16.10.25

அரசியலின் அறிமுகம்

அரசியலின் அறிமுகம்

மனிதன் எப்போது மற்றவர்களுடன் பழகி சமுதாயமாக வாழத் தொடங்கினானோ அப்பொழுதே அவனுடைய அரசியல் வாழ்க்கையும் ஆரம்பித்துவிட்டது. இதனால் அரசியல், மனிதனின் சமூக வாழ்வில் அத்தியாவசியமான ஒரு அங்கமாகும். எல்லா மனிதர்களும் அரசொன்றினுள்ளே பிறக்கின்றனர். அதனால் மனிதன் அரசியல் விலங்காவதால் அரசியலிலுள்ள ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலில் பங்கு பற்றி அன்னியோன்னிய மற்றும் விடுவிக்க முடியாத ஒரு தொடர்பு நிலையை ஏற்படுத்துகின்றான். இந்த தொடர்பின் இயல்பினை எல்லா செயற்பாட்டுச் சமூகப் பிரசைகளும் அரசறிவியலை கற்கும் மாணவர்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த வகையில் எல்லா மக்களின் சமூக வாழ்க்கையில் பிரதான அங்கமாக பயிலும் துறையே அரசியல் என எளிமையாக கூறலாம். அரசியலைப் பற்றிப் பயிலும் கற்கையான அரசறிவியல் நீண்ட வரலாற்றைக் கொண்டதும் சுமார் 25 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததுமாகும். கி.மு. 4.ஆம் நூற்றாண்டில் இருந்து கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் அரசியலைக் கற்றல், கற்பித்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் போன்றன விசேட கற்கை நிலையங்களில் நடைபெற்றன. பிளேட்டோ (Plato) மற்றும் அரிஸ்டோட்டில் (Aristotle) போன்ற புகழ் பெற்ற கிரேக்க தத்துவஞானிகள் அரசியல் தொடர்பான கற்கையின் ஆரம்ப கருத்தாக்களாவர். அரிஸ்டோட்டிலை அரசியலின் தந்தை என கூறுகின்றனர்.

அரசறிவியலைக் கற்றல் என்பதில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அரசியல் மற்றும் அதனோடு தொடர்புடைய துறைகள் பற்றி கற்றல், ஆய்வு செய்தல், விபரித்தல், இருக்கின்ற கோட்பாடுகள் மற்றும் எண்ணக்கருக்களை விமர்சனத்திற்கு உட்படுத்தல், புதிய கோட்பாடுகள், எண்ணக்கருக்களை கட்டியெழுப்புதல், நடைமுறை அரசியல் கொள்கைகளையும் முறைகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி புதிய மாற்றுப் பிரேரணைகளை முன்வைத்தல். அரசறிவியலில் ஈடுபடுவோருக்கு மட்டுமன்றி பிரசைகளுக்கும் அரசியல் அறிவினை ஊட்டல் போன்றனவும் இதில் அடங்குகின்றன.

பிளோட்டோவும் அரிஸ்டோட்டிலும் தமது கல்வி கூடங்களில் இவற்றையே கற்பித்தனர். தற்போது பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இயையே கற்பிக்கப்பட்டு வருகின்றன.

அரசறிவியலை விளங்கிக் கொள்வது தொடர்பாக சில விடயங்களை எடுத்துக் கொள்வது சிறந்ததாக அமைகின்றது.

1. மெய்யியல், கணிதம், தர்க்கவியல், ஒழுக்கவியல், அழகியல் போன்ற துறைகளை போன்று அரசறிவியலின் பரவலும் கி.மு. 4ம் நூற்றாண்டு அளவில் புராதன கிரேக்கத்தில் ஆரம்பமாகியதனால் அரசியல் ஓர் புராதன கற்கையாகும் எனக் கூறலாம்.

2. அரசறிவியலின் இயல்பு, பாடப் பரப்பு, உள்ளடக்கம், விதிமுறைகள், கோட்பாடுகள், எண்ணக்கருக்கள் போன்றன பல்வேறு வளர்ச்சிகளினால் சுமார் 25 நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டு மாற்றம் அடைந்து மற்றும் அபிவிருத்தி அடைந்து வந்துள்ளதால் இது ஓர் கற்கைத் துறையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

3. அரசறிவியலில் உள்ள அணுகுமுறைகள், கோட்பாடுகள், செய்முறைகள் என்பன பற்றி பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள் வேறுபட்டு அமைவதனால் அதனை ஒரு பன்மைத் தத்துவம் என்று கூறப்படுகின்றது. அவை பல்வேறு சம்பிரதாயங்களுடன் காணப்படுவதால் அரசறிவியலை கற்பது ஒரு சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

அரசியல் விஞ்ஞான கற்கை நெறி பல்வேறு கல்வியலாளர்களினாலும் தத்துவ ஞானிகளாலும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. அரிஸ்டோட்டில் அரசியல் என்றும், வில்லியம் கொட்வின் அரசியல் விஞ்ஞானம் என்றும், R.G. கெட்டல் அரச விஞ்ஞானம் என்றும், சேர். பிறட்றிக் பொலொக் ஆட்சியியல் விஞ்ஞானம் என்றும் அழைத்தனர்.

இதேபோல ஜெல்லினக் (Jellinek) சிட்ஜிவிக் (Sidgwik), பேராசிரியர் லஸ்கி (Prof. Laski) போன்றோர் அரிஸ்டோட்டிலைப் போன்று பாடத்திற்கு அரசியல் என்ற Q . Bryce ų, John Seeley, Burgess, Willoughby அரசறிவியல் என்ற பெயரையே பயன்படுத்தினர். அதேவேளை இன்னும் சில பல்கலைக்கழகங்களில் இக் கற்கை துறை "அரசியல் துறை" என்றும் வேறு சில பல்கலைக்கழங்களில் "அரசறிவியல் துறை" என்றும் அழைக்கப்படுகின்றது.

எனவே கி.மு. 4ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் எதென்ஸ் நகரில் அரசியல் என்ற பெயரில் ஆரம்பமாகிய இப்பாடம் இன்று அரசறிவியல் என்று மாற்றமுற்று பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டங்களால் போதிக்கப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக