பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் தமிழ்ப் பணிகள்.
குறிப்புக்கள் :
1. முன்னுரை
2. வாழ்க்கைப் பின்னணி, பெற்றபட்டமும் பதவிகளும்
3. தமிழிலக்கிய வரலாறு எழுதியமை
4. தமிழ்' உரைநடை வரலாறு படைத்தமை
5. திறனாய்வுக் கட்டுரையாளர்
6. நவீன திறனாய்வை மாணவர்க்குப் போதித்தமை
7. முடிவுரை
தமிழ் இலக்கிய வரலாறு பற்றிப் பேசும் இடங்களில் எல்லாம் பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் பெயர் முக்கிய இடத்தைப் பெறுவதைக் காணலாம். தமிழ் இலக்கிய வரலாற்றைத் தமிழ் கூறு நல்லுலகம் அனைத்தும் ஏற்றிடும் வகையில் வகுத்துத் தந்த பெருமைக்குரியவர். தமிழிலக்கிய வரலாறு கூறும் நூல்கள் பல தமிழில் இருப்பினும் இவர்படைத்த 'தமிழிலக்கிய வரலாறு' என்னும் நூலே தமிழறிஞர்களால் பெரிதும் விதந்துரைக்கப்படும் நூலாகத்திகழ் கின்றமையே இவரது பெருமைக்கும் புகழுக்கும் சான்றாக மிளிர்கின்றது. எனலாம். பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் தமிழ்ப் பணிகள் மிகவிரிவானவையும் ஆய்வுக்குரியனவாயும் அமைந்தனவாகும்.
பேராசிரியர் வி.செல்வநாயகம் 1907ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 11ஆம் திகதி (11.01.1907) கொழும்புத் துறையில் வினாசித்தம்பி அலங்காரம் தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். இவர் தமது ஆரம்ப் கல்வியையும் இடை நிலைக் கல்வியையும் யாழ்ப்பாணம் பரி.யோவான் கல்லூரியிலே பெற்றார். பின்னர் உயர்கல்வியைப் பெறக் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிற் (1926 முதல்) சேர்ந்து தமது பட்டப்படிப்புக்காகத் தமிழ், லத்தீன், கணிதம் ஆகிய பாடங்களைப் பயின்றார். இறுதிவருடத் தேர்வில் மிகச் சிறந்த சித்தியை முதற்பிரிவில் எய்தியமைக்காகச் சேர்.பொன். அருணாசலம் நினைவுப் பரிசில் இவருக்கு வழங்கப் பெற்றது. இன்னொரு பல்கலைக்கழகத்திற் சென்று பயில்வதற்கான வாய்ப்பினையும் இப்பரிசில் அளித்தது. 1932இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்று அங்கு மூன்றாண்டுகள் சிறப்புக்கற்கை நெறியினைப் பயின்றார். பின்னர் 1935இல் இலங்கை திரும்பினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாவலர் சோமசுந்தரபாரதி, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், சுவாமி விபுலாநந்தர் ஆகியோரிடத்துக் கற்கும் வாய்ப்புப் பெற்றமையால் இவரது தமிழ்ப்புலமை மேலும் விரிவடைந்தது. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரும் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் இவரது புலமை உருவாக்கத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றனர் என்றாலது மிகையல்ல.
நாடுதிரும்பிய பின்னர் சிறிது காலம் இடைக்காடு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தான் 1942இல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்று முதுமாணிப்பட்டமும் பெற்றுத் திரும்பினார்.
இடைக்காடு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் வித்துவ சிரோமணி சி.கணேசையருடன் தொடர்பு கொண்டு தமிழ் இலக்கண மரபுகளை ஐயந்திரிபின்றி அறிந்திடும் வாய்ப்பினைப் பெற்றார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்திலே சிறந்த தமிழ் விரிவுரையாளர் எனப் பாராட்டப் பெற்றவர் பேராசிரியர் வி.செல்வநாயகம், அவருடைய போதனை தனித்துவமானது. மாணவர்களிடம் உள்ள அறிவினை வெளிக்கொணரவும் அவர்களது ஆற்றல்களை வளர்த்தெடுக்கவும் அவர் தமக்கே உரித்தான சில உத்திகளைக் கையாண்டார். மாணவர்களுடன் கருத்து மோதல் செய்வதில் இவர் பெரும் விருப்பம் கொண்டவராக விளங்கினார். இதன் பொருட்டுக் கேள்விக்கணைகளைத் தொடுப்பார் பதிலளிக்கமுடியாதோரைக் கேலிபண்ணுவார். தமிழ்ப் பாடல்களை உரியமுறையில் வகுப்பில் பாடுமாறு கேட்பார். பாடல்களை நன்கு இரசித்துப்பாடிப் பொருளறியத்தூண்டுவார். இவரது இக் கற்பித்தற் செயற்பாடு மாணவர்களின் தமிழ்ப்புலமையை வளர்த்திடும் வகையிலேயே அமைந்திருந்தது. மரபுவழிச் சிந்தனையும் நவீன சிந்தனையும் கொண்ட பேராசிரியரின் தமிழ்ப் பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கனவாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றினைக் கற்கும் மாணவர் எவரும் பேராசிரியர் வி.செல்வநாயகத்தை அறியாதிருந்திடமுடியாது. அந்தளவுக்கு அவரது பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றோடு இன்று இணைந்துள்ளது என்றாலது தவறல்ல. இதற்குக் காரணம் இவர் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலேயாகும். தமிழ் இலக்கிய வரலாறுகூறும் நூல்கள் தமிழில் பல இருப்பினும் இவரது நூலே அனைவராலும் விதந்துரைக்கப் பெறும் சிறப்பினைப் பெற்றதாகத் திகழ்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றைக் கால அடிப்படையில் வகுத்துக் கூறும் இந்நூல் சங்ககாலம், சங்க மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்றாண்டு என்னும் அமைப்பினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு காலப் பகுதியின் இலக்கியங்களையும் அவை தோன்றிய காலப் பின்னணியினையும் மாணவர் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் பேராசிரியர் இந்நூலினை எழுதியுள்ளார். பிற்காலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுத முற்படுவோருக்கு ஒரு வழிகாட்டியாகவும் பேராசிரியரது இந் நூல் அமைந்துள்ளது.
பேராசிரியர் வி.செல்வநாயகம் தமிழுலகுக்கு அளித்துள்ள மற்றொரு அருங்கொடை அவரது 'தமிழ் உரைநடை வரலாறு' என்னும் நூலாகும். தமிழ் உரைநடைப் பரப்பினை ஐந்து காலகட்டங்களாக வகுத்து, சங்ககாலம், களவியலுரைக் காலம், உரையாசிரியர்கள் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்றாண்டு என எழுதியுள்ளார். ஒவ்வொரு காலத்து உரைநடை வகைகளைச் சான்றுகளுடன் இந்நூலில் வகைப்படுத்திக் காட்டியுள்ளார். ரை
தமிழிலக்கிய வரலாற்றாசிரியராக, தமிழுரை நடை வரலாற்றாசிரியராக மட்டுமன்றித்தலைசிறந்த திறனாய்வுக் கட்டுரையாளராகவும் பேராசிரியர் விளங்கியுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான "இளங்கதிர்" என்னும் சஞ்சிகையில் திறனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் இவரது திறனாய்வுத் திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளன.
"சொல்லும் பொருளும்'', ''பாட்டும் ஓசையும்", "வழக்குஞ் செய்யுளும்", "கடலோசை", "கடல்", "கண்ணுற்றான் வாலி", "கம்பனில் ஒருபாட்டு", தமிழிலக்கியமும் பக்திப் பாடல்களும்", 'உவமையும் உருவகமும்" ஆதியாம் கட்டுரைகள் பேராசிரியரது திறனாய்வுத் திறனுக்குத் தக்க சான்றாக உள்ளன. ஈழத்துத் திறனாய்வு வரலாற்றிலே முக்கியமான இடத்தைப் பெறக்கூடிய கட்டுரைகளை வரைந்த பேராசிரியர் செல்வநாயகம், தலைசிறந்த இலக்கிய ஆய்வாளர்களை உருவாக்கிய பெருமைக்குரிய பேராசானாகவும் விளங்குகின்றார்.
நவீன திறனாய்வுப் போக்கினை மாணவர்களுக்குப் போதித்த பேராசிரியர் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழ்ந்தார். பேச்சு வழக்கின் உபயோகத்தினை அவர் எதிர்க்கவில்லை. "பேச்சுவழக்கில் உள்ள மொழி தான் வாழும் மொழி. அதற்கு உள்ள ஆற்றலை அவதானித்து அறிந்து, அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றவனே சிறந்த எழுத்தாளனாகின்றான்" என்று 'வழக்குஞ் செய்யுளும்' என்னும் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளமை இதனை உறுதிசெய்கிறது. பேராசிரியரின் திறனாய்வுப் பார்வை தனித்துவமானது. அது திறனாய்வாளர்களுக்கு வழிகாட்டவல்லது. இலங்கைப் பல்கலைக்கழகங்களிலே அறிவியல் ரீதியான இலக்கிய ஆய்வுகள் நிகழ்வதற்குப் பேராசிரியரே வழி காட்டினார் என்றாலது மிகையல்ல.
சுருங்கக் கூறின் 'தமிழிலக்கிய வரலாறும்', 'தமிழ் உரை நடை வரலாறும்' உள்ளவரை தமிழிலக்கியம் கற்போர் பேராசிரியர் வி.செல்வநாயகத்தை மறந்திட முடியாது. இந் நூல்களின் மூலமும் அவர் வழிவந்த பேராசான்கள், திறனாய்வாளர்கள் மூலமும் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றே கூறலாம். அவரது தமிழ்ப் பணிகள் காலத்தால் மறக்கவொண்ணாதனவாகும். அவர் நாமம் என்றும் நிலைக்கும் என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக