சார்பெழுத்து
முதலெழுத்துக்களைச் சார்ந்து அவை பிறக்குமிடங்களிலே தோன்றி அவற்றின் மாத்திரை குறைந்தோ கூடியோ ஒலிக்கும் எழுத்துக்களை சார்பெழுத்துக்கள் என்பர்.
நன்னூல் பத்து வகையான சார்பெழுத்துக்களைக் கூறுகின்றது.
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஒள மஃகான்
தனிநிலை பத்தும் சார்பு எழுத்தாகும் (நன்.எழு.60)
என சார்பெழுத்தின் வகை பற்றி கூறுகின்றது. அவையாவன
01. உயிர்மெய்
02. ஆய்தம்
03. உயிரளபெடை
04. ஒற்றளபெடை
05. ஐகாரக் குறுக்கம்
06. ஒளகாரக் குறுக்கம்
07. மகரக் குறுக்கம்
08. ஆய்தக் குறுக்கம்
09. குற்றியலுகரம்
10. குற்றியலிகரம்
ஆகியன.சார்புஎழுத்துகளைப் பத்து என்று வகைப்படுத்தியிருப்பது நன்னூல். ஆனால் தொல்காப்பியம் சார்பெழுத்துகளை மூன்று என்று மட்டுமே கூறுகின்றது. அவை,
(1) குற்றியலிகரம்
(2) குற்றியலுகரம்
(3) ஆய்தம்
ஆகியனவாகும்.
சார்பெழுத்துகள் பிறக்கும் முறையினைப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைத் தனித்தனியே காண்போம்.
சார்பெழுத்துகள் பிறப்புப் பற்றித் தொல்காப்பியம்
தொல்காப்பியம் முப்பது முதல்எழுத்துகளின் பிறப்பினை விளக்கிய பின்னர்ச் சார்புஎழுத்துகளின் பிறப்பினை எடுத்துக் கூறுகின்றது.
தாமே தனித்து வரும் இயல்பில்லாமல் சில எழுத்துகளைச் சார்ந்துவரும் இந்தச் சார்புஎழுத்துகள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய எழுத்துகளின் பிறப்பிடத்திலேயே பிறக்கும் என்று தொல்காப்பியம் விளக்குகிறது.
ஆய்தம் மட்டும் குற்றெழுத்தைச் சார்ந்து வரும் எனினும், அது தலையில் தங்கி வெளிப்படும் காற்றினால் பிறப்பதால், உயிரோடு சேர்ந்து வரும், வல்லெழுத்தினைச் சார்ந்தே பிறக்கும். வல்லின மெய்கள் தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
சார்பெழுத்துகள் பிறப்புப் பற்றி நன்னூல்
நன்னூல் சார்பெழுத்துளைப் பத்து என்று பட்டியலிட்டுக் கூறியிருப்பதை முன்னரே அறிந்து கொண்டீர்கள். இந்தப் பத்தினுள் ஆய்தம் பிறக்கும் இடம் தலை ஆகும். ஆய்தம் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி வாயைத் திறத்தல். இது நீங்க, எஞ்சியிருக்கும் ஒன்பது சார்புஎழுத்துகளும் தத்தம் முதல் எழுத்துகள் பிறக்கும் இடத்தில் பிறப்பன. அந்த முதல் எழுத்துகளுக்குத் தேவைப்படும் முயற்சியே இவை பிறப்பதற்குத் தேவைப்படுவன. இதனை,
ஆய்தக்கு இடம்தலை; அங்கா முயற்சி; சார்புஎழுத்து ஏனவும்
தம்முதல் அனைய (நூற்பா. 86)
என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.
(1). உயிர்மெய்
மெய்யெழுத்துக்களும் உயிர் எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று இணைவதனால்
ஏற்படும் ஒலிச் சேர்க்கைகளினால் உயிர்மெய் எழுத்துக்கள் என்ற ஒலிவடிவங்கள்
பிறக்கின்றன. அவற்றையே உயிர்மெய் எழுத்துக்கள் என்பர்.
க் + அ = க
க் + ஆ = கா
உயிர்மெய்க் குறில் 18 x 5 = 90
உயிர்மெய் நெடில் 18 x 7 = 126
உயிர்மெய் எழுத்துக்கள் 18 X 12 = 216
உயிர்மெய் குற்றெழுத்துக்கள் (க, ங, ச, ஞ) ஒரு மாத்திரை அளவினையும், உயிர்மெய்
நெட்டெழுத்துக்கள் (கா, ஙா, சா, ஞா) 2 மாத்திரை அளவினையும் உயிரேறிய
அளவாகக் கொள்ளும்.
(2) ஆய்தம்
முப்புள்ளி கொண்ட முக்கோண வடிவ ஃஎழுத்து ஆய்த எழுத்து எனப்படும். இது
குற்றெழுத்துக்கும் வல்லின மெய் எழுத்துக்கும் இடையில் அவற்றைச் சார்ந்து
வரும். இவ்வாறு சார்ந்து வருகையில் தமது அரை மாத்திரை அளவிலிருந்து குறுகாது
ஒலிப்பதனால் இதனை முற்றாய்தம் எனவும் கூறுவர். முற்றாய்தம் மாத்திரை 1/2 ஆகும்.
உதாரணம் :- எஃகு, அஃது
(3). அளபெடை
அளபெடை என்பது ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரையில் இருந்து நீண்டு
ஒலித்தலாகும். இது இரு வகைப்படும்.
உயிரளபெடை - செய்யுள்களிலே ஓசை குறையுமிடத்து நெட்டுயிர்கள் அச்சொல்லின்
முதலிலும் இடையிலும் கடையிலும் தமக்குரிய மாத்திரையில் இருந்து நீண்டு
ஒலித்தல் உயிரளபெடை எனப்படும். இதற்கு அடையாளமாக அதன் இன எழுத்து
அருகில் வரும்.
முதல் - ஓஒதல்
இடை - தொழாஅள்
கடை - நசைஇ
இங்கு நெட்டெழுத்துக்கள் நீண்டு ஒலிக்கும்போது தமது இனமாகிய உயிரெழுத்துக்கள்
முதலிலும் இடையிலும் கடையிலும் எழுதப்படுவதை அவதானிக்கலாம். எனவே
உயிரளபெடை மூன்று மாத்திரை அளவு ஒலிக்கும். சில சந்தர்ப்பங்களில் மூன்று
மாத்திரை அளவைவிடக் கூடியும் ஒலிக்கும்.
உதாரணம் :- ஒருவரை தூரத்தில் நின்று அழைக்கும்போது
வியாபாரிகள் பொருட்களை விற்கும்போது
இராக ஆலாபனையின்போது
(4). ஒற்றளபெடை
செய்யுள்களிலே ஓசை குறையுமிடத்து மெல்லின எழுத்துக்களும் ர், ழ் தவிர்ந்த
இடையின எழுத்துக்கள் நான்கும் ஆய்தமும் தமக்குரிய மாத்திரையில் இருந்து நீண்டு
ஒலித்தல் ஒற்றளபெடை எனப்படும். (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ல்,வ்,ள்). ஒற்றளபெடைக்கு
மாத்திரை ஒன்று. உ-ம்: இலங்ங்கு வெண்ண்பிறை, அஃஃது, அரண்ண் கொண்ட
வடுதோளினர்.
(5). ஐகாரக்குறுக்கம்
'ஐ' காரம் தன் மாத்திரையிலிருந்து குறுகி ஒலித்தல் ஐகாரக் குறுக்கம் எனப்படும். 'ஐ' என்ற எழுத்து
தனித்து சுட்டும்போதும் அளவெடுக்கும்போதும் மட்டும் நெடிலுக்குரிய இரண்டு மாத்திரை
அளவு ஒலிக்கும். ஏனைய இடங்களில் குறில்போல ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும்.
ஐ காரம் மொழிக்கு முதல், இடை, கடை என்ற மூன்று நிலைகளிலும் ஒலிக்கும்
முதல் - வையகம், தையல்
இடை - இளைஞன், கலைஞன்
கடை - தவளை, தலை
இங்கு மூன்று நிலைகளிலும் 'ஐ' காரம் தனது இரண்டு மாத்திரையில் இருந்து குறுகி
ஒரு மாத்திரையாக ஒலிக்கிறது.
(6). ஒளகாரக் குறுக்கம்
'ஔள' காரம் தன் மாத்திரையில் இருந்து குறுகி ஒலிப்பது ஒளகாரக் குறுக்கம் ஆகும்.
'ஔள' என்ற எழுத்து தன்னைச் சுட்டும்போதும் அளபெடுக்கும்போதும் மட்டும்
நெடில்போல இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும். ஏனைய இடங்களில் குறில்போல
ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும்.
உதாரணம் :- ஔளவை, வெளவால், சௌகரியம், கௌரி
(7). மகரக்குறுக்கம்
'ன'கர, 'ண' கரங்களை அடுத்தும் 'வ'கரத்தின் முன்னும் 'ம'கரம் தன் மாத்திரையில்
இருந்து குறுகி ஒலித்தல் மகரக் குறுக்கம் எனப்படும்.
போன்ம்
கேண்ம்
தரும் வளவன், மூழ்கும் வள்ளம்
தற்காலத் தமிழில் போன்ம் என்பது போலும் எனவும் கேண்ம் என்பது கேளும் என்றும்
வழங்கப்படுகிறது. அதேபோல தற்கால தமிழில் வகரத்தின் முன்பு மகரம் குறுகி ஒலிப்பதில்லை.
அவன் வரும் வரை இருப்போம்
அவர்களும் வந்தார்கள்
(8). ஆய்தக் குறுக்கம்
நிலைமொழி ஈற்றுச் சொற்களில் 'ல' கர 'ள' கரம் வந்து வருமொழியில் 'த'கரம்
வருமாயின் ஆய்தம் தன் மாத்திரையில் இருந்து குறுகி ஒலிக்கும். அவ்வாறு ஆய்தம்
தன் அரை மாத்திரையில் இருந்து கால்மாத்திரையாக குறுகி ஒலித்தல் ஆய்தக் குறுக்கம்
எனப்படும்.
அல் + திணை = அஃறிணை
முள் + தீது = முஃடீது
(9). குற்றியலுகரம்
தனிக்குற்றெழுத்து அல்லாத மற்றைய எழுத்துக்களின் பின் சொல்லின் இறுதியில்
வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.
இது ஆறு வகைப்படும்.
நெடில் தொடர்க் குற்றியலுகரம் - ஆடு, நாடு
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் - எஃகு, இஃது
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் - வரகு, பயறு
வன்றொடர்க் குற்றியலுகரம் - கொக்கு, பேச்சு
மென்றொடர்க் குற்றியலுகரம் - சங்கு, பஞ்சு
இடைத்தொடர்க் குற்றியலுகரம் - பெய்து, மார்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக