முத்தமிழ் வளர்ச்சிக்கு சுவாமி விபுலாநந்தரின் பங்களிப்பு
"தோன்றில்
புகழொடு
தோன்றுக
அஃதிலார்
தோன்றலில்
தோன்றாமை
நன்று"
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க சுவாமி விபுலாநந்தர் 1892 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காரைதீவிலே மயில் வாகனன் என்னும் இயற்பெயருடன் பிறந்தார். பின்னர் சுவாமி விபுலானந்தர் என்னும் துறவுப் பெயர் பெற்றார். தன் கல்விப் புல அறிவினால் ஆசிரியராக அதிபராக கடமையாற்றி பின் துறவு பூண்டார். இவ்வாறு வாழ்ந்த சுவாமி அவர்களின் தமிழ் பணி மிக அளப்பரியது. இதனால் இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராகவும் திகழ்ந்தார். சுவாமியினுடைய தமிழ்ப் பணிகளிலே இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் எனும் முத்தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது ஆகும்.
இயற்றமிழ் வளர்ச்சிக்கு சுவாமியவர்கள் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது ஆகும். இவர் இலக்கியம், மொழி,
கல்வி, பண்பாடு, வரலாறு, விஞ்ஞானம் முதலியன சார்ந்த பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதி வெளியிட்ட இலக்கியங்களாக "இலக்கியச் சுவை ,
"ஐயமும் அழகும் , "வண்ணமும் வடிவும் , நிலவும் பொழிலும்", "கவியும் சால்பும்" எனும் கட்டுரைகளையும் ஆங்கிலவாணி" என்ற கட்டுரையும் முக்கியமானது ஆகும். இவரது "ஒப்பியலாய்வு பணியும் முக்கியமானதாகும். இந்த வகையில் "யவனபுரத்துக் கலைச்செல்வம்" என்னும் கட்டுரையை கிரேக்க, வட மொழிகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இவர் பாரதியின் தேசியப் பாடல்களை, பிரான்சு நாட்டுப் பாடலுடனும் பக்கிம்சந்தரின் "வந்தேமாதரம் பாடலுடனும் ஒப்பிட்டு காட்டினார்.
அடுத்து பாரதியின் நவீன இலக்கிய ஈடுபாடு பற்றி நோக்கும்போது பாரதியார் பற்றி எழுதிய "பாரதியார் கவிநயம்" மற்றும் "ஈசனுவக்கும் மலர் ,
கங்கையில் விடுத்த ஓலை, நீர் மகளீர் என்பனவும் முக்கியமானது ஆகும். இவர் மொழி பெயர்ப்பு கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார்.
அடுத்து இவருடைய இசைத் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றி நோக்கும்போது பண்டைத் தமிழருடைய யாழ் பிற்காலத்திலும் வழக்கொழிந்து போனமையால் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். இதன் முயற்சியால் "யாழ்நூல்" என்ற இசை நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் இவரது ஆழற் புலமையினையும் தமிழறிவினையும் எடுத்தியம்புகின்றது. அத்துடன் பண் ஆராய்ச்சி, சங்கீத மகரந்தம், இசைக் கிரமம், சங்கீத பாரிஜாதம், குழலும் யாழும் முதலிய கட்டுரைகள், இசைத் தமிழ்ப்பாக்கள் போன்ற இசைத் தமிழ் சார்ந்த பணிகளாக அமைகின்றன.
அடுத்து இவரது நாடகப் பணி பற்றி நோக்கும் போது இவர் "மதங்க சூளாமணி" என்ற நாடக நூலை எழுதினார். அத்துடன், "பாவலர் விருந்து" என்ற நாடகத்தினையும் எழுதினார்.
இவ்வாறு முத்தமிழ் வித்தகராக திகழ்ந்த சுவாமி விபுலானந்தர் 1947ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்து தமிழ் மக்களின் உள்ளங்களில் அழியா இடம் பதித்த தமிழ் பேராசிரியர் ஆவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக