21.11.25

G.C.E.O/L- 2024(2025)-கிரகித்தல் - 01

 

கிரகித்தல்

கல்விப்பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2024(2025)

தமிழ் மொழியும் இலக்கியமும் - II

04. பின்வரும் உரைப்பகுதியை வாசித்து அதன்கீழ்த் தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

போட்டி, போட்டி, போட்டி; எங்கும் போட்டி, எதிலும் போட்டி. இது நாகரிகத்தின் இயல்பாகிவிட்டது. இப்போட்டிகளாலே வாழ்க்கை அமைதி இழந்து வருகிறதென்பதை மக்கள் உணரவில்லை. காந்தியடிகள் போட்டியை விரும்பாதவர். எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்ற தெளிவுபெற்ற அவருடைய உள்ளம் போட்டிகளுக்கு இடந்தரவில்லை.

மனித இனமானது, புதுப்புதுக் கருவிகளைப் பெற்று, வாழ்க்கைச் சுமைகளைக் குறைத்து அமைதி பெறுமென விஞ்ஞானிகள் நம்பினர். அறிவியல் வளர்ச்சியில் வாழ்வு எளிதாகுமென்பது அவர்கள் எதிர்பார்ப்பு. ஆனால், மனித மனம் எளிமையை நாடவில்லை. இரண்டு கையுடையவன் மூன்று மூட்டைகள் சுமக்க விரும்பினான். மூன்றாவதாகக் கைபெற்றால் நான்கைந்து மூட்டைகள் சுமக்க அவாப்பட்டான். இந்நிலையே புதிய வாய்ப்புகளிலும் ஏற்பட்டது. இதனால் அமைதி இழந்து அல்லல் பெருகுகின்றது.

அமைதியின் விழுப்பத்தை உணர்த்தவே அன்று ஓர் இளவரசர் அரச மாளிகையைத் துறந்து புத்தராக, போதிமர நிழலை அடைந்தார். எதிர்காலத்தில் இத்தகைய சான்றோர் பலரும் தோன்றி, போட்டி குறைந்த - அமைதியான - சமுதாயத்தை அமைக்கப் பாடுபடவேண்டியிருக்கும். இல்லையேல், மனித இனம் விஞ்ஞான யுகத்தில் ஏனைய எல்லாவற்றையும் பெற்றபோதும், வாழ்வின் அடிப்படையை இழந்து வருந்தும்..



(i) நாகரிகத்தின் இயல்பாக இங்கு சுட்டப்பெறுவது யாது?
போட்டி, எங்கும் போட்டி, எதிலும் போட்டி


(ii) விஞ்ஞானிகளது எதிர்பார்ப்பு யாது?
அறிவியல் வளர்ச்சியில் வாழ்வு எளிதாகும்.


(iii) அமைதியின் பெருமையறிந்த சான்றோராக இங்கு குறிப்பிடப்படும் இருவரும் யாவர்?
காந்தி, புத்தர்


(iv) மனிதரின் எல்லையற்ற ஆசையை எடுத்துக்காட்டும் வசனத்தை எழுதுக?
மூன்றாவதாகக் கைபெற்றால் நான்கைந்து மூட்டைகள் சுமக்க அவாப்பட்டான் / இரண்டு கையுடையவன் மூன்று மூட்டைகள் சுமக்க விரும்பினான்.


(v) வாழ்வின் அடிப்படையாக இங்கே கருதப்படுவது யாது?
அமைதி


(10 புள்ளிகள்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக