பல்லவர் காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்கள் தவிர்ந்த ஏனைய நூல்கள் பற்றி விளக்குக?
பல்லவர் காலத்திலே பக்தி இலக்கியங்களே பெருமளவு தோன்றினாலும் வடமொழிக்கு மன்னர்களிடமிருந்து வேண்டியளவு ஆதரவு கிடைத்ததனால் வடமொழி செல்வாக்கு பல்லவர் காலத்தில் அதிகம் ஏற்பட்டது. இதனால் வடமொழி யாப்பு முறைகளையும் தமிழ்மொழி தழுவத் தொடங்கியது. இதனால் வடமொழியாப்பு அமைதிகளை விளக்குவதற்கு சங்கயாப்பு, பட்டியல் நூல் யாப்பிலக்கண நூல்கள் தோன்றின ஆனால் அவை தற்போது கிடைத்தில. பல்லவர் காலத்தில் சைவம், வைஷ்ணவம் புத்துயிர் பெற்றாலும் சமண, பௌத்த மதங்கள் முற்றாக அழிந்துவிடவில்லை அவ்விரு சமயத்தவர்களும் தங்கள் சமயங்களை வளர்த்தெடுப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையிலே சிறந்த நூல்களை எழுதியும் ஒழுக்கநெறி தவறாதும் வாழ்ந்து வந்த சமண முனிவர்கள் இலக்கண நூல்கள். நிகண்டுகள் காவியங்கள். அறநூல்கள் முதலியவற்றை இயற்றினர். கொங்க வேளிர் எனும் சமண பெரியார் எழுதிய பெருங்கதை "கொங்க வேளிர் மாக்கதை" எனும் சிறந்த காவியமாக போற்றப்படுகிறது. பல்லவர் காலத்தில் வாழ்ந்து இரண்டாம் தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் தமிழ் பற்று உடையவர்களாக வாழ்ந்து வந்தனர். அதனால் நந்திக் கலம்பகம் எனும் பிரபந்தமும் பெருந்தேவனார் எழுதிய பாரதா வெண்பா எனும் இதிகாசமும் நத்திவர்மன் காலத்துக்கு உரியதாகும். நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்டதே நந்திகலம்பகமாகும் இந்நூலை பின்பற்றியே பெரும்பாலும் பிற்காலத்தில் பல கலம்பகங்கள் எழுந்தன. இக்கலம்பகத்தில் தோல், வகுப்பு, மதங்கு, அம்மானை முதலிய பல உறுப்புக்களுடன் பல்வகை பாடல்களும் தெரிந்து பாடப்பட்டதாகும். ( பூக்கள் பல கலந்து தொடுக்கப்பட்ட பூமாலை போல் இது உள்ளதனால் கலம்பகம் என்ற பெயர் உருவாக்கப்பட்டது)
பாரத கதையை வெண்பாவில் பாடியதால் பாரத வெண்பா" எனப் பெயர் பெற்றது. இந்நூல் பாடல்களும் உரையும் கலந்து ஆக்கப்பட்டதாகும். இதனால் உரையிடப்பட்ட பாட்டுடை செய்யுள்" என்ற பெயர் வழங்கப்படுகிறது. பாட்டுக்கள் யாவும் தெள்ளிய தமிழில் அமைந்திருக்கும் உரைநடைப் பகுதியில் வடமொழிச் சொற்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடை இக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
பல்லவர் காலத்தில் எழுந்த சமயச் சார்பற்ற நூல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சேர. சோழ, பாண்டியன் எனும் முடியுடையோர் மூவரை பற்றியும் பாடப்பட்ட "முத்தொள்ளாயிரம்" எனும் நூலாகும். இந்நூல் மொத்தமாக 130 செய்யுட்களை கொண்டுள்ளது. மூவேந்தர்களதும் வீரம், புகழ், பெண்கள் அவர் மீது கொண்ட காதல் என்பன இப்பாடல்களில் சித்தரிக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இலக்கியங்களே பல்லவர் காலத்தில் எழுந்த சமய சார்பற்ற இலக்கி நூலாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக