கடல்புறா
அத்தியாயம் 6
ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம்
ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மாபெருங் கதையே
தன் கதையென முகவுரை துவங்கி அந்தக் கதையை
விவரிக் கவும்
முற்பட்ட குணவர்மன், கதையை
உடனடியாக எடுத்துச் சொல்ல
முடியாமல் மயங்கியும் தயங்கியும் நின்று நிலை தடுமாறி அறையில் அப்படியும் இப்படியும் சில விநாடிகள் உலவி, தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டான். துவங்கிய கதையைச் சொல்லவும் முடியா மல், மெல்லவும் மாட்டாமல் அவன் திணறித் திண்டாடு வதைக்
கண்ட இளையபல்லவன் அவனை ஏதும் கேட்கா மல், கவலை தோய்ந்த அவன் வதனத்தையும், அத்தனை கவலையிலும் தளராமல் திடமாகவும், கம்பீரமாகவும் நின்ற
அவன் சரீரத்தையும் கண்களால் அளவெடுத்தான். குணவர்மன் கிட்டத்தட்டத் தன் உயரமே இருப்பதையும், அவனுக்கு வயது நாற்பத்தைந்துக்கு மேலிருக்க முடியா தென்றாலும், தலையிலிருந்து பாய்ந்த கேசத்தின் சில பகுதிகளும், முகத்தின் குறுக்கே கவலை உழுதுவிட்டிருந்த இரண்டொரு கோடுகளும், அவன் தோற்றத்துக்குப் பத்து
வயதைக் கூட்டியே சொல்லும் நிலைமையில் வைத் திருந்ததையும், கவனித்த கருணாகர பல்லவன், 'இவன் வாழ்க்கையில் பெரிதும் அல்லல்பட்டிருக்க வேண்டும்' என்று
தனக்குள் சொல்லிக்கொண்டான். இத்தனை கவலையிலும் அவன் உதடுகளில் காஞ்சனாதேவியின் உதடுகளிலிருந்த உறுதியும் துடிப்புமிருந்ததைப் பார்த்த பல்லவ
வீரன் கடாரத்தின் இளவரசன் எந்த அசந்தர்ப்ப நிலையிலும் துன்பத்திலும் மனத்தை மட்டும் தளரவிடாத 'இரும்புத் திடம்
வாய்ந்தவன் என்பதைப் புரிந்துகொண் டான். அத்தனை திடமும் உறுதியுமிருந்தாலும், அவன் முகத்திலோ கைகளிலோ வடுக்கள் ஏதுமே
இல்லாததை யும் கவனித்து அரசியல் தொல்லைதான் இவனுக்கு அதிகமே தவிர வாளைச் சுழற்றும் வேலை இவனுக் கிருக்கக் காரணமில்லை. இவன் போர்களில் அதிகமாக ஈடுபடாதவன்' என்று
தனக்குள்ளேயே முடிவு கட்டிக் கொண்டதன்றி, 'அப்படியிருக்க இவன் பெண்ணுக்கு மட்டும் திறமையான வாள்பயிற்சியை எதற்காக அளித்
திருக்கிறான்?' என்று
தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான்.
மிதமிஞ்சிய கவலையாலும், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத் தைப் பற்றிய நினைப்பாலும் எண்ணங்கள் உள்ளத்தில் எழுந்து அலைமோதிக் கொண்டிருந்த அந்த நிலையில்கூட குணவர்மனின் கண்கள், இளைய பல்லவனது விழிகள் பாய்ந்த இடங்களையும், அப்படிப் பாய்ந்தததின் விளை வாக முகத்தில் உலவிய
எண்ணங்களையும் கவனிக்கத் தவறாததால், அவன் இதழ்களில் வருத்தம் கலந்த
புன்முறு வலொன்று தவழ்ந்தது. அதற்குக் காரணம் சொல்ல
அவன் முனைந்தபோது அவன் சொற்களிலும் அந்த வருத்தம் பிரதிபலித்தே நின்றது. "இளைய பல்லவர் நினைப்பதில் தவறில்லை. நான் வாள்போரில் அதிகமாக ஈடுபடாதவன் தான். அதற்குக் காரணமிருக்கிறது" என்று
குணவர்மன் மெள்ள
மெள்ளச் சொற்களை உதிர்த்தான்.
வாள்போரில் திறனிருந்தாலும் இல்லாவிட்டாலும், முகபாவத்திலிருந்தே பிறர்
உணர்ச்சிகளை ஊடுருவிப் பார்க்கும் சக்தி
கடாரத்தின் இளவரசனுக்கு மிதமிஞ்சி இருந்ததைக் கவனித்த கருணாகர பல்லவன், பெருவியப்பை அடைந்தானானாலும் அதை வெளிக்குக் காட் டாமல், கடாரத்தின் இளவரசர் மீது எந்தக் குறையையும் கற்பிக்கும் நோக்கம் எனக்கில்லை என்று
ஏதோ சமா தானம் சொல்ல
முயன்றவனை இடையிடையே தடுத்த குணவர்மன், "இளைய பல்லவரே! இதற்குச் சமாதானம் ஏதும்
தேவையில்லை. தமிழகத்தின் இணையற்ற வீரனெ
னப் பெயரெடுத்த உமது கண்கள், மற்றவர்களிடத்திலும் வீரத்தின் அடையாளங்களை எதிர்பார்ப்பது நியாயம் தானே? அந்தக் குறிக்கோளேதும் தென்படாதபோது, 'இவன் வீரன்தானா? என்ற சந்தேகமே உமக்கு ஏற்படு வதும்
இயற்கைதான். ஆனால்
இதிலும் என் வாழ்க்கையில் சில மர்மங்கள் கலந்திருக்கின்றன, என்றான்.
'அரசனாயிருப்பவன் வாள்போர் பயிலாததற்கும் இவன் வாழ்க்கை மர்மங்களுக்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும். ஒருவேளை இவன் கோழையாயிருப்பானோ? கோழைத்தனத்தை மறைப்பதற்குக் காரணங்களைக் கண்டு
பிடிக்கிறானோ?' என்று
சிந்தனை வசப்பட்ட கருணாகர பல்லவன் மீண்டும் தன் கண்களால் குணவர்மனது முகத்தை ஆராய்ந்தான். கவலை தோய்ந்து கிடந்த அந்தச் சந்தர்ப் பத்திலும், ஈட்டிகள்போல் ஜொலித்த குணவர்மனின் கண் களைக் கண்டதும், 'சேச்சே! நாம் நினைத்தது தவறு. இத்த கைய கண்களை உடையவன் ஒருகாலும் கோழையா யிருக்க முடியாது,' என்ற முடிவுக்கு வந்த இளைய பல்லவன் மேற்கொண்டு ஏதும்
பேசாமல் குணவர்மனது கதையைக் கேட்க
ஆயத்தமானான். குணவர்மனது அந்தச் சில நிமிஷங்களில் தன் தயக்கத்தை உதறிக்கொண்டு, இளைய பல்லவனை நோக்கி, இளைய பல்லவரே! நான் கடாரத்தின் இளவரசனாயிருக்கும் காரணம் தெரியுமா உமக்கு?" என்று
ஒரு கேள்வியை வீசினான்.
தெரியாது குணவர்மரே! தாங்கள் சொல்லித்தான் தங்களைப் பற்றிய விவரம் எதையும் நானறிய முடியும். சில நாழிகைகளுக்கு முன்புதானே நாம் சந்தித்திருக்கிறோம்!" என்று
கருணாகர பல்லவன் பதில்
கூறினான்.
உண்மைதான் இளைய பல்லவரே என்று
சொல்லித் தலையையும் அசைத்து ஆமோதித்த குணவர்மன், "நான் கடாரத்தின் இளவரசனாயிருப்பதற்கு என் ஆசை காரண மல்ல. உண்மையில், கடாரத்தின் ஆட்சி
பீடத்தையும் அந்த செல்வாக்கையும் அனைத்தையும் வெறுக்கிறேன். கடாரத் ஆட்சிபீடம் அளிக்கும் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், தின் இளவரசுப் பதவி என் தந்தையால் என்மீது சுமத்தப் பட்டது. என் இஷ்டத்திற்கு விரோதமாக, என்று
பதில் கூறிய
குணவர்மன், இதைக்
கேட்க உங்களுக்கு விசித்திர மாயிருக்கலாம் இளைய பல்லவரே! ஆனால்
உண்மை அதுதான். ஆட்சிபீடத்தை நான் வெறுக்கவே செய்கிறேன். ஆனால்
அது என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டி ருக்கிறது. இது உலக விசித்திரம். வேண்டாதவனிடம் பதவி ஒட்டிக் கொள்கிறது. வேண்டுபவனை வெட்டி விலக்கித் தள்ளுகிறது என்றான்.
குணவர்மன் சொன்னது பெரும் விசித்திரமாயிருந்தது இளையபல்லவனுக்கு. ஆட்சியில் வெறுப்பிருந்தால் சோழ நாட்டின் உதவியை ஏன் நாடுகிறீர்கள்? கடாரத்தின் மீது படையெடுத்து, ஜெயவர்மனை முறியடித்து ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும், என்று
சோழப் பேரரசர் வீரராஜேந்திரருக்கு நீங்கள் ஓலையே
அனுப்பியிருந்தீர்களே? என்று
வினவினான் இளைய பல்லவன்.
இந்தக் கேள்வியால் சிறிதும் கலங்காத குணவர்மன் திடமாகவே பதில்
சொன்னான், ஓலை அனுப்பியிருந் தேன், இளைய பல்லவரே! அரச பதவியை நாடித்தான் இங்கும் வந்திருக்கிறேன். முடிந்தால் ஜெயவர்மனை விரட்டி அரசபீடத்தில் உட்காரவும் உத்தேசம்தான். ஆனால்
இத்தனையிலும், பற்று
சிறிதுமில்லாமலே ஈடுபட்டிருக்கிறேன். இவையனைத்திலும் கடமை சம்பந்தப் பட்டிருக்கிறது. எந்த சைலேந்திர வம்சத்தில் நான் பிறந்தேனோ அந்த சைலேந்திர வம்சத்தைப் பற்றிய கடமை அது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மக்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை அது. கடமைதான் என்னை
இங்கு இழுத்து வந்திருக்கிறது இளையபல்லவரே! ஆசை அல்ல? அத்துடன் மேலும் பேசத்
துவங்கிய குணவர்மன், இளைய பல்லவரே! இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் கதைதான் என் கதை என்று.
கேளும் அந்தக் கதையை,"
என்று கூறி, இளைய பல்லவனை விட்டுத் திரும்பி அந்த அறையின் கிழக்குப் பகுதியிலிருந்த பெரும் சாளரத்தைத் திறந்து வெளியே நீண்ட
நேரம் நோக்கிக் கொண்டு பேசாமலே நின்றான். பல நிமிஷங்கள் கழித்துத் திரும்பிய குணவர் மனின்
கண்கள் ஏதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பன போல் காணப்பட்டன. அதுவரை கவலை மண்டிக்கிடந்த வதனத்தில் சாந்தியும் பெருமையும் நிலவிக் கிடந்தன. அந்தக் கனவுக் கண்களால் இளைய பல்லவனையும் தனது புதல்வியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டுத் தன் ஒரு கையை உயர்த்தி, சாளரத்தை நோக்கி நீட்டி, "இளைய பல்லவரே! இந்தச் சாளரத்துக்கு வெளியே நீர் கண்களைச் செலுத்தினால், நீலக்
கடல்தான் உமது கண்களுக்குத் தெரியும். ஆனால்
என் கண்களுக்குத் தெரிவது அதுமட்டு மல்ல. அந்தக் கடலுக்கப்பாலுள்ள சைலேந்திரர்களின் மாபெரும் அரசான
ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் தோன்றுகிறது. பலப்பல தீவுகள் தோன்றுகின்றன. கடாரம் தோன்றுகிறது. சொர்ணத் தீவும், சாவகமும், பாலியும் தோன்றுகின்றன. அந்தத் தீவுகளில் தினம்
தினம் வந்து
குவியும் வணிகப் பொருள்களும் தோன்றுகின்றன. அத்தனை வணிகப் பொருள்கள் அங்கு
ஏன் வந்து
குவிகின்றன? காரணம் இருக்கிறது. இளையபல்லவரே! பலமான
காரணம் இருக்
கிறது. உலகத்தில் சகல நாட்டினரும் விரும்பும் தங்கம் அந்தத் தீவுகளில் இருக்கின்றது. அதனால்தான் பழைய கிரேக்க மாலுமிகள் அவற்றை கிரிஸே (தங்கம்) தீவு என்றும், சொர்ணத் தீவு என்றும் சொர்ண
பூமியென்றும் பலபடிப் பெயரிட்டு அழைத்தார்கள். அந்தத் தீவுகளில் உள்ள மண்ணில் பொன் கலந்திருக்கிறது. மண்ணை
நீரில் போட்டால் தங்கம் பிரியும் அளவிற்குப் பொன் மண் ணுடன்
இணைந்து கிடக்கிறது. அவ்வளவு தங்கம் உலகத்
தின் எந்த நாட்டு மண்ணிலும் கிடையாது. மற்றவர்கள் தங்கள் நாட்டை ஆசையால் பொன்னாடு என்று
அழைக்கிறார்கள். ஆனால்
எங்கள் நாடு உண்மையிலேயே பொன்னாடு. பொன் ஏராளமாக விளையும் பூமி அது. அதன் பொன்னை வாரிச் செல்லவே உலக வணிகர்கள் அங்கு
வருகிறார்கள்," என்று
பேச்சைச் சற்று
நிறுத்தி இளைய பல்லவனை உற்றுப் பார்த்தான்.
இளையபல்லவன் முகத்தில் வியப்புதான் மிஞ்சிக் கிடந்தது. சொர்ணபூமியின் பொன்னை நினைத்து உண் டான வியப்பல்ல. சொந்த
நாட்டைப் பற்றிப் பேச முற்பட்டதும் குணவர்மனுக்கு உண்டான ஆவேசத்தைக் கண்டதால் ஏற்பட்ட வியப்பு அது. அந்த வியப்பைக் கவனித்த பின்பும் குணவர்மன் ஆவேசத்தைக் கைவிடா மலே சொன்னான்: "இந்தத் தீவுகள் உங்கள் பாரத நாட்டு டன் ஒட்டியிருந்த காலமொன்று உண்டென்று பூதத்துவ சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். இளைய பல்லவரே, பாரதத்தின் கடற்கரையோரமாகப் போய்த் தெற்கே திரும்பினால் கிழக்கு நாடு பாரதத்தின் நிலப்
பரப்புடன் தொடர்பு கொண்டே செல்கிறது. அந்த நிலப்பரப்பைக் கடாரத்துக்குக் கீழேதான், கடல் குறுக்கிட்டு உடைக்கிறது. அப்படிக் கடல் உடைத்துப் பிரிந்த இடங்கள் தீவுகளாகிச் சொர்ணத் தீவு (சுமாத்ரா) என்றும், சாவகத் தீவு என்றும், பாலித் தீவு என்றும் வெவ்வேறு விதமான பெயர்களைப் பெற்றுத் திகழ்கின்றன. ஆனால்
இந்தத் தீவுகளின், கலாசாரங்கள் பொதுப்படையானவை. பழைய காலத்தில் இவை ஒன்றுபட்டிருந்ததைக் குறிக்கின்றன. அதுமட்டு மல்ல, பாரதத்துக்கும் அவற்றுக்கும் யுகாந்தரமாக இருந்து வரும்
தொடர்பையும் குறிக்கின்றன. அங்குள்ள சைவமும் வைணவமும் பௌத்தமும் பாரத நாடு அளித்தவை. அங்குள்ள சிற்பமும், சித்திரமும், கோயிலும், குளமும், இலக்கியமும் எல்லாமே இந்த நாடு அளித்தவைதான். காட்டுமிராண்டிகளே ஆதியில் நிரம்பிக் கிடந்த சொர்ண
பூமி, பௌத்த,
சைவ, வைணவத் துறவிகளின் வருகையால் நாகரிகத்தையும் பல நாடுகளும் கண்டு
வியக்கும் தன்மை
யையும் அடைந்தது. அப்படி ஏற்பட்ட நாகரிகத்தின் விளைவாகத்தான் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் சொர்ணத்தீவில் எழுந்தது.
" இந்த இடத்தில் கதையைச் சற்றே
நிறுத்திய குணவர் மன், இனி மிக்க
கவனமாகக் கேளுங்கள் இளையபல்ல வரே!" என்று எச்சரித்துக் கொண்டும், அறையில் அங்கு
மிங்கும் கனவில் நடப்பவன்போல், உலாவிக் கொண்டும் கதையைச் சொல்லிக் கொண்டு போனான். "சுமார் முந் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சாவகத் தீவின் மத்தியி லிருந்த சிற்றரசில் ஸஞ்சயன் என்ற அரசன் தோன்றினான். அவன் சைவ சமயத்தவன். அவன் ஆட்சியில் அந்தச் சிற்றரசு பேரரசாக விரிந்தது. ஸஞ்சயன் பெரும்படை திரட்டி, பொன் பெரிதும் விளையும் சொர்ணத்தீவைத் தன்வசப்படுத்திக் கொண்டான். அதற்கு ஸ்ரீவிஜயம் என்ற பெயரையும் சூட்டினான். அவன் காலத்திலும் அவனுக் குப் பின் வந்த ஆறு மன்னர்களின் காலத்திலும், ஸ்ரீவிஜயம் சொர்ணத் தீவையும் சாவகத்தையும் இன்னும் பல தீவு களையும் கொண்ட
பெரும் சாம்ராஜ்யமாக விரிந்தது. அதில்
சைவம் பெரிதும் தழைத்தது. ஸஞ்சயன் ஸ்தாபித்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மதத்தை அதிகமாக வற்புறுத்தாது இருந்திருக்குமானால், அந்தச் சாம்ராஜ்யம் இன்னும் நிலைத்திருக்கும். ஆனால்
ஸஞ்சய வம்சத்தின் ஆட்சி
சைவ ஆட்சியாக இருந்தது. ஆகவே மஹாயன பௌத்தம் கிளைத்த சாவகத்தில் அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அதை எதிர்த்த ஒரு சிறு அரச பரம்பரைதான் சைலேந்திர அரச பரம்பரை. இந்தப் பரம்பரையின் ஆதிகர்த்தாவான பானு வர்மனும் ஸஞ்சயன் உதித்த அதே சாவகத்தின் நடுவிடத் தில் தோன்றினான். சைலேந்திரர்கள் வம்சம் முதல்
மூன்று தலைமுறைகளிலேயே பெரிதும் வலுவுற்றது. ஆறாவது தலைமுறையில் ஸ்ரீவிஜய மன்னன் பிகாதனுக்கும், சைலேந் திர ராஜகுமாரி பிரமோதவர்த்தினிக்கும் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்துடன் ஸஞ்சயன் பரம்பரை ஆட்சியும் முடிந்தது. பிகாதனுக்குப் பிறகு
அவன் மைத் துனனும், சைலேந்திர வம்ச ராஜபுத்திரனுமான பால புத்திரன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஏறினான். சைலேந்திரர்கள் காலத்தில் ஸ்ரீவிஜயம் கிழக்குத் தீவுகளையெல்லாம் கொண்ட
பெரும் சாம்ராஜ்யமாகிச் சீரும் சிறப்பும் பெற்றது. பாலபுத்திரனுக்குப் பிறகு
மூன்று தலைமுறைகளில் அதன் புகழ் உலகெங்கும் பரவியது. பட்டு
நெய்யும் சீனாவுக்கும் முத்துக் குளிக்கும் தமிழ கத்துக்கும் இடையே
இருந்ததன் விளைவாக, அதன் வாணிபமும் வாணிபத்தைக் கட்டுப்படுத்துவதில் 'அதற்கு இருந்த சக்தியும் பெரிதும் வளர்ந்தது. இந்தக் காலத்தில் தான் சூளாமணிவர்மனும் அவனுக்குப் பிறகு
ஸ்ரீமார விஜயதுங்கவர்மனும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யப் பேரரசர்களாய் விளங்கினார்கள். பின்னவர் காலத்தில்தான் சோழர்களுக் கும் ஸ்ரீவிஜயத்துக்கும் நட்பு
வலுப்பட்டு, நாகப்பட்டிணத் தில் புத்த விஹாரமான சூளாமணி விஹாரத்தைக் கட்ட ராஜேந்திரசோழ தேவர்
ஸ்ரீ விஜயப் பேரரசருக்கு நில தானமும் கொடுத்தார். இந்த நட்பு நீண்டிருந்தால் தமிழ கத்திற்கும் ஸ்ரீவிஜயத்திற்கும் போர் நிகழ்ந்திராது. ஆனால்
வர்த்தகப் போட்டி போரில் வந்து
முடிந்தது...
இந்தச் சமயத்தில் குறுக்கே புகுந்து ஒரு கேள்வியைக் கேட்டான் இளைய பல்லவன், "வர்த்தகப் போட்டியா?" என்று.
ஆமாம் என்பதைச் சுட்டிக்காட்டும் பாவனையில் தலையை
அசைத்த குணவர்மன் மேலும் சொன்னான்: "ஆமாம்
இளைய பல்லவரே! ஸ்ரீமார விஜயதுங்கவர்ம னுக்குப் பிறகு
அரச பதவிக்கு வந்த ஸங்க்ரம விஜயதுங்க பாரதத்திலிருந்து வரும்
பொருள்களுக்குப் பலமான
சுங்க வரிகளை விதித்தார். இதனால் வெகுண்ட ராஜேந்திர சோழ தேவர் ஸ்ரீவிஜயத்தை நோக்கித் தமது கடற்படையை ஏவினார். எந்தக் கடலைத் தாண்டிப் பெருவாரியான தமிழர் படை வர முடியாதென்ற தைரியத் தால் ஸங்க்ரம விஜயதுங்கர் சுங்க
வரிகளை விதித்தாரோ, அந்தக் கடலைத் தாண்டித் தமிழர் பெரும் படை வந்தது. கடாரத்தையும், ஸ்ரீவிஜயத்தையும் சூறையாடியது. ஸங்க்ரம விஜயதுங்கவர்மனையும் சிறை பிடித்துச் சென்றது. பிறகு
ராஜேந்திர சோழதேவரின் கருணையால் ஸங்க்ரம விஜய துங்கவர்மன் விடுதலையடைந்தார். அவர் காலமுதல் ஸ்ரீவிஜயம் வலிமை
குன்றியது. என் தந்தையின் காலத்தில் அரியணைப் போட்டிச் சண்டையும் கிளம்பியது. என் சகோதரன் அரசைப் பறித்துக்கொள்ள விரும்பினான். அதன் விளைவாக, என்னைச் சொர்ணத் தீவிலிருந்து கடாரத்துக்கு அனுப்பி அங்கு
என்னை இளவரசனாக்கி னார் என் தந்தை.
எனக்கு அதில்
இஷ்டமில்லை."
ஏன்? என்று
குறுக்கிட்டான் இளையபல்லவன்.
சிறு வயதிலேயே நான் பௌத்த மதகுரு ஒருவரிடம் பாடம்
பயின்றேன். அவருடைய சீடர்களிடம் பழகினேன். இருபது வயதுவரை பௌத்த
விஹாரங்களிலும், பௌத்தத் துறவிகளுடனும் காலம்
கழித்தேன். ஆகவே, இக வாழ்க்கை யில் மனம் செல்லவில்லை. புத்தத் துறவியாவதிலேயே மனம் சென்றது. இதைக்
கவனித்த என் தந்தை எனக்குப்பலவந்தமாகத் திருமணம் செய்வித்தார். அதன் பலன்தான் இவள்" என்று காஞ்சனாதேவியைக் காட்டினான் குணவர்மன்.
இளையபல்லவன் காஞ்சனாதேவியை நோக்கிப் புன்முறுவல் செய்தான். 'கட்டாய விவாகத்தின் கனி, காதல் விவாகத்தில் கிடைக்கும் கனிக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல' என்று
எண்ணினான்.
குணவர்மன் மேலும் சொன்னான்: இவளுக்கு வயது வருமுன்பே இவள் தாய் இறந்துவிட்டாள். மீண்டும் என் மனம் துறவற
வாழ்வை நாடியது. இகவாழ்வை வெறுத்தது. ஆனால்
நாளுக்கு நாள் ஏற்பட்ட மாறுதல்கள் என் மனத்தை மாற்றவே செய்தன. ஜெயவர்மன் ஆட்சி
ஸ்ரீவிஜயத் துக்குப் பெரும் சாபக்கேடாக முடிந்தது. மக்கள் துன்புறுத் தப்பட்டார்கள். சாதாரணக் குற்றங்களுக்குப் பெரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஜெயவர்மனுக்குப் புத்தி சொல்ல
முற்பட்ட மந்திரிகளின் தலைகள் துண்டிக்கப் பட்டன.
ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மெள்ள
மெள்ளச் சீரழியத் தொடங்கியது. அக்கம் பக்கத்து அரசாங்கங்களின் விரோத
மும் வந்து
சம்பவித்தது. இப்படியே போனால் மக்கள் தவிப்பார்கள், நாடு அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே கடாரத்தைத் தன் வசம் ஒப்புவிக்கும்படி ஜெயவர்மன் அனுப்பிய ஓலையைத் திருப்பியனுப்பினேன். முடிந்தால் ஜெயவர்மன் கடாரத்தை அழித்திருப்பான். ஆனால்
மக்களின் பெருவாரியான ஆதரவு
எனக்கிருப்ப தைக் கண்டு அஞ்சியிருக்கிறான். அவன் அச்சம் குலையு முன்பு சோழர்
உதவியை நாடி சைலேந்திரர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தவும், என் நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்கவும், இந்நாடு வந்திருக்கிறேன். துறவு
மனப்பான்மை இருந்தும் அரசுக்காக அயல்நாடு வந்து
உதவி நாடும் விபரீத நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் கதை இளைய பல்லவரே! ஆனால்
கதை போகிற
போக்கைப் பார்த்தீரா?
கருணாகர பல்லவன் அந்த நீண்ட கதையைக் கேட்ட
தால், துயிலிலிருந்து எழுபவன் போல் எழுந்தான். ஏன் கதை போகிற
போக்குக்கு என்ன? என்று கேட்டான்.
"சோழநாடு செல்ல
கலிங்கம் வந்தேன். ஆனால்
இங்கு என் அதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து வந்திருக்கிறது. இங்கு
கலிங்கத்தக்கும் சோழ நாட்டுக்கும் போர் ஏற்படும் போலிருக்கிறது என்றான் குணவர்மன்.
ஆம்; அப்படித்தான் தெரிகிறது என்றான் இளைய பல்லவன்.
உங்களைப் பற்றியும் அநபாய
சோழரைப் பற்றியும் எங்கள் நாட்டில் கதைகள் உலாவுகின்றன இளைய பல்லவரே! உங்கள் இருவரில் ஒருவர் வந்து
என் படை களுக்குத் தலைமை
வகித்தாலே ஜெயவர்மனை வெற்றி கொள்ள
முடியுமென்று மக்கள் நினைக்கிறார்கள். என் மந்திரிகளும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால்
இங்குள்ள நிலையைப் பாரும். இங்கு
நீர் துரத்தப்பட்டு நானிருக்கும் மாளிகையில் பதுங்கியிருக்கிறீர். அநபாயர் ஏற்கெனவே சிறைப்பட்டிருக்கிறார். என் அதிர்ஷ்டத்தைப் பற்றி
என்ன நினைக்கிறீர்?" என்றான் குணவர்மன், துன்பப் புன்முறுவல் கோட்டி.
குணவர்மனின் அதிர்ஷ்டம் நன்றாக விளங்கியது இளைய பல்லவனுக்கு. இவன் அதிர்ஷ்டம்தான் என்னை
யும் அநபாயரையும் இந்த நிலைக்குக் கொண்டு வந்தி
ருக்கிறது' என்று
மனத்திற்குள் சபித்த இளைய பல்லவனை மட்டுமின்றிக் குணவர்மனையும், ஏன் காஞ்சனா தேவியை யும்கூட வியப்பில் அழுத்த வல்ல விசித்திர சம்பவ
மொன்று திடீரென அந்த அறையில் நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியின் காரணமும் திறந்திருந்த சாளரத்தின் மூலமாக வெகு வேகமாக உள்ளே
வந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக