14.9.25

A/L இணைய ஊடகங்களின் பாவனை( Use of Internet Media Nowadays Tamil)

தற்காலத்தில் இணைய ஊடகங்களின் பாவனை

Use of Internet Media Nowadays Tamil

தகவல் தொடர்பில் ஊடகம் (Media) என்பது தகவல்களைச் சேமித்து வழங்கப் பயன்படுத்தப்படும் கருவியாக உள்ளது. இது பெரும்பாலும் மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம், பொது ஊடகம் என்று பலவாறு அழைக்கப்படும். பொதுமக்களை மையப்படுத்தி, அம்மக்களுக்கு வேண்டிய தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து வழங்கும் சாதனங்கள் பொதுசன ஊடகங்கள் (Mass Media) எனப்படுகின்றன.

ஊடகங்கள் பதிப்புறை சார்ந்து தகவல்களை வழங்கும் அச்சு ஊடகங்களாகவும் மின்னியல் சார்ந்து இயங்கும் இலத்திரனியல் ஊடகங்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. பத்திரிகைகள், சஞ்சிகைகள், இதழ்கள், துண்டுப்பிரசுரங்கள் முதலிய அச்சு வடிவில் காகிதங்களில் வெளிவருபவை அச்சு ஊடங்கங்கள் ஆகும். வானொலி, தொலைக்காட்சி. திரைப்படம் என்பவை இலத்திரனியல் ஊடகங்கள் ஆகும். இலத்திரனியல் ஊடகங்களை மின் ஊடகம், மின்னணு ஊடகம் என்றும் அழைப்பர்.

தற்காலத்தில் புதியதோர் ஊடகமாக இணைய ஊடகம் மக்களின் பாவனையில் உள்ளது. புதிய ஊடகம் (New media) என்பது தற்காலத்தில் வளர்ச்சி பெற்று வரும் கணினிமயப்படுத்தப்பட்ட, எண்ணிய, பிணைக்கப்பட்ட தகவல் அமைப்பையும், தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் குறிக்கிறது. இணைய ஊடகம் மின்னியல் ஊடகமாக உள்ள போதிலும் தற்காலத்தில் அவற்றின் விரைவான வளர்ச்சியும் பாவனை அதிகரிப்பும் காரணமாக அது புதியதோர் ஊடகமாக வகைப்படுத்தப்படுகின்றது. இணையம் வழியிலான ஊடகங்களாக மின்னஞ்சல், சமூக ஊடகம் சார்ந்த இணையதளங்கள், வலைத்தளங்கள், இணையவழி வானொலி, தொலைக்காட்சிகள், மின்னியல் பத்திரிகைகள், மின்னிதழ்கள் மற்றும் மெய்நிகர் உலகம் ஆகியனவும் அமைகின்றன. பிற பல பொது ஊடகங்களின் வெளியீட்டு முனையங்கள் கூடுதலாக இணைய வலைத்தளங்களிலும் தோன்றுகின்றன. இணைய ஊடகங்கள் இணையத்தளங்கள் (Websites), சமூக ஊடகங்கள் (Social Media) சார்ந்தும் கணினி, மற்றும் இணையத்தில் வெளிவருகின்ற நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், விளம்பரங்கள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்றவை சார்ந்தும் தகவல்களைப் பரிமாறுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் கணினி இணையம்,தொலைபேசிமூலம் பல தகவல்களை வழங்கவும், பெறவும், அறிந்து கொள்ளவும் முடிகின்றது. குறிப்பாகக் கையடக்கத் தொலைபேசிமூலம் (மிடுக்கு அலைபேசி -Smartphone) எவ்விடத்திலும் எந்த நேரத்திலும் விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் ஏற்புடையதாக அமைகின்றது. அத்தோடு கையடக்கத் தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புதல், இணைய வசதிகள்,

போன்ற தொடர்புக் கூறுகளின் மூலமும் இலகுவில் தகவல்களைப் பரிமாறவும், பெறவும் முடிகின்றது. இணைய ஊடகங்களைப் பல்லூடகம் (Multimedia) என்று கூறுவர். பல்லூடகம் என்பது கட்புல செவிப்புல மற்றும் எழுத்து ஊடகங்கள் இணைந்துள்ள இணையமாகும்.

இன்று, வலைப்பின்னல் (Network) என்பது வெறுமனே தகவல் வழங்கும் ஊடகமாக மட்டுமன்றி, வெகுசன தகவல்களின் செயற்பாடுகளைச் செய்யும் பொது ஊடகமாகவும் அல்லது மக்கள் ஊடகமாகவும் அமைகின்றது. இது 'இணைய மீடியா' எனப்படும் 'இணைய ஊடகம்'(எண்ணிம ஊடகம் Digital media) என்ற ஒரு தனி குழுவை உருவாக்கி, புதியதோர் ஊடகமாக தற்காலத்தில் வளர்ச்சி பெற்று வருகின்றது.

தற்காலத்தில் அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றின் பாவனையைக் காட்டிலும் இணைய ஊடகங்களின் பாவனை அதிகளவில் உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் இணையம் போன்ற ஊடகங்கள் உலக மக்கள் அனைவரையும் வயது வேறுபாடின்றி இணைக்கும் ஒரு முக்கிய ஊடகமாகத் தற்காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. நவீன சமூகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று இணையம் ஆகும். உலகளாவிய வலை (Global network) மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், மனிதனைப் பொறுத்தவரையில் அவனைச் சுற்றியுள்ள உலகத்துடன் விரைவாகவும் இலகுவாகவும் தொடர்புகொள்வதற்கான முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக இணையம் விளங்குகின்றது.

ஊடக வகைகளில் அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் உள்ள மக்களை நோக்கியே அக்கறை காட்டுகின்றது. அத்துடன் அச்சு ஊடகங்களில் உடனுக்குடன் வரும் தகவல்களும் செய்திகளும் மக்களுக்குத் தாமதமாகவே கிடைக்கின்றன. எழுத்தறிவுள்ளவர்களும், கட்புலப் பார்வை உள்ளவர்களும் மாத்திரமே பத்திரிகைகளையும் இதழ்களையும் வாசித்துத் தகவல்களையும் செய்திகளையும் அறிந்துகொள்ள முடியும். அத்தோடு, பத்திரிகைகளையும் இதழ்களையும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு நேரகாலமும் போக்குவரத்து வசதிகளும் தேவைப்படுகின்றன.

இலத்திரனியல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி என்பன ஒலி ஒளி - அலைவரிசைகளோடு இயங்குகின்றன. இவை முறையே செவிப்புல சாதனமாகவும், கட்புல - செவிப்புல சாதனமாகவும் தொழிற்படுகின்றன. இவ்விலத்திரனியல் ஊடக சாதனங்கள் ஆரம்பகாலங்களில் பணவசதி படைத்தவர்களின் இல்லங்களில் மாத்திரமே பாவனைக்குரியதாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் இவை சாதாரண மக்களின் இல்லங்களிலும் பாவனைக்குரியதாக உள்ளபோதிலும், இவற்றின் மூலம் தகவல்களைப்

பெற்றுக்கொள்வதற்குத் தனியே நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. தற்காலத் துரிதகதியோடு கூடிய வாழ்க்கை முறையில் இவற்றை நுகருவதற்கான நேர ஒதுக்கீடு என்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. இந்த ஊடகங்களும் குறிப்பிட்ட பிரதேசம், நாடு என தமது எல்லைகளைச் சுருக்கிச் செயற்படுவதோடு, இவற்றின் செயலெல்லை (Coverage) சில சந்தர்ப்பங்களில் தெளிவற்றதாகவும் உள்ளதனால் சீரான முறையில் நேயர்கள் இவ்வூடகங்களை நுகரமுடியாமல் உள்ளது.

புதிய ஊடகமான இணைய ஊடகங்கள் உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் ஊடகங்களாகத் தற்காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளன. அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் ஒரு குறிப்பிட்ட பிரதேசம்,நாடு என தமது எல்லைகளை வரையறுத்துக் கொள்கின்றன. ஆனால் இணைய ஊடகத்தின் எல்லை பரந்தது; விரிவானது. இணையம் போன்ற ஊடகங்களில் இந்த உலகமே அதற்குள் சுருங்கி விடுகின்றது. இந்த உலகை ஒரு பூகோளக்கிராமம் (Global village) என்றளவில் சுருக்கி விடும் ஆற்றல் இணைய ஊடகங்களுக்கு உள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு விடயத்தை உடனடியாகவும் விரைவாகவும் நேரலையாகவும் அறிந்துகொள்ளும் அளவிற்கு இணையம் உலக மக்களைத் தனது கைக்குள் வைத்திருக்கின்றது.

ஆரம்பகாலத்தில் ஆங்கிலமொழி தெரிந்தவர்களின் கைக்குள் இருந்த இணைய ஊடகப் பாவனை தற்காலத்தில் அந்த அந்த நாட்டு மக்கள் தத்தமது தாய்மொழியில் செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதிகளைக் கொண்டிருப்பதனால் இணையத்தைக் கையாளத் தெரிந்த அனைவரும் இவ்வூடகத்தின் பயநர்களாக / பயனீட்டாளர்களாக (Users) இருக்கலாம்.

இணைய ஊடகங்களில் உலகின் மூலைமுடுக்குகளிலும் உள்ள தகவல்களும், செய்திகளும், நடப்பு விடயங்களும் உடனுக்குடன் விரைவாகப் பகிரப்படுவதனால் மக்கள் செய்திகளை உடனுக்குடன் விரைவாகப் பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன் அச்சு ஊடகங்களைப் போன்று காகிதாதிகளை விரயம் செய்ய வேண்டியதில்லை. இலத்திரனியல் ஊடகங்களை நுகர்வதற்கு நேரத்தை ஒதுக்குவதைப் போன்று இணைய ஊடகங்களின் பாவனைக்கு நேரத்தைப் பயநர்கள் / பயனீட்டாளர்கள் (Users) தனியாக ஒதுக்கத் தேவையில்லை. பயணித்துக்கொண்டும், தமது பணிகளில் ஈடுபட்டவாறும் இணைய ஊடகங்களில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு தகவல்களை அறிந்துகொள்வதனால் நேரவிரயம் குறைவாக உள்ளது. இணைய ஊடகங்கள் அசைவுத்தன்மை கொண்ட ஊடகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, மிடுக்கு அலைபேசி (Smartphone), மடிக்கணினி (Laptop). வரைபட்டிகை (Tablet (Tab)ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவதனால் இணைய ஊடகத்திற்கு என்று தனியாக நேரத்தைச் செல்வழிக்கத் தேவையில்லை.

தற்காலத்தில் அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் புதிய ஊடகமான இணைய வாடகங்களோடு ஒன்று சேர்ந்துவிட்டன எனலாம். இணையவழிமூலம் அச்சு ஊடகங்களை நுகரும் போக்கு இன்று துரித வளர்ச்சி பெற்றுவிட்டது. பத்திரிகை, இதழ்கள் போன்ற அச்சு ஊடகங்களை மக்கள் நுகருவதற்கு அவற்றினைச் சென்று வாங்க வேண்டும் அல்லது நூலகங்களில், வாசிகசாலைகளில் சென்று வாசிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தற்காலத்தில் இல்லை. இன்று இத்தகைய பத்திரிகைகளும் இதழ்களும் காலநேரத்தைச் சுருக்கும் வகையிலும், விரைவுத் தன்மையினை அதிகரிக்கும் வகையிலும் இணையவழி மின் பத்திரிகைகளாகவும் (e-paper), மின்னிதழ்களாகவும் (e-journal), மின்நூல்களாகவும் (e-book), உருமாற்றம் பெற்றுள்ளன. அத்துடன், மின் நூலகங்களும் (e-library) தோன்றி விட்டதனால் காகிதம் என்னும் மூலப்பொருளைக் கொண்ட அச்சு ஊடகங்கள் இன்று கணினிமயப்படுத்தப்பட்டுவிட்டன. இன்று இவை கணினி, மடிக்கணினி, கைத்தொலைபேசி (மிடுக்கு அலைபேசி - Smartphone) மூலமாக வாசகர்களையும் மக்களையும் நோக்கிச் செல்வதுடன், இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு விரைவாகவும் நுகரப்படுகின்றன.

உண்மையில் இன்று வாசகர்களை நோக்கிய அல்லது வாசகர்களை நோக்கிய இலகுவான வாசிப்புமுறையில் (Readers friendly manner) இவை உள்ளன. இதனால் குறிப்பாக இளம் வாசகர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவை அமைவதோடு, அவர்களின் அதிகளவான நுகர்விற்கும் காரணமாக அமைகின்றன.

இலத்திரனியல் ஊடகங்களான வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளும் இணைய வானொலி மற்றும் இணையத் தொலைக்காட்சி என இணைய ஊடகங்களுக்குள் நுழைந்துவிட்டதனால்,இணையம் அனைத்து ஊடகங்களையும் தன்னுள் உள்ளடக்கும் ஓர் ஊடக சாதனமாக விளங்குகின்றது. இவ்வாறு அனைத்து ஊடகங்களையும் தன்னுள் உள்ளடக்குவதனால் இணைய ஊடகங்களைப் பயன்படுத்துவதும், அவற்றில் தகவல்களை மீள மீளப் பார்த்தல், கேட்டல்,வாசித்தல் ஆகிய செயற்பாடுகளுக்கும் உதவுகின்றது. தவறவிடப்பட்ட தகவல்களையும் அல்லது மறந்துபோன தகவல்களையும் மீள மீள நுகரும் தன்மை இணைய ஊடகங்களுக்கு உள்ளது. அத்துடன் ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அதனோடு தொடர்புபட்ட மேலதிக சம்பவங்களையும் தகவல்களையும் காட்சிகளையும் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது.

பொதுவாக, ஊடகங்கள் அனைத்துமே ஓரிடத்தில் சிறு குழுவினர், செய்தியையோ தகவலையோ தொகுத்து,மறுமுனையில் பெருமளவிலான மக்களுக்கு வழங்கும் 'ஒருமுனைய' ஊடக வகையைச் சேர்ந்தவையாக உள்ளன. ஆனால் தற்காலத்தில் மக்களுக்கிடையேயும் செயற்படுகின்றன. போட்டித்தன்மைகளை ஏற்படுத்தும் விதத்திலும் அவை சமூகங்களில் பரபரப்பை நோக்கில் ஏற்படுத்தும் இட்டுக்கட்டுவதையும், வதந்திகளைப் பரப்புவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையும் ஊடகங்கள் மேற்கொள்கின்றன. இல்லாதவற்றை ஊடகங்கள் பக்கச்சாபற்றவையாகச் செயற்படுதல் அவசியமாகும். அரசியல் சார்பாகவும் கட்சி சார்பாகவும், இனம்,மதம்,மொழி, தனிநபர் சார்பாகவும் ஊடகங்கள் செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும். அவ்வாறு செயற்படின் மக்கள் ஊடகம் தனிநபர் ஊடகமாகவும் குறிப்பிட்ட குழு சார்ந்த ஊடகமாகவும் தனது பரப்பினைச் சுருக்கி விடுகின்றது.

ஊடகங்கள் 'ஊடக தர்மம்' என்ற ஒழுக்கத்தினைப் பின்பற்றுதல் வேண்டும். நடுநிலைமை. வெளிப்படையானதும் உண்மையானதுமான தகவல் பரிமாற்றம் பொதுமக்களின் குரல், இன, மத, மொழி,கலாசாரம் மற்றும் பால்நிலை வேறுபாடின்றிச் செயற்படுதல், உள்ளதை உள்ளவாறே வெளிப்படுத்தும் தன்மை ஆகிய ஒழுக்கங்களை ஊடக நிறுவனங்கள் பின்பற்றுதல் வேண்டும். அத்தோடு, ஊடகங்களில் குறிப்பாகத் தமிழ்மொழி ஊடகங்களில் தமிழ்மொழியின் கையாளுகை என்பது மொழியின் வளர்ச்சிக்கு வழிகோலுவதாக அமைதல் வேண்டும். தெளிவான உச்சரிப்பு, பொருள் மயக்கமின்மை, இலக்கண வழுவின்மை, எழுத்து மற்றும் அச்சுப் பிழைகளின்மை. பொருத்தமான சொல் மற்றும் வாக்கியப் பிரயோகங்கள் ஆகிய மொழி தொடர்பான நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும் .

ஊடகத்தின் நிகழ்ச்சிகள் தரமானவையாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் கலாசாரத்தோடும் மரபுகளோடும் தொடர்புடையதாகவும் அமைய வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்வுகள் என்ற பெயரில் பல நிகழ்வுகள் தகவல்சார் களிப்பூட்டல்களாகவும், அநாச்சாரங்களாகவும், அரட்டை அரங்கங்களாகவும், தனிப்பட்டவர்களைச் சொற்களினால் தாக்குவதாகவும் அமைகின்றது. இணைய ஊடகங்களில் பாலியல் தொடர்பான விவாதங்களும் கருத்துக்களுமே அதிகம் பகிரப்படுகின்றன. நாகரிகம் என்ற பெயரில் மேலைநாட்டுக் கலாசாரங்களின் அநாச்சாரங்களும் மக்களிடையே பரப்பப்படுகின்றன. இதனால் இணையரீதியான குற்றங்களும் (Cyber-crimes) நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஒருவிதமான சார்புநிலையை உருவாக்கியுள்ளன. இணையத்தின் வளர்ச்சி காரணமாக அனைத்து ஊடகங்களையும் ஒருங்கே நுகரும் மிடுக்கு அலைபேசிகளின் பாவனை பாலர் முதல் வயதுவந்தோர் வரை ஆக்கிரமித்துவிட்டது. இதனால் காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகர்வோர்களாக மாற்றி விட்டன.

இறுதியாக, அகில உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் சாதகமானவையாக இருப்பின், மனித குலத்திற்கு நன்மையளிப்பதாகவும் பாதகமாக இருப்பின் தீமையளிப்பதாகவும் உள்ளன. ஊடகங்கள் மூலம் எடுத்துச் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களினால் சாத்தியப்படும் என்பது யதார்த்தமானது.

எனவே, எல்லைகள் இன்றி மனித சமூகத்தின்பால் அளவற்ற நேசிப்பும், நலனும், சமுதாய அறத்தின்மீது நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்ட ஊடக நிறுவனங்கள் உருவாக வேண்டும். ஊடகங்களில் பணியாற்றுவதற்கு நல்லறிவும் நன்னடத்தையும் கொண்ட ஊடகவியலாளர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் ஊடகங்களின் பணி சமூகப் பொறுப்புடைமையாக அமையும் என்பது உண்மை

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக