இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவனும் வாரா ரெவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.
வினாக்கள்
1. பாடலின் வந்துள்ள மேல்வரும் தொடர்களுக்கான பொருளை எழுதுக?
நசைஇ - விரும்பி
நகுமே - சிரிக்குமே
பெயல் - மழை
முகை அரும்பு
2. பாடலில் வெளிப்படும் தலைவியின் பிரிவுத் துயரினை எடுத்துக்காட்டுக?
தன்னுடையதும் என்னுடையதுமான இளமைப் பருவத்தின் அருமையைக் கருதாது தலைவன் பிரிந்து சென்றது பொருள்மூலம் வரும் வளமான வாழ்க்கையை விரும்பியே ஆகும். எனினும் அப்பிரிவு தலைமகளுக்கு துயருடையது ஆயிற்று
தலைவன் தலைமகளுக்கு குறித்துச் சொன்ன கார்காலம் வந்துவிட்டது. ஆனால் அவன் இன்னும் வரவில்லை. இங்கு இளமை என்பது நிலையில்லாதது. போனால் மீளப் பெறமுடியாது ஆனால் பொருள் எக்காலத்திலும் தேடக் கூடியது. இளமை உள்ள காலத்தில் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கையை விட்டுவிட்டு பொருளைத்தேடி இளமை கழிந்த பிக் வந்து எதை அனுபவிக்கப் போகிறான்.என்று ஏங்குகின்ற நிலையில் உள்ளாள்.
தலைவனின் அறியாமை குறித்து தான் மட்டுமல்ல இயற்கை நிகழ்வாகிய கார்காலம் கூட சிரிப்பதாக தன் கருத்தை ஏற்றிச் சொல்லும் அளவிற்கு தலைவி நன்துயரை தோழிக்குக் கூறி துன்புறுகிறாள்.
3. பாடலில் கையாளப்பட்டுள்ள முதல், கரு, உரிகளை எடுத்துக்காட்டுக?
முதல் நிலத்தில் முல்லை நிலமும் பொழுதில் கார் காலமும் இப்பாடலில் வெளிப்படுகின்றன.
முல்லைக் கொடியின் முகையும் அது பூத்திருக்கும் நிலையும் கார்கால மழையும் எனும்
இயற்கைப் பொருட்கள் இதில் உள்ளன.
உரி : தலைவனின் வருகைக்காக தலைவி காத்திருக்கும் இருத்தல் ஒழுக்கம் இதில் உள்ளது.
4. பாடலின் பேசு பொருள் (துறை) யாதெனக் குறிப்பிடுக?
பொருளீட்டச் சென்ற முல்லைத் தலைமகன் குறித்த பருவத்தில் வராமை கண்டு வருந்தியழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
5. கையாளப்பட்டுள்ள ஏகதே உருவக அணியினை எடுத்துக்காட்டுக?
ஒரு செய்யுளில் புலவர் ஒரு பொருளை உருவகம் செய்துவிட்டு அதற்கு தொடர்புடைய மற்ற பொருளை அதற்கேற்ப உருவகம் செய்யாமல் விட்டுவிட்டால் இதுவே ஏகதேச உருவக அணியாகும்.
இப்பாடலில் "முல்லைத் தொகுமுகை இலங்கையிறாக நகுமே தோழி நறுந்தன் காரே" என்பதில் முல்லைப் பூக்களின் மொட்டுக்களை பெண்ணின் பற்களாக உருவகம் செய்த புலவர் கார்காலத்தை ஒரு பெண்ணாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டதால் இது ஏகதேச உருவக அணியாகும்.
6. கார்காலம் பற்றி குறிப்பிடப்படும் செய்திகள் யாவை?
கார்காலம் என்பது தாவரங்கள் துளிர்த்து செழித்து பூப்பூக்கின்ற இதமான காலம் இப்பாடலில் மழையும் முல்லைக் கொடியின் முகயும் (அரும்புகள்) இக்காலத்தை நினைவுறுத்துகின்றன.
முல்லை மலர் நறுமணம் மிக்கது. மழை குளிர்மை மிக்கது. இவ்விரண்டும் கார்காலத்திற்கு உரியவை. அவை தலைவனை விட தலைவியை இன்ப நுகர்ச்சியின் பால் ஈர்க்கின்றன.
7. பாடலில் வெளிப்படும் நிலையாமைக்கருத்தினை எடுத்துக்காட்டுக?
இளமைக்காலம் நிலையில்லாதது
இளமை கழிந்தால் திரும்பவும் பெறமுடியாதது
8. பாடல் புலப்படுத்தும் சங்க இலக்கிய பண்புகளை எடுத்துக்காட்டுக?.
அகத்திணையில் காதலின் இருத்தல் ஒழுக்கம் பேசப்படுகிறது.
முதல், கரு, உரி எனும் மூன்று அம்சங்களும் உள்ளன.
ஒரு பாடலில் ஒரு ஒழுக்கம் எனும் முல்லை நில இருத்தல் ஒழுக்கம் கூறப்பட்டுள்ளது.
வடமொழி கலப்பில்லாத சிறியனவும் ஆகிய சொற்கள் கையாளப்பட்டுள்ளன.
நாடகப் பாங்கில் பெயர் சுட்டாத தலைவி கூற்றுப் பாடலாக அமைந்துள்ளது.
தொகைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொகுமுகை (வினைத்தொகை) பூங்கொடி
(வேற்றுமைத் தொகை)
9. பாடலில் புலவன் கையாண்டுள்ள தற்குறிப்பேற்ற அணியினை எடுத்துக்காட்டுக?
முல்லை மலர்கனின் அரும்புகள் வெளித்தள்ளியவாறு மலர்ந்திருப்பது இயல்பான செயலாகும்..இங்கு புலவர், முல்லைமலரை பற்கள் வெளியே தெரியும்படியாக நகைக்கும் மனிதராக தன்குறிப்பை ஏற்றி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக