அகநானூறு
அறிமுகம்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூறு பதின்மூன்றடிச் சிற்றெல்லையும் முப்பத்தோரடிப் பேரெல்லையும் உடைய நானூறு பாடல்களைக் கொண்ட அகத்திணை சார்ந்ததாகும். இந்நானூறு பாடல்களும் மூன்று பிரிவினவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 1 20 வரையிலான பாடல்கள் 'களிற்றியானை நிரை' என்றும் 121 300 வரையிலானவை மணிமிடை பவளம்' எனவும் 301-400 வரையிலானவை நித்திலக்கோவை எனவும் பெயரிடப்பட்டுள்ளன. அகநானூற்றைத் தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மர். தொகுப்பித்தவர் உக்கிரப் பெருவழிதியாவார்.
பாடல் 1 (154)
படுமழை பொழிந்த பயம்மிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக்
குறும்புதல் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப
வெஞ்சின அரவின் பை அணந் தள்ள
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழத்
திரிமருப்பு இரலை தெள்ளறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதியக்
காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி
ஓடு பரி மெலியாக் கொய்சுவல் புரவித்
தாள் தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ தேரே சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே.
ஆசிரியர் - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்
திணை - முல்லை
துறை - வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்
கார்ப்பருவத் தொடக்கத்துத் திரும்பி வருவேன் எனக் கூறித் தலைவன் தலைவியை வினைவயிற் பிரிந்தான். வினையும் முடிந்தது. கார்ப்பருவமும் வந்தது. தலைவியைக் காணும் வேட்கை கொண்ட தலைவன் பாகனிடம் 'தேரினை விரைந்து செலுத்துக' என்று கூறியது.
மையக்கருத்து
தலைவி மேல் காதல் கொண்ட தலைவன் அவளை விரைந்து சென்று சேரவேண்டும் எனத் தனது மன வேட்கையினை வெளிப்படுத்துதல்.
பொருள்
ஒலிக்கின்ற மழை பொழிந்தமையால் பயன்மிக்க முல்லை நிலத்தே. நீரினையுடைய ஆழமான பள்ளங்களில் பிளந்த வாயினையுடைய தேரைகள், நீண்ட வழியெல்லாம் வாத்தியங்கள் பல ஒன்று சேர்ந்து ஒலிப்பன போன்று ஒலித்தன. குறும்புதராகிய பிடவஞ் செடியின் கண் மலர்ந்த நீண்ட காம்பினையுடைய மலர்கள், செம்மண் நிலத்தில் உதிர்ந்து அந்நிலத்தை அழகு செய்தன. மிக்க சினமுடைய பாம்பின் படம், மேல் நோக்கினாற் போன்று குளிர்ந்த காந்தள் பூவின் மொட்டுக்கள் மணங்கமழுமாறு கட்டவிழ்ந்து மலர்ந்தன. முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண்மான், விருப்பத்தையுடைய பெண்மானுடன் இனிதே தங்கியது. இவ்வாறாகக் காடு அழகு பெற்றுத் திகழ்ந்தது. அக்காட்டின்கண் அமைந்த குளிர்ந்த தன்மை வாய்ந்த பெரிய வழியிலே ஓடும் வேகத்தில் குறையாத, கொய்யப்பட்ட பிடரிமயிரினையுடைய குதிரையின் கால் அளவு தாழ்கின்ற மாலையில் பொருந்தியுள்ள மணிகள் ஒலிக்குமாறு தேரை ஒட்டுவாயாக! பெண்மைக்கான சிறப்புக்கள் யாவும் அமையப் பெற்று நம்மிடத்து விரும்பிய கொள்கையினையுடைய அழகிய மாமை நிறத்தை உடைய நம் தலைவியை விரைந்து சென்று அடைவோம்.
அணி
உவமை அணி
நெடுநீர் அவல பகுவாய்த்தேரை
சிறு பல்லியத்தின் நெடுநெறிக் கறங்க
வெம்சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாதுபிணி அவிழ.
வினா-விடை
1. முல்லைநிலக் கருப்பொருள் கையாள்கை பற்றி விளக்குக.
பள்ளங்களில் வாழும் தேரைகளின் ஒலி
பிடவின் காம்பையுடைய பூக்கள் செம்மண் நிலத்தில் கோலம் செய்திருத்தல்.
. காந்தள் மலர்கள் கட்டவிழ்ந்து விரிந்திருக்கின்றமை.
முறுக்கிய கொம்பையுடைய கலைமான் தன் பிணைமானுடன் இன்புற்றிருத்தல்.
வேகமாக செல்லவல்ல மணிமாலையணிந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
2. தலைவியைக் காணவேண்டும் என்ற தலைவனின் மன வேட்கை எடுத்துரைக்கப்படுமாற்றினை விளக்குக.
முல்லை நிலக் காட்சியானது தலைவனது மனதிற்கு விருப்புடையதாகவும், தலைவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாகவும் அமைதல்.
தலைவியின் நிலைகுறித்து எண்ணுதல்.
'நம்வயிற் புரிந்த கொள்கை அம்மா அரிவை.....' என்று தேரப்பாகனிடம் கூறுவது.
தலைவியைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்க விரைந்து தேரினைச் செலுத்துமாறு தேர்ப்பாகனிடம் கோருதல்.
3. பாடலில் வெளிப்படும் சங்ககால அகத்திணைப் பண்புகள் யாவை?
சுட்டி ஒருவர் பெயர் கூறாத தனிநிலைச் செய்யுள்.
பாத்திரக் கூற்றாக அமைதல் (தலைவன் கூற்றாக அமைதல்)
முதல், கரு, உரிப் பொருள்களின் பயன்பாடு.
முதல் முல்லை
கரு தேரை, மான், காந்தள், அலரி
உரி இருத்தல்.
. இயற்கை வர்ணணை
4. தலைவியைப் பற்றிய தலைவனின் நோக்குப் பற்றி விளக்குக?
தலைவியைச் சிறப்பித்தல்.
அழகிய மாமை நிறத்தையுடையவள்.
* நம்மிடத்து விரும்பிய கொள்கையுடையவள் தலைவி எனக் கூறுகின்ற தலைவன் தவிப்பு மேலிட எதிர்பார்த்திருக்கும் தலைவியை நோக்கி விரைதல்.
5. பாடலில் புலப்படும் சங்ககாலப் பண்பாட்டம்சங்கள் பற்றிக் கருத்துரைக்குக.?
வினை நிமித்தம் தலைவியைத் தலைவன் பிரிந்து செல்கின்றமை.
போக்குவரத்திற்குத் தேரினைப் பயன்படுத்தல்.
தேரைச் செலுத்துவதில் திறன் மிக்க பாகன்.
வினை நிமித்தம் சென்ற தலைவனின் வருகையைத் தலைவியானவள் தவிப்போடு எதிர்பார்த்திருத்தல்.
6. சங்ககால புவியியல் சூழல் விபரிக்கப்பட்டிருக்குமாற்றினை விளக்குக?
மலர்கள் காந்தள், அலரி
விலங்குகள் மான், குதிரை
. செல்லும் வழிபற்றிய குறிப்பு.
'கவின் பெற்ற தண்பதப் பெருவழி
விலங்குகளின் மகிழ்வான வாழ்க்கை
'திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதிய
வாத்தியம் பற்றிய குறிப்பு
'சிறு பல்லியத்தின் கறங்க" எனும் உவமைச் சித்திரிப்பு.
7. தலைவனின் இயல்புகளை எடுத்துக்காட்டுக.
தலைவி மீது தூய காதல் கொண்டவன்.
விரைந்து சென்று தலைவியை அடைந்துவிடவேண்டுமென்ற வேட்கை கொண்டவன்.
. இயற்கையைத் தனது மன உணர்வோடு பொருத்தி நோக்கும் இயல்புடையவன்.
தலைவியின் மனநிலையை உணரும் பாங்குடையவன்.
தனது மனக் கருத்தினைத் தேர்ப்பாகனிடம் தெளிவுற முன்வைக்கும் பண்புமிக்கவன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக