சங்க காலத்தில் நிலவிய முச்சங்கங்கள் தொடர்பாக நீர் அறிந்தவற்றைக் குறிப்பிடுக?
சங்கம் என்பது அறிஞர் அறவோர் கூடி அமைக்கும் அமைப்பாகும். புலவர்கள் தமது ஆக்கங்களை சங்கத்தில் வைத்து ஆராய்ந்ததன் விளைவாகவே சங்க காலம் என்ற பெயர்வரக் காரண மாயிற்று.
பழந்தமிழ் நாட்டில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக இறையனார் அகப்பொருள் உரையினூடாக அறியமுடிகின்றது. முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்ற வரன்முறையில் பாண்டியர் தமிழை வளர்த்ததாக அறியப்படுகின்றது. இதனை, "பாண்டி தன்னாடுடைத்து நல்ல தமிழ்" என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
முதற் சங்கம் தென் மதுரையில் அமைக்கப்பட்டிருந்தது. காய் சின வழுதி முதல் கடுங்கோன் வரை இச்சங்கத்தை ஆதரித்து வளர்த்த அரசர்களாக அறியப்படுகின்றனர். இச் சங்கத்தில் அகத்தியர் முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவர் முதலிய புலவர்கள் வாழ்ந்ததாகவும், இவர்களால் முது நாரை, முதுகுருகு, அகத்தியம்,களரியா விரை முதலான நூல்கள் இயற்றப்பட்டதாக அறியப்படுகின்றது.
அகத்தியர் சிவனிடமிருந்து தமிழைக் கேட்டறிந்தார் என்றும் அவரது இருப்பிடம் பொதிகை மலை என்றும் கூறப்பட்டது. அவர் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் நன்குணர்ந் திருந்தார் என்றும் இதனால் அகத்தியம் என்ற முத்தமிழ் இலக்கண நூலை இயற்றினார் என்றும் அறியப்பட்டுள்ளது. அகத்தியரிடம் பன்னிரண்டு பேர் கல்வி கற்றனர் என்றும் அவர்களில் தொல்காப்பியர், காக்கை பாடினியார் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பன்னிருவரும் சேர்ந்து பன்னிரு படலம் என்ற நூலை எழுதியமை குறிப்பிடத்தக்கது.
முதற் சங்க காலத்தில் ஏற்பட்ட கடல் கோள்களினால் தலைநகரம் தென்மதுரையில் இருந்து கபாடபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதுவே இடைச் சங்கம் என்று அழைக்கப்பட்டது. இடைச் சங்க காலத்தில் தொல்காப்பியர், வெள்ளூர்க் காப்பியன், சிறு பாண்டரங்கன், மாறன், கிரந்தை முதலான புலவர்களால் தமிழ் வளர்க்கப்பட்டது. இக் காலத்தில் குருகு, வெண்டாழி. வியாழ மாலை, பெருங்கலி முதலான நூல்கள் இயற்றப்பட்டதாக அறியப் படுகின்றது.
மீண்டுமொரு கடல் கோளினால் கபாடபுரத்தில் இருந்த தமிழ்ச் சங்கம் தற்போதய மதுரைநகர் அமைந்துள்ள இடத்திற்கு மாற்றப் பட்டது. இக்காலத்தில் கபிலர். பரணர், நக்கீரர் முதலான தலைசிறந்த புலவர்களால் தமிழ் வளர்த்தெடுக்கப்பட்டது. இக் காலத்திலேயே எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலான தொகை நூல்கள் எழுந்தன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக