இலக்கியமும் சமூகமும்
மொழி, பண்பாடு. இனம், பழக்கவழக்கம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு கூட்டத்தினர் தம்முள் ஒன்றுகூடி குறிப்பிட்ட ஒரு இடத்தில் கூடி வாழும் போது அவர்களை ஒரு சமூகத்தினர் என்பர். எனவே சமூகம் என்பதற்கு கூட்டு வாழ்வே அடிப்படை என்பர். அவன் நம்மவன், நாம் அவனோடு இணைந்து வாழ வேண்டும் என்று நினைத்த நினைப்பே சமூகத்தை உருவாக்கிற்று. இத்தகைய சமூகத்திலிருந்து தோன்றிய திறன்மிக்க எழுத்தாளர்கள் படைக்கும் படைப்புக்களை இலக்கியம் என்பர். இலக்கியம் என்பதற்கு அறிஞர்கள் பற்பல விமர்சனங்களைச் செய்வர். எவ்வாறாயினும் வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு நல்ல உளம் படைத்த கவிஞனிடம் இருந்து உருப்பெற்று வருவனவற்றை இலக்கியம் என்பர். உலகியல் வாழ்வையும் உயரிய நோக்கத்தையும் உணர்த்தும் இலக்கியங்கள் காலத்தை வென்று வாழும் தன்மையின. உண்மை அனுபவத்தின் அடிப்படையில் கவிஞன் உலகியலை உணர்த்தும் போது அவ் உணர்வு நம் உணர்வையும் பற்றிக் கொண்டு பயில்வோனைத் தன் இனமாக மாற்றும் தன்மை உடையதாக அமையும் போது அவ் இலக்கியம் சிறந்த இலக்கியம் ஆகும்.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல நல்ல இலக்கியங்கள் சமூகத்தில் தோன்றி மலர்ந்தன. இவை நாட்டின் ஒருமைப்பாட்டினையும், பிற நல்ல இயல்புகளையும், பிரச்சினைகளையும், மக்கள் வாழ்வியல் அம்சங்களையும் பிரதிபலிக்கும் ஆற்றல் உடையவை. இத்தகைய இலக்கியங்களுள் சில காலத்தை வென்று வாழும் இலக்கியங்களாகவும், காலம் வரையறுக்க முடியாத இலக்கியங்களாகவும் உள்ளன. எவ்வாறாயினும் இலக்கியங்கள் யாவும் சமூகத்திலிருந்தே தோன்றுவதுடன் சமூகப்பண்பாடுகளையும். தேவைகளையும் பிரதிபலிப்பனவாய் அமைகின்றன. எனவே இலக்கியமும் சமூகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பது வரலாற்று உண்மையாகும்.
காலம் தோறும் மக்களின் சூழ்நிலைக்கும் தட்ப வெப்பநிலைக்கும். பிறவற்றுக்கும் ஏற்பவே அவர் தம் வாழ்க்கை முறையும், பண்பாடும், பிற இயல்புகளும் அமைந்திருந்தன. எனவே இலக்கியங்கள் அவற்றை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.
இலக்கு இயம் இலக்கியம். எனவே ஒரு இலக்கை அதாவது மக்களின் நாளாந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு கவிஞர்கள் செய்யுட்களை புனைந்தனர். வரலாற்றுரீதியாக சமூகப் பண்பாட்டை ஆராயும் போது சங்க கால மக்கள் அகமும் புறமும் முரண்பாடில்லாத வாழ்க்கையை வாழ்ந்தனர். தாம் கண்ணால் கண்டு மனதால் உணர்ந்து அனுபவித்தவற்றை பொருளாகக் கொண்டு செய்யுட்களை செய்தனர். அவர்கள் வாழ்வில் காதலும் வீரமும் சிறப்பிடம் பெற்றன. அதற்கேற்ப அக்காலப் பகுதியில் எழுந்த செய்யுட்களை அகம், புறம் என இரு கூறாக வகுத்தனர். அகப் பொருள் இலக்கியங்கள் அவர்களது அகத்தில் ஏற்பட்ட காதல் உணர்வுகள், போராட்டங்கள், விருப்பு வெறுப்புக்கள், தேவைகள் என்பவற்றை சித்திரிப்பனவாக அமைந்திருந்தன. மன்னர்களது ஆட்சி சிறப்பு, கொடை, வீரம் முதலியவற்றை சித்தரிப்பனவாக எழுந்த இலக்கியங்களைப் புறத்திணை இலக்கியங்கள் என்பர். அதாவது சமூகப் போக்கிற்கும், காலத்திற்கும் ஏற்ப இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எனவே சமூகமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையனவாக விளங்கின எனலாம். புலவர்களும் மன்னர்களும் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். புலவர் அன்பைப் பெறுவதை மன்னர் பெரும் பேறெனக் கருதினர். புலவர்களும் தெளிந்த உள்ளம் உடையவர்களாய் உண்மையை எடுத்துக்கூறும் மனத்திண்மை நிறைந்தவர்களாய் விளங்கினர். எனவே மன்னர்களுக்கும் புலவர்களுக்கும் இடையே நெருங்கிய ஈடுபாடு காணப்பட்டது. இத்தகைய நிலையில் எழுந்த இலக்கியங்கள் யாவும் சமூகத்தை சித்திரிப்பனவாக எழுவதில் வியப்பொன்றுமில்லை.
வரலாற்று ரீதியாக சங்க மருவிய காலத்தை நோக்குமிடத்து இக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு மன அமைதி தேவைப்பட்டது. காதல், வீரம் என்ற மரபுக்குள் சிக்குப்பட்டிருந்த இலக்கியங்கள் அகம், இன்பம் ஆகியவற்றில் ஏற்பட்டிருந்த பற்றினைக் குறைத்து நிலையாமை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டன. "வாழ்வாவது மாயம்" என்ற கருத்து மேலோங்கியது. சமண பௌத்தச் செல்வாக்கினால் திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் எழுந்தன. வையத்துள் வாழ்வாங்கு வாழும் ஒழுக்க நெறியினை போதிப்பனவாக இத்தகைய இலக்கியங்கள் அமைந்தன. எனவே இவை விரக்தியுற்ற மக்களுக்கு ஆறுதலளிப்பனவாகக் காணப்பட்டன. சமூக வாழ்க்கையும், சமயவாழ்க்கையும் பின்னிப் பிணைய சங்கமருவியகால பிற்பகுதியில் காரைக்கால் அம்மையாரதும் முதல் மூன்று ஆழ்வார்களதும் பாசுரங்கள் பெரும் துணை புரிந்தன. இவ்வாறு காலந்தோறும் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் யாவும் அக்கால சமூகத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன.
பல்லவர் காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சமயத்தின் மீது பற்றுக் கொண்டனர். சமயப் போட்டிகள், பூசல்கள் இடம் பெற்றன. ஒவ்வொருவரும் தத்தம் சமயக் கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காக முனைப்புடன் செயற்பட்டனர். தம் உள்ளத்தில் தாம் அநுபவித்த இறை அநுபவத்தை அப்படியே பிரதிபலித்தனர். எனவே இக்காலப் பகுதியில் எழுந்த இலக்கியங்கள் இறையனுபவங்கள், இறையுணர்வு ஆகியவற்றைப் புலப்படுத்தும் வகையில் பக்தி இலக்கியங்களாகத் தோற்றம் பெற்றன. அதாவது சமூகமே இலக்கியங்களுக்கு வேண்டிய கருப்பொருளை வழங்கியது. எனவே சமூகமும் இலக்கியமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை எனலாம்.
சோழர்காலம் கலை நிறைவுக் காலம், இலக்கிய நிறைவுக் காலம், காவிய எழுச்சிக்காலம் என்றெல்லாம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதற்கு காரணம் அக்கால சமுதாய அமைப்பில் காணப்பட்ட மன நிறைவே, சோழப் பெருமன்னர் ஆட்சியில் செல்வச் செழிப்பும், ஸ்திரமான அரசியல் நிலையும் காணப்பட்டமையால் அக்காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்கள் அக்கால சமூகத்தைப் பிரதிபலிப்பனவாக உயிரோட்டமுள்ள இலக்கியங்களாக மலர்ந்தன. இறையுணர்வு மூலம் நிறைவு காண முற்பட்ட சமுதாயம் சூக்கும வடிவில் உள்ள இறைவனை அடைவதற்குரிய வழிமுறைகளை நீண்ட கதைகளாகக் கூறும் வகையில் இலக்கியங்களைப் படைத்தனர். கம்பராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம், சீவக சிந்தாமணி என ஒவ்வொரு சமயமும் தத்தம் சமய உண்மைகளை விரித்து இலக்கியங்களைச் சமைத்தன. எனவே சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சோழர்காலப் பகுதியில் எழுந்த இலக்கியங்கள் காணப்பட்டன எனலாம்.
இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பன சமூகத்தை விமரிசிப்பது என்ற இவ் அடிப்படையில் நாயக்கர் காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்கள் வரண்ட இலக்கியங்களாகக் காணப்பட்டன. வித்துவத்தன்மை மிக்க புலவர்கள் காணப்பட்ட போதும் அமைதியற்ற அரசியல் சூழ்நிலை ஆதிரிப்பார் இன்மை, விரக்தி என்பன அவர்களைச் சமூகத்திலிருந்து விலக்கியது. எனவே சமூகத்தின் மீது ஏற்பட்ட வெறுப்புக்களை வசைக்கவிகள், தனிப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர். தமது வித்துவத் தன்மையைப் பிரபந்தங்கள் மூலம் வெளிப்படுத்தினர். எனவே உயிர்த்துடிப்பற்ற சமூகத்திலிருந்து எழுந்த இலக்கியங்களும் வரண்டனவாக இருப்பதில் புதுமை ஒன்றும் இல்லை. எனினும் பொதுமக்களைப் போற்றும் பள்ளு, குறவஞ்சி ஆகியனவும் சமயத்தின் மீது கொண்ட பற்றுக் காரணமாக சித்தர் பாடல்களும், தலபுராணங்களும் கூட தோற்றம் பெற்றன. எனவே காலத்தின் கண்ணாடியே இலக்கியம். அவ் இலக்கியங்கள் சமூகத்தைப் பிரதிபலிப்பன என்பது யாவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பேருண்மையாகும்.
காலங்காலமாக சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இலக்கியங்களும் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் மாற்றம் பெற்று வந்தமை யாவரும் அறிந்த உண்மை, அச்சியந்திர வருகை, கல்வி மறுமலர்ச்சி ஆகியன ஐரோப்பியர் காலப்பகுதியில் நூல்கள் பல தோற்றம் பெறவும், புதிய இலக்கிய வடிவங்களாகிய நாவல், சிறுகதை, உரைநடை, நாடகம் போன்றன எழிச்சி பெறவும் காரணமாயிற்று. அத்துடன் மன்னர் புகழ்பாடும் இலக்கியங்கள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவனவாக மாற்றம் பெற்றன. தொடர்ந்து இன்றுவரை தோற்றம் பெற்ற இலக்கியங்கள் யாவும் சமூகத்தில் நிலவிய சாதிப்பிரச்சினை, சீதனக் கொடுமை, இனப்பிரச்சினை, பெண்ணியம், முதலாளித்தும், பொதுவுடமை போன்ற கருத்துக்களை மையமாக வைத்தே எழுதப்பட்டன. எனவே இலக்கியத்துக்கு வேண்டிய கருப்பொருளை சமூகம் வழங்க, சமூகத்திலிருந்து தோற்றம் பெற்ற எழுத்தாளர்கள் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் இலக்கியங்களைப் படைத்தனர் என்பதை வரலாற்று ரீதியாக ஆராய்ந்து பார்க்கும் போது கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது. எனவே சமூகமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன எனலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக