1.12.25

A/L, பதினெண் கீழ்க்கணக்கு நூல்

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களை வகைப்படுத்திக் காட்டுக.

கணக்கு என்பது முதலில் எண்ணையும் பின்னர் எழுத்தையும் அதன்பின்னர் இலக்கியத்தையும் குறிக்க வழங்கியது. இவ்வகையில் தான் மேற்கணக்கு நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள் என இலக்கிய நூல்கள் வகுக்கப்பட்டன. கீழ்க்கணக்கு நூல்களுக்கு பன்னிரு பாட்டியல்;

"அடி நிமிர்பில்லாச் செய்யுட் டொகுதி

அறம் பொருள் இன்பம் அடக்கி யவ்வகை

திறம்பட வுரைப்பது கீழ் கணக்காகும்"

என இலக்கணம் கூறுகின்றது. பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் எவை என்பது பற்றி பழைய வெண்பா ஒன்று,

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை முப்

பால் கடுகங்கோவை பழமொழி - மாமூலம்

இன்னிலை சொல் காஞ்சியுட னேலாதி யென்பவே

கைந் நிலையு மாங் கீழ்க்கணக்கு என பதினெட்டு நூல்களையும் கூறுகின்றது.

கீழ்க் கணக்கு நூல்களை அவை கூறும் பொருள் மரபிற்கு ஏற்ப பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

அறம், பொருள். இன்பம் ஆகிய மூன்று பொருள்களையும் எடுத்துக்கூறுவன திருக்குறள், நாலடியார்

அறக் கருத்துக்களை மட்டும் தனியே எடுத்துக் கூறுவனவாக ஒன்பது நூல்கள் அமைந்தன. அவையாவன நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது. இனியவை நாற்பது, திரிகடுகம். ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன.

சங்க கால அகப்பொருள் மரபினை பின்பற்றியனவாக ஆறு நூல்கள் காணப்பட்டன. அவையாவன ஐந்திணை ஐம்பது. ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது. கார் நாற்பது, கைநிலை என்பன.

 

புறப்பொருள் மரபினை பின்பற்றியனவாக ஒரு நூல் அமைந்துள்ளது. களவழி நாற்பது என்பது அந்நூலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக