பூவோடு புரையும் வினாவிடை
வினா விடை:
1. இச் செய்யுளில் புலவர் கூறவந்த விடயம் என்ன?
தலைவனோடு பழகுவதற்கு முன் தனது உறுப்புக்களின் அழகு நலன்களையும் தலைவனைப் பிரிந்ததனால் அவ்வுறுப்புக்கள் முழுதும் பொலிவிழந்தன கழிவிரக்கத்தோடு கூறியது. என
2. அதனை எவ்வாறு எடுத்துக் கூறுகிறார்?
தலைவி பிரிவாற்றலினால் தனக்கு நேர்ந்த துன்பத்தை தோழிக்கு கூறுவது போல எடுத்துரைத்தல்.
உள்ளுறை உவமையணியினூடாக கூறுதல்.
சாதாரண உவமை அணியினூடாக கூறுதல்.
3. உள்ளுறை உவமம் என்றால் என்ன?
குறிப்பாக பொருள் உணர்த்தி நிற்கும் நிலை கொண்ட உவமை உள்ளுறை உவமம் எனப்படும். சாதாரண உவமையில் உவமையும் பொருளும் வெளிப்பட்டு நிற்கும்.
உள்ளுறை உவமத்தில் உவமை வெளிப்படையாக நிற்க பொருள் மறைந்து நிற்கும்.
உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக என உள்ளுறுத்து இறுவது உள்ளுறை உவமம்" எனத் தொல்காப்பியம் கூறும்.
தான் கூற விரும்பும் தகவலை வெளிப்படையாக கூறாமல் இயற்கை நிகழ்வுகளினூடாக கூறுவதையே உள்ளுறை உவமம் என்பர். தலைவியினது இயல்பைக் காட்டு வதற்கு இவ்வணி பயன்படுத்தப்படும்.
4. செய்யுளில் இடம்பெற்றுள்ள உள்ளுறை உவமை அணியினை எடுத்துக்காட்டுக?
அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண்பூக்
குருகு என மலரும் பெருந்துறை'
என்பது உள்ளுறை உவமம். தாழையின் பூ குருகு எனத் தோன்றி ஒருவரும் எடுக்க முடியாமையால் சூடாது கழிந்தாற் போல, தலைவன் தன்னுடைய உண்மை நிலை உணராமை யாலும், திருமணம் செய்ய முயலாமையாலும் தன்னுடைய அழகு நுகரப்படாது கழியுமோ என தலைவி ஆற்றாளாயினள். கடல் அலைகள் இரவில் பெருகி தாழையை அலைத்தல் போல இரவு தோறும் காமக் கடலால் தான் அலைக்கப் படுவதை குறிப்பிட்டாள்.
5. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள உவமைகளை எடுத்துக் காட்டுக?
தலைவியினுடைய கண்களை, 'பூவொடு புரையும் கண்' என்றார். தாமரை மலர் போன்ற கண்கள்.
தலைவியினுடைய தோள்களை, 'வேய் என் விறல் வனப்பு எய்திய தோள்'
என்றார். மூங்கிலைப் போல எல்லோரையும் வெற்றிகொள்ளும் அழகான தோள்.
தலைவியினுடைய நெற்றியை, 'பிறை என மதி மயங்குறூஉம் நுதல்' என்றார். பிறையென்று கருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றி.
கிறது.
குறிப்பு : தனது அழகை தானே வர்ணிப்பது தற்புகழ்ச்சி யன்று.
தலைவனால் இவ்வாறு பாராட்டப்பெற்ற முன்னைய அழகு இவ்வாறு அமைந்ததே என கழிந்ததற்காக இரங்குகின்றாள்.
6. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள முதல், கரு, உரிப் பொருளை எடுத்துக்காட்டுக?
முதற்பொருள் :
களம் - நெய்தல் நிலம் - கடலும் கடல் சார்ந்த இடம்
காலம் இராக் காலம்
கருப்பொருள் : தாழம்பூ, நாரை,
தாமரை, மூங்கில், பிறைச்சந்திரன்
உரிப்பொருள் : தலைவனின் பிரிவை நினைத்து இரங்குதல்.
7. இச் செய்யுளில் தலைவியின் அழகு எவ்வாறு கூறப்பட் டுள்ளது?
தலைவி தன் அழகை தானே எடுத்துக் கூறுகின்றாள். தாமரை மலர் போன்ற கண்கள், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் அழகான தோள்;
பிறைபோல அறிவை மயங்கச் செய்யும் நெற்றி போன்ற உறுப்புக்களை உடைய அழகியாக கூறப்பட்டுள்ளாள்.
8. இச் செய்யுளில் இடம்பெற்றுள்ள அகப்பொருள் பண்புகளை எடுத்துக்காட்டுக?
1. அகப்பொருள் மரபில் இது அன்பின் ஐந்திணைக்குரியது.
ii. சுட்டியொருவர் பெயர் கூறப்படாத பாடல்.
iii. முதல், கரு, உரிப் பொருளினூடாக அகப்பொருள் எடுத்துரைக்கப்படுதல்.
iv. இயற்கையிலிருந்து உள்ளுறை உவமம் கூறப்படுதல்.
V. தலைவி கூற்றாக அமைதல்.
vi. அகவற் பாவினால் ஆக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக