5.11.25

A/L குயிற்பாட்டு அறிமுகம்

குயிற்பாட்டு

புதுவை நகரில் வாழ்ந்த கவிஞன் மாஞ்சோலைக்கு ஒரு நாள் செல்கின்றார். அந்நாள் வேடர் வராத விருந்துத் திருநாள். அங்கே பேடைக் குயிலொன்று பெட்புற அமர்ந்து,

'காதல் காதல் காதல்

காதல் போயிற் காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்'

என்று இசைக்கின்றது. இந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்த கவிஞன் குயிலைப் பார்த்து,

பேடே திரவியமே பேரின்பப் பாட்டுடையாய்

ஏழுலகும் இன்பத் தீ ஏற்றும் திறனுடையாய்

பீழை உனக்கு எய்திய தென் பேசாய்'

எனக் கேட்கிறார். காதலை வேண்டிக் கரைகின்றேன். இல்லை யெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என்றது. இதனைக் கேட்ட பாரதி குயிலின் கதையைக் கேட்கின்றார்.

சொற்சுவை, பொருட்சுவை, தத்துவக் கருத்துச் செறிவு, கற்பனை விந்தை, ஆழ்ந்த சிந்தனை இத்தனையும் நிறைந்த விந்தைச் சிறுகாப்பியம். பாரதியின் சிறந்த உயர்ந்த கற்பனையிலே பிறந்த புதுமைப் படைப்பே குயில் பாட்டு. குயிற்பெண்ணின் 'விழியில் மிதந்த கவிதை தன் சொல்லில் அகப்படவில்லை என்கிறார் கவிஞர்.

கானப் பறவை கலகல எனும் ஓசையிலும்

காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்

ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்


நீலப் பெருங்கடல் எந்நேரமுமே தானிசைக்கும்

ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்

மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்

ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்

ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்



கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

சுண்ணமிடிப்பார் தஞ்சுவை மிகுந்த பண்களிலும்

பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக் கரங்கள் தாமொலிக்க

கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்



வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்

வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி

நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்

நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப்

பாவி மனந்தானிறுகப் பற்றி நிற்ப தென்னையோ?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக