24.9.25

A/L கட்டுரை தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை கட்டுரை

A/L கட்டுரை தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை - புதுமைப்பித்தன்

தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை - புதுமைப்பித்தன்

 

நாகரிகம் என்பது என்ன? பிராதஸ்னானம், திருநீற்றுச் சம்புடம் ஆகியவற்றை வைத்துச் சிலர் நாகரிகத்தை அளக்கின்றார்கள். வேறு சிலர் ஒரு வெடிகுண்டுக்கு இருக்கும் நாச சக்தியையும், மின்சார விளக்கின் வெளிச்ச உக்கிரத்தையும் கொண்டு கணிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு ஏன் இப்படியே எத்தனை விதமானாலும் அடுக்கிக் கொண்டே போகலாம். நாகரிகம் என்ற கருத்து ஓரளவு மேற்சொன்ன வற்றின் களையுடன் சோபிக்கும் ஒரு தன்மை என்பதுடன் அதற்கு அதீதமானது மாகும். நாகரிகம் என்பது, சமுதாயம் இற்றுப் போகாமல் எடுத்துக் காட்டிய ஞாப கச் சரடு, நினைவுப் பாதை, சமுதாயம், எறும்புச் சாரை போல் ஊர்ந்து ஊர்ந்து, பழக்கப்பட்டுப் போன பாதை, அது இருந்து வருவதற்கு உயிர் கொடுத்து வருவது இந்த ரீதியில் கவனித்தால், நாகரிகம், என்பது வெறும் பிழைப்புக்கும், பிறகு சுகானுப வத்துக்கும், அதன் பிறகு உள்ளத்தில் உடைந்து மசியும் நினைவுக் கோயில்களுக்கும் ஆதாரபீடமாக அமைந்திருப்பதாகும். நாகரிகத்தை அமைக்கிறதற்குக் கிராமம் என்ன செய்கிறது?

கிராம வாழ்க்கை என்பது கிராம்யமான ஒரு காரியம் அல்ல. ஏதோ வன போஜனத்துக் காகப் போகிறவர்கள், வழக்கமாக உட்காரும் ஸோபாவை இழப்பதால், தமக்குக் கிடைப்பதாகக் சுருதிக்கொள்ளும் சுகானுபவம் போன்றதல்ல. 'கிராமத்துக்குப் போங்கள்' என்று உருக்கமான பிரசங்கங்கள் பட்டணத்துக்காரர்களை நெட்டி நெட்டித் தள்ளுகின்றன. 'சார், நான் ரிட்டயரானதும் ஏதாவது சுகமா ஒரு கிராமத்திலே போய்க் கழிக்கலாம்னு ப்ளான் போட்டிருக்கேன். நீங்க என்ன நினைக்கிறியள்?" என்கிறார் ஒருவர். இருபத்தியைந்து வருஷ உழைப்பால் உடலைக் கெடுத்துக் கொண்டதுடன், நேர்ச்சைக் கடனுக்காகக் கையைக் கும்பிட்டபடி உயரத் தூக்கி சூம்ப வைத்துக் கொண்ட பைராகி மாதிரி காலை பத்து மணி முதல் மாலை 5 மணி வரை மூளையை ஒரே திசையில் விரட்டி விரட்டி இற்றுப்போக வைத்துக் கொண்ட ஒருவருக்குத் தாம் எரிந்து சாம்பலாக வேண்டிய சுடுகாட்டுக்கும், தம்முடைய மிச்ச வாழ்வுக்கும் இடையில் கிடக்கும் ரேழியாக கிராமம் தென்படுவதில் அதிசயமில்லை. அது அவர் பண்ணின புண்ணியம். டில்லி சர்க்கார் காரியாலயத்தில் ஒரு மகன். என்ஜினியரிங் கம்பெனியில் ஒரு மகன், ஒரு அட்வகேட் ஜெனரலின் மகனுக்கு சக தர்மிணியாக ஒரு மகள், காலேஜுக்கு ஐம்பது மைல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் போவதுதான் மோட்ச சாம்ராஜ்யம் என்று நினைக்கும் சுந்தா, இவ்வாறு ஒரு படியாகத் தமது வாரிஸ் வர்க்கத்தைப் பங்கீடு செய்துவிட்டு, தம்முடைய அஜீரணம், 1936 வருஷமோட்டார்கார், தொய்ந்துபோனகாதில் வைத்து ஊசலாடும் வைரக்கம்மல்மனைவி, விட்டமின்விசாரம், திருக்குறள் உபாசனை ஆகியவற்றுடன் இவர் போய் ஒரு கிராமத்தில் குடியேறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பத்திரிகையும், பழக்கூடையும் பட்டணத்திலிருந்து வந்து கொண்டே இருக்கும். ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் வென்னீரில்தான் குளிப்பார். உடம்புக்குள் குளிர் பெய்வதுபோல் தென்றல் இழைந்தாலும் பிளானல் சட்டை போட்டுக் கொண்டு, வெள்ளிப் பூண் தடியோடு உலாவ, அதாவது வாக்கிங் போவார். எதிரே உட்காந்திருக்கும் வெட்டியான் கைகட்டி வாய் புதைத்து, 'எசமான் புத்தி' என்று சொல்லிக் கொண்டு எழுந்திருப்பான். அவ்வளவுதான் அவர் கிராமத்தில் அனுபவிக்கப் போகிறதும், அனுபவிக்கிறதும். ராவணன், மண்ணோடு பெயர்த்துச் சீதையைத் தூக்கிக்கொண்டு போய், அசோக வனத்தில் சிறை வைத்தானாம். அது நிஜமோ பொய்யோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் சொன்னேனே, இந்த மாஜி உத் தியோக வர்க்கம், அது பட்டணத்தில் கொஞ்சம் பெயர்த்துக்கொண்டு போய், கிராமத் தில் போட்டு, அதன்மேல் உட்கார்ந்து கொண்டுதான் கிராமத்தைப் பார்க்கிறார்கள், கிராமத்தை அனுபவிக்கிறார்கள். இவர்களுக்குக் கிராமம் தென்படாது. அனுபவத் துக்கும் கிட்டாது. இவர்களது இந்த ராவண கைங்கரியத்துக்குள் அகப்படாத கிராமம் என்பது என்ன என்று கேட்கிறீர்களா? அப்படிக் கேளுங்கள்.

நீங்கள் நெல்லுக் காய்ச்சி மரம் என்று கேள்விப்பட்டிருகிறீர்களா? உணவு வகையில் ஒன்றை கொடுக்கும் புல் வகையில் ஒன்றல்லவா என்று தாவர நிபுணர் உறுமுகிறார். ஆமாம். அப்படியும் சொல்லுவார்கள் நெல்லுக் காய்ச்சி மரம் என்றால், பட்டணத்துக் காரனைப் பற்றிக் கிராமவாசி செய்யும் கிண்டல் என்று அர்த்தம். உங்கள் மோட் டார் காரை அவன் உன்னிப்பாகப் பார்த்தால், நீர் அவனை உதாசீனமாகப் பார்க்கிறீர் அல்லவா? அதற்கு அவனுடைய பதில் அது.

கிராமத்தில் சினிமா இருக்காது; ஷேவிங் ஸோப் கிடையாது; சிசுரட் அகப்படாது: ஆனால் சுகம் உண்டு; அதாவது வாழத் தெரிந்தவர்களுக்கு.

எனக்குத் தெரிந்த கிராமத்தைக் கொஞ்சம் வர்ணிக்கிறேன். அதற்கு ஒரே ஒரு தெரு தான் உண்டு. அக்கிரஹாரம் இல்லை. தெருவின் ஒரு கோடியில் கிராம முனிஸீபும் மறு கோடியில் கணக்குப்பிள்ளையும் இருக்கிறார்கள். இருவர் கோபத்துக்கும் ஆளாகாமல் பிழைத்துக்கொள்ளத் தெரிந்த தலையாரி, இந்தத் தெருவுக்குக் கூப்பிடு தூரத்தில் உள்ள மறவர் தெருவில் இருக்கிறான். இன்னும் பத்துப் பதினைந்து வீடுகள், இந்த வீர மறக் குலத்துக்கு நிழல் தருகிறது. இவர்கள் வாளையும் வேல்கம்பையும் விட்டெறிந்து ரொம்ப காலமாச்சு "சாதியிலே மறவனாக்கு" என்று அதட்டிக் கொண்டு ஏர் பிடித்து உழுகிறார்கள். இவர்களுக்கும் எட்டாத் தொலைவில் பள்ளர்கள் சேரி தாம் நினைவை விட்டு விரட்ட முயலும் கெட்ட நினைப்பைப்போல, அவர்கள் அங்கு அக்ஞாதவாசம் பண்ணுகின்றார்கள். ஊருக்கு ஒரு மைதானம் உண்டு. சாதாரணமாசு மாடு படுத்திருக்கும். ஊர்த் தேவதை திருவிழாவில், வானத்தையே கூரையாகக் கொண்ட கலை மண்டபமாகும். சாணி தட்டவும், நெல் உலர்த்தவும் ஏற்றவையானது. இந்த ஊரிலே சைவச் சாப்பாட்டைச் சமயா சமயத்தில் நிவேதனமாகவும் பொது வாக அந்தக் கிராமத்தான் வணக்கத்தையும் பார்த்துப் பசியாறும் பிள்ளையாருடைய கோவில் உண்டு.

ஊர் எல்லையிலே ஊரின் காவல் தேவதை பேராய்ச்சி கோவில் உண்டு. கோவில் கோவில் என்றதும் பிரமாதமான கற்கனவுகள் என்று நினைத்து விடவேண்டாம். கிராம முன்சீபு பிள்ளையவர்கள் வீட்டைப்போல அடக்கமானதுதான்; அவரது மன இருட்டைப்போல இங்கே கர்ப்பக்கிரகமும் இருட்டிக் கிடக்கும். கலசம் மட்டும் பேராய்ச்சி கோவிலை, கோவிலென்று வேறுபடுத்திக் காட்டும். மற்றப்படி ஒன்றுதான் இந்தத் தேவதை அசைவம். வருஷத்துக்கு ஒரு தடவையாவது ரத்தம் காணவேணும். இல்லாவிட்டால், குடியே முழுகிப் போச்சு.

பட்டப்பகலானாலும் கர்ப்பக்கிரகத்தில் கும்மிருட்டு. கூர்மையாகக் கவனித்தால், வெள்ளையும் அதற்கப்புறம் அதன் மையத்தில் ஒரு கறுப்பு. இன்னும் பார்த்தால் விறைத்துப் பார்க்கும் கண்கள், பிறகு இருட்டு திரண்டு திரண்டு பத்தாயிரம் கை களில் வேலும் சூலமும் தாங்கி, எல்லையையே இமை கொட்டாமல் காத்து நிற்பது தெரியவரும். பட்டப் பகலானாலும், அதைக் கண்டு பயப்படுவோரைக் கண்டால், நாம் அவர்களைக் கேலி செய்யக்கூடாது. நாகரிகம் பட்டுப்போன பிறகு மனித வர்க்கம், ஏதோ எப்போதோ ஒரு காலத்தில், எது பயத்துக்கு வித்தாக இருந்ததோ, அதைப் பயம் போக்கும் மருந்தாக வசக்கிக்கொள்ள முற்பட்ட ஒரு சாதனத்தைக் கண்டு மிரளாமலிருப்பது பிசகு. இருட்டிலே, காட்டிலே மின்னுகிற புலிக் கண்ணைப் பார்த்து அதில் அன்பு பெய்து வைத்துக் கற்பனை பண்ணின காரியம் இந்தப் பேராய்ச்சி. இந்தத் தாயின் மகத்துவத்தைப் பற்றிக் கிராமத்துப் புலவர் பாடுவதைக் கேட்டால், ஆஸ்பத்திரி எதற்கு, மலேரியா, மசுமாரி எதிர்ப்பு மருந்து வகை, ஊசிகுத்து முறை எல்லாம் எதற்கு என்றெல்லாம் படும். அந்தவூரில் நிஜமான ஆட்சி பேராய்ச்சியின் ஆட்சிதான். அந்த ஊர்க்காரர்கள் பயப்படுகிறதுபோல, அவ்வளவு கொடுமைக்காரி அல்ல அவள். மகா கண்டிப்புக்காரி.

அந்தவூர்க்காரர்கள் மனப்பண்பாடு நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி அவ்வளவு நாஸுக்காக இருக்காது. மிஞ்சி மிஞ்சிப் போனாலும் அவர்கள் கற்பனை எல்லாம்.

சோளப் பொரி மத்தியிலே

சுட்டு வச்ச தோசையைப் போல்

சுட்டு வச்சதோசையைப் போல்

தோணுமிந்தச் சோதி நிலா

என்றுதான் அவர்கள் பாடுவார்கள்.

அருந்த அமரர் கலக்கிய நாள்

அமுதம் நிறைந்த பாற்கலசம்

இருந்திடை வந்து எழுந்ததென

எழுந்த தாழி வெண் திங்கள்

என்று ஒரு சந்திரோதயத்தில் இதிகாச நாடகத்தைப் பார்க்கும் மனப்பண்பு அவர்களிடம் தென்படாது. நெஞ்சிலும் தோளிலும் உரம் உண்டு; உள்ளத்தில் பரிவு உண்டு.

மேழி பிடிக்கும்கை.

வேல் வேந்தர் நோக்கும்கை

ஆழி பிடித்தே அருளும்கை

என்று அவ்வைக் கிழவி சொன்னதுபோல ரொம்பவும் பின்னிப் பிணைந்த கைத்தொழில் நாகரிகமாக இருந்தாலும், சமுதாயத்தின் ஸ்திரத் தன்மைக்கு அவசிய மும் ஆதாரமுமானது விவசாயம் பலர் எண்ணுகிறது போல மட்டம் அல்ல.

தமிழ் இலக்கியத்திலே ஒரு கிழவி திரிந்து வருகிறாள். அவளுக்குப் பட்டணத்து நாகரிகத்தின் நெடி பிடிக்காது. எடுத்தெறிந்து பேசி உதறியடித்து விடுவாள் கிராமவாசி கள் உள்ளப் பண்பைக் காண்பதற்குச் செய்து வைத்ததுபோல இருக்கிறது அவளுடைய பாட்டு.

அண்டி நெருக்குண்டென்,

தள்ளுண்டேன் நீள்பசி மினாலே

சுருக்குண்டேன் சோறுண்டிலேன்

என்று சுருக்கமாகச் சொல்லுகிறாள். இது எங்கு என்று கேட்டால் அதைவிட வினோதமாக இருக்கும்.

'வண் தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்தில்

உண்டபெருக்கம் உரைக்கக்கேள்'

என்று பொக்கை வாயைக் காட்டிக் கேலி செய்கிறாள் கிழவி. அவள் பார்த்தது எல்லாம், நான்மாடக் கூடல் கல் வலிது என்பதுதான்.

'வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்

நெய்தான் அளாவி நிறம் பசந்து பொய்யாய்

அடகென்று சொல்லி அமுதத்தை ஈந்தாள்

கடகம் செறிந்த கையாள்.

என்று பெண்ணின் வளை போட்ட கை இலக்கியத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவள் கண்ட கைகள் தான் அது.

இன்னொருவன் அவன் பேர் பூதன்.

பெயர் தான் ஆளை மிரட்டுகிற மாதிரி.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்.

முறமுறெனவே புளித்த மோரும்

அவ்வைக் கிழவியின் பசியை ஆற்றுகிறது.

கிராமங்கள், இந்த மாதிரி திசைமாறித் திரிவோருக்கு மட்டும் அன்ன சத்திரமல்ல, நாகரிகத்தின் முதற்படி அன்னவிசாரம். பசிப்பகையை விரட்டும் முதல் மதில் கிராமங்கள். சமுதாயத்தின் சித்தம் அல்லது விவேகம் மாதிரி நகரங்கள் இருக்கலாம். இருக்க வேண்டும்; ஆனால் அவற்றின் உயிர்ப்புக்கும் தெம்புக்கும் தெளிவுக்கும் அவசியமான ரத்தத்தைத் தருபவை கிராமங்களேயோகும். கிராமம் தூர்ந்துவிட்டால், நகரம் பாழ், இது பொது நியதி, மிகவும் பின்னிப் போன யந்திர நாகரிகம் வந்து விட்டாலும் அந்த அடிப்படைக்கு வாய்ப்பான கிராமங்கள் இருந்துதான் தீரும். எல்லாம் பட்டணங்களாகிவிட முடியாது. பட்டணங்கள் என்றால், சிந்தனையின் பயனால் இயற்கையின் கை பார்க்காமல் வாழ மனிதன் வகுத்துக்கொள்ளும் ஏற்பாடு என்பதுதான் பொருள்.

கன்னலென்ற சிறு குருவி ககனமழைக் காற்றால்

மின்னலென்னும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம்

என்று பட்டணத்துக் கவிராயர் சமத்காரமாகப் பாடி விடுவார்கள், ஆனால் உடை முள்ளையும் இண்டஞ் செடியையும், சுள்ளென்று அடிக்கும் வெயிலையும், ஆற்று வெள்ளத்தையும் கொடுங்காற்றையும் சகாக்களாகப் பாவித்து, அவற்றுடன் சேர்ந்து அவற்றையும் வசக்கி வயலில் வளத்தைப் பார்க்கிறவன் வாழுமிடந்தான் கிராமம்.

வரப்பு உயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்'

இதுதான் சமுதாய வளர்ச்சியின் ஆதார சக்தி. பட்டணத்தில் பிழைக்கலாம். வாழ முடியாது. தனிமையாக நடமாடப் பட்டணம் வாக்கானது. ஆனால் கிராமத்தில் ஒதுங்கி வாழ உங்களை விடமாட்டார்கள். யாராவது புதிதாக வந்துவிட்டால் போதும். "யாரைத் தேடுதிய? ! அவுகளா: ஏலே காத்தான், நாவன்னா வீட்டுக்குக் கூட்டிக் கிட்டுப் போ" என்று வீட்டு வரைக்கும் கொண்டு போய்விட்டுத் திரும்புவார்கள். மறுநாள் விடியற்காலம் பார்த்துவிட்டால் நீங்கள் ஒதுங்கிப் போனாலும் உங்களை வாயைத் திறந்து நாலு வார்த்தையாவது பேச வைத்து விடுவார்கள். அவர்களுக்கு நேரம், அவகாசம் பார்க்காமல் வந்து உட்கார்ந்து பேசுவதற்குத் தெரியும். கிராமத்துக்காரன் ஒவ்வொருவனும் அந்த ஊர் சரித்திர ஆசிரியன். அந்த ஊர்ப் பிள்ளையார் பிரதிஷ்டை பண்ணினது ஆலடி வயலில் வெள்ளம் மண்ணடித்து விட்டது, மூக்கன் மதகைத் திறக்காது போயிருந்தால் கரையே உடைத்துக்கொண்டு ஊர் அழிந்து போயிருக்கக்கூடிய ஆபத்து, நல்ல பாம்பை மண்வெட்டியினால் ஒரே வெட்டில் இரண்டு துண்டாக்கிப் போட்ட செம்பிலி, நடுச்சாமத்தில் பேராய்ச்சி ஊர் பார்த்து வருவதைப் பார்த்து ரத்தம் சுக்கிச் செத்துப்போன தொப்ளான் ஆகிய எல்லோரையும் நீங்கள் வெகுசீக்கிரத்தில் பரிச்சயம் செய்துகொள்ள முடியும். அச்சடித்த புஸ்தகங்களைப்போல இவர்களுடைய சரித்திரங்களும் கொஞ்சம் அமிதமான புளுகுகள் நிறைந்திருக்கும். சமூக நலத்துக்காக அங்கீகரிக்கப்பட வேண்டிய சில பொய்களைச் சரித்திர சித்தாந்தம் அமைக்கிற மாதிரி இந்தக் கிராமத்து மனிதக் கும்பலும் தன்னுடைய வம்ச பரம்பரை இற்றுப் போகாமல் இருக்க கட்டிவைக்கும் ஞாபகக் கோவைதான் இவையும், சிறிது மட்டரகமான பொய்களாக இருந்தாலும் சரித்திரமென்றே மதிப்போம்.

ஆற்றங்கரை மரமும், அரசவையில்

வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே

என்று பயப்படுகின்றான் கிராமத்துக்காரன். கிராமத்துக்காரனுக்குத் தன்னிச்சையாக நடமாடித் திரிவதற்கு இடவசதி வேண்டும். அவன் சிந்தனை சொற்பமாக இருந்தாலும், அது பறந்து திரிந்துவர விசாலமான இடம் வேண்டும் என்று ஆசைப்படுகிறான். பட்டணத்திலே தென்படும், குறிப்பிட்ட ஒழுங்குமுறை, ஜன நெருக்கத்தினால் எடுத்துக் கூட்டி அமைத்துக் கொண்ட ஏற்பாடுகள் எல்லாம் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது. அவன் பசி வந்தபோதுதான் சாப்பிட ஆசைப்படுவான்; ஆனால், உங்கள் ஹோட்டல்களில் பத்து மணிக்குப் போனால் மோரும் சாதமும் கிடைத்தால் உங்கள் அதிஷ்ட்டம். பட்டணத்துக்கு வந்தால், முங்கி முழுகிக் குளிக்க, அவனுக்குக் குழாய் தண்ணீர் போதாது. இரண்டாவது நாள் 'அய்யா நான் போய்விட்டு வருகிறேன்' என்று மூட்டை கட்டிவிடுவான். நீங்கள் அங்கே போன இரண்டாவது நாளே, 'ரொம்பல்லா இருக்கு சார்" என்று சொல்லி விட்டுப் புறப்பட்டு விடவில்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக