30.9.25

A/L தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப் பணிகள்

வண.தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப் பணிகள்

சட்டகம்


1.
முன்னுரை

2.
பிறப்பும் படிப்பும்

3.
துறவு வாழ்வில்

4.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்

5.
தமிழ்த்தூதுவரானார்

6.
மலேசியாவில்

7.
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைத்தல்

8.
தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்தியமை

9.
முடிவுரை

'யான் ஒரு சொற்பொழிவாளனோ அன்றி எழுத்தாளனோ அல்லன். ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆர்வமிக்க மாணாக்கனே ஆவன். எனவே தமிழறிவிற் சிறந்த பெரியோர் பலர் கூடிய இப்பேரவையில் உரை நிகழ்த்துவதற்கு அதுவும் சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள் பற்றி உரை நிகழ்த்துவற்கு அஞ்சுகிறேன்' இவ்வாறு யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரி (தற்போதைய யாழ் பல்கலைக்கழக) மைதானத்தில் நிகழ்ந்த நான்காவது தமிழ் விழாவில் அவையடக்கமாகக் கூறினார் அறிஞர் தனிநாயக அடிகளார். இவை அவையடக்கமல்ல, அவையை அடக்கும் வகையே என்பதை அவரது உரை அங்கு புலப்படுத்தியது.

தனிநாயக அடிகளார் ஈழம் தந்த பேரறிஞர்களுள் ஒருவர். தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்த் தூதர் அவர். அவரது வாழ்வு தமிழ் வாழ்வாகவே அமைந்திருந்தது.

பிறந்தபோது சேவியர் எனப் பெயரிடப்பட்டவர். தனக்குத் தானே தனிநாயகம் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார். அப்பெயரே அவர் தமிழ் உலகில் தனிநாயகமாகத், தன்னிகரில்லாத் தமிழறிஞராக வலம் வருதற்குக் காரணமாயிற்று எனலாம்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

என்ற திருமூலரின் வாக்குக்கமையத் தமிழ்ப்பணியையே தெய்வப் பணியாகக் கொண்டு உலகெலாம் சென்று தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர் தனிநாயகம் அடிகளார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் இலட்சியப்படி தம் வாழ்வை அமைத்துக் கொண்ட பெருந்தகை அவர்.

இவர் 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி (02.08.1913) ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கரம்பொன் கிராமத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த ஆசிரியர் கணபதிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களுக்கும் சிசிலி இராசம்மா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். ஊர்காவற்றுறையில் உள்ள புனித அந்தோனியார் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்ற பின் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிற் சேர்ந்தார். அங்கு கல்வி பயின்று 1930இல் தனது பதினேழாவது வயதில் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சையில் சித்தி பெற்றார். பின்னர் துறவு வாழ்வில் ஈடுபடும் ஆர்வத்தினால் உந்தப் பட்டுக் குருவானவராகப் பயிற்சி பெறும் பொருட்டுக் கொழும்பில் உள்ள புனித பேனாட் குருமடத்தில் சேர்ந்தார்.

பின்னர் அவர் இந்தியாவிலிருந்து வந்திருந்த இந்தியப் பேராயர் மார் இவானியேல் அவர்களின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றார். அங்கிருந்து 1934 இல் உரோமாபுரியில் உள்ள 'ஊர்பான்' குருத்துவ சர்வகலாசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தனிநாயக அடிகள் இறை இயலில் கலாநிதிப் பட்டம் பெற்றார். 1939 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் திகதி திருநிலைப் படுத்தப்பட்டார். அங்கிருந்த பொழுது 'திருவெளிப்பாட்டு உரைச் சுருக்கம்' என்னும் நூலை லத்தீனில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

உரோமாபுரியில் திருநிலைப்படுத்தப்பட்ட பின்னர் அடிகளார் தமிழ்நாட்டில் உள்ள வடக்கன்குளம் புனித திரேசாள் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். அங்கு குருசாமி என்னும் தமிழ்ப் பண்டிதரிடம் தமிழை முறையாகக் கற்றார். தமிழ் ஆர்வம் கொண்டார். அங்கிருந்த ஆயர் றோச் ஆண்டகையின் அனுமதியுடன் அண்ணாமலைப்

பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மொழியியலிலும் இலக்கியத்திலும் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றார்.

தமிழ்த்தூது

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தூத்துக்குடிக்குத் திரும்பிய அடிகளார் 1947 இல் அங்கு தமிழ் இலக்கியத் கழகத்தை உருவாக்கினார். அதன் மூலம் தனது தமிழ்த் தூதை ஆரம்பித்தார். 1950இல் யப்பான், வடதென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத் தமிழ்த்தூது சென்றார். உலகில் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் தமிழின் சிறப்பியல்புகளையும் தமிழர் பண்பாட்டின் சால்புகளையும் விளக்கிச் சொற்பெருக் காற்றியுள்ளார்.

தமிழ் மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் உலகெலாம் பரவச் செய்ய வேண்டும். என்னும் பேராவலினால் 1952இல் தமிழ்ப்பண்பாடு' (Tamil Culture) என்னும் ஒரு காலாண்டுச் சஞ்சிகையை ஆங்கிலத்தில் ஆரம்பித்துத் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வந்தார். இச்சஞ்சிகையில் அடிகளார் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் தமிழ்மொழியின் பெருமையினையும் இனிமையினையும் தமிழ்ப்பண்பாட்டினையும் பிரதிபலிப்பனவாக விளங்கின. தமிழ்மொழி குறித்த பிற மொழி அறிஞர் தம் ஆய்வுக் கட்டுரைகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்தன.

1952
இல் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை விரிவுரையாளராகப் பத்தாண்டுகள் வரை பணியாற்றினார். 1955-1957 காலப்பகுதியில் லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று கல்வித்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றார். அடிகளாரின் தமிழார்வம் அவரைப் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ்ப் பணியாற்றத் தூண்டிய வண்ணமிருந்தது. இதன் காரணமாக 1960இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஸ்கண்டினேவியா, ருஷ்யா முதலிய நாடுகளுக்குத் தமிழ்த்தூது மேற் கொண்டார்.

தமிழ், ஆங்கில மொழிகளைத் தவிர இலத்தீன், ஸ்பானிஸ், போர்த்துக்கீசம், பிரெஞ்சு, இத்தாலியம், ஜேர்மன் ஆகிய மொழிகளையும் நன்கறிந்தவராக அடிகளார் விளங்கினார். அம்மொழிகளில் உள்ள இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தார். கீழ்த்திசை நாடுகளிலும் மேல் திசை நாடுகளிலும் தமிழ் மொழியைப் பற்றியும் திராவிடக் கலையைப் பற்றியும் சொற்பொழிவுகளாற்றினார். ஐக்கிய அமெரிக்காவில் ஓராண்டில் தமிழைப்பற்றி இருநூறு விரிவுரைகள் நிகழ்தியிருக்கின்றார். நியூயோர்க்கில் உள்ள மொழிப் பயிற்சிப் பள்ளியில் (Befrlitz School of Languages) அடிகளை ஆசியராக அமர்ந்து பணியாற்ற விரும்பி அழைத்த போதும் அடிகளார் உலகெலாம் தமிழ் பரப்பும் பணியினை மேற்கொண்டிருந்தமையால் இவ் அழைப்பை ஏற்க இசைந்திலர்.

1970 மேனாடு சென்றார். பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் நேப்பிள்ஸ் 1971 இல் அடிகளார் மீண்டும் தமிழ்த்தூது மேற்கொண்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

மலேசியாவில்

மலேசியாவுக்கு 1961 இல் சென்ற அடிகளார் அங்கு ஆற்றிய தமிழ்ப்பணிகள் பெருமைக்குரியன. மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்திய கலைத்துறைப் பேராசிரியராகவும் பீடாதிபதியாகவும் 1969 வரை பணியாற்றினார். தமிழுக்கு ஓர் அனைத்துலகக் கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதன் மூலம் உலகத் தமிழர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்னும் தீராத அவாக் கொண்டிருந்த அடிகளாரின் எண்ணம் மலேசியாவில் உருப்பெற்றது.

1964 ஜனவரியில் புதுடில்லியில் கீழைத்தேயவியலாளரின் அனைத்துலகப் பேரவை கூடியது. இப்பேரவையில் பங்கு கொண்டவர்களில் இருபத்தாறு பேரறிஞர்கள் கூடி அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் கழகம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்கான தீர்மானத்தைத் தனிநாயக அடிகளாரே முன்மொழிந்தார்கள். செக்கோஸ்லாவிய நாட்டவரான கலாநிதி கமில் வி.சுவெல்பில் அதனை வழிமொழிந்தார்கள். தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடிகளாரின் நீண்ட நாள் அவா அங்கு நிறைவேறியது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சங்க நூற் கொள்கையும் 'திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' என்னும் பாரதியாரின் கோட்பாட்டையும் அடித்தளமாகக் கொண்டு அனைத்துலகத் தமிழாராய்ச்சிக்கழகம் செயற்படத் தொடங்கியது. இக்கழகத்தின் இணைச்செயலாளர்களில் ஒருவராக அடிகளார் அமர்ந்து அரும்பணியாற்றினார்கள். மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் முதலாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 1966இல் அடிகளாரே முன்னின்று நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையிலும் (1968), பாரிஸ் நகரிலும் (1970) யாழ்ப்பாணத்திலும் (1974), மதுரையிலும் (1981), கோலாலம்பூரிலும் (1987), மொறிசியஸ் யஸ் நாட்டிலுள்ள போட்லூயிசிலும் (1989), தஞ்சாவூரிலும் (1994) இதுவரை எட்டு மாநாடுகள நடைபெற்றுள்ளன. இவையெல்லாவற்றுக்கும் அடிகளார் இட்ட வித்தே அடிப்படையாய் அமைந்ததென்பதை எவருமே மறுக்கமுடியாது.

அடிகளாரின் தமிழ்த்தூது இன்று உலகெங்கும் தமிழன்னையின் பெருமையைப் பறைசாற்றக் காரணமாய் அமைந்திருந்தது. தமிழ்த்தூதின் இன்றியமையாமையினை அடிகளார் பின்வருமாறு கூறியுள்ளார். 'இத் தொண்டு இக்காலத்து இன்றிமையாது வேண்டுமோவெனில் இன்றியமையாது வேண்டும். உலக மொழிகளின் பிறப்பைக் கண்டும்: அவை சிதையவும் மாறவும் வழக்கொழியவும், தான் இன்றும் தன் இளங் கன்னித்தன்மையைக் காத்து வருகின்ற தமிழ் அன்னைக்கு இன்று இடுக்கணும் இடும்பையும் நேர்ந்துள. தமிழ் அன்னை மீது பல்வேறு பகைவர்கள் அறிந்தும் அறியாதும் படை எடுத்துள்ளனர். இப்பகை எல்லாவற்றையும் புறங்காணும் கருவி தமிழ்த்தூது முரசின் ஒலி ஒன்றே என நம்புகிறேன்.'

அடிகளாரின் இக்கூற்று அவர் தமிழ் மீது கொண்ட தீராத பற்றினைப் பறைசாற்றுவதாக அமைகின்றது. உலகெங்கும் தமிழ் ஒலிக்க வேண்டும். உலக இலக்கியங்களோடு திருக்குறளும், சிலப்பதிகாரமும், சங்க நூல்களும் இடம் பெற வேண்டும். அவற்றை உலக மக்கள் போற்றிப் படித்திடும் நிலை உருவாக வேண்டும். உலக இலக்கியத்திரட்டு (world classics) என்னும் பெருந்தொகை நூல்களில் நம் இலக்கிய நூல்களும் இடம்பெறும் பெருமை அடைதல் வேண்டும் என்பதே அடிகளாரின் இலட்சியமாக இருந்தது. மேற்றிசைக் கண்ணும் கீழ்த்திசைக்கண்ணும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தமிழ்க்கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தும் வகை செய்தல் வேண்டுமென அவர் ஆவல் கொண்டிருந்தார். அடிகளாரின் இவ் ஆவல் இன்று ஓரளவு நிறைவேறுவது குறித்து நாம் ஆறுதலடையலாம். தமிழ்த்தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும் அடிகளார் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அவர் இருநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும், பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அடிகளாரது நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கலையைத் தரணி எங்கும் பரப்ப வேண்டும் என்னும் ஆழ்ந்த கலைஞானத்தால் கதித் தெழும் துடிதுடிப்பும், அத்துடிதுடிப்பிற்கேற்ற தொண்டுள்ளமும், அவ்வுள்ளத்திற்கேற்ற பொதுப்பணியும், அப்பணிக் கேற்ற தியாக மனப்பான்மையும் கொண்டு விளங்கிய தனிநாயக அடிகளார் 1980 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாந்திகதி (01-09-1980) இவ்வுலக வாழ்வை நீத்தார். ஈழ மாதா தன் ஒப்பற்ற தமிழ் அறிஞனை இழந்தார். தமிழுலகம் கண்ணீர் உகுத்தது, உலகெலாம் தமிழ் பரப்பிய தூதுவரைப் பிரிந்த துயரினால். அடிகளாரின் பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் என்றும் மறையாது. தமிழ் உள்ளவரை தனிநாயக அடிகளாரின் தமிழ்ப்பணிகள் நினைவு கூரப்படுமென்பது திண்ணம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக