26.10.25

சோழப் கால இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏற்படுத்திய சாதனைகள்.

சோழப் பெருமன்னர் கால இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏற்படுத்திய சாதனைகள்.

சோழப் பெருமன்னர் காலம் என்னும் போது கி.பி 9 14 வரையான காலப்பகுதி எனலாம். சோழப் பெருமன்னர் கடல் கடந்து சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாக இருந்தனர். அவர்கள் கடல் கடந்து பெற்ற பெருவளம் இக்கால தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதனை ஏற்படுத்தக் காரணமாயின தமிழகம். தனது முதற்பேரரசை ஸ்தாபித்தகாலம் சோழர்காலமே. சோழர்கள் கங்கையும் கடாரமும் கைவரப் பெற்றவர்கள். எனவே சோழர்களின் கடற் பலம் பற்றிக் கூறுமிடத்து நீலகண்ட சாஸ்திரி அவர்கள் "இந்துமா சமுத்திரம் சோழர்கள் நீந்தி விளையாடிய குளம்" என்பர். அந்தளவிற்கு கடல் கடந்த நாடுகளையும் கட்டி ஆண்ட சக்கரவர்த்திகளாக சோழர்கள் விளங்கியமையால் அவர்கள் பொருள் வளம் மிக்கவர்களாக ஆட்சி செய்தார்கள். எனவே அக்காலப்பகுதியில் செல்வமும் செழிப்பும் மிக்கதான சூழ்நிலை காணப்பட்டது. பேரரசின் ஸ்தாபிதம் செல்வச் செழிப்புயாவும் சேர்ந்து இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின.

வளமான ஒரு அரசியல் சூழ்நிலை மக்கள் உள்ளத்தில் புது மகிழ்வையும் பெருமித உணர்வையும் ஊட்ட அவ் உணர்வானது இலக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டது. சகல துறைகளிலும் ஏற்பட்ட ஒரு மாற்றம் இலக்கியப் புலவர்களின் உணர்ச்சியைத் தூண்டின. எனவே இக்காலப்பகுதியில் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என்பன எழுந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதனை படைத்ததுடன் சோழர்காலம் காவிய காலம் எனப்போற்றப்படுவதற்கான ஒரு சூழ்நிலையினை உருவாக்கியது. நாட்டு சூழ்நிலை நாட்டுவளம், அமைதி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பெற்ற பெருவளம் யாவும் மன நிறைவாக யாவும் ஒன்றிணைய காவியங்கள் தோற்றம் பெற்றன. எனவே இலக்கிய வரலாற்றில் காவியம் என்றொரு மரபு தோன்றுவதற்கு சோழர்காலமே வழிவகுத்தது. காவியம் தோன்றுமிடத்து காவிய இலக்கணம் பற்றிய நூல்கள் எழுவதற்கும் காவியத்திற்கு கருவான கதைகள் தோன்றுவதற்கும் அக்கால சூழ்நிலை வழிவகுத்தது. பல்லவர் காலத்தில் ஏற்பட்ட வடமொழிக்கலப்பு காவியத்திற்கு வேண்டிய வடமொழிக்கதைகளை தமிழ் நாட்டிற்கு தந்தது. காவியம் செய்ய நல்ல கவிவாணர்களை சமுதாயம் உருவாக்கியதுடன் சமூகத்தில் மனநிறைவு காணப்பட்டமையால் அவர்கள் பிறரைப் புகழ்ந்து பாடுவதில் ஆர்வம் காட்டினர், மன்னர் மீது மதிப்பும் மரியாதையும் பெருக மன்னர்களைப் பாட்டுடைத்தலைவர்களாகக் கொண்ட காப்பியங்கள் எழுந்தன. கவிச்சக்கரவர்த்தி கம்பன், பரணிக்கோர் ஜெயம் கொண்டான். வெண்பாவில் புகழேந்தி, உலாவிற்கு ஒட்டகக்கூத்தர் எனப்பல இலக்கிய விற்பன்னர்கள் தோற்றம் பெற்றனர்.

சமுதாயத்தின் சிறப்பைக் கூறும் இலக்கியங்கள் மட்டுமன்றி சமயத்தை ஊடு பொருளாகக் கொண்ட இலக்கியங்களும் தோற்றம் பெற்றன. மன்னர்கள் நாட்டு நலன் கருதி ஆட்சி செய்ய நாட்டில் பகை, பிணி. வறுமை என்பன அகல செல்வம் மலிந்து விளங்கியது. பல்லவர்காலப் பகுதியில் "வாழ்வாவது மாயம் அது மண்ணாவது திண்ணம்" என வாழ்வியலை மறுத்த இலக்கியங்கள், சோழர்காலப்பகுதியில் உலகியலைச் சிறப்பித்துப் போற்றுகின்ற மரபு ஒன்று இலக்கிய வரலாற்றில் தோற்றம் பெற்றது. உலகியலும் இறை வழிபாடும் ஒன்றிற்கொன்று முரண்படாத வகையில் வளர்ச்சி பெற்றது. எனவே உலகியல் வளர்ச்சி சமய விருத்திக்கு தடையான ஒன்றன்று.

சைவம், வைஷ்ணவம், சமணம், பௌத்தம் என்று சமயமும் தத்தம் போக்கில் வளர்ச்சி பெற்றன. சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, எனும் பெரும் காப்பியங்களும் நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், நாக குமார காவியம் உதயணகுமார காவியம் ஆகிய சிறுகாப்பியங்களும் வடமொழிக்கதையையும், வடமொழிக்களத்தையும், வடநாட்டுக் கதை மாந்தரையும் கொண்டதாக எழுச்சி பெற்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு மையம் ஏற்படுவதற்கு இக்காவியங்கள் பெரும் துணை புரிந்தன. திருத்தக்கதேவர் தமிழ் இலக்கிய மரபையே ஒரு புதுவழியில் செல்ல வைத்தார். அதாவது பாவின் வகைகளைக் கையாண்டு அவர் இயற்றிய சீவக சிந்தாமணியே இதற்கு வழிவகுத்தது. சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய காப்பியங்கள் சமண பௌத்த மதக் கருத்துக்களைப் பரப்புவனவாகவும், சீவகசிந்தாமணி சமணக்கருத்தை பரப்புவதாகவும், சைவசிந்தாந்த சாஸ்திரங்கள் சைவசமயக் கருத்துக்களைப் பரப்புவனவாகவும் காணப்பட்டன. எனவே இவ் இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் மக்கள் மத்தியில் சமய சகிப்புத் தன்மையை ஏற்படுத்தி ஒரு புதிய சாதனையைப் படைத்தது.

பல்லவர்காலப்பகுதியில் நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் செய்யப்பெற்ற தேவார திருவாசகங்களும் திவ்வியப்பிரபந்தங்களும் தெர்குக்கப்பட்டமை சோழக்காலப்பகுதியில் ஆகும். இது இலக்கிய வரலாற்றில் தொகுப்பு முயற்சி ஒன்றை ஏற்படுத்தி ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது. சமய இலக்கியம் பல்லவர் காலப்பகுதியில் தோற்றம் பெற்றாலும் அவை முழுவடிவம் பெற்றது சோழர்காலப்பரப்பில் ஆகும். எனலே வைதிக சமயங்களிற்கு புத்துயிர் அளிக்கின்ற ஒரு மரபு இலக்கிய வரலாற்றில் ஏற்பட்டது. புவிச்சக்கரவர்த்தி மட்டுமன்றி கவிச்சக்கரவர்த்திகளையும் தோற்றுவித்து விருத்தப்பா முதலிய பா வகைகளும் வளர்ச்சி பெற்று தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனை படைக்க அக்கால இலக்கியங்கள் வழிவகுத்தன. அதாவது பெருங்காப்பியம் சிறுகாப்பியங்கள் மட்டுமன்றி பரணி, உலா, தூது, கலம்பகம், கோவை, மாலை முதலிய பிரபந்தங்களும் தோன்றியும் வளர்ந்தும் இக்காலப்பகுதியில் சாதனை படைத்தன.

ஆயிரம் யானை அமரிடை வென்ற வீரனாகிய குலோத்துங்க சோழனது தளபதி கருணாகரத் தொண்டமானைப் பாட்டுடை தலைவனாகக் கொண்டு கலிங்க நாட்டை வெற்றி கொண்ட செய்தியை கலிங்கத்துப்பரணி என்னும் ''பரணிப்பிரபந்தம்" ஒன்பான் சுவைகளும் மிகுந்து வரப்பாடியமை புதிதாக தோற்றம் பெற்ற ஒன்று. இறைவன் மீது பாடப்பட்ட உலா மன்னர் மீது பாடும் மரபு அவர்களை போற்றும் பண்பாடு ஆகியவற்றிற்கு மூவருலா வித்திட்டது. அதேபோன்று கடவுள் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் மன்னர் மீது பாடும் மரபு இக்கால பகுதியிலேயே உருவாகியது.

உலகியலையும் அவர் தம் சிறப்பையும் புகழ்ந்து பாடுகின்ற இக்காலப்பகுதியில் மக்கள் தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபடுவதற்கு சோழப் பெருமன்னர் கால இலக்கியங்களே வழிகாட்டின. சைவசித்தாந்த சாஸ்திரங்கள் அடியார் வரலாறு கூறும் புராணங்கள் ஆகியன எழுச்சி பெற்று உலகியலோடு இறை உணர்வையும் வளர்த்துச் செல்வனவாக இலக்கியங்கள் எழுந்து இலக்கிய வரலாற்றில் சாதனை படைத்தன.

மன்னர்களது வாழ்க்கை வரலாற்றைப் பொருளாகக் கொண்டதான நாடக இலக்கியங்களும் கூட இக்காலப்பகுதியில் வளர்ச்சி பெற்றுள்ளன. மேலும் வடமொழி கலப்பு தமிழில் இடம் பெற்ற போது தமிழ் மொழி அமைப்பைப் பேண இலக்கணங்கள் இன்றியமையாதனவாக வேண்டப்பட்டன. இதனால் தண்டியலங்காரம், வீரசோழியம், நேமிநாதம், யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களும் இக்காலப்பகுதியில் எழுச்சி பெற்றன. அதாவது இலக்கியங்கள் காப்பியங்கள், இலக்கண நூல்கள், தத்துவ நூல்கள் எனப் பல்வேறு துறைகளிலும் இலக்கியங்கள் வளர்ச்சி பெறுவதற்கான ஒரு சாதனையை இலக்கிய வரலாற்றில் ஏற்படுத்தியது.

இலக்கியங்கள் சுவை மிக்கனவாகவும் இயற்கை அழகைப் புனைவனவாகவும் கவிஞன் உள்ளத்தில் ஏற்பட்ட மனக்கருத்துக்களை வெளிப்படுத்துவனவாகவும் அமைவதற்கு நீண்ட வாணனைகளும் உவமை. உருவகம் முதலிய பல்வேறு வகை அணிகளும் தேவைப்பட்டன. ஆகவே தமிழ் இலக்கியவரலாற்றில் மனநிறைவும் இரசிகத்தன்மையும் உயிர்த்துடிப்பும் மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் சோழர்கால இலக்கியங்கள் பெரும் சாதனை படைத்து வெற்றி கண்டுள்ளன எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக