அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ்
குறிப்புக்கள் :
1. முன்னுரை
2. பிறப்பு, வளர்ப்பு, கல்வி
3.வகித்த பதவிகள்
4. தமிழ்ச்சூழல் உருவாக்கிய தமிழறிஞர்
5. ஆற்றிய பணிகள்
6. எழுதிய நூல்கள்
7. முடிவுரை
அமிழ்தினும் இனிய இன்பத்தமிழே முஸ்லிம்களின் தாய்மொழி எனத் துணிந்து உரைத்தவர் அறிஞர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்கள். அவர் ஈழநாடு பெற்றெடுத்த பேரறிஞர்களுள் ஒருவர். சிவில் சேவையாளராக, உதவி அரச அதிபராக, கல்லூரி அதிபராக, செனட் சபை உறுப்பினராக, தமிழ்த் தொண்டராக, நூலாசிரியராக விளங்கிய பெருமைக்குரியவர்.
யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையில் 1911ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 4 ஆந் திகதி பிறந்த அஸீஸ் அவர்கள் 1973இல் இவ்வுலகைவிட்டுப் பிரியும் வரை தமிழுடன் இணைந்திருந்தார்: தமிழ்த் தொண்டராகவே விளங்கினார். இவர் யாழ்ப்பாணம் அப்துல் காதர் வீதியில் அமைந்துள்ள அல்லாப்பிச்சை பள்ளி எனப்படும் அரசினர் முஸ்லிம் பாடசாலையில் மூன்றாம் வகுப்புவரை கல்விகற்றார். யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சூழல் அவரைப் பெரிதும் ஈர்த்தது. இதன் காரணமாக வண்ணார்பண்ணையில் அமைந்தீருந்த இராமகிஷ்ணமிஷன் வைத்தீசுவர வித்தியாலயத்தில் சேர்ந்து தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இளமை முதலே இன்பத் தமிழ் மீது ஆர்வம் கொண்டிருந்த அஸீஸ் அவர்களுக்கு வைத்தீஸ்வர வித்தியாலயச் சூழல் தமிழ் உணர்வை மேலும் வளர்த்திடப் பெரிதும் உதவியது. அங்கு தமிழ் மன்றம் ஒன்றை உருவாக்கிட முன்னின்றுழைத்த பெருமையும் இவருக்குண்டு.
அஸீஸ் அவர்கள் இடைநிலைக் கல்வியைக் கற்பதற்காக 1923இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். அன்றைய நிலையில் இந்து மாணவர் மட்டும்தான் கற்கும் பாடசாலையாக இக்கல்லூரி விளங்கியது. அஸீஸ் அவர்கள்தான் இக்கல்லூரியில் சேர்ந்த முதலாவது முஸ்லீம் மாணவனாவார். 1929இல் பல்கலைக்கழகக் கல்லூரியில் அனுமதி கிடைக்கும்வரை அவர் இக்கல்லூரியில் பயின்றார். சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் (S.S.C) இந்து சமய பாடத்தில் விசேட சித்தி பெறுமளவுக்கு இக்கல்லூரியின் சூழ்நிலைக்கு அஸீஸ் ஆட்பட்டிருந்தார்.
தமது சின்னப் பெரியப்பா சு.மு.அ.அசனாலெப்பைப் புலவரின் அரவணைப்பில் வாழ்ந்த அஸீஸ் அவர்கள் தமிழ் உணர்வு மிக்கவராகத் தமிழ்த் தொண்டராக இறுதி வரை வாழ்ந்தார். சுவாமி விபுலானந்தரின் தொடர்பும் இதற்குக் காரணமாக இருந்தது.
சிவில் சேவைப் பரீட்சையில் சித்திபெற்ற அஸீஸ் கல்முனையிலும், கண்டியிலும் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் இவர் சுவாமி விபுலாநந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இயல்பாகவே கல்வித் துறையில் மிக்க ஆர்வம் கொண்டிருந்த அஸீஸ் அரசபதவியைத் துறந்து விட்டு முஸ்லிம்களின் உயர்கல்விக் கூடமாக விளங்கிய கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியை 1948இல் ஏற்றார். ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக இவர் பணியாற்றிய காலம் அதன் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. கல்கி ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் க.அன்பழகன், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற தமிழ் வல்லுநர்களை எல்லாம் கல்லூரிக்கு அழைத்து உரையாற்றச் செய்தார் அஸீஸ். பேராசிரியர் க.கைலாசபதி. பேராசிரியர் கா.சிவத்தம்பி, அமரர் கலாசூரி இ.சிவகுருநாதன் போன்றோர் அஸீஸ் அவர்களின் மாணவர்களாக இருந்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.
முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்மொழிதான் என்று உறுதிபட உரைத்தவர் அஸீஸ். ஸாஹிராவில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கற்கும் வசதியினை ஏற்படுத்தினார். முஸ்லிம்களின் கல்வி மொழியாகத் தமிழ் மொழியே இருக்க வேண்டுமென வலியுறுத்தினார். அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' என்று குரலெழுப்பிய அஸீஸ் அம்மொழியில் எழுந்த இஸ்லாமிய இலக்கிய நூல்களைத் தமது சமூகம் நுகரவேண்டுமென விரும்பினார். முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றினார். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்றார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளிலும் பல்வேறு மாநாடுகளிலும் கலந்து கொண்டு தமிழ்மொழியின் சிறப்புக்கள் குறித்து உரையாற்றினார். ஆங்கிலப் பட்டதாரியான அவர் தமிழிலே பேசினார்: தமிழிலே எழுதினார்: தமிழிலே சிந்தித்தார்.
இலங்கையில் இஸ்லாம், அறபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, மிஸ்றின் வசியம், கிழக்காபிரிக்கக் காட்சிகள், தமிழ் யாத்திரை, ஆபிரிக்க அனுபவங்கள் ஆதியாம் நூல்களை எழுதி வெளியிட்டார். இலங்கையில் இஸ்லாம் என்னும் நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசை அஸீஸுக்குப் பெற்றுக் கொடுத்தது.
இலங்கை முதவையில் (செனட்சபை) உறுப்பினராகப் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்ட வேளையில் அதனை முழு மூச்சாக எதிர்த்ததோடு ஐக்கிய தேசியக் கட்சியுடனான தொடர்பையும் துண்டித்துக் கொண்டார். தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றினையே இது எடுத்துக் காட்டுகிறது. முதவையில் (செனட்சபையில்) சிங்களம் மட்டும் மசோதாவுக்கு எதிராகத் தமது வாக்கை அளித்ததன் மூலமும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறியதன் மூலமும் அவரது உள்ளத்துணர்வை உலகுக்கு உணர்த்தினார்.
சிறந்த கல்விமானாக, அரசியல்வாதியாக, சமூக சேவையாளனாக, எழுத்தாளனாக, சொற்பொழிவாளனாக, முஸ்லிம் தமிழறிஞனாக, தமிழபிமானியாக உலகம் அவரைப் போற்றுகிறது. அன்னாரின் புகழ் என்றும் நிலைக்கும் என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக