2.11.25

நாயக்கர் காலம்

நாயக்கர் காலம்

கி.பி 14 -17ஆம் நூற்றாண்டு காலப்பகுதியை விஜயநகர நாயக்கர் காலம் என்பர். மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களைத் தலைநகராகக் கொண்டு விஜய நகர மன்னர்களின் பிரதிநிதிகளாகிய நாயக்க மன்னர்கள் தமிழ் நாட்டை பரிபாலனம் செய்தமையால் விஜயநகர நாயக்கர் காலம் என அழைக்கப்படுகின்றது.

சுந்தரபாண்டியன் திறமை குறைந்த மன்னன் ஆகையால் அக்காலப்பகுதியில் கி.பி 1345 அளவில் மாலிக்கபூர் தலைமையில் இஸ்லாமியப் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. எனவே அரசியல், பொருளாதார, சமுதாய நிலைமைகளைப் பொறுத்தவரையில் நிலையான உறுதிமிக்க அரசொன்று இல்லாத நிலைமை காணப்பட்டது. தமிழகத்தின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு நாடு சூறையாடப்பட்டது. அந்நியப்படையெடுப்பை தடுத்து நிறுத்துவதிலேயே மக்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். இஸ்லாமியர் வரும்பொழுது ஒரு கையில் வாளுடனும், மறுகையில் குர்ஆனுடனும் வந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே நாடும் மதமும் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தமையால் இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டியதுடன் அந்நியப்படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதுமே முக்கிய நோக்கமாக இருந்தமையால் காவியங்களின் வளர்ச்சி தேக்கமடைந்தது. எனவே விஜய நகர நாயக்கர் காலம் ஏனைய தமிழ் இலக்கிய காலகட்டங்களிலிருந்து வேறுபடுகின்றது.

இலக்கியம் ஒரு கால சூழ்நிலைக்கு ஏற்பவே தோற்றம்பெறும் என்பது வரலாறு காட்டும் உண்மை. விஜய நகர நாயக்கர் காலப்பகுதியில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை. காரணமாக நாட்டு நலன் பேணும் முயற்சிகளிலோ, பொருளாதாரவிருத்தி பற்றியோ மன்னர் அதிக கவனம் செலுத்தவில்லை. அதாவது படையெடுப்புக்களும், போர்களும் நிகழ்ந்த ஓர் காலப்பகுதியில் பொருளாதார வளத்தினைக் கட்டியெழுப்புவது சாத்தியம் அற்ற ஒன்று. எனவே காவியங்களின் வளர்ச்சி தேக்கமடைவதுடன் அக்காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் ஏனைய இலக்கியங்களின் போக்கில் நின்றும் வேறுபட்டுச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலப்பகுதியில் மக்கள் பயந்த மனநிலையில் வாழந்தமையால் விரக்தி, நம்பிக்கையீனம் முதலியன சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்டது. எனவே உள்ளக்கிளர்ச்சியோ புத்துணர்ச்சியோ ஏற்பட முடியாத நிலைமை காணப்பட்டது. புதுமையில் சிறப்பு ஒன்றையும் காணமுடியவில்லை. காவியங்கள் படைப்பதற்கு ஏற்ற கருப்பொருள் ஏதும் புலவன் உள்ளத்தில் தோற்றம் பெறவில்லை. எனவே காவியங்களின் வளர்ச்சி தேக்கமடைந்தது. புலவர்கள் ஆதரிப்பார் இன்றி அல்லலுற்றனர். செழிப்பற்ற உலகியல் வாழ்க்கை நிலவியது. இந்நிலையில் சிந்தனையின் வளர்ச்சிப் போக்கையோ, கற்பனை ஆற்றல்களின் பெருக்கத்தையோ எதிர்பார்க்க முடியாது. எனவே இக்காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்கள் யாவும் வரண்ட வளமற்ற இலக்கியங்களாக தோற்றம் பெற்றன. இவை ஏனைய காலப்பகுதிகளில தோற்றம் பெற்ற இலக்கியங்களில் இருந்து வேறுபட்டுச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு அக்கால அரசியல், பொருளாதார சமுதாய சூழ்நிலையே காரணம்.

சமுதாயம் புலவனுக்கு புதியன படைக்கும் ஆற்றலை வழங்கவில்லை. சமுதாயத்தில் புதுமை எதுவும் காணப்படவில்லை. எனவே புதிய காவியங்களோ, புதிய இலக்கிய வடிவங்களோ தோன்றுவதற்குரிய சூழ்நிலை காணப்படாமையால் இலக்கியங்கன் அரைத்த மாவை அரைப்பது போல் பழைய தடத்திலே செல்ல வேண்டியதாயிற்று. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் யாவும் உயிர்த் துடிப்பும், உணர்ச்சிப் பெருக்கும் அற்ற வரண்ட இலக்கியங்களாகக் காணப்பட்டன. எனவே காவியங்களில் வளர்ச்சிப் போக்கு இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப இலக்கியங்கள் தோற்றம் பெற்றதுடன் ஏனைய காலப்பகுதிகளில் இருந்து வேறுபட்டனவாகவும் அமைவதைக் காணலாம்.

இக்காலப் பகுதியில் எழுந்த இலக்கியங்களின் பண்பாக பழமை போற்றும் போக்கினைக் காணலாம். அதாவது சோழர்காலத்தில் எழுந்த பெரும் கோவில்கள் புலவனது கற்பனை உணர்ச்சியை தூண்டுவனவாகவும், மனதுக்கு ஆறுதல் தருவனவாகவும், பழம் பெருமைகளை திரும்பிப்பார்க்க உதவுவனவாகவும் விளங்கியமையால் தலபுராணங்கள் இக்காலப்பகுதியில் பெருமளவில் தோற்றம் பெற்றன. சேதுபுராணம், திருப்பரங்கிரிப் புராணம், கோயிற் புராணம், போன்றன இக்காலத்தில் எழுந்தனவாகக் கொள்ளப்படுகின்றன.

சமுதாய மாற்றத்துக்கு ஏற்ப நாயக்கர் காலப்பகுதியில் பெருமளவு சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இதனால் இக்காலப்பகுதியை சிற்றிலக்கிய காலம் என்பர். சமுதாய மாற்றத்திற்கு இணங்க இலக்கியங்களில் பொருளும் மாற்றமடைவது இயற்கையே. எனவே உலகியல் வாழ்வு செழிப்பற்ற நிலையில் சமயம், தத்துவம், கடவுள் முதலிடம் பெற அவற்றைப் பொருளாகக் கொண்டு சோழர்காலப் பகுதியில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் சமயச்சார்பும், தத்துவச்சார்பும் நிறைந்தனவாக மாறும் போக்கை காணலாம். இக்கால இலக்கியங்களாக,

பரணி :- மோகவதைப்பரணி, பாசவதைப்பரணி, அஞ்ஞைவதைப்பரணி

உலா :- திருவாரூர் உலா, திருக்காளத்தி நாதர் உலா, ஏகம்பரநாதர் உலா, மதுரைச் சொக்க நாதர் உலா

கலம்பகம் :- மதுரைக்கலம்பகம், காசிக்கலம்பகம், தில்லைக்கலம்பகம், கச்சிக்கலம்பகம்

பிள்ளைத்தமிழ் :- மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்கமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

நான்மணிமாலை :- நால்வர் நான்மணி மாலை, திருவாரூர் நான்மணிமாலை,

மும்மணிக்கோவை :- - பண்டார மும்மணிக்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை

தூது :- சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது

தனிப்பாடல்கள்

இக்காலத்தில் புலவர்கள் ஆதரிப்பார் அற்ற நிலையில் தமது வித்துவத்தன்மையை வெளிப்படுத்த பொருள் விளங்காத கடினமான சிலேடை, மடக்கு, யமகம், திரிபு, சொல்லலங்காரம் போன்ற சொல்லணி மிகுந்த இலக்கியங்களைப் படைத்தனர். இவற்றுக்கு காரணியாக சமுதாய சூழ்நிலை> விரக்தி> வறுமை என்பன அமைந்துள்ளன.

நாயக்கர்கால இலக்கியம் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தோற்றம் பெற்றதுடன் ஏனைய கால இலக்கியங்களில் நின்றும் வேறுபட்டுச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது இக்காலப்பகுதியில் சமயம், தத்துவம் சார்ந்த இலக்கியங்கள் தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். இறைவன் மீது பாடப்படுகின்ற பாடல்களாக இருந்தாலும் அவை வடமொழிச் சொற்களையும், வடமொழிச் சந்தங்களையும் கொண்டு விளங்கின. அதாவது சந்தச்சிறப்பு மிகுந்தவையாக அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவை பக்தி அநுபவங்களை வெளிப்படுத்துவதுடன், படித்தவர்களுக்கு உறுதிபயக்கும் பண்புநலன் வாய்ந்த பாடல்களாய் அமைந்தன இதனால் "வாக்கிற்கு அருணகிரி" என்றும், "கருணைக்கு அருணகிரி", என்றும் "ஐயா அருணகிரி உன்னைப் போல் ஒரு சொல் மெய்யாக விளம்பினர்யார் உளர்" என்றும் பிற்காலப் புலவர்களால் போற்றப்படும் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

காளமேகப்புலவர், இரட்டையர், குமரகுருபரா வில்லிபுத்தூராழ்வார், பரஞ்சோதி முனிவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி, அதிவீரராம பாண்டியன், வீரகவிராஜர் போன்றோர் இக்காலத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த புலவர்கள் ஆவார். வடமொழிப்புலமையும், தமிழ் மொழிப் புலமையும் ஒருங்கு வாய்க்கப்பெற்று மணிப்பிரவாள நடை செல்வாக்குப் பெற்ற காலம் இப்பகுதியாகும். வசைபாடக் காளமேகம். என்று போற்றப்படுகின்ற காளமேகப்புலவரால்

''இம் என்னும் முன்னே எழுநூறும், எண்ணூறும்

அம் என்றால் ஆயிரமும் ஆகாதோ"

என்னும் அளவிற்கு கவிபாடும் ஆற்றல் பெற்றார். காளமேகப்புலவரால் பாடப்பட்ட பாடல்கள் வசைபாடல்களாகவும், சிலேடைப் பாடல்களாகவும், தனிச்செய்யுள் சிந்தாமணி எனும் நூலில் இடம்பெற்றுள்ளன. வாழ்த்துக்கவி பாடும் மரபில் இருந்து வேறுபட்டதாய் வசைக்கவி பாடும் மரபு இக்காலப்பகுதியில் சிறப்பிடம் பெறுகிறது. சிவப்பிரகாச முனிவர், குமரகுருபரசுவாமிகள், படிக்காசுப்புலவர். பிள்ளைப் பெருமாள், ஐயங்கார் போன்றோர் இக்காலத்தில் தோற்றம் பெற்றதுடன் இந்துஸ்தானிச் சொற்களைக் கையாண்டு பிரபந்தங்களை வெளியிட்டனர். அத்துடன் முதன் முதல் பெண்பால் பிள்ளைத் தமிழ், நீரோட்டயமகந்தாதி, நான்மணிமாலை, முதலிய இலக்கியங்கள் தோற்றம் பெற்றதுடன், தலைசிறந்த உரையாசிரியர் பலரும் நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோர் தோன்றினர். எனவே நாயக்கர் கால இலக்கியங்கள் ஏனைய கால இலக்கியங்களில் நின்றும் வேறுபட்டு செல்வதை செல்வதை அவதானிக்க முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக