சிகளைப் பொறுத்தமட்டில் உலகியல் நடைமுறையினின்றும் மாறுபடுவது பொதுவாகத் தவறாகாது. இதற்கு ஆதாரமான பழைய சூத்திரங்களைச் சொல்ல நான் விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்ததை மறுபடியுஞ் சொல்வானேன்.

ஆனால், பிற்காலத்தில் இலக்கியத்திற்குயிராதாரமான இந்தப் பரந்த கொள்கையைப் புறக்கணித்து விட்டோம். இலக்கிய மதிப்புரையென்றால் நக்கீரனைப்போற் குற்றங் காணுவதென்ற எண்ணம் எப்படியோ நம்மிடையே வேரூன்றி விட்டது. விமரிசகன் தடைகளை எழுப்புவதும் இலக்கிய கருத்தா அதற்குச் சமாதானங்கூற முயல்வதுமான தடை விடையென்ற முறையானது சாதாரணமாய் வழக்கத்திலிருந்து வந்தது. தடைகளெல்லாம் பழைய இலக்கண விதிகளையொட்டியே எழுந்தன. விடைகளும் அவ்வாறே வண்டு, மலரைச் சங்காக ஊதுமென்ற புகழேந்தியின் வருணனைக் கெழுந்த தடை ஞாபகமிருக்குமே ? மலர் சங்கானால் வண்டு அதன் காம்பிலல்லவா ஊதவேண்டுமென்ற தடைக்கு, வண்டு கள்ளையுண்டு மயங்கி முன்பின் தெரியாமல் தவித்தது நியாயமேயென்ற விடைபிறந்தது சமத்காரமாகத்தானிருக்கிறது. என்றாலும் இந்தத் தடைவிடை முறை இலக்கியத்தினியல்பைப் பற்றிய அடிப்படையான ஆராய்ச்சியிலிருந்து தோன்றாமல் இலக்கண விதிகளைத் திருப்பித் திருப்பிப் பேசுங் குறுகிய குற்றச்சாட்டு முறையாகி விட்டது. இலக்கண விதிகளைப் பின்பற்றுவது தவறென்று நான் சொல்லவில்லை. அவையெல்லாம் பழைய இலக்கிய மரபையொட்டி எழுந்தவை. அவற்றை ஒரேயடியாகப் புறக்கணிப்பதால் இலக்கிய வளர்ச்சி தடைப் படுவதோடு மொழியைக் கருவியாகப் பயன்படுத்தக்கூட இயலாமற் போகும். மொழியினழுத்தமுந் தெளிவும் மறைந்து விடும். ஆனால், அனேகமாக நம்முடைய பழைய இலக்கண விதிகள் இலக்கியத்தின் கருவியான மொழியைப் பற்றியவை. எழுத்து, சொல், அணியிவற்றைப்பற்றி நுட்பமாக நம்முடைய முன்னோர்களாராயத் தார்கள்.

இலக்கியத்திற்குப் பொருளிலக்கணங் காணவேண்டுமென்று அவர்கள் முற்பட்டார் கள்; கண்டார்கள். ஆனால் இலக்கியப் பொருள்களின் தன்மையை, அடிப்படையான முறையில் மேல்நாட்டில் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இன்றுவரை ஆராய்ந்திருப் பது போல் நாமாராயவில்லை. நூலுக்கிலக்கணம் வகுத்தபோது நூலினழகு பந்து வகையிலே கிட்டுமென்று நன்னூலார் சொன்னார். அதுபோலக் குற்றமும் பத்து உத்தி முப்பத்திரண்டு இவை எல்லா நூலுக்கும் பொருந்தும். வான சாத்திரமோ, இரசாயன மோ நூலாக அமைந்தால் அந்த நூலிலும் சுருங்கச் சொல்லுதல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கினிமை முதலியன அழகாகவும், குன்றக்கூறல், மிகைபடக்கூறல் முதலியன குற்றங்களாகவும், தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், முதலியன உத்திகளாகவும் அமையக்கூடும். இவை இலக்கிய நூல்களுக்கு மட்டுமுரித்தான விதிகளல்ல. தேரையர் வைத்தியமும், கம்பராமாயணமும் நூல்கள். ஆனால் ஒன்று வைத்தியம், அறிவியல் நூல்; இன்னொன்று கவிதை, இலக்கிய நூல்.

ஒரு நூலெப்போது இலக்கியமாகிறதென்ற ஆராய்ச்சியை நாம் விரிவாகச் செய்யாமல் இருந்துவிட்டோம். இலக்கிய வகைகளையும், உலா, பரணி, பெருங்காப்பியம், பிள்ளைத்தமிழென்று நூலின் வெளிப்படையான சில அம்சங்களை வைத்துக்கொண்டு வகுத்தோம். ஆனால் இந்த வகைகளிற் சேராத புதிய நூல் ஒன்று தோன்றினால் அதை மதிப்பிடுவதற்கு, இலக்கியத்திற்கே பொதுவாக இலக்கியத்துவமொன்றை நாம் சிருட்டி செய்துகொள்ளவில்லை. பழைய இலக்கணங்களில் தொல்காப்பியத்தில் இறையனாரகப்பொருளில், நன்னூலிற் சில சூத்திரங்களிலிந்த இலக்கிய தத்துவம் பேசப்படுகின்றதென்று நீங்கள் சொல்லலாம். சூத்திரங்களிருந்தால் அவற்றை இன்று அடிப்படையாகவோ, கொண்டு, விரிவாக இலக்கிய தத்துவத்தை விசாரணை செய்ய வேண்டுமென்றே நான் சொல்லுகிறேன்.

இலக்கிய விசாரணை செய்யாமலா நம்முடைய சாற்று கவிகள் தோன்றியிருக்கின்றன. நம்முடைய உரையாசிரியர்களை விட நுட்பமாக நூலையாராய்ந்தவர்களுண்டா என்று கேட்கிறீர்கள். சாற்றுகவிகள் கேவலம் உபசார வார்த்தைகளாக இல்லாத போதுகூட, ஒரு நூலின் பெருமையைப் பொதுப்படக் கூறுவனவேயல்லாமல் அவற்றை இலக்கிய விமரிசனமாகக் கொள்ள முடியாது. நம்மாழ்வாருடைய பெருமையிலீடுபட்ட ஒருவர்.

ஈதோ திருநகரி மீதோ பொருநைநதி

ஏதோ பரம பதத்தெல்லை மீதோதான்

வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளிலுட்பொருளை

போதூஞ் சடகோப னூர்.

என்று பாடினார். இந்தப்பாட்டு இலக்கிய விமரிசனமா? இதிலிருந்து இதைப் பாடியவர் நம்மாழ்வாருடைய பாட்டில் எவ்வளவு ஈடுபட்டாரென்பது தெளிவா கிறது. ஆனால் திருவாய்மொழியின் இயல்பைப்பற்றியோ அது எவ்வாறு சிறந்த இலக்கியமாகிறது என்பதைப்பற்றியோ இந்தப் பாட்டிலிருந்து ஒன்றுந் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் துரதிட்ட வசமாக நம்முடைய தமிழ்நாட்டில் இலக்கியமொன்றைப்பற்றிப் பெருமையாகவோ குறைவாகவோ அழுத்தமாகப் பேசிவிட்டால் அதுவே விமரிசனமென்ற எண்ணத்துடன் சிலரெழுதி வருகிறார்கள். ஒகோகோ, இதுவே பாட்டென்று பேசுவதும், சீ,சீ இதுவும் பாட்டா என்பதுஞ் சாதாரணமாக நாம் கேட்கலாம். இவ்வாறு பேசுகிறவர்கள் தங்களனுபவத்தை உண்மையாகவே வெளியிடலாம். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர் ஈளனுபவம் மற்றெல்லாராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதென்பதற்கும், அந்த அனுப வத்தை ஆராய்ந்து, அது எவ்வாறு ஏற்பட்டதென்பதைத் தெளிந்து சஹ்ருதயன் உள்ளத்தில் இந்த அனுபவந்தான் ஏற்படுமென்பதற்கும் அவர்கள் இலக்கிய தந்துவ உணர்வோடு, தருக்கரீதியாக மற்ற இலக்கியங்களோடு தாங்கள் விமரிசனஞ் செய்யும் இலக்கியத்தையும் ஒப்பிட்டுக் காரணங் காட்ட வேண்டும்.

இந்தக் கோஷ்டியார் தத்துவ விசாரத்தோடு பழைய உரையாசிரியர்களையும் ஒப்புக்கொள்வதில்லை. சொல்லின் பொருளையும், யாப்பையும் அணிகளையும் பற்றிப் பேசிக்கொண்டு, உரையாசிரியர்கள் பாட்டை மறந்துவிடுகிறார்கள்; மறைத்தும் விடுகிறார்களென்பதே இவர்கள் விடுக்குங் குற்றச்சாட்டு, ஓரளவுக்கு இஃது உண்மையே. உரையாசிரியர்கள் பலர் இலக்கியத்திற்குக் கருவியாக அமையும் மொழியோடு நின்றுவிடுகிறார்கள்.

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ, என்ற அடியிலே மோ என்பது முன்னிலை அசையென்பார்கள். பேசாத தும்பி பேசக் கூடியதாகக் கருதப்படுவதற்குப் பழைய தொல்காப்பிய விதியான, சொல்லா மரபிளவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்", என்ப திடந்தருகிறதென்பார்கள். தும்பியென்றது முன்னிலையாக்கல், கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல், கூந்தலில் நறியவுமுளவோ என்றது நன்னயமுரைத்தல் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், பாட்டினருமையை, அஃதெவ்வாறு கவிதையாகின்றதென்பதை மறந்துவிடுவார்கள். உரையாசிரியர்கள் செய்த தொண்டு அருமையானது. சொல்லையும் அணியையும், வேறிலக்கியக் கருவிகளையும் துல்லியமாக ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் இது போதாது. இதற்குமேல் தத்துவரீதியில் இலக்கியத்தைப்பற்றி அவர்கள் பேசவில்லை. இலக்கிய விசாரத்தை வெளிப்படையாக விரிவாக அவர்கள் செய்யவில்லையென்பதே என் நினைவு.

இலக்கியமென்பது ஒரு கலை. அதன் கருவியான மொழியைப்பற்றிய நுட்பமான ஆராய்ச்சி நம்மிடமுள்ளது. ஆனால் கலையின் பண்பைப் பற்றிய ஆராய்ச்சியை நாம் செய்யவேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டே இலக்கிய விமரிசனம் தோன்றும். இதைத் தத்துவரீதியான இலக்கிய விமரிசனம் என்று சொல்லலாம். ஆனால் இலக்கியமென்பது வளர்ந்துவரும்போது அதற்கு முன்னிருந்த பழைய இலக்கியத்தோடு தொடர்பில்லாமல் வளருவதில்லை. கம்பன் விருத்தப்பாவைக் கையாண்டானென்றால் அதற்குச் சீவகசிந்தாமணி ஆசிரியன் வழிகாட்டியாக இருந்தானென்பதை மறக்க வாகாது. இந்தவகையிலே நம் நாட்டின் இலக்கியத்தைத் தொடர்ந்து வளர்ந்து வந்த ஒரு சீவனாகக் கருதி, ஒரு காலத்து இலக்கியத்திற்கும் இன்னொரு காலத்து இலக்கியத்திற்குமுள்ள தொடர்பையும், எப்படி அந்த அந்தக் காலத்திற் புதிய வகைகள், புதிய முறைகள் தோன்றின என்பதைப் பற்றியுமாராய்வது இலக்கிய விமர்சனத்தி வொரு பகுதி, இதைச் சரித்திரரீதியான இலக்கிய விமரிசனமென்று கருதலாம். இலக்கியம் ஆகாயத்தில் முளைப்பதன்று. ஒரு சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவனுடைய அனுபவமே இலக்கியமாகிறது. ஆகவே அவன் எந்த சமுதாயத்தில் வாழ்ந்தான்? அவனுக்கும் மற்றவர்களுக்குமிருந்த உறவென்ன? அவனுடைய வாழ்க்கைச் சரிதம் அவனுடைய இயல்பைப்பற்றி என்ன தெரிவிக்கிறது என்பதெல்லாம் ஆராய்ந்து அவனுடைய இலக்கியத்தின் தன்மையை உணர இந்த அறிவைப் பயன்படுத்திக் கொள்வதும் இலக்கிய விமரிசனத்தில் ஒருமுறை. இதை வாழ்க்கைச் சரித ரீதியிலமைந்த இலக்கிய விமரிசனமென்று கொள்ளலாம். இவை தவிர, ஒரு புலவனுக்கும் இன்னொரு புலவனுக்கும் இலக்கியப்பண்பைப் பொறுத்தமட்டில் என்ன என்ன ஒற்றுமை, என்ன என்ன வேறுபாடுள்ளது: இளங்கோவடிகள் குரலுக்கும் கம்பன் குரலுக்குமுள்ள வேற்றுமையென்ன; என்று தனிப் புலவர்களுடைய பண்பை ஆராய்வதும் இலக்கிய விமரிசனத்தின் வேலை. இதை ஒப்புமைரீதியான இலக்கிய விமரிசனமென்று சொல்லலாம். இவ் விமரிசன வகைகள் ஒவ்வொன்றிற்கும் தனி முறைகள் உண்டு; அடிப்படையான விதிகளுமுண்டு.

ஆனால் இலக்கிய விமரிசனம் எந்த வகையானதாக இருந்த போதிலும் ஒரே நோக்கத்தைக் கொண்டுதான் வழங்க வேண்டும். இலக்கியத்தின் பெருமையை உணருவதற்கும் அனுபவிப்பதற்கும் விமரிசனம் வழிகாட்டல் வேண்டும். விமரிசகன் இலக்கணத் தராசைக் கையிலேந்தி இலக்கியத்தை நிறுக்கும் நக்கீரனல்லன். இலக்கியத் திற்கு ஓயாமற் பொருள் விளக்கமும் இலக்கணக் குறிப்புத் தரும் உரையாசிரியனல்லன். 'ஓகோ...' என்று களித்து, 'சீ. சி... என்று ஒதுக்குங் குழந்தையுமல்லன். பிரபஞ்சத்தைக் கண்டு தன் மனத்திலெழுமனுபவத்தைச் சொல்லில் தேக்குவது இலக்கியமானால், அந்த இலக்கியத்திலுள்ள அனுபவத்தைத் தெளிவாக்கி அது எவ்வாறு சொல்லிலே தேங்குகிறதென்பதைக்காட்டி, இந்த அனுபவம் சொல்லிலே தேங்கும்போது ஏன் எவ்வாறு கலையாகிறது என்பதைக் தத்துவ ரீதியில் ஆராய்ந்து, கலானுபவத்தின் எல்லை நிலமான ஆனந்தத்திற்கழைத்துச் செல்வதே இலக்கிய விமரிசனமாகும். இதனால் மொழி வளரும்; இலக்கியம் வளரும்; தத்துவ விலாசமேற்படும்: கவானுபவஞ் சித்திக்கும்: சஹ்ருதயம் அதாவது கலைஞனோடொன்றி நின்று அவன் பெற்ற ஆனந்தத்தைப் பெறும் அபூர்வசக்தி, தானாகவே நம்மை வந்தடையும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக