01. சங்கச் செய்யுள்கள்
அ. குறுந்தொகைச் செய்யுள்கள் (04)
சங்ககாலத்தில் எழுந்த தனிச்செய்யுள்களின் தொகுதிகளாய் அமைந்த எட்டு நூல்கள் "எட்டுத் தொகை" எனப்படும். அகத்திணை சார்ந்த செய்யுள்கள், அவற்றின் அடிகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் யாப்பின் அடிப்படையிலும் வேறுவேறு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. அவற்றுள் நாலடியைச் சிற்றெல்லையாகவும் எட்டடியைப் பேரெல்லையாகவும் கொண்ட நானூறு செய்யுள்களின் தொகுதியாய் அமைந்த நூலே "குறுந்தொகை" ஆகும்.
குறுந்தொகை - 126
ஆசிரியர் : ஒக்கூர் மாசாத்தியார்
இவர் சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர். குறுந்தொகையில் 5 பாடல்களும் புறநானூற்றில் ஒரு பாடலும் அகநானூற்றில் 3 பாடல்களுமாக மொத்தம் 9 பாடல்கள் இவராற் பாடப்பட்டன.
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரா ரெவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.
பேசுபொருள்:
குறித்த பொருளீட்டச் சென்ற தலைமகன். குறித்த பருவத்தில் வாராமை கண்டு வருந்திய தலைமகள், தோழிக்குச் சொல்லியது.
பொருள் :
தன்னுடையதும் என்னுடையதுமான இளமைப் பருவத்தின் அருமையைக் கருதாது. தலைவன் பிரிந்து சென்றது பொருள் மூலம் வரும் வளமான வாழ்க்கையை விரும்பியே. தலைவன் குறித்துச் சொன்ன கார்காலம் வந்துவிட்டது. ஆனால், அவன் இன்னும் இங்கு வரவில்லை. அவன் எங்குள்ளானோ? என்று கேட்டு, (கார்கால மழையால்) செழித்து வளர்ந்த முல்லையின் கொத்துக் கொத்தான அரும்புகளை ஒளிரும் பற்களாகக் கொண்டு கார்காலமானது (ஏளனமாகச்) சிரிக்கிறது.
இளமை நிலையில்லாதது; போனால் மீளப் பெறமுடியாதது. ஆனால், பொருள் எக்காலத்திலும் தேடக்கூடியது. இளமை உள்ள காலத்தில் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கையை விட்டுவிட்டு, பொருளைத்தேடி இளமை கழிந்தபின் வந்து எதை அனுபவிக்கப் போகிறான்? என்று தலைவனின் அறியாமை குறித்துக் கார்காலம் சிரிப்பதாகத் தன் கருத்தை ஏற்றிச் சொல்கிறாள் தலைவி.
திணை : முல்லை
துறை : பருவங்கண்டிரங்கியது
அரும்பதங்கள் :
நசைஇ - விரும்பி
எவணரோ - எவ்விடத்தில் உள்ளாரோ?
முகை - அரும்பு
எயிறு - பல்
இவண் - இவ்விடம்
பெயல் - மழை
இலங்குதல் விளங்குதல்
நகுமே - சிரிக்குமே
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக