10.9.25

ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியப் பண்பு

ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியப் பண்பினைக் குறிப்பிடுக?

அறிவியற் பண்பு:
இக்கால இலக்கியங்களில் பெரும்பாலானவை அறிவியற்துறை சார்ந்தன. சோதிடம், வைத்தியம் சார்ந்த நூல்கள் தேவை கருதி எழுதப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நாள் கோள் நிமித்தம் பார்ப்பதற்காகவும் அரசனது வேண்டுதலின் பேரில் பாடப்பட்டன. அதனால் நூலின் பல இடங்களில் அரசன் புகழ் பாடப்படுகின்றது. சரசோதி மாலை நான்காம் பராக்கிரம பாகுவையும், செகராச சேகரமாலை செகராச சேகரனையும் புகழ்ந்துரைக்கின்றது. வைத்திய கலைக்கும் சோதிடக் கலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நோயாளிகளின் கிரக நிலைகளை அவதானித்தே வைத்தியம் செய்யப்பட்டது. நோய் பரவும் வகை, நோயின் தன்மை, அதற்கான பரிகாரம் என்பது மரபார்ந்த தமிழ் கல்வியுடன் தொடர்புற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது."

வரலாற்றுப் பண்பு:
ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தம் பெருமைகளை பல்வேறு வடிவங்களில் பதிவு செய்து கொள்வது ஒரு வழக்கமாகும். இலங்கையின் மன்னர் பரம்பரை பற்றியும், மக்கள் குடியேற்றம் பற்றியும் வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு முகம் கொடுத்தமை போன்ற விடயங்களை எடுத்துக் கூறுகின்றன.
"
இலங்கை மாநகர் அரசியற்றிடும் அரசன் தன் குலங்களானது குடிகள் வந்திடும் முறை தானே"
என்று வையாபாடல் கூறுகின்றது. பௌராணிக மரபில் இவை வரலாற்றுச் செய்திகளை கூறுகின்றன. கோணேசர் சாசனம் குளக்கோட்டனது கோயிற்றிருப்பணி பற்றி கூறுகின்றது. தட்சண கைலாய புராணம், இரகுவம்சம் முதலான நூல்களிலும் வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

சமயச்சார்பு:
இக்காலத்து அரசர்கள் சைவ சமயத்தை சார்ந்திருந்தமையால் அவர்கள் சைவசமயம் சார்பான இலக்கியங்கள் தோன்றுவதற்கு ஆதரவு வழங்கினர். சமகால தமிழக இலக்கியத்தின் போக்கும் இவர்களைப் பாதித்திருக்கலாம். இதில் இருவகையான பண்புகளை அவதானிக்கலாம்
ஒன்று : கற்றறிந்த உயர்ந்தோர் மட்டத்தை நோக்கி எழுதப்பட்டதே தலபுராணங்கள், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பொருளையும் வர்ணித்தல், நாட்டு நகர சிறப்பு முதலான காவியப்பண்புகள், தலச்சிறப்பை வலியுறுத்தும் புராணக் கதைகள், கோயிலில் உள்ள மூர்த்தியின் திருவிளையாடல், தலம் பற்றிய நாட்டார் கதைகள், கோயிற்றிருப்பணிகள் போன்றன இடம் பெற்றிருந்தன.
உதாரணம் : தட்சண கைலாய புராணம், திருக்கரைசைப் புராணம்
இரண்டு : சமூகத்தின் அடிநிலையிலுள்ள மக்களின் வழிபாட்டு மரபுகளை புலப்படுத்தும் இலக்கியம்
உதாரணம் : கண்ணகி வழக்குரை, கதிரைமலைப்பள்ளு.

பொது மக்கள் சார்பு:
நாட்டார் இலக்கிய மரபையும், வாய்மொழி கதைப்பாடலாக வழங்கி வந்த செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு சில பொதுமக்கள் சார்புடைய இலக்கியங்கள் தோன்றின. முல்லைத்தீவு, யாழப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் வழங்கிவந்த கதை மரபையும், சிலப்பதிகாரத்தின் கதை மரபை சிலவற்றைப் புகுத்தியும் கண்ணகி வழக்குரை என்ற நூல் எழுந்தது. சமூகத்தின் அடிநிலை மக்களை குறிப்பாக குடும்பன், மூத்தபள்ளி, இளையபள்ளி இவர்களை கதா பாத்திரங்களாகக் கொண்டு பள்ளு இலக்கியம் தோன்றியது. தமிழில் தோன்றிய முதற் பள்ளு இலக்கியமாக கதிரைமலைப் பள்ளு என்ற நூலினைக் குறிப்பிடலாம்.

மொழிபெயர்ப்பு முயற்சி:
யாழ்ப்பாண மன்னர் காலத்தில் வடமொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பரராசசேகரனின் வேண்டுதலின் பேரில் அரச கேசரி என்ற புலவர் மகாகவி காளிதாசர் எழுதிய ரகுவம்சம் என்ற நூலை தமிழிலே மொழி பெயர்த்திருந்தார். இது இலங்கையில் எழுந்த காப்பிய நடையில் அமைந்த முதல் நூலாகும்.

வடமொழிச் சார்பு :
இக்கால இலக்கியங்களில் வடமொழி இலக்கிய மரபு அதிகமாக பின்பற்றப்பட்டது. இலங்கையின் புராண இலக்கிய மரபு வடமொழி நூல்களினை தழுவியதாகவே காணப்பட்டது. தட்சண கைலாய புராணம் வடமொழியில் உள்ள மச்சேந்திய புராணத்தை தழுவி எழுதப்பட்டது. வடமொழியிலுள்ள வியாக்கிரபாத மான்மியம் என்ற நூலைத் தழுவி வியாக்கிரபாத புராணம் எழுதப்பட்டது.

தேசிய உணர்வு :
ஈழத்திலுள்ள தலங்களையும், ஈழத்து மக்களின் வாழ்க்கை முறைகளையும் பின்புலமாகக் கொண்டு சில இலக்கியங்கள் தோன்றின. இவை தேசிய இலக்கியங்களுக்கு முன் மாதிரியாக அமைந்தன. உதாரணம் : தட்சண கைலாய புராணம், கதிரைமலைப்பள்ளு முதலான நூல்களைக் குறிப்பிடலாம்.

பிறபண்புகள் :
ஆசிரியப்பா, வெண்பா போன்ற யாப்பு வடிவங்களும் சிந்து முதலான நாட்டார் வடிவங்களும் பின் பற்றப்பட்டன. ஈழத்துப் புலவர்கள் பயன்படுத்திய மொழிமரபு பண்டித மரபிற்குரியதாக இருந்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக