24.9.25

A/L கட்டுரை சூழல் மாசடைதல்

சூழல் மாசடைதல்

சட்டகம்
1. முன்னுரை

2.
சூழல் மாசடைதலுக்கான ஏதுக்கள்.

3.
சூழல் பாதிப்பால் ஏற்படும் விளைவுகள்.

4.
சூழல் மாசடைதலைத் தடுக்கும் வழிகள்.

5.
முடிவுரை.

மனிதனது நல்வாழ்வுக்குச் சூழலே முதற்காரணமாயமைகிறது. மனிதனது எல்லா வித தேவைகளுக்கும் சூழலே இருப்பிடமாகும். எனவே எமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய சூழலைப் பற்றிச் சிந்திப்பது மிக மிக அவசியமாகும்.

நம்மைச் சூழவுள்ள நிலம், நீர். வளி அனைத்தும் சூழலே, இவை பல்வேறு காரணிகளால் மாசடைகின்றன. மனிதன் தனது தேவைக்காகவே இவற்றை மாசடையச் செய்கின்றான். இயற்கை வளங்களை அழிக்கிறான். மரங்களை வெட்டுகிறான். காடுகளை அழிக்கிறான். இதனால் மண்அரிப்பு ஏற்பட வழி பிறக்கிறது. காடுகளை அழிப்பதால் மழை வளம் குன்றுகிறது. சனத்தொகைப் பெருக்கத்தால் அதிகளவு உணவுற்பத்தி அவசியமாகிறது. உணவுப் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுவோர் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் அளவுக்கு அதிகமாகச் செயற்கை உரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் மண்வளம் பாதிக்கப்படுகின்றது. நாளடைவில் வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறுகின்றன. கடற் கரையோரங்களில் உள்ள முருகைக் கற்பார்களை அகழ்ந் தெடுக்கிறார்கள். இதனால் கடல் உட்புகும் அபாயம் ஏற்படுகிறது. கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். கற்பாறைகள் அகழ்ந்தெடுக்கப்படுவதால் சூழல் பாதிப்படைகிறது. கல்லுடைக்கும் தொழிற்சாலைகளிலிருந்து எழும் தூசியால் மக்கள் உடல்நிலை பாதிப்படைகிறது.

மரங்களைப் பெருமளவில் அழிப்பதால் மழைவளம் குறைவடைவது மாத்திரமன்றி உயிரினங்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத பிராணவாயுவின் செறிவும் வளிமண்டலத்தில் குறைந்துவிடுகிறது. வளி மாசடைதற்கு வேறும் பல ஏதுக்கள் உள்ளன. அதிகரித்த போக்குவரத்துச் சாதனங்கள் வெளியிடும் புகை தொழிற்சாலை களிலிருந்து வெளியேறும் புகை, போன்றவற்றாலும் யுத்தங்களின்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களினாலும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் விண்வெளிக் கலங்களினாலும் வளிமாசடைகிறது. விண்வெளிக் கலங்களைச் செலுத்தும் 'றொக்கற்றுகள்' வளிமண்டலத்து ஓசோன் படைகளைப் பாதிப்பதால் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனிதனது சிந்தனையற்ற செயல்களால் நீர் பெரிதும் மாசடைகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் இது பாரிய பிரச்சினையாக இன்று உருவெடுத்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாக்கடைகள் மூலம் சென்று கடலிற் கலக்காது குடிநீர்க் கிணறுகளிலும் கலந்து விடுகிறது. இதனால் குடிநீர் பெரிதும் பாதிப்புறுகிறது. கழிவுநீர்கள் தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏதுவாகிறது. மாசடைந்த குடிநீரைப் பருகுவதால் வாந்திபேதி, நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்களால் மக்கள் அல்லற்படுகின்றனர். நதி, ஏரி போன்றவற்றையும் கழிவு நீர் சென்றடைவதால் பாரிய சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. சாக்கடைகளிலும், நீர்நிலைகளிலும் நதிகளிலும் மக்கள் கழிவுப்பொருட்களை, பிளாஸ்ரிக் பொருட்களைப் போடுகிறார்கள். இதனால் கழிவு நீர் வழிந்தோட வழியின்றித் தடைப்பட்டுத் தேங்கி நிற்கின்றது. இதனால் நோய் காவிகளான இலையான், நுளம்பு போன்றவை பெருக வழியேற்படுகின்றது.

சூழல் மாசடைதலைத் தடுக்கும் பாரிய பொறுப்பு மக்கள் அனைவருக்கும் உண்டென்பதை மறந்து விடக் கூடாது. ஒவ்வொருவரும் தத்தம் கடமை உணர்ந்து செயற்பட்டால் சூழல் சுத்தம் பேணப்படும். 'சுத்தம் சுகம் தரும்', 'நோயற்ற வாழ்வே குறைவற்ற 'செல்வம்' என்றெல்லாம் கூறும் நாம் மற்றவர்களது சுகநலனையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். குப்பை, கூளங்களைக் கண்ட கண்ட இடங்களிற் போடுதலைத் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களை உயிரினங்களுக்கு ஊறுவிளையாவண்ணம் சுத்திகரித்தபின் வெளியேற்ற வேண்டும். சாக்கடைகளில் அசுத்த நீர் தேங்கி நிற்காது உடனுக்குடன் கடலிற் சென்று கலத்தற்குரிய வழிவகைகளைக் கையாளுதல் வேண்டும். மழைவளம் பெருகவும் வளிவளம் சிறக்கவும் மரம் நாட்டும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும். பெருமளவு மரங்களை வளர்ப்பதன் மூலம் தொழிற்சாலைகளிலிருந்து எழும் புகையினை, தூசிப்படலத்தை அவற்றின் இலைகள் மூலம் காற்றில் கலக்காது தடுக்க முடியும். மேலும் அவை வெளியேற்றும் நீராவியும் காற்று மண்டலத்தை தூய்மைப்படுத்தும், இன்று நகரங்களிலேயே தொழிற்சாலைகள் பலவும் அமைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் செறிவு நகரங்களில் அதிகரிக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் நகரங்களில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கண்ட கண்ட இடங்களில் மலசலம் கழித்தல், குப்பை கூளங்களைப் போடுதல் போன்ற செயல்களும் பெருகுகின்றன. இந்நிலையினைத் தவிர்க்கும் பொருட்டுத் தொழிற்சாலைகளை நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக அமைத்தல் வேண்டும். இவ்விதம் அமைப்பதால் நகரங்களில் மக்கள் செறிவதை ஐதாக்கலாம். இதன் மூலம் சூழல் மாசடைதலை ஓரளவு தவிர்க்க முடியும்.

சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி வழங்குதலை நிறுத்த வேண்டும். சரியான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் தொழிற்சாலைகளை மூடிவிட வேண்டும். இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் நகரில் உள்ள யூனியன் கார்பனைட் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் பல்லாயிரம் மக்கள் இறந்தமையும், ரஷ்யாவில் 'செர்னோபியில்' (Chernoby) அணு உலையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் ஆயிரக் கணக்கானோர்

பலியானமையும் நமது நினைவில் என்றும் இருத்தல் வேண்டும். இத்தகைய அனர்த்தங்கள் நமது நாட்டிலும் ஏற்படாது தடுக்க வேண்டுமாயின் சூழலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுத்திட முற்கூட்டியே தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஒன்றினை அரசு நிறவியுள்ளது. சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இயற்றுதற்குச் சூழல் பாதுகாப்பு அமைச்சு முன்வரவேண்டும். வீதிகளில் ஓடும் பாவனைக்குத் தகுதியற்ற வாகனங்கள் வெளிவிடும் புகையினால் மக்கள் இன்று பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சுவாச சம்பந்தமான நோய்களுக்கு இலக்காகிறார்கள். இந்த அவல நிலையைப் போக்குவதற்கு அரசு முன் வரவேண்டும். தகுதியற்ற வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சூழல் மாசடைதலைத் தவிர்த்திட முடியும். மக்களனைவரும் சூழல் பாதுகாப்பில் உளமார ஈடுபடுவதன் மூலமே வீடும் நாடும் நலம்பெறும். சூழல் சுத்தம் பேணுதலே சுகவாழ்வுக்கு அடித்தளம் என்பதை உணர்ந்து செயற்படுவோமாக

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக