வாரல் எம் சேரி
திணை :- மருதம்
துறை :- தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது. வாயில் நேர்ந்தது.
பாடியவர் :- பரணர்
பாடல் :
வாரல் எம் சேரி தாரல்
நின் தாரே
அலராகின்றால் பெரும காவிரிப்
பலர் ஆடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள்வான் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழிதீர் மாண்நலம் தொலைதல் கண்டே.
பதவுரை :
காவிரிப் பலர் ஆடு பெருந்துறை - காவிரியில் பலரும் நீராடும் பெரிய துறையில்; மருதொடு பிணித்த - மருத மரத்தில் கட்டிய; ஏந்து
கோட்டு யானைச் சேந்தன் - மேல் நோக்கி வளைந்த தந்தத்தை உடைய யானைகளை உடையவன் சேந்தன்; தந்தை
அரியல் அம் புகவின - அவன் தந்தை கள்ளாகிய உணவையும்; அம் கோட்டு அழகிய விலங்கு கூட்டத்தை; வேட்டை வேட்டையாடும் தொழிலையும்; நிரைய
ஒள்வாள் - பகைவர்க்கு நரகம் போன்ற ஒளிபொருந்திய வாளையும்; இளையர் பெருமகன் உடைய இளம் மறவர்களுக்கு தலைவனுமாகிய; அழிசி
அழிசி என்பவனது; ஆர்க்காடு அன்ன ஆர்க்காடு என்ற நகரைப் போல; இவள் பழிதீர் மாண்நலம் - இவளது குற்றமற்ற மாட்சிமை மிக்க பேரழகு; தொலைதல் கண்டே அழிவதைக் கண்டு; அலராகின்றால் - எம் ஊரில் துன்பம் உண்டாயிற்று. வாரல்
எம் சேரி - அதனால் எம் சேரிப்பக்கம் வராதீர். தாரல்
நின் தாரே உமது மாலையை எமக்கு தராதீர்.
பொருள்:
தலைவ! காவிரியில் பலரும் நீராடும் பெரிய துறையினிடத்து மருத மரத்தில் கட்டிய மேல் நோக்கி வளைந்த தந்தத்தை உடைய யானைகளை உடையவன் சேந்தன் - அவன் தந்தை கள்ளாகிய உணவையும் அழகிய விலங்குக் கூட்டத்தை வேட்டையாடும் தொழிலையும் பகைவருக்கு நரகம் போன்ற ஒலி பொருந்திய வாளைப் பெற்றுள்ளவனும் இளம் மறவர்களுக்குத் தலைவனுமாகிய அழிசி என்பவனது ஆர்க்காடு என்னும் நகரைப் போன்ற இவளது குற்றமற்ற மாட்சிமை மிக்க பேரழகு அழிவதைக் கண்டு எம் ஊரில் அலர் தூற்றப்படுகின்றது. அதனால் இனி எம் சேரிப்பக்கம் வராதீர். உம்மாலையை எமக்குத் தராதீர்.
அருஞ்சொற்கள் :
தார் - மாலை
(தார் தருதல் கூடுதலைக் குறிக்கும்)
அரியல் - கள்;
புகவு - உணவு;
தோடு - விலங்குக் கூட்டம்
நிரையம் -
நரகம்
கோடு - கொம்பு (தந்தம்)
விளக்கவுரை:
பரத்தையர் வீடு சென்ற தலைவன் திரும்பிவந்தான். அவனைக் கண்டு தோழி கடிந்து கூறினாள். தலைவியின் அழகு சிதைந்து போய்விட்டது. இனி நீ வருவதனால் பயன் இல்லை. அப்படி வருவதாக இருந்தால் வீண் பழிதான் உண்டாகும். ஆதலால் நீ இந்தப் பக்கம் வரவே வேண்டாம். உன் மாலையையும் கொடுக்க வேண்டாம் என்பது ஒரு விளக்கம்.
இதற்கு இன்னொரு விதமாகவும் விளக்கம் அளிக்கலாம். "வாரல் எம் சேரி; தாரல் நின் தார்; இவள் நலம் தொலைதல் கண்டு அலராகின்றது என்று கூட்டி, எமக்கு நீ வருதலும் நின் தார் தருதலும் உடன்பாடல்ல. எனினும் ஊரவர் கூறும் பழிச் சொல்லுக்கு அஞ்சினோம். ஆதலால் உடன்பட்டோம் எனக் கூற்றெச்சம் வருவித்தும் உரைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக