"தமிழ் மகள் ஔவையார்
ஒளவையார்
உலக மொழிகளுக்குள்ளேயே, இலக்கிய மொழிகளுக்குள்ளே தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் தனிச்சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுவதற்குரிய காரணங்கள் பலப் பல. அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஆடவரோடும் மகளிரும் சரிநிகர் சமானமாய் விளங்கி இலக்கியத்தையும், மொழியையும் பேணி வளர்த்தலேயாகும். இது வேறு எம்மொழியினும் நம் செந்தமிழ் மொழிக்கு உரிய தனிச்சிறப்பாகும். தமிழினத்தின் பொற்காலமாய்த் திகழ்ந்த சங்ககாலத்தில் மட்டும் நாற்பத்தொரு பெண்பாற் புலவர்கள் தமிழகத்தில் விளங்கி அருந்தமிழ் மொழியைத் தம் ஆருயிர் எனக் கருதிப் போற்றி வளர்த்தனர் என்றால் தமிழ் இனத்தின் பெருமையை தமிழ் இலக்கியத்தின் வளத்தினை நிறுவிக்காட்ட வேறு சான்று வேண்டுவதில்லை. அனைத்துலகும் கண்டு வியந்து போற்றும் பெருமிதம் மிக்க பொற்காலமாய்த் திகழ்ந்த சங்ககாலத்தில் தமிழினம் ஈன்றெடுத்த நல்லிசைப் புலமை மெல்லிய பாவலர்க்கெல்லாம் தலைமணியாய் விளங்கிய பெருமை ஒளவையார் என்னும் தமிழ் அன்னையையே சாரும். 'ஒளவை"
என்ற சொற் பொருளாக தாய்,
மூதாட்டி, பெண்துறவி, துறவுப் பெண் என்றெல்லாம் அகரமுதலிகள் (அகராதி) பொருள் கூறும். அம்மை, ஔவை ஒரு பொருள் சொற்களே.
தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்ச்சிக் கண்கொண்டு நுணிகிப் பார்க்கும் போது ஔவையார். பலராய் விளங்கக் காண்கின்றோம். கடைச்சங்க நாளில் அதியமான், நெடுமான் அஞ்சி காலத்தில் வாழ்ந்த ஒளவையார் ஒருவர், சமய காலத்தில் விளங்கிய ஒளவையார் ஒருவர், காவிய காலத்தில் கம்பர் நாளில் வாழ்ந்த ஔவையார் ஒருவர்-இவ்மூவரும் ஒருவராயிருக்க முடியாது. கி.பி.முதல் நூற்றாண்டிலும், கி.பி12ம் நூற்றாண்டிலும் வாழ்ந்த ஒருவர்-ஒருவராதல் எங்ஙனம். எனவே ஒளவையார் ஒருவர் அல்லர் என்பது வெள்ளிடை மலை.
இந்த நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாறு படைத்த முனைவர் மு.அருணாசலம் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் ஆறு ஔவையார்கள் பற்றி விளக்குகின்றார். சங்ககால ஔவையார், இடைக்கால நீதிநூல் ஔவையார் என ஔவையார் இருவரே என்பது பலரது கருத்தாகும்.
சங்ககால ஔவை நீதி நூல் ஔவை யாவரும் சிவநெறிச் சார்புடன் காணப்படுகின்றனர். இங்ஙனம் பெண்ணினத்திற்கே சிறப்புத்தேடும் வகையில் ஒளவை வரலாறு அமைகிறது.
உலகப் பெண்பாற் புலவர்களிடையே தமிழ் ஔவைக்கு சிறப்பிடம் உண்டு என அறிஞர்கள் போற்றுகின்றனர். கிரேக்கப் புலவராகிய சாபோ
(Shbbo) எனப்படும் பெண்பாற் புலவருடன் தமிழ் ஔவையை ஒப்பிட்டு திறனாய்வு கூறுகின்றனர். ஆயிரம் பெண்பாற் புலவர்கள் இருப்பினும் அவர்களுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் ஒளவைப் பெருமாட்டி புலமையாலும், பண்பாலும் சிறந்து விளங்கியமை போற்றுதற்குரிய சிறப்பேயாகும்.
ஒளவையார் "இளமையில் கல்" என்றதொரு இளையவர் கற்க நூல் செய்தவரும் ஆவார். எளிமையாகக் கற்கவும் கற்கத்தக்க அறநெறிகளைக் கற்கச் செய்யவும் வழிகாட்டிய முதற்பெருமை தமிழ் மண்ணில் ஒளவைப் பெருமாட்டிக்கே உண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக