கடல் புறா
அத்தியாயம் 3
எத்தனை படைக்கலங்கள்!
கணக்கற்ற போர் முனைகளிலும் ஆபத்தான எத்த னையோ இதர சூழ்நிலைகளிலும் அச்சத்துக்கு அறவே இடம் கொடாத கருணாகர பல்லவன் அன்று அந்த மாளிகைத் தளத்தின் மேலறையில் பஞ்சென நடந்து வந்த அஞ்சன விழியாளொருத்தி அறைக்கதவைத் தாளிட்டதும் பெரும் திகில் வசப்பட்டு, தான் ஒளிந்திருந்த திரைச் சீலையை இடது கையால் இறுகப் பிடித்துக்கொண்ட தல்லாமல், எல்லை மீறிய அச்சத்தின் விளைவாகக் கண்களையும் மூடிக்கொண்டு விட்டானாதலால், அடுத்து நடந்தது என்ன என்பதை அறியச் சிறிதும் சக்தியற்ற வனானான். ஊனக் கண்கள் மூடிவிடும்போது திறக்கும் சுபாவமுள்ள அவன் மனக்கண்கள் மட்டும் நன்றாக மலர்ந்து புதுப் புதுக் கற்பனைகளைக் கிளப்பிவிட்டதால், நான் இருப்பதை அறிந்தவுடன் இந்த அழகி கதறுவாள். மாளிகைக் காவலர் வருவார்கள். ஆகவே மேலும் சண்டைதான்' என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்ட கருணாகர பல்லவன், அவள் கூச்சலை எதிர்பார்த்து இருந்த இடத்திலேயே அசைவற்று நின்றான். ஆடையைக் களைய முற்பட்ட அந்த ஆரணங்கு விளைவித்த தர்ம சங்கடமான இந்த நிலையிலிருந்து தப்பிவிடச் சீக்கிரம் காவலர் வந்து சண்டை துவங்கிவிட்டால்கூட மிகவும் நல்லது என நினைத்து நின்ற இளைய பல்லவன், வினாடி கள் பல ஆகியும் அறையில் கூச்சல் ஏதும் இல்லாததை எண்ணிப் பார்த்து வியப்பின் வசப்பட்டுக் கண்களைத் திறக்கலாமா வேண்டாமா என்று தத்தளித்து நின்ற சமயத் தில், வா வெளியே! என்று அதிகாரம் ததும்பி நின்ற சொற்களிரண்டு அவன் இரண்டு கண்களையும் சரே லெனத் திறந்துவிட்டாலும், இதய உறுதியை மட்டும் மேலும் குலைக்கவே செய்தன. ஆண் மகனொருவன் அறையில் மறைந்திருக்கிறானென்பதை அறிந்ததால் அந்த ஏந்திழை கதறுவாள் என்று எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறாக, அவள் வெகு நிதானமாகவும் அச்சமில்லாமலும் அதிகாரத்துடன் தன்னை வெளியே வரும்படி அழைத்த தைக் கேட்டவுடன் வியப்பின் எல்லையை எய்திய இளையபல்லவன், குனிந்த தலையை நிமிர்த்தித் திரைச் சீலைக்கு மேல் எட்டிப் பார்த்துக் கண்களை அகல விரித்தான். அவன் எதிரே விரிந்தது ஒரு மோகன உலகம்.
அறை விளக்கின் பொன்னிற வெளிச்சத்துடன் அறைக்கு வெளியேயிருந்து சாளரத்தின் மூலம் பாய்ந்து வந்த வெண்மதியில் வெள்ளிக் கிரணங்களும் கலந்து கொண்டதால் பொன்னும் வெள்ளியும் இணைந்த ஒரு மாய உலகம் அந்த அறையில் சிருஷ்டிக்கப் பட்டிருந்தத யும், மயக்கம் தரும் அந்த இரு ஒளிகளின் இணைப்பிலே புதிதாக உதயமான மாய தேவதைபோல் இதயத்தைக் கலங்க வைக்கும் எழிலுடன் அந்தப் பெண் கையிலொரு வாளையும் ஏந்தி நின்றுகொண்டிருந்ததையும் கண்ட கருணாகர பல்லவன், தானிருக்கும் இடத்தையும் சூழ்நிலை யையும் அறவே மறந்தான். அவன் மனக்கண்களிலிருந்து பாலூர்ப் பெருந்துறை மறைந்தது; சுங்கச்சாவடி மறைந்தது, துரத்தி வந்த காவலர் மறைந்தனர்; நிலைத்து நின்றது, எதிரே வாளேந்திப் போர்க்கோலத்துடன் தோற்றமளித்த அந்த மோகன பிம்பம் ஒன்றுதான். விளக்கின் பொன் னொளியும் வெண்மதியின் வெண்ணொளியும் கலந்து அவள்மீது பாய்ந்த போதிலும் கலப்படத்தைவிட அசல் சிறந்தது என்பதை அறிவுறுத்த முற்பட்டதுபோல் எக்கலப்புமற்ற சொர்ணமென அவள் மேனி சற்றே மஞ்சளோடிப் பளிச்சிட்டதைக் கண்ட இளைய பல்லவன், இப்படியும் ஒரு நிறம் சிருஷ்டியிலிருக்கிறதா என்று வியந்தான். அவள் சேலை இடையில் நன்றாக இழுத்துச் சுற்றப்பட்டிருந்தாலும் மடிப்புகள் நன்றாக அமையாமல் ஆங்காங்கு அலங்கோலமாகத் தொங்கியதால் பழைய ஆடையைக் களைய முற்பட்டதுமே திரைக்குப் பின்னால் தானிருப்பதை அவள் அறிந்திருக்க வேண்டுமென்றும் சேலையைச் சரேலென்று எடுத்து அவசர அவசரமாகச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் ஊகித்துக் கொண்டானானாலும், அப்படி அலங்கோலமாகச் சேலையை அவள் சுற்றிக்கொண்டிருந்ததே அவளுக்கு எத்தனை அழகாயிருந்தது என்பதை எண்ணிப் பார்த்த அந்தப் பல்லவ வாலிபன் 'அடுக்கடுக்காகக் கொசுவிப் பட்டை களை ஒட்டிப் புனையப்படும் ஆடையில் இருப்பதைவிட, அலங்கோல ஆடையில் பெண்களின் அழகு எத்தனை வசீகரத்தைப் பெறுகிறது! அப்படியிருக்கப் பெண்கள் எதற்காக ஆடை புனைவதற்கு அத்தனை சிரமப்பட வேண்டும்?' என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.
ஆடை, சிறிது அலங்கோலப்பட்டிருந்த போதிலும் கழுத்துக்கருகில் அது நன்றாகச் சுற்றி வளைக்கப்பட்டி ருந்ததையும், கழுத்தைச் சுற்றி வந்த மேலாடை நன்றாக இழுத்தும் இடுப்பில் செருகப்பட்டதால் கழுத்தும் அதற்குக் கீழே இரண்டங்குலமே கண்களுக்குப் புலனானதையும் கண்ட கருணாகர பல்லவன், நெறிமிகுந்த ஒரு பெண்ணிடம் தான் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். அப்படி உணர்ந்தும் கூட, புஷ்பத்திலிருந்து மீள இஷ்டப்படாத வண்டுகளைப்போல் அவன் கண்கள் புஷ்பத்தினும் மிருது வாகத் தோன்றிய அவளை வட்டமிட்டன. மேலாடை நன்றாக இழுத்துச் சுற்றப்பட்டிருந்த காரணத்தாலேயே மறைவிலும் நிறைவு பெற்றுத் தெரிந்த அழகு, இளைய பல்லவனின் உடலைக் கல்லாகச் சமைத்துவிட்டதென்றா லும், அவன் இதயத்துக்கு மட்டும் புரவி வேகத்தைக் கொடுத்து ஓடச் செய்தது.
வினாடிகள் இரண்டொன்று ஓடியும், நேராக அந்த அழகியைப் பார்க்கச் சக்தியற்றதால் மார்பை வளைத்து ஓடிய சேலையையும், அந்தச் சேலையிலிருந்து இடைவெளி கொடுத்து பளிச்செனத் தெரிந்த இடைப் பிரதேசத்தையும் பார்த்த கருணாகர பல்லவன் வாளை ஏந்தி நின்ற அவள் கையையும் பார்த்து, இத்தனை மெலிந்து குழைந்து கிடக்கும் இந்த இடையை உடையவளுக்கு இத்தனை உறுதியான கை எங்கிருந்து வந்தது என்று எண்ணிப் பார்த்தான். அத்துடன் வாளைப் பிடித்து நீண்டு பூவின் இதழ்கள் போலிருந்த அவள் விரல்களையும் கண்ட அவன், 'மென்மைக்கும் கடினத்துக்கும் இயற்கை ஏதோ சம்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இல்லையேல் இந்தப் பூவிரல்கள் இத்தனை திடமாக வாளைப் பிடிக்க முடியுமா?' என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். கண்ணைச் சரேலென்று தூக்கிய இளைய பல்லவன் அந்தப் பெண்ணின் முகத்தை இரண்டொரு விநாடிகளே ஆராய்ந்தானென்றாலும், அந்த இரண்டு விநாடிகளிலும் எத்தனையோ துன்பத்தை அனுபவிக்கவே செய்தான். அதிகப்படியான இன்பமும் துன்பந்தான் என்பதை அன்று உணர்ந்தான் அந்தப் பல்லவ வாலிபன்.
நீருண்ட மேகத்தைவிடக் கறுத்து அடர்த்தியாகத் தலைமீதிருந்த அவள் குழல் பின்னி விடப்படாததாலும், வாரி எடுத்து முடியப்பட்டிருந்தாலும் ஒவ்வோரிடத்திலும் பிய்ந்து தொங்கி நுதலிலும் கன்னத்திலும் சில இழைகள் பதிந்து கிடந்ததுகூட அவள் முகத்துக்கு இணையற்ற அழகையே கொடுத்தது. விசாலமான அவள் லலாடப் பிரதேசம் மயிரிழைகளால் ஆங்காங்கு மறைக்கப்பட்டிருந் தாலும் இடையிடையே அவள் தங்கச் சருமம் பாளம் பாளமாகத் தோன்றி மேகத் திரையைக் கிழிக்க முயலும் சந்திரக் கிரணங்களைப் போலப் பளிச்சிட்டன. நுதலைக் கண்களிலிருந்து தடுத்து நின்ற வளைந்த கரிய புருவங் களுக்குக் கீழிருந்த இரு கண்களும் கரிய இமைகளுக் கிடையே கூர்வேல்களெனப் பிரகாசித்துக் கொண்டிருந்த தையும், விகசிக்க அப்பொழுதுதான் முற்பட்ட புஷ்ப மொட்டு போன்ற நாசி மிக எடுப்பாக அமைந்து அவள் முகத்துக்கு இணையற்ற கம்பீரத்தைக் கொடுத்ததையும், பக்கங்களில் வழவழத்து இயற்கை மஞ்சளும், கோபத்தால் ஏற்பட்ட சிவப்புமாகக் கலந்து தங்க அரளியும் செவ்வலரி யும் சேர்ந்தது போலப் பிரமையளித்த அவள் அழகிய கன்னங்கள், இதழ்கள் பதிவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்ட மலர்ப் படுக்கைகள் போலிருந்ததையும் கவனித்த இளைய பல்லவன், அவள் செவ்விய இதழ்களைக் கவனித்ததும் அவை உவமைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டான். கோபத்தால் அவள் வாயிதழ் களைச் சற்றே கூட்டியிருந்ததால், மலர இஷ்டப்படாத புஷ்பம்போல் அவள் இதழ்களின் சேர்க்கை காணப் பட்டது. அவற்றில் காணப்பட்ட நீரோட்டம், 'அமுதம் என்பது இருந்தால் இதுவாகத்தான் இருக்க வேண்டும்' என்று பொருள் கூறுவது போலிருந்தது. அந்த உதடுகளி லேயே நீண்ட நேரம் இளைய பல்லவனின் கண்கள் நிலைத்தன. கண்களென்ன, அவன் இதயமும் அந்தக் கனியிதழ்களை விட்டு அகல இஷ்டப்படாதது போலவும், அந்த இதழ்களிடம் ஓடிவிட ஆசைப்படுவது போலவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
இப்படி எண்ணங்களும், இதயமும் ஒருங்கே மயங்க மலைத்து நின்று, திரைச்சீலைக்கு மேலிருந்தே கண்களால் எதிரே இருந்த மோகன பிம்பத்தை எடை போட்டுக் கொண்டிருந்த இளைய பல்லவன், "வா வெளியே!" என்று இரண்டாம் முறை எழுந்த அதிகாரக் குரலின் காரணமாகக் கனவுலகத்திலிருந்து நனவுலகத்துக்கு வந்தவன், மெள்ளச் சமாளித்துக் கொண்டு, இடது கை பற்றிய சீலையை விடுத்து திரை மறைவிலிருந்து வெளியே வந்தான். வலது கையில் வாளை உருவிப் பிடித்த வண்ணம் வந்த அந்த வாலிபனை அந்த ஏந்திழையும் எவ்விதப் படபடப்புமின்றி ஆராய்ந்தாள். ஆடவன் ஒருவன் தனது அறையில் ஒளிந்து கொண்டிருக்கிறானென்பதை அறிந்தும் கூச்சல் போடா மலும், அந்த அறையிலிருந்த ஒரு வாளை உருவிப் பிடித்துக் கொண்டு தன்னை மிரட்டி வெளியில் அவள் அழைத்த * தையும் கண்ட கருணாகரபல்லவன், அச்சத்தை சொப்ப னத்திலும் காணாத வீராங்கனை ஒருத்தியிடம் தான் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அப்பொழுதுதான் அந்த அறையைச் சுற்றிக் கவனித்த இளைய பல்லவன், சுவர்களில் பல இடங்களில் பலவிதமான வாள்கள் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததன்றி, அந்தப் பெண் வாளைப் பிடித்துக் கொண்டிருந்த முறையையும் பார்த்து, அவளுக்கு ஓரளவு வாள் பயிற்சி இருக்க வேண்டுமென்றும் ஊகித்துக் கொண்டான்.
அறையைச் சுற்றி அவன் கண்கள் சுழன்றதையும் தன் கைவாளின்மீது அவை கடைசியாக நிலைத்ததையும் கவனித்த அந்த அழகி, அவன் உள்ளத்தே ஓடிய எண்ணங் களைப் புரிந்துகொண்டவள் போல், "ஆம், எனக்கு வாளைப் பிடிக்கத் தெரியும். அவசியமானால் சுழற்றவும் முடியும். ஆகவே உன் கையிலுள்ள வாளைக் கீழே எறிந்து விடு! எதிர்ப்பு பயனளிக்காது," என்றாள் திடமான குரலில்.
அவள் பேச்சும், பேச்சில் கண்ட துணிவும், கருணாகர பல்லவனுக்கு மென்மேலும் பிரமிப்பை அளித்தாலும் அவள் சொற்படி வாளைக் கீழே எறிய இஷ்டப்படாமல், "மன்னிக்க வேண்டும். இந்த வாள் என் ஆயுள் துணைவன். பல வருடங்களாக நாங்கள் இணைபிரியாதிருக்கிறோம். ஆகவே இப்பொழுது இதைப் புறக்கணிப்பதற்கில்லை. தவிர.." என்று பதில் சொல்ல முயன்று மென்று விழுங்கி இழுத்தான்.
அவள் வண்டுவிழிகள் வியப்பினால் மலர்ந்தன. "தவிர, உம், சொல் மேலே" என்று மலர் அதரங்கள் உத்தரவிட்டன.
அவள் அஞ்சன விழிகளை ஒருமுறை கருணாகர பல்லவனின் விழிகள் நன்றாக ஏறெடுத்துப் பார்த்தன. "வீரர்கள் தோல்வியுறும் போதுதான் வாளைக் கீழே எறிவார்கள்" என்று சுட்டிக் காட்டினான் துணிவுடன்."
அவள் இதழ்கள் இகழ்ச்சியால் சற்றே மடிந்தன. அப்படி அவை கடைசியில் மடிந்ததால் கன்னங்களில் விழுந்த குழிகளும் அவளுக்குப் புதுவிதமான அழகை அளித்ததைக் கருணாகர பல்லவன் கவனித்தான். அவன் தன்னைப் பல இடங்களிலும் கவனிப்பதைக் கண்டதால் மிகுந்த சங்கடமும் சீற்றமும் அடைந்த அந்த அழகி, "நீ ஆண்மகனானதால் என்னிடம் தோற்கமாட்டாய். சற்று விளையாடிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடிக் கிறாயா?" என்று இகழ்ச்சியும் கோபமும் தொனித்த குரலில் வினவினாள்.
கருணாகர பல்லவன் இளநகை புரிந்தான். "அப்படி நான் நிச்சயமாகச் சொல்லவில்லையே."
"எதை நிச்சயமாகச் சொல்லவில்லை?" மீண்டும் சிற்றத்துடன் எழுந்தது அவள் கேள்வி.
"உங்களிடம் தோற்கமாட்டேன் என்பதை"
பெண்ணென்பதால் என்னைப் பார்த்து நகைக் கிறாயா?"
இல்லை, இல்லை. நகைப்புக்கு இடமில்லை.
வேறெதற்கு இடமிருக்கிறது?
"பிரமிப்பிற்கு."
அந்த வாலிப வீரன் தன் அழகைப் பற்றிக் குறிப்பிடு கிறானென்பதைச் சந்தேகமற உணர்ந்துகொண்ட அந்தப் பெண், ஒரு விநாடி தன் காற் பெருவிரலால் நிலத்தைக் கீறி இடையைச் சிறிது நெளித்துச் சற்றே சங்கடப் பட்டா லும், அடுத்த விநாடி அதை உதறிவிட்டு, நீ சீக்கிரம் அந்த வாளைக் கீழே எறியாவிட்டால் உன் பிரமிப்பு இன்னும் அதிகமாகும்!" என்று கூறிவிட்டுக் கோபம் துளிர்த்த புன்முறுவலொன்றையும் உதடுகளில் படர விட்டாள்.
இப்பொழுதிருப்பதைவிட அதிக பிரமிப்பு எப்படி ஏற்பட முடியும்?" என்று விஷமத்துடன் வினவினான் கருணாகர பல்லவன்.
ஏற்பட வழியிருக்கிறது என்றாள் அவளும் இகழ்ச்சி யுடன்.
என்ன வழி?
பதிலுக்கு, இதோ பார்! என்று கூறிய அந்தப் பெண் என்ன செய்ய உத்தேசிக்கிறாள் என்பதை அவன் ஊகிக்கு முன்பாகவே அவள் கைவாள் திடீரெனச் சுழன்று இளைய பல்லவனது வாளை மின்னல் வேகத்தில் விர்ரென்று ஒருமுறை சுழற்றிடவே, திக்பிரமையடைந்த அந்த வீரன் எல்லையில்லாப் பிரமிப்புடன் அந்தப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினான். இன்னும் ஒரு விநாடி தான் அசந்தி ருந்தால் அவள் வாள் சுழன்ற வேகத்தில் தன் வாள் அந்த அறையின் மூலைக்குச் சென்றிருக்குமென்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பல்லவ வீரன், இத்தனை லாகவமாக வாளைச் சுழற்றக்கூடிய பெண்களும் இந்த நாட்டிலிருக்கிறார்களா என்று எண்ணிப் பார்த்து, மிதமிஞ்சிய வியப்புக்கு உள்ளாகி அந்த வியப்பின் குறிகள் முகமெங்கும் படரவும் நின்றான்.
பிரமிப்புக்கு உள்ளானது அவன் மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் கண்களும் பிரமிப்பைக் கொட்டின. அதை யும் கருணாகர பல்லவன் கவனிக்கத்தான் செய்தான். ஆனால், அவள் பிரமிப்படைய வேண்டிய காரணமென்ன வென்பதைப் புரிந்துகொள்ள முடியாததால் கேட்டான்: நீங்கள் என்ன அதிசயத்தைக் கண்டுவிட்டீர்கள்? என்று.
இதுவரை காணாத அதிசயத்தை இன்று கண்டேன்! என்றாள் அவள். இதைச் சொன்ன அவள் குரலில் கோபமில்லை, இகழ்ச்சியுமில்லை. வியப்பும் பிரமிப்புமே மிதமிஞ்சி ஒலித்தன.
"என்ன அப்பேர்ப்பட்ட அதிசயம்?" என்று மீண்டும் வினவினான் கருணாகர பல்லவன்.
"என் வாள் சுழன்று, எதிரியின் வாள் பறக்காதது இதுதான் முதல் தடவை என்றாள் அந்த அழகி.
"நான் எதிரியா?" என்று கேட்டான் கருணாகர பல்லவன்.
இல்லையா? என்று பதிலுக்குக் கேட்டாள் அந்தப் பெண்.
இல்லை."
அப்படியானால் கள்வனாயிருக்க வேண்டும்."
"கள்வனுமல்ல."
"அப்படியானால் தமிழனா?
இந்தக் கேள்வி மேலும் பிரமிப்பையே அளித்தது இளைய பல்லவனுக்கு. கள்வனாயிராவிட்டால் தமிழனா யிருக்க வேண்டுமா?" என்று வினவினான் ஆச்சரியத் துடன்.
அவள் நிதானமாகப் பதில் சொன்னாள். நீ நாணய மாக வாயில் வழியாக வரவில்லை. சாளரத்தின் மூலம் உள்ளே குதித்திருக்கிறாய். தவிர, திரைமறைவில் இருந்திருக் கிறாய். ஒளிபவன் கள்வனாயிருக்க வேண்டும். இல்லை யேல் தமிழனாயிருக்க வேண்டும். தமிழர்களைத்தான் சில நாள்களாகக் கலிங்க அதிகாரிகள் சிறைக்குள் தள்ளி வருகிறார்கள் என்று சுட்டிக் காட்டினாள் அந்தப் பெண். அத்துடன் அவள் மீண்டும் அவனை ஏற இறங்கப் பார்த்து, ஆமாம், நான் தப்புதான் செய்துவிட்டேன். நீ திருடனல்ல. தமிழன்தான். திருடனுக்கு இத்தகைய வாள் தேவை யில்லை. பொருளை எடுத்துக்கொண்டு ஓடுபவனுக்கு வாள் ஒரு வீண் சுமை. அப்படியே ஆயுதம் தேவையானா லும் தூங்கும்போது கொல்ல ஒரு குறுவாள் போதும். இத்தகைய பெரிய, அகலமான வாள் தேவையில்லை. தவிர உன் வாளில் ரத்தக் கறையும் இருக்கிறது. ஒருவேளை சற்றுமுன் கலிங்க வீரர்கள் துரத்தி வந்தது உன்னைத் தானோ? என்று சந்தேகமும் குரலில் ஒலிக்கக் கேட்டாள்.
அவள் ஊகத்தைக் கண்டு பெரிதும் வியந்தான் கருணாகர பல்லவன். அழகுடன் புத்தி இணைவது அபூர்வம்! அத்தகைய அபூர்வம் இதோ இருக்கிறது' என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்ட அந்த வாலிபன் அவள் கேட்டதற்குப் பதில் சொல்ல முற்பட்டு, ஆம். என்னைத்தான் துரத்தி வந்தார்கள் என்றான்.
துரத்தி வந்தார்கள், சேதமும் பட்டிருக்கிறார்கள்," என்றாள் அவள், அந்த வாலிபன் வாளில் தோய்ந்திருந்த குருதியைக் கண்டு.
"எனக்கு ஓரளவு போரிடத் தெரியும் என்று சங்கோஜத்துடன் கூறினான் இளையபல்லவன்.
"இதில் அடக்கம் வேண்டாம். நீ திறமையுடன் போரிடக் கூடியவன். எனக்குத் தெரியும்."
எப்படித் தெரியும்?
"நான் வாள் சுழற்றிய முறை எங்கள் நாட்டின் தனிப் பயிற்சி. அதை உபயோகித்தால் எதிரி கையிலிருக்கும் வாள் உடனே பறக்க வேண்டும். ஆனால் உன் வாள் திடமாக நின்றுவிட்டது. இந்த முயற்சியில் நான் தோல்வியடைவது இதுவே முதல் முறை. இன்னொரு முறை முயன்றால் கண்டிப்பாய் வெற்றியடைவேன்!
இளைய பல்லவன் நகைத்தான். என்னிடம் வாள் போரில் வெற்றியடைய முடியாது பெண்ணே. ஆனால், வேல் போரில் வெற்றியடையலாம்?" என்று கூறவும் செய்தான்!
"வேல் போரா? ஏதும் புரியாமல் வினவிய அவள் விழிகள் இளைய பல்லவன் முகத்தில் நிலைத்தன.
"ஆம் பெண்ணே! கருணாகர பல்லவனை வாள் போரில் வென்றவர்கள் இதுவரை இல்லை. ஆனால் அதோ உன் முகத்திலிருக்கும் அந்தக் கூர்வேல்கள்! அவற்றின் சக்தி வேறு. உன்னிடம்தான் எத்தனை படைக் கலங்கள்! ஆர்க்கும் நூபுரங்கள், பேரி, வெற்கண், வெம் புருவம், போர் வில், முரசுபோல் ஒலிக்கும் காலாபரணம், வேல் கண்கள், போர் வில்லென வளைந்த புருவங்கள் எத்தனைப் போர்க் கருவிகள், இவற்றை வெற்றி கொள்ள என்னால் முடியாது, முடியாது! என்றான்.
அவன் சரச வார்த்தைகளை அவள் கவனிக்கவில்லை. உவமைகளின் இன்சொற்களைக் கவனிக்கவில்லை. அவள் காதில் ஒலித்ததெல்லாம், 'கருணாகர பல்லவன்' என்ற இரண்டே சொற்கள்தான். "எந்தக் கருணாகர பல்லவர்? இளைய பல்லவரா!" என்று பிரமிப்புடன் கேட்டாள் அந்த அழகி.
அவள் பிரமிக்க வேண்டிய காரணம் இளைய பல்ல னுக்குப் புரியவில்லை. "ஆம்" என்று பதில் சொன்னான்.
குழப்பத்துடன். அவள் கேட்ட அடுத்த கேள்வி, அவன் பிரமிப்பை உச்ச நிலைக்குக் கொண்டு போயிற்று.
"எந்த இளைய பல்லவர்? அநபாயச் சோழர் நண்பரா?
ஆம்
இதைக் கேட்டதும் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளான அவள் முகத்தில் அடக்கத்தின் சாயை அதிக வேகமாகப் படர்ந்தது. கண்கள் நிலத்தை நோக்க, அடடா! உங்களை இத்தனை நேரம் ஏக வசனத்தில் மரியாதையின்றிப் பேசிவிட்டேனே!" என்றாள் அவள்.
அவள் திடீர் மாற்றத்துக்கு அப்பொழுதும் கார ணத்தை அறியாத கருணாகர பல்லவன், "அதனால் பாதக மில்லை. என்னை உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டான்.
"பார்த்ததில்லையே தவிர, உங்களை நாடித்தானே இங்கு வந்திருக்கிறோம்?" என்றாள் அவள்.
வந்திருக்கிறோமென்றால் இன்னொருவர் யார்? என்று வினவினான்.
"என் தந்தை?"
"யார் உன் தந்தை?
அவள் மெள்ள மெள்ளப் பெயரை உச்சரித்தாள். அந்த உச்சரிப்பு அவனை ஓர் உலுக்கு உலுக்கியது. மித மிஞ்சிய பிரமிப்பால், "யார்? யார்? இன்னொரு முறை சொல்!" என்று சற்று இரைந்து கூவிக்கொண்டு அந்தப் பெண்ணை இரண்டே அடிகளில் நெருங்கினான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக