சிந்துவெளிக் காலம்
உலகின் பல பாகங்களிலும் பல்வேறு நதிக்கரை நாகரிகங்கள் தோன்றி வளர்ச்சி பெற்றன. அவ்வாறு தோன்றிய ஏனைய நதிக்கரை நாகரிகங்களுக்கு ஒப்பான சிறப்புடையதாக சிந்துவெளி நாகரிகமும் அமைகின்றது. இந்து நாகரிகம் கி.மு. 3250 தொடக்கம் கி.மு. 2750 வரையான காலப் பகுதியில் சிறப்புடன் விளங்கி இருக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் துணிகின்றனர். சிந்துவெளிப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இந்து சமய நம்பிக்கைகளைக் கடைப் பிடித்தனர் என்பது வரலாற்று ஆதாரங்கள் தரும் உண்மை. இந்துசமயம் இற்றைக்கு 5000 ஆண்டுகள் பழைமை உடையதெனக் கொள்ள இடமுண்டு.
சிந்து நதி பாயும் பகுதி 1922 தொடக்கம் 1930 வரையான காலத்தில் சேர். ஜோன் மார்ஷலின் தலைமையில் அலெக்ஸ்சாண்டர், கன்னிங்காம், வில்லியம் ஜோன்ஸ் முதலான புதைபொருளாய்வாளர்களால் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களால் மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற பல நகர அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் ஹரப்பா மேற்குப் பஞ்சாப் மாநிலத்திலும், மொகஞ்சதாரோ பாகிஸ்தானிலும் உள்ளன. அந்நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்கள், கற்சிலைகள், இலிங்க வடிவங்கள், களிமண் பொம்மைகள், சித்திர வடிவ எழுத்துக்கள் முதலிய புதைபொருட்களைக் கொண்டு சிந்து வெளி மக்களின் சமயநிலை, வாழ்க்கை முறை என்பனவற்றை அறிய முடியும்.
சமய நிலை
சிந்துவெளிப் பிரதேச புதைபொருட்கள் இந்து சமயச் சார்புடையனவாகவே உள்ளன. இப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட் சின்னங்கள் வாயிலாக இம்மக்கள் இந்துத் தெய்வங்களை வழிபட்டனர் என்பதை அறியமுடிகின்றது. சைவத்தின் பரம்பொருளாகிய சிவனை அக்கால மக்கள் முக்கியமான தெய்வமாக வழிபட்டனர். முத்திரைகள், இலிங்க வடிவங்கள் என்பன அக்கால சிவ வழிபாட்டை அறிய உதவுகின்றன. முத்திரை ஒன்றில் யோக நிலையில் அமர்ந்த ஒரு வடிவம் காணப்படுகிறது. இவ் வடிவம் தலை வளைந்த கொம்புகள், இடுப்பில் இரட்டைப் பட்டையாக அரைக்கச்சை என்ற அங்க இலட்சணங்களுடன் காட்சியளிக்கிறது. யோகி வடிவத்தின் கீழ்ப் புறத்தில் யானை, புலி, எருது, காண்டாமிருகம் போன்ற அம்சங்களைக் காணலாம். அவ்வடிவத்தினை சேர். ஜோன் மார்ஷல் போன்றவர்கள் சிவ வடிவத்துடன் இனங்காண்கின்றனர். மீது
தற்காலச் சக்தி வழிபாட்டுடன் இனங்காணத்தக்கதாக சிந்து வெளி மக்களிடையே நிலவிய தரைப்பெண் வழிபாடு அமைகிறது. ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து செடி ஒன்று முளைப்பது போன்று பொறிக்கப்பட்டுள்ள முத்திரையை இதற்கு ஆதாரமாகக் காட்டுவர். உற்பத்திக்குக் காரணமான பூமாதேவியை (பூமியை) இம்மக்கள் தாயாக வழிபட்டனர் எனக் கொள்வர். ஆய்வாளர்கள் இத்தெய்வத்தை தரைப்பெண் வழிபாடு அல்லது தாய்த் தெய்வ வழிபாடு என்று குறிப்பிட்டுள்ளனர்.
சுடுமண் தாயத்தொன்றில் முக்காலி ஒன்றின்மேல் பாற் கிண்ணம் காணப்படுகின்றது. அருகில் பாம்பு தனது படத்தை விரித்தபடி உள்ளது. இன்றும் எமது சமயத்தில் நாகத்திற்கு பால், பழம் படைத்து வழிபடும் மரபு இருந்து வருகின்றது. சில முத்திரைகளில் மரங்களும், அம்மரங்களில் உறையும் பெண் தேவதைகளின் வடிவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு முத்திரையில் மரங்களுக்கு இடையில் பெண் உருவம் காணப்பட அதன் கீழ் ஒரு பெண் அவ்வடிவத்தினை வழிபடும் வகையில் காட்சியளிக்கின்றது. எனவே அம்மக்கள் விருட்சங்களை அல்லது அவற்றில் உறையும் தெய்வங்களை வழிபட்டிருக்க வேண்டும் என்று கொள்வர்.
சூரிய வழிபாட்டுடன் தொடர்புடைய ஆதாரங்களும் சிந்துவெளிப் பகுதியில் காணப்படுகின்றன. இன்றைய இந்து மதத்தில் காணப்படும் வழிபாடுகளுக்கு ஒப்பான சமயச் சடங்குகள் அக்கால மக்களிடையே நிலவியதை உணரலாம். உயரமான கோயில்களை அமைத்த சுமேரிய மக்களோடு வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்த சிந்துவெளி மக்கள், நிலையான கோவில்களை அமைத்திருக்க வேண்டுமெனக் கருத இடமுண்டு. இப்பிரதேசத்தில் கோவில் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படும் இடம் இதுவரை அகழ்வாய்வு செய்யப்படவில்லை. இங்குள்ள செய்குளத்திற்கருகே எட்டு அறைகளைக் கொண்ட கட்டடம் ஒன்று காணப்படுகின்றது. இவ்வெட்டு அறைகளும் மேலே ஏறுவதற்குப் படிக்கட்டுக்களைக் கொண்டுள்ளன.கட்டிடத்தின் அமைப்பை அவதானித்த ஆய்வாளர்கள் இங்கு வாழ்ந்தவர்கள் சைவசமயச் சார்புடையவர்களாக இருந்திருக்க வேண்டுமெனக் கருதுவர். முத்திரைகளில் இறைவனின் முன் ஆட்டைப் பிடித்திருப்பதனைப் போலவும், ஒரு பெண் மண்டியிட்ட வண்ணம் இருக்க, ஒருவன் வாளை ஓங்குவது போலவும் காணப்படுவது. இம்மக்களிடையே பலியிடுதல் முக்கியமான சடங்காக இடம்பெற்றமைக்குரிய சான்றாக அமைகிறது. இன்றைய இந்து சமயத்தில் நிலவும் ஆலய வழிபாட்டுடன் தொடர்புடையதாகவுள்ள நிவேதன வழிபாட்டினை வெளிப்படுத்தும் ஆதாரங்களையும் காணமுடிகின்றது. முத்திரையொன்றில் பெண்கள் படைக்கும் தட்டுக்களை ஏந்தியவாறு காணப்படுகின்றனர். பூசைத் தட்டுகள் கிடைக்கப் பெற்றமையினைக் கொண்டு, தெய்வங்களுக்கு பூசைப் பொருட்களை நிவேதனமாகப் படைத்து வழிபட்டிருக்க வேண்டுமெனக் கருதுவர். முத்திரைகளில் உள்ள எழுத்து வடிவங்கள் "பசுபதி" என்னும் பெயரைச் சுட்டுவதாக சேர் ஜோன் மார்சல் குறிப்பிட்டுள்ளார்.
நுண்கலைகள்
சிந்துவெளிப் பிரதேசத்தில் கலைகளின் வளர்ச்சியை காணமுடிகின்றது. மொஹஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடத்துக் கட்டடங்களும் அக்காலக் கட்டடக்கலையின் வளர்ச்சியை அறிவதற்கு உதவுகின்றன. இப்பிரதேசத்தில் மாளிகை போன்ற கட்டட அமைப்புகள், களஞ்சிய அறை, நீராடுகின்ற குளம், மாடி வீடுகள், வீடுகள் என்று பல கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டடம் ஒன்று 242 அடி நீளமும் 112 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. மழை நீருக்குத் தாக்குப் பிடிக்கும் வண்ணம் வெளிப்புறச் சுவர்களுக்குச் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். உட்புறச்சுவர்களுக்கு சூளையிடப்படாத செங்கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அடுக்கு மாடிவீடுகளுக்கு அதன் பாரத்தைத் தாங்கும் வகையில் நடுப்பகுதிச் சுவர்கள் தடிப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
மொஹஞ்சதரோ, ஹரப்பா முதலிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சிற்ப வடிவங்களும் அக்கால சிற்பக்கலை வளர்ச்சியைக் காட்டுவன. சிந்துவெளிக் காலம் சிற்பக்கலை வளர்ச்சியைக் காட்டுவதாக ஆய்வாளர் பலர் கருதுவர். சேர். ஜோன். மார்ஷல் 'இந்திய சிற்பக்கலை இந்தியாவிற்கே உரியது' என்று கூறுவதனையும் காணலாம். சிந்துவெளி மக்கள் சிற்பங்களுக்கு வெண்கலம், பழுப்பு நிறக் கற்கள், சுண்ணக் கற்கள் முதலியவற்றினை மூலப்பொருள்களாகப் பயன்படுத்தினர். சிந்துவெளி பிரதேசத்தில் வெளிப்படுத்தப்பட்ட சிற்பங்களுள் வெண்கலத்தினாலான நடனமாதின் வடிவம், ஆடவர் வடிவங்கள் போன்றவற்றைக் கூறலாம். வெண்கலத்தில் வார்க்கப்பட்டுள்ள நடன மாதின் வடிவம் வழுவழுப்பாகவும் ஒழுங்கான நடனத்திற்குத் தோற்றுவாய் ஆகலாம்' என்று மா. இராசமாணிக்கனார் கருதுகின்றார்.
துளைகளை உடையதாகக் காணப்பட்ட வாதுகுழல் வாசிக்கும் நிலையில் இருந்ததாக அறிஞர் மாக்கே குறிப்பிடுகிறார். இங்கு கிடைக்கப் பெற்ற மட்பாண்டங்கள் மீது பாம்புகள், மீன்கள், வட்டங்கள், சதுரங்கள், இலைகள் என்று பல உருவங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. மட்பாண்டங்களில் காணப்படும் வடிவங்கள் அக்கால ஓவியக்கலை பற்றி அறிய உதவுகின்றன. முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள மிருதங்கம், தவில் போன்ற சான்றுகள் அக்கால இசைக் கலை பற்றி அறிய உதவுவன.
வாழ்க்கை முறை
சிந்துவெளிப் பிரதேச மக்கள் நாகரிகம் உடைய வாழ்க்கையை வாழ்ந்தமைக்குக் குறித்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபொருட் சின்னங்களே சான்றாக அமைகின்றன. சிந்து வெளிப் பிரதேச மக்களின் முக்கியமான தொழிலாக வாணிபமே காணப்பட்டது. சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகள், மட்பாண்டங்கள், கருவிகள் போன்றவை சுமேரியா, மொசப்பதேமியா, எகிப்து முதலிய நாடுகளில் கிடைக்கப் பெறுகின்றமையைக் கொண்டு சிந்துவெளி மக்கள் மேற்கூறிய நாட்டு மக்களுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருந்தனர் எனக் கொள்வதற்கு இடமுண்டு. கப்பல் கட்டுதல், தச்சுத் தொழில், சிற்பத் தொழில், கைவினைத் தொழில் என்பன போன்ற தொழில்களிலும் அம்மக்கள் ஈடுபட்டனர். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மதகுருவின் ஆடையில் பூவேலைப்பாட்டுடன் கூடிய சித்திரத்தைக் காணமுடிகின்றது. ஆண்கள் மேலாடைகளை அணியும் அளவிற்கு அக்கால மக்கள் நாகரிகமுடையவர்களாக வாழ்ந்தனர் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது. மிகப பெரிய நகர அமைப்பையும் பாதுகாப்பான சுற்றாடலையும் உடைய நாகரிக வாழ்வையும் பின்பற்றினர். நெருக்கமான வீட்டு அமைப்பால் ஒருமைப்பாடான சமூக அமைப்பு வெளிக்காட்டப்படுகிறது.
தொல்லியற் சின்னங்கள்
பண்பாட்டு அம்சங்கள் சமுதாய வாழ்வியலுடன் நெருக்கமான தொடர்புடையவை. பண்பாட்டு அம்சங்களாக சமயம், கலை, வாழ்வியல், கிரியை, இலக்கியம், அரசு, இறைநம்பிக்கை ஆகியன அமையும் மேற்படி பண்பாட்டு அம்சங்கள் இந்து நாகரிக வரலாற்றினை உறுதிப்படுத்தும் சான்றுகளாக விளங்குகின்றன. வரலாற்று மூலங்களை உறுதிப்படுத்தக்கூடிய வரலாற்று மூலங்களாகவும், ஊகமான பண்பாட்டுக் கூறுகளையும் அண்மைக் காலத்திலே விஞ்ஞான பூர்வமானதாக அவதானிக்கும் முறையியலையும் காணலாம். வரண்முறையான விஞ்ஞானம் என்னும் நிலையில் இக்கொள்கை முன்வைக்கப்படுகின்றது.
தொல்பொருள் சான்றுகள் இந்துப் பண்பாட்டின் வரலாற்றுத் தடயங்களை அறிவதற்கான மூலச்சான்றுகளாக உள்ளன. தொல்பொருள் சான்றுகளை புலமையாளர்கள் வாசித்து அறியும் போது பண்பாட்டு வேர்களை அடையாளம் காணமுடியும். இந்துப் பண்பாட்டில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட மாற்றங்களையும் மரபுகளின் வளர்ச்சியையும் அறிவதற்கு இது பெரிதும் உதவுகின்றது. தொல்பொருள் சான்றுகளில் பூர்வீக கட்டடங்கள், சிற்பங்கள், சின்னங்கள், உலோக படிமங்கள், கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், நாணயங்கள் பொறிப்புக்கள் ஆகியன உள்ளடங்கும் அழியாது காலம் காலமாக நிலைத்து நிற்கும் தொல்பொருள் சின்னங்கள் உறுதியான சான்றாதாரங்கள் என்பதில் ஐயமில்லை. தொல்பொருள் சான்றுகளில் அடங்கும் பட்டயங்கள். கல்வெட்டுக்கள், செப்பேடுகள், சாசனங்கள் ஆகியன அழியாச் சான்றுகளாகவே கொள்ளப்படும். இத்தகைய தொல்பொருள் எழுத்துக்கள் ஆரம்பத்தில் இலக்கிய வடிவங்களாகவே கூறப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் "ஸ்வஸ்திஸ்ரீ" என்றும் சொல் மங்கலமுண்டாகுக என்னும் கருத்தைக் குறிப்பிடுவதாக அமைகின்றது. கல்வெட்டுக்களில் அவை எழுதப்பட்ட காலம், அதன் நோக்கம் என்பன கூறப்பட்டு அந்த நோக்கத்திற்குத் தடையாக இருப்பவர்கள் அடைந்து கொள்ளும் துன்பங்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. கல்வெட்டின் இறுதிப் பகுதியில் படைக்கிளவி எனும் வாசகப் பகுதியில் கல்வெட்டில் கூறப்பட்டவற்றுக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அடையும் துன்பம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சிறந்த உதாரணமாக திருக்கேதீச்சர திருத்தலம் பற்றிய கல்வெட்டினைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டில் பாடல் பெற்ற தலங்கள் தமது மூர்த்தி தல தீர்த்த பெருமையையும் கோவில் பண்பாடுகளையும் கல்வெட்டுக்கள் என்னும் தொல்பொருள் சான்றுகளுடாகவே எடுத்துக்காட்டுகின்றன. பல்லவர், சோழர், நாயக்கர் பண்டியர் விஜயநகரர் முதலான அரசர்களது பண்பாடுகளையும் வெளிப்படுத்தும் தனித்தனிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இந்துப் பண்பாட்டு மரபுக்கான சாசன வடிவங்களில் கூடுதலானவை கோயிற் சாசனங்களாகும். ஆலயத்திற்கு அரசர்கள் வழங்கிய ஆதரவுகளை அவை சுட்டிக் காட்டுகின்றன. ஆலய நிபந்தனைகள் ஆலய வழிபாடுகளை சுட்டிக் காட்டியால் இத்தொல் பொருட் சின்னங்கள் இந்து சமயச் சார்பானவையாக அமைந்துள்ளன. ஆலய வழிபாடுகள் ஆலய சமுதாய தொடர்புகள் என்பவை இக்கல்வெட்டுச் சான்றுகள் மூலம் வெளிப்படுகின்றன.
கல்வெட்டுப் பொறிப்புக்களைப் போலவே சின்னங்கள் பொறிப்புக்களும் இந்து நாகரிக வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்றன. மட்பாண்டம், ஜாடிகள் எழுத்துக்கள் பாவனைக் கருவிகள் என்பவையும் பண்பாட்டுச் சந்தர்ப்பங்களாக விளங்குகின்றன. தொல்பொருட் சின்னங்களின் அமைப்பு, வடிவம், மூலம், வெளிப்படுத்தும் கருத்து என்பவற்றைக் கொண்ட இந்துப்பண்பாட்டின் ககட்டடக்கலை வளர்ச்சியை அடையாளப் படுத்தலாம். மன்னர்களது பெருமைகளைக் கூறும் தூண்கள், ஸ்தம்பங்கள் எழுத்துக்கள் மட்டுமல்லாது சிற்ப குறியீடுகளையும் அலங்காரச் சின்னங்களையும் கொண்டுள்ளன.
தொல்பொருட்சின்னங்களில் அடங்கும் கட்டட மரபும் அதனுடன் இணைந்த அலங்கார வடிவங்களும் இந்து நாகரிகப் பண்பாட்டின் பல்வகை அடையாளங்களையும் வெளிப்படுத்து வனவாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அரசர் மரபினர் பின்பற்றிய தனித்துவமான கலை வடிவங்கள் தொல்பொருட் சின்னங்களுடாக வெளிப்படும் ஒவ்வொரு காலத்துக்குமான கலை வடிவங்களை நிருணயிப்பதில் தொல்பொருட் சின்னங்கள் பிரதான பங்கு வகிக்கின்றன. சிந்துவெளிப் பிரதேசத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்ட கட்டடங்கள் இந்தியக் கட்டடக் கலைக்கு அ,தாரமானவை. பெருமண்டபம் வீட்டு அறைகள், நீராடும் சாலைகள், வீதிகள் முதலியன கட்டடக்கலைக்கான ஆதாரங்களாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. வடஇந்தியாவின் கோவில் கட்டிடங்கள் அக்கால கோவில் அமையும் சூழலை விபரிப்பதுடன், நாகர்பாணியிலான மழை நீர்த்தேக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான உயர் கூம்பு வடிவினதாக காணப்படுகின்றது. மலைப் பாங்கான பகுதியில் நாற்சதுரமான தளத்தை உடையதான கட்டடங்களும் சமநிலப் பரப்பிலே வட்ட வடிவமான கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையை காணமுடிகின்றன. கோவிலின் அடிப்பாகம் வட்ட வடிவமாக அமைந்து காணப்படும் தூபி வேடர்பாணிக் கலையாகும். தமிழ் நாட்டில் திராவிடமாணிக்க கலைவடிவக் கோவில்கள் இந்துக் கோவில் கலாசாரத்தின் தொல்பொருள் எச்சங்களாக விளங்குகின்றன.
தொல்பொருள் பொறிப்புகளில் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்ட நாணயங்கள் பிரதான ஆதாரங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை காசுகள் எனவும் குறிப்பிடுவர் நாணயப்படங்கள், நாணய எழுத்துக்கள், நாணயங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலம் என்பவை இந்து நாகரிக மரபின் உறுதியான வரலாற்றுத் தரவுகளாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.
நாணயங்களைப் போலவே சிற்பங்கள் விக்கிரகங்கள் முதலியனவும் சாகாவரம் பெற்ற வரலாற்று ஆவணங்களாகும். கல், மரம், உலோகம் என்பவற்றை மூலமாகக் கொண்டு இச்சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிற்ப எழுத்துக்கள் சிற்பசித்திரங்கள் என்பன பேசும் வரலாறுகளாகவே உள்ளன. வரலாற்றுத் தடயமாக மட்டுமன்றி கலை ஆளுமை, கலைரசனை, இலக்கியத் தொடர்புகளை வெளிப்படுத்தக் கூடியவாறு தொல் சிற்ப வடிவங்கள் விளங்குகின்றன. தெய்வீக சிற்பம், ஆடல் சிற்பம், அடியார் சிற்பம் அலங்கார சிற்பம் என சிற்பக்கலை மரபு பல்வகைப் பரிணாமம் பெற்றுள்ளது எனக் கூறமுடியும். தொன்மையான சிற்பங்களே உலகளாவிய நிலையில் இந்துப்பண்பாட்டு வடிவங்களைப் பறை சாற்றுகின்றன. வெளிநாட்டவர்கள் இந்துப் பண்பாட்டில் ஆர்வம் கொள்வதில் சிற்பக்கலை பெரும்பங்கு வகிக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக