17.10.25

A/L கட்டுரை தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய போக்குகள்

தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய போக்குகள்

குறிப்புக்கள் :

1.
முன்னுரை

2.
.வெ.சு.ஐயரின் சிறுகதைகள்

3.
மணிக்கொடி ஆசிரியர்களின் கதைகள்

4.
சிறுகதை வளர்ச்சிக்கு இதழ்களின் பணிகள்

5.
இன்றைய சிறுகதைகளின் போக்கு

6.
முடிவுரை

தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சியினை விடுதலைக்கு முன்', 'விடுதலைக்குப் பின்' என்ற இரு காலப் பகுதிகளாகப் பிரித்து ஆராய்வது பயனளிக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் தமிழ்ச் சிறுகதை தோன்றுவதற்குரிய சூழ்நிலை அமைந்தது. தாகூரின் சிறுகதைகள் சிலவற்றைப் பாரதியார் மொழிபெயர்த்தாலும் ஏறக்குறைய அவர் காலத்திலேயே வாழ்ந்த .வெ.சு.ஐயரே (1881-1925) தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்ற நிலையிற் போற்றப்படுகிறார். 'கதைகள் கவிதை நிரம்பியனவாய் ரஸாபாவோ பேதமாய் இருக்கவேண்டுமென்பது என் அபிப்பிராயம்' என்று சிறுகதையைப்பற்றித் தம் கருத்தை வெளியிட்டவர் அவர். ஆங்கிலம், செருமன் போன்ற பிற மொழிகளில் ஐயருக்கிருந்த புலமை இவ்வகை இலக்கியத்தைத் தமிழ் மொழியிலும் உருவாக்க உதவியது எனலாம். 'மங்கையர்க்கரசியின் காதல்' என்ற தலைப்பில் எட்டுக் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் 1927இல் வெளிவந்தது. இந்திய விடுதலைக்கு முன் .வெ.சு.ஐயரின் பின்வாரிசுகளாக விளங்கிய சிறுகதை ஆசியர்களிற் குறிப்பிடத் தகுந்தவர்கள் எழுவராவர். கு..ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி, கல்கி, தி...ஆகிய இவர்கள் சிறுகதையை ஒரு சோதனைக் களமாக்கி, உத்தியிலும் கருப் பொருளிலும் தங்கள் தனித்துவத்தைப் பதித்துச் சென்றனர். நடுத்தர வருக்கத்தினரின் வறுமையையும் பற்றாக்குறையையும் கருப்பொருளாகக் கொண்டு தமக்கே உரிய நடையில், உள்ளத்தைத் தொடும் வகையிற் கதைகளைப் படைத்துக் காட்டியவர் புதுமைப்பித்தன். பிற ஆசிரியர்களைவிட உளவியலுக்குச் சிறப்பிடங் கொடுத்து ஆண் பெண் உறவுகளை நுணுகி ஆராய்ந்து பார்த்தவர் கு..ராஜகோபாலன். 'கதை' சொல்லுந் திறன் படைத்தவர் ராமையா.மௌனி தத்துவங்கள் பொதிந்த கதைகள் வரைந்தார். கல்கி கதைப் பின்னலிற் கவனம் செலுத்தி, எதிர்பார்ப்பு, ஆர்வநிலை இவற்றை ஊட்டும் கதைகள் புனைந்தார். மனித இயல்புகளை வெவ்வேறு கோணங்களில் வரைந்து காட்டினார் பிச்சமூர்த்தி. புதுமைப்பித்தன், ராமையா, கு..ரா., பிச்சமூர்த்தி முதலியோர் மணிக்கொடி என்ற இதழ் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அறிமுகமான காரணத்தினால் 'மணிக்கொடி ஆசிரியர்கள்' என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் எழுதிய கதைகள் நூல் வடிவிலும் வந்துள்ளன.

இலக்கிய வளர்ச்சியில் வார,மாத இதழ்களுக்குச் சிறப்பானதோர் இடமுண்டு என்பதனை மறுத்தல் இயலாது. சிறுகதையை மக்கள் அதிகம் விரும்பிப் படிப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தவை ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கலைமகள், தீபம் போன்ற பத்திரிகைகள். இதழ்கள் வெளியிடும் கதைகளை வணிகக் கதைகள் (Commercial stories) என்பர் வணிக நோக்கே இதழ்களின் குறிக்கோளாக இருப்பதனால், அவற்றில் வெளியிடுங் கதைகளின் நோக்கமும் பயனும் இலக்கியத்தரக் கதைகளினின்றும் மாறுபட்டவையாம்.

இன்றைய சிறுகதைப் போக்குகள் எவ்வாறு உள்ளன? இன்று கதைகளிலும் புதினங்களிலும் (நாவல்கள்) பாடுபொருள்கள் விரிவடைந்து வருவதனைக் காண்கின்றோம். தனி மனிதன் பிரச்சினைகள், கால வேறுபாட்டால், புதியன பல முளைத்துள்ளன. சமூக உறவுகளும் பொருளாதாரச் சிக்கல்களும் மாறுதலடைந்து வருவதனால் சிறுகதைகளும் புதினங்களும் அவற்றைச் சுற்றிப் பின்னப்பட்டு வருகின்றன. தந்தை மகன் உறவு, கணவன் மனைவி உறவு, அலுவலகத்தில் மேலாளர் அலுவலர் உறவு, நண்பர்கள் உறவு, இன்னும் எத்தனை எத்தனையோ உறவுகள் புதிய கோணத்தில் இன்றுமுளைத்துள்ளன. இவை மேனாட்டுப் பண்பாட்டின் பாதிப்பின் விளைவுகள். இவ்வுறவுகளை மையமாக வைத்து பொன்னீலன், வண்ணதாசன், ராஜ நாராணன் போன்றோர் சிறுகதைகள் புனைந்து வருகின்றனர்.

சிறுகதைகளை வணிகக் கதைகள் அல்லது விதி மரபுக் கதைகள் (Formula Stories) என்றும் தரமான கதைகளென்றும் இருவகைகளாகப் பிரித்தால் இதழ்கள் தாங்கி வருவனவெல்லாம் முதற் பிரிவிலும் நூல் வடிவில் வருவனவெல்லாம் இரண்டாம் பிரிவிலும் அடங்கும். வணிக நோக்கத்தை உடைய பெரும்பாலான கதைகள் இன்று பாலுணர்வை அடிப்படையாகக் கொண்டு மக்களின் கீழ்த் தரமான இரசனைகளைத் தூண்டிவிடுவதைக் காணலாம். "மக்கள் இரசனை அவ்வாறு உளது. எனவே, காலத்தின் மாறுதல்களுக்கேற்ப இக்கதைகளை நாங்கள் வெளியிடுகிறோம்' என்று இதழ்கள் வாதிடலாம். மக்களிடையே இலக்கியச் சுவையை வளர்க்கும் பணி இதழ்கள் பணியாகும். வலிமை வாய்ந்த கருவிகளாதலால் மக்களின், சிறப்பாக இளைஞர்களின் சுவைகளைத் திசை திருப்பிவிடும் ஆற்றல் வார, மாத இதழ்களுக்கு உண்டு. எனவே, மக்களின் சுவை, தரம் குறைந்து விடாமற் காக்கும் காவலர்களாக இருந்து பணி ஆற்றுவதே தம் கடமை என உணர்ந்து, காமச் சுவையை மிகைப்படுத்திக் கதைபுனையும் வழக்கத்தை (Por-nographic Literature) இதழ்கள் கைவிடல் நன்று.

இதழ்கள் தாங்கிவரும் கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் குறைந்தவை என்று கூறல் இயலாது. எனினும், பெரும்பாலான கதைகள் படிப்போர் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கிளறி விடும் நோக்கத்தோடும் புதிர்களைத் தோற்றுவித்து அவிழ்த்து விடுதல் போன்ற உத்திகளைக் கையாளும் நோக்கத்தோடும் கதைப் பின்னலுக்கே (Plot) சிறப்பிடங் கொடுக்கின்றன. இவற்றை விதிமரபுக் கதைகள் எனலாம். நேர்மாறாக இலக்கியத் தரம் வாய்ந்த கதைகள் கருப்பொருளுக்கும், பாத்திரப் படைப்புக்கும், பாத்திரங்களின் உளவியலுக்கும் அழுத்தங் கொடுப்பதைப் பார்க்கிறோம். சிறுகதையில் அகலத்தைவிட ஆழமே சிறப்பிடம் வகிக்கின்றது. சிறுகதைத் தொகுதி நூலில் அமைந்த கதைகளுக்கும் இதழ்களில் வெளியிடப்படும் கதைகளுக்குமிடையே தரவேறுபாட்டினை ஒரு முறை படித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

இன்று சிறுகதை, கதைப் பின்னலுக்கு அழுத்தங் கொடுக்கும் பண்பை இழந்து, பாத்திரங்களின் உளவியலில் மூழ்கும் இயல்பினைக்காணலாம். சமூகப் பிரச்சினைகளில் கண்ணோட்டஞ் செலுத்தும் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் போன்ற சிறு கதை ஆசிரியர்கள் தமிழ்ச் சிறுகதைகளுக்கு உரமும் வலிவும் ஊட்டுகின்றனர். விஞ்ஞான வளர்ச்சியும் அதன் விளைவாக அறிவு வளர்ச்சியும் மிகுந்த காரணத்தால் சிறுகதைக் களத்தின் பரப்பும் வளர்வதைக் காண்கிறோம். கதைக் கருப்பொருளின் (Theme) அகலம் இன்று விரிவடைந்துள்ளது. எத்தனை வகையான கதைப்பொருள்களைச் சந்திக்கிறோம்!'

வட்டாரக் கதைகள் ராஜநாராயணன் போன்றோரால் பின்னப்படுகின்றன. புதுமைப்பித்தன் தொடங்கிய வழியைப் பின்பற்றிக் கரிசல் காட்டு மணங் கமழும் சிறுகதைப் படைப்புகளை நமக்கு அளிக்கின்றார் ராஜநாராயணன். மொழிநடை கொச்சைச் சொற்களையும் வட்டார வழக்குகளையும் தாங்கி வருவது இக்காலத்துச் சிறுகதைகளின் சிறப்பான பண்பாகும். உரையாடலைக் கொச்சையாகப் பயன்படுத்துவதால் நடப்பியற் பண்பு (Realism) உருவாகிறது என்பது இந்நடையைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் கொள்கையாகும். மேலும் ஒரே நிகழ்ச்சியை மையமாக வைத்து (Situation) வருணனை வாயிலாகச் சிறுகதைக்குரிய களச் சூழ்நிலையை (Atmosphere) அமைக்கும் முயற்சியினை வண்ணதாசன் போன்ற எழுத்தாளர் படைப்புகளிற் காணலாம்.

வியப்பு முடிவு (Surprise ending), ஆர்வநிலை ஊட்டுதல் (Sus-pense) போன்ற உத்திகள் மேனாட்டில் ஹென்றி, மாப்பசான், சோமர்செட்மாம் போன்றவர்களாற் சிறுகதையின் தொடக்க காலத்திற் கையாளப்பட்டன. சிறுகதைகளுக்கு இவை இன்றிமையா பண்புகளெனக் கருதப்பட்ட காலம் அன்று நிலவியது. ஆனால், செக்கோவ் போன்ற ஆசிரியர்கள், இப்பண்புகளின்றியும் தரமான சிறுகதைகள் படைக்க இயலுமென நிறுவினர். உளவியல் நோக்கோடு தரமான கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் இன்று செக்கோவைப் பின்பற்றுபவர்களாக விளங்குகின்றனர். 'கதை எழுதப் பயன்படா' என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கருப்பொருளெல்லாம் இளந் தலைமுறையினர் கையில் வண்ணம் பெற்றுத் திகழ்கின்றன. இக்கால ஆசிரியர்கள் பெரும்பாலோரும் புறநிலையில் (Obective) நின்றே கதை எழுதுகின்றனர்.

புதுமைப்பித்தன் மரபிலே தோன்றிய இன்றைய எழுத்தாளர்களாகிய ஜெயகாந்தன் போன்றோர் தங்கள் கதைகளில் நடுத்தரக் குடும்பத்தினர், கீழ்மட்டத்தினர் ஆகியோரையே கதைத் தலைவர்களாக அமைத்துக் காட்டுவது வரவேற்கத்தக்கதாகும். எளிய மக்களைக் கதைத்தலைவர்களாக, காவியத் தலைவர்களின் எதிர் நாயகர்களாக (Anti heroes) அமைக்கும் மரபு வளர்ந்து வருகிறது. மேலும், 'புதிய போக்கு (New Wave) என்ற போர்வையிற் காதலுணர்வைப் புகுத்தி, இளம் உள்ளங்களுக்குக் கிளுகிளுப்பேற்றிக் காட்டுஞ் சிறுகதைகளும் இப்பொழுது வெளிவருகின்றன.

புதிய எழுத்தாளர் பலர் இன்று உருவாகி வருகின்றனர். மனிதனுடைய அடிப்படை உணர்வுகளும் நிறைவேறாத ஆசைகளும் ஆயிரமாயிரம் பிரச்சினைகளும் கருப்பொருளாக அமைந்து இன்றைய எழுத்தாளர்களால் ஓவியமாகத் தீட்டப் பெறுகின்றன. சிறுகதை இலக்கிய வடிவம் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக