வாரல் எம் சேரி வினாவிடை
1. இச் செய்யுளில் ஆசிரியர் கூறவந்த விடயம் என்ன?
பரத்தையிடம் சென்று வந்த தலைவன் மீது தலைவி கொண்ட ஊடலை தோழி தலைவனுக்கு கூறியது.
2. அதனை எவ்வாறு எடுத்துரைக்கின்றார் என எடுத்துக்காட்டுக?
தலைவன் பரத்தையிடம் சென்று வருதலால் தலைவியின் அழகு கெடுவதை ஊரவர் பழி சொல்வதாக எடுத்துக் காட்டி கூறல்.
உவமை அணியினைக் கையாளுதல்.
வரலாற்றுக் குறிப்புகளினூடாக குறிப்புப் பொருள் உணருமாறு எடுத்துரைத்தல்
3. இச் செய்யுளில் இடம்பெற்ற துறையை விளக்குக?
இதில் இரு அம்சங்கள் உள்ளன. தலைவனுக்கு வாயில் மறுத்தது ஒரு வகை; வாயில் நேர்ந்தது இன்னொரு வகை. பரத்தையர் வீடு நீ சென்றதனால் தலைவியினுடைய மாட்சிமைப்பட்ட அழகு அழிந்தபின் இவளிடம் நீ வரவும் வேண்டாம். நின் மாலையைத் தரவும் வேண்டாம் என்பது வாயில் மறுத்ததாகும். உமது செயலுக்கு நாம் உடன்பட்டவர் கள் அல்ல. எனினும் ஊரவர் உரைக்கும் பழிச்சொல்லுக்கு அஞ்சி உடன்பட்டோம் என எச்சப் பொருள் வருவித்து உரைத்தமை வாயில் நேர்ந்ததாம்.
4. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள உவமை அணியினைக் குறிப்பிடுக?
அழிசி என்பவனின் ஆர்க்காடு நகரம் தலைவியின் குற்றமற்ற மாட்சிமைப்பட்ட அழகிற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது.
5. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்பினை சுருக்கமாக கூறுக?
ஆர்க்காட்டை ஆண்டவன் அழிசி என்பதும் ஆர்க்காடு சிறந்த நகரமாக விளங்கியது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. சேந்தன் என்பவன் அழிசியின் மைந்தன். அவன் சோழநாட்டை யும் சேர்த்து அரசாட்சி புரிந்தவன் என்பதும் இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்பாகும்.
6. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள குறிப்புப் பொருளை எடுத்துக் காட்டுக?
சேந்தன் பலரும் நீராடும் காவிரித்துறையில் மருத மரங்களில் யானைகளைப் பிணித்தமை தலைவன் பலரும் காண பரத்தையர் சேரி சென்றதைக் குறிக்கும்.
வேடர்கள் கள்ளுண்டு யானைகளை வேட்டையாடி மகிழ்ந்தமை தலைவன் பரத்தையருடன் கூடி மகிழ்ந்து செல்வத்தை இழந்தமையைக் குறித்தது.
7. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள முதல், கரு, உரிப்பொருளை எடுத்துக்காட்டுக?
முதற்பொருள் : நிலமும் பொழுதும்
நிலம்
- மருதம் - வயலும் வயல் சார்ந்த இடம்
பொழுது - பெரும் பொழுது ஆறு பருவமும் சிறு பொழுது -வைகறை
கருப்பொருள் : மருத மரம்
உரிப்பொருள் : ஊடல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக