தமிழ்த் திருமணம்
ஆணும் பெண்ணும் உளம் விழைந்து ஒருவருக்கொருவர் துணையாகி இல்லத்தலைவனும் இல்லத் தலைவியுமாய் வாழத்தொடங்கும் நிலைக்குத் திருமணம் என்று பெயர். இருவரும் உளம் ஒத்துக் கூடி வாழ்வதற்கு ஒரு வாயிலாகக் குமுகாயம் வகுத்ததாக முடிவு கொண்ட மணநிகழ்ச்சியே திருமணச்சடங்கு. திருமணம் என்பது தனித் தமிழ்ச்சொல். திருமணம் களவு மணம், கற்பு மணம் என இருவகைப்படும். ஒருவனும் ஒருத்தியும் தம்முள் தாம் எதிர்ப்பட்டு உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றுபட்டு, மறைவாகப் பழகி வருதல் களவு மணம் எனப்படும். களவும் கற்று மற" என்றார் ஒளவையார். பலர் அறிய மணஞ் செய்து வாழும் வாழ்க்கை கற்பு மணம் எனப்படும். களவு நடந்த பின்பே கற்பு நடைபெறுதல் வேண்டும் என்பது பண்டைப் புலவர் குறிக்கோள். கணவனும் துணைவியுமாய் வாழக்கூடிய இருவர் இடையூறு இல்லாமல் தம்முள் தாமே ஒருவரையொருவர் நன்கு அறிந்து திருமணத்திற்கு உடன்படுதல் வேண்டும். இவ்வாறு உடன்பட்டு மணந்து கொள்ளும் வாழ்க்கையே அன்பை அடிப்படையாகக் கொண்டு விளங்கும் என்பது அறிஞர் கருத்து. இதனாற்றான் இம்முறைக்கு அன்பின் ஐந்திணை என்றனர்.
நகரங்களிலும் பேரூர்களிலும் தலைவன் தலைவியர் நாள்தோறும் ஒருவரை ஒருவர் கண்டு கூட இயலாது. ஆயினும் ஒருவரை ஒருவர் சில வேளைகளிற் பார்க்கலாம், கல்வி முதலிய நற்பண்புகளை அறிந்தார் கூறக் கேட்கலாம். கேட்டு ஒருவரை ஒருவர் விழையலாம். இவ்விருப்பின் பயனாய் அவ்விருவரும் ஒருவரையொருவர் மணக்க உறுதி கொள்ளலாம். இங்ஙனம் இருவரும் உள்ளத்தால் கொள்ளும் உறவும் 'களவு மணம்' என்றே பெயர். இதனை உள்ளப்புணர்ச்சி என்றுங் கூறலாம். இதுவே இன்றும் நகரங்களிலும், ஊர்களிலும் பெருவழக்காக உள்ளது. இதுவும் அன்பை அடிப்படையாகக் கொண்டதே.
தமிழர் சடங்கு (சங்ககாலம்)
கி.மு. 300 தொடக்கம் கி.பி.300 ஆண்டுகள் வரைக்குமான காலத்தை சங்ககாலம் என்பர். சங்ககாலம் தமிழரின் பொற்காலம் என்றுங் கூறுவர். பண்டைத் தமிழ் நாட்டின் மண்ணையும் விண்ணையும், மக்களையும் மாக்களையும், பயிர்களையும், உயிர்களையும், மலையையும், கலையையும், அவற்றின் தோற்றத்தையும் ஏற்றத்தையும், வாழ்வையும் தாழ்வையும், நுட்பமாக நம் கண் முன்னே நிறுத்தி புதுமை சேர்ப்பவை சங்ககால இலக்கியங்கள். அத்துடன் களவிலும் கற்பிலும், ஊடலிலும் கூடலிலும், நகையிலும் பகையிலும், போரிலும் புகழிலும், வளத்திலும் வறுமையிலும், கொடையிலும் படையிலும், சினத்திலும் குணத்திலும் அறமே முற்றிலும் ஆளுகை செய்கிறது.
அந்த வகையில் சங்ககால பண்டைத் தமிழர் திருமணங்கள் மறையைய (வேதத்தை) பின்பற்றியவை அல்ல. திருமணச் சடங்குகளைச் செய்து வைப்பதற்கென்று குருமார்களோ. பார்ப்பனரோ இருந்தார்கள் என்று எண்ணவும் தமிழர்களிடம் இடமில்லை. நடைபெறும் சடங்குகள் பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுவனவே. இன்றும். பருவம் அடைந்த பெண்களுக்கு நடத்தப்படும் பூப்புனிதநீராட்டு கருவுற்ற மகளிர்க்கு மஞ்சள்நீராட்டு சடங்கு. வளைகாப்பு நடத்தப்படும் போன்றவை பெண்களாலேயே நடத்தப்பெறுகின்றன. இவற்றில் நேரடியாக ஆண்களின் திருமணச் சடங்குகளும் நடைபெறுகின்றன. தமிழர் திருமணச்சடங்கு தொடர்பிருப்பதில்லை; புரோகிதரும் இல்லை. அவற்றைப் போலவேதான் முறைகளைப்பற்றி அகநானூற்றில் இரண்டு பாடல்களில் கூறப்பட்டுள்ளது 86 ஆவது பாடலிலும், 136 ஆவது பாடலிலும் இவற்றைக் காணலாம்.
86 ஆம் பாடல் பின்வரும் செய்திகளைத் தெரிவிக்கின்றது. நல்ல நாளில் குளிர்ச்சியான திருமணப்பந்தலில் புது மணல் பரப்பப்பட்டது பந்தலிலே பூமாலைகள் புனைந்து தொங்க விடப்பட்டன. இரவு கழிந்த காலை நேரத்தில் விளக்குகள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அகவை நிரம்பிய பெண்கள், முது பெண்டிர் போன்றோர் மணமகளை நீராட்டுவதற்குரிய நீரைக் குடங்களில் ஏந்தி வந்தனர். அந்நீர்க்குடங்களில் மலரும் நெல்லும் தூவிப் பிள்ளைப் பேறு பெற்ற வாழ்வரசியர் நால்வர் மணமக்களை கற்பு நெறியினின்றும் வழுவாமல் பல நலன்களைச் செய்து "கணவன் விரும்பத்தக்க துணைவி ஆகுக" என்று வாழ்த்தி மண நீராட்டினர்: அவளை, மணமகன் கையிலே மகிழ்ச்சியுடன் கொடுத்தனர். திருமணம் முடிந்த பின் அனைவருக்கும் விருந்து படைக்கப்பெற்றது. செய்யுள் 136 ஆவது பாடல் பின்வரும் விவரங்களைத் தருகின்றது. புலால் கலந்து ஆக்கப்பெற்ற வெண்சோற்று விருந்து படைக்கப்பெற்றது. திங்கள் உரோகினியுடன் கூடிய நல்லோரையில் மணமனை அழகுபடுத்தப்பட்டு இறைவழிபாடு நடைபெற்றது; மணமுழவும் முரசும் முழங்கின. மணமகளுக்கு "மணநீராட்டுவிழா" நடைபெற்றது. பெண்ணுக்கு மலர்மாலையும் நல்லாடையும் நகைகளும் அணிவித்து அழகு செய்தனர். அங்ஙனம் அணிவித்ததால் உண்டான வியர்வையை ஒற்றினர். இவ்விரு திருமணச் சடங்குகளிலும் மணநீராட்டுதலே சிறப்புச் சடங்காக இருத்தால் காணத்தக்கது. மணமக்கள் இருவரையும் மணப்பந்தலில் இருத்தி வைத்து பலர் அறியச் செய்தலே திருமண வினையாக அக்காலத்தில் இருந்தது என்பதை இவற்றால் அறியலாம்.
(1) எரியோம்பல் இல்லை
(2) தீ வலம் வருதல் இல்லை,
(3) காணிக்கை பெறப் புரோகிதர் இல்லை.
இவை முற்றிலும் தமிழர்க்கே உரிய திருமணங்கள் என காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியரான திரு.பி.டி.சீநிவாச ஐயங்கார் அவர்கள் தாம் வரைந்த ''தமிழர் வரலாறு" என்னும் ஆங்கில ஆராய்ச்சி நூலில் கூறியிருத்தல் ஊன்றிக் கவனிக்கத்தக்கது.
இடைக்காலத் திருமணமுறை
இன்று சிவனியமும் தமிழும் இரண்டு கண்கள் என சொல்லிக் கொள்கின்றவர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணங்களிற் பெரும்பாலும் வைணவம் சார்ந்த மறைநெறித் திருமணங்களே நடைபெறுகின்றன. அறியாத ஒருவரைக் கொண்டு, தெரியாத சடங்குகளைப் புரியாத மொழியிற் செய்து, வாழ்க்கை என்றால் இன்னதென அறிவிக்காமலே மணமக்களை வாழ்க்கையில் ஈடுபடுத்தி வருகின்றோம். இந்நிகழ்வு எதைக் காட்டுகின்றதென்றால் எமை ஈன்ற அன்னையும் தந்தையும் இழிவுடையார். எமை வாழவைக்கும் தாய்மொழியும் நீசமொழியே. ஆரிய வந்தேறிகளான மறைநெறியர்களே பூதேவர். அவர் தம் வடமொழியோ சமற்கிருதமோ இறை மொழியாகத் திகழ்கிறது என்று ஒப்புக் கொண்ட தமிழரின் ஞானமற்ற நிலைக்குச் சான்று பதிக்கும் முத்திரையாகும். இவை தமிழகத்தில் ஈழத்தில் இடைக்காலத்தில் புகுந்தவை.
தாய்மொழியையும், தம்மினத்தையும் போற்றிக்காத்திடாத மக்களாகிய நாம் வேற்று இனத்தார் மொழியை ஏற்று, அவர் மொழியை தேவமொழியாகவும், அவர் பிறப்பை இறை பிறப்பாகவும், மதித்து வாழத் தலைப்பட்ட தமிழர்கள் தம் வாழ்வில் தலை நிமிரத்தான் முடியுமா? என்பதை எண்ணாததன் விளைவாகும். தற்போது இது அழிந்து வருகின்றது.
புரோகிதர்களால் செய்யப் பெறும் சடங்குகள் நம்மை இழிவு படுத்துவனவாகவே அமைகின்றன. இவற்றின் விரிப்பு தனியாக இந்நூலிற் தரப்பட்டுள்ளது.
தற்காலத் தமிழ்த் திருமணம்
தமிழ்த் திருமணமுறை புதிய முறையில் நடைபெறுகின்றது என எண்ணிவிடக்கூக்ஷது. அப்படி எண்ணுகின்றவர்கள் முதலில் தம் எண்ணங்களை மாற்ற வேண்டும். இத் திருமணமுறை தான் பழைய முறை இந்துக்கள் அல்லாத இசுலாமிய, கிறித்தவ, புத்த சமண குடும்பங்களில் துணைவி முரண் மிகக் குறைவு. பாழ்பட்ட நமது கணவன் குமுகாயத்திற்றான்
கணவன் - துணைவி முரண்கள் மிகமிக அதிகமாக இருக்கின்றன.
இதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் திருமணங்களை நடத்தும் குருமார்கள் வாழ்க்கை என்றால் என்ன? எப்படி வாழ்வது? என்பதை கூறி வாழ்க்கையில் ஈடுபடுத்துகின்றார்கள். எனவே, இனியேனும் நாம் இவ்வாறான தவறுகளைச் செய்யாமல் திருமண நாள்களிலே அறிஞர்கள் சிலரைக் கொண்டு உணர்த்தி அறிவுரையும் மணமக்களுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறுதல் நன்றாகும்.
இத்திருமண புதியது முறை போலத் தோன்றினாலும், மறைநெறியிலே மயங்கிக் கிடந்த தமிழர்களிடம் தெளிவும் துணிச்சலும் ஏற்படுத்தப் பட்டமைதான் புதியதேயன்றி, பழந்தமிழர் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் இது மாறுபட்டதல்ல, மாறிவரும் காலத் தேவைக்கு இது தமிழ் அறிஞர்கள், பெரும் புலவர்கள் ஒவ்வாததுமல்ல என்பதைத் கவிஞர்கள் முதலான பலரும் ஏற்றுக் கொண்டு பாராட்டியும் உள்ளனர். தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் தமிழர் மதம் என்னும் நூலிற் கூறுவது இது "மணச்சடங்கு, பிணச்சடங்கு முதலியனவற்றைத், தமிழர்கள் தம்முடைய தமிழ் மறைகளைக் கொண்டு நடத்துவதில் விடாப்பிடியாக நிற்றல் வேண்டும். அவற்றை தம்முன் தமிழறிந்த ஒரு பெரியாரைக் கொண்டே நடத்துதலும் வேண்டும். ஒருகாலும் பார்ப்பானைக் கொண்டு சாவடைந்த வடமொழியில் அவற்றை நடத்துதல் ஆகா. மணஞ்செய்து கொண்டு எல்லா வளனும் நிரம்ப நீடுவாழ விழைவோர், எல்லா வளனும் சேர்த்து எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக நம் தமிழ் மக்களை நாகரிக வாழ்க்கையில், இன்னும் அவர்களை வாழச்செய்யும் வகையில் உயிரோடு உலவிவரும் நம் அருமைச் செந்தமிழ் மொழியில் நடத்திக்கொள்ளல் வேண்டுமேயன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செயலிழந்து பயன்படாததாய் ஒழிந்து போன சமத்கிருதம், இலத்தீன் முதலான மொழியில் அதனை நடத்திக் கொள்ளல் ஆகாதென்றார். அதனை
இலத்தீன் மொழியிற் சடங்கினை ஆற்றிய கிறித்தவ மக்கள் இன்று உலகெங்கும் வாழும் மக்கள் மத்தியில் அவர் தம் தாய் மொழியிலேயே சாவுச் சடங்கு, திருமணச் சடங்குகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில்
தமிழகத்தில் எழுபத்தைத்து ஆண்டு காலமாகவும் இன்றும் தமிழ்த் திருமணம் தனியொருவர் என்றில்லாமல் பற்பலராலும் பேரியக்கமாகவே இயங்கி ஏற்கப்பட்டு வந்துள்ளது. இயங்கி வருகின்றது. மறை நெறியிற் சாராத சிவநெறியில் ஆழ்ந்த பற்றுடையார் தமிழ்த்தென்றல் வி.கலியாணசுந்தரனார், தமிழ்க்கரசு எனப்படும் கா.சுப்பிரமணியம்பிள்னை. மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார், நாவலர் சோமசுந்தரப் பாரதியார், கலைச்சொற்காவலர் கி. இராமலிங்கனார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்திருப்பணியை நிறைவேற்றிய தமிழ்வேள் பி.டி இராசன் முதலிய சான்றோராலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களாலும் திருமணம் குறைவற்ற சடங்கு நெறியில் நடத்தப் பெற்றன. முதுதமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் ஐயா தம் வாழ் நாளில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட திருமணங்களை திரு.வி.க.சோமசுந்தரப்பாரதியார் வகுத்த முறையில் நடத்தி நாடெங்கும் பரப்பினார். திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்த செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் சுமார் மூவாயிரம் தமிழ் நெறித் திருமணங்களை திருக்குறள் ஒதி நடத்தி வைத்துள்ளார். தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் முதலமைச்சர் சீராலின் தலைமையில் பல்லாயிரம் திருமணங்களைத் தமிழ்நெறியில் நிகழ்த்தினார்கள். தமிழ்த் திருமணம், சீர்திருத்தத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம், வாழ்க்கை உடன்பாடு என்னும் புதுப் புது பெயர்களால் தமிழ்த் திருமணங்கள் நடத்தப்பெற்றன நடைபெறுகின்றன.
குறாளாயமும் குறளியமும் கண்ட வேலா அரச மாணிக்கனார், முனைவர் மு.வரதராசனார் தமிழர் நடத்தும் சடங்குகள் அனைத்தும் திருக்குறள் ஓதியே செய்வித்தல் வேண்டும் என்ற கொள்கையை மேற்கொண்டு குறளாயத் திருமண முறையை பரப்பினர். இம்முறையில் ஆயிரக்கணக்கில் திருக்குறள் ஓதித் தமிழகமேயன்றிப் புதுவையிலும் காரைக்காலிலும், பெங்களூரிலும் இவ்வகைத் திருமணங்கள் நடத்தப்பெற்றன; இன்றும் நடத்தப்பெறுகின்றன. முனைவர் மு.வ அவர்கள் தமிழர் திருமணங்கள் திருக்குறள் ஓதியே நடைபெற வேண்டுமென 'தம்பிக்கு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கையேட்டை வழிகாட்டலாகக் கொண்டு பல திருமணங்கள் பிரான்சு நகரில் நடைபெற்றுள்ளன. இவற்றில் சில சங்க நிறுவுனரின் அறிமுகவுரை(காணொளி காட்சி மூலம்) தமிழ்நெறித் திருமணம் ஒழுங்கு முறையில் நடைபெற்றதை காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் - தமிழ்த்திருமணம்
இலங்கையில் குறிப்பாக தமிழ்த் திருமணங்கள் பல அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்நெறியில் தமிழ்மறை திருமுறைகளைக் கொண்டு பல்கலைக்கழக முன்னாள் நடத்தப் பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துணைவேந்தர் சு.வித்தியானந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மா.வை.சேனாதிராசா, மா.க. ஈழவேந்தன. செல்வராசா கயேந்திரன், இலங்கை மண் நாடகம் புகழ் தமிழ்வேள் பொன்.கணேசமூர்த்தி, வட்டூர் சிந்துபுரம் முன்னாள் பள்ளி முதல்வர் வ.யோகானந்தசிவம். இலக்கிய ஆர்வலர் சிந்துபுரம் மு.தேவசிகாமணி, காரைநகர் தோப்புக்காடு இராசசேகரம்பிள்ளை ஆகியோரின் திருமணங்கள் தமிழ் மரபுக்கேற்ப நடைபெற்றன. உலகத் தமிழ் மறைக்கழகத் தலைவர் முனைவர் கா.பொ.இரத்தினம் ஐயா பல திருமணங்களை திருக்குறள் ஓதியே நடாத்தியுள்ளார். குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்க நிறுவனர் வே.இறைபிள்ளை அவர்களின் திருமணம் இவரின் தலைமையில் 1966ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திருமணத்தின் பொழுது தொடக்க நிகழ்வாக மணமகன் இல்லத்தில் தமிழ்த்தாயின் மணிக்கொடியினை அன்றைய தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் திரு.அ.அமிர்தலிங்கம் ஏற்றி வைத்தார். தமிழ்த்தாயின் மணிக்கொடியினை ஏற்றும் பொழுது புலவர் மணி, பண்டிதர் க.மயில்வாகனார் அவர்களால் இயற்றப்பெற்ற செந்தமிழ்க் கொடி வாழிய வாழியவே" என்ற பாடலும் இசைக்கப்பெற்றது.
இத் திருமணநாள் அன்று "தமிழர் திருமணங்களும் வழிபாடுகளும் தமிழில் என்ற நடைபெறும் நாளே தமிழ் தழைத்தோங்கும் பொன்நாள்" துண்டறிக்கையும் வெளியிடப்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் தமிழ்சங்கம் ஆற்றிவரும் சீரிய பணியினாற் 70க்கு மேற்பட்ட திருமணங்கள் திருக்குறள் ஓதியே நடந்துள்ளன.
ஊர்களின் வாழ்மனைகளிலும் மண்டபங்களிலும் நடைபெற்ற திருமணங்கள்
1993ஆம் ஆண்டு நிறுவப்பெற்ற தமிழ்ச்சங்கத்தின் பரப்புரையாலும் சீரிய பணியினாலும் இதுவரை 70 இற்கு மேற்பட்ட திருமணங்கள் தமிழ் மறை, திருமுறை ஓதி ஊர்களின் வாழ்மனைகளிலும் மண்டபங்களிலும் நடாத்தப்பெற்றுள்ளன. புலம்பெயர் நாடுகளான பிரான்சு நகரங்களில் உள்ள தமிழ் மக்கள் தமிழ்த்திருமணத்தின் போது தமிழ்ச்சங்க நிறுவனர் வே.இறைபிள்ளை அவர்களின் காணொளி அறிமுகஉரையோடு "தமிழ்த்திருமணம்" நூலில் உள்ள வழிகாட்டல் குறிப்போடு நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊர்களின் வாழ்மனைகளில் நடைபெற்ற திருமணங்கள்
வட்டுக்கோட்டை சிந்துபுரம் முருகன் கோவில் முதன்மைப் பூசகரின் கனகபுரம் இல்லத்தில் அவர்களின் மகன் கேசவன் அவர்களுக்கும். புளியம்பொக்கணை அபிவிருத்தி அலுவலர் பிரபாகரன் துசியந்தினி இணையர், வட்டுக்கோட்டை சிந்துபுரத்தை வாழ்விடமாக கொண்ட தமிழ்ச்சங்க நிறுவனரின் மகன்மார் சோழன் வேளினி இணையர், கிளிநொச்சி யெயந்திநகர் நா.வை.குமரிவேந்தன் அவர்களின் மகள் சுவேந்தினி. வட்டக்கச்சியில் மேனாள் அஞ்சல் முதல்வர் மா.பேரம்பலம் அவர்களின் மகன் ததுசன்,கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த மின்னியல் வரைஞர் த.யெகதீசுவரன் புச்பவதி இணையர், புங்குடுதீவு இராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவபரன் துசாந்தி இணையர், கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஆசிரியை கிருபாளினி, மூதூர் கட்டைப்பறிச்சானில் வசிக்கும் தமிழ்ச்சங்க உறுப்பினர் கனகசிங்கம் அவர்களின் மகன் க.யெனகன் சரணியா இணையர், நவாலி பனுவில் ஒழுங்கையைச் சேர்ந்த பொது உடல் நல பரிசோதகர் யெயப்பிரதி, உருத்திரபுரம் உருத்திரபுரீசுவரர் சிவன் கோவில் நிறுவனரின் மகன் சேரன் சத்தியபாமா இணையர் ஆகியோருக்கு தமிழ்நெறியில் திருமணங்கள் நடைபெற்றன.
மண்டபங்களிலும் நடைபெற்ற திருமணங்கள்
வவுனியா வன்னிபிளாசா அரங்கில் வவுனியா முன்னாள் நகர சபைத் தலைவர் சிவசுப்பிரமணியத்தின் பெறாமகன் கபிலநாத். யாழ்ப்பாணம் சட்டநாதர் இளங்கலைஞர் மண்டபத்தில் காரைநகர் பாலாவோடை திரு. சுப்பிரமணியத்தின் மகன் நந்தனகுமார், சாவகச்சேரி ஜங்கரன் மண்டபத்தில் மருதங்கேணியைச் சேர்ந்த ஆசிரியர் இளங்கோ நியுசியா இணையர் வட்டக்கச்சி சிவனொளிபாதம் அவர்களின் மகள் வேணுதன் பவித்திரா இணையர், யெர்மனியைச் சேர்ந்த பாசுகரமூர்த்தியின் மகள் லக்சன் சஞ்சிகா இணையர், கோண்டாவில் இராயேசுவரி மண்டபத்தில் பிராப்தன் குணரூபினி இணையர், யாழ்ப்பாணம் செல்வா மாளிகை மண்டபத்தில் முல்லைத்தீவு கரவெட்டியைச் சேர்ந்த மருத்துவர்கள் யானுயன் சஞ்சிகா இணையர். பண்டைத்தரிப்பு பிரான்பத்தை மண்டபத்தில் சிந்துபுரத்தை சேர்ந்த சதீசு வாணி இணையர், திருகோணமலை பிருந்தாவனம் மண்டபத்தில் திருகோணமலை மாணிக்கவாசகர் வீதியைச் சேர்ந்த முகுந்தன் தேவநாயகி இணையர், ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தில் வல்வெட்டித்துரையைச் சேர்ந்த நகுலேசுவரன் சியானி இணையர், நண்பர்கள் விருந்தகத்தில் நிறுவநரின் மகள் அபிராமி உதயபாபு இணையர், சென்னை(இந்தியா) விசயபூங்கா மதுரா மண்டபத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த தர்சன் புவனமதி இணையர், வடமாநில பெருநிலப்பரப்பு பாரஊர்தி உரிமையாளர் கூட்டுறவு சங்க மேலாளர் சுப்பிரமணியத்தின் மகள் சவாயினி, கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் ஆனந்தநகரைச் சேர்ந்த கிருபாகரனின் மகள் சேந்தினி ஆகியோர்களுக்கு தமிழ்நெறியில் திருமணங்கள் நடாத்தி வைக்கப்பெற்றன.
மாயெயராசா இத்திருமணங்கள் போராசிரியர் அ.சண்முகதாக. பொன். கணேசமூர்த்தி, சங்க மேனாள் தலைவர்களான வேதபேந்திரன் உருத்திரபுரம் சிவன்கோயில் முதன்மைக்கு தமிழ் உருத்திரபுரீசுவரக் குருக்கள், பளை பள்ளி முதல்வர் சீ.பாலசனை சங்க உறுப்பினர் திரு.க.கனகசிங்கம் மேனாள் செயலர் மா.பேரம்பலம்சங் தலைவர் க.சுப்பிரமணியம் ஆகியோரின் தலைமையில் பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றன. திருக்குறள் ஓதியே தமிழ்ச் சங்க நிறுவ தலைமையில் நடைபெற்றன.
இத்திருமணங்கள் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நாவலர் சோமசுந்தரப் பாரதியார், செந்தமிழ் அந்தணர் இரா இளங்குமரனார் ஆகியோர் நடத்தி வைத்த திருமணங்களின் அடிப்படையில் திருக்குறட்பாக்கள். வாழ்த்துப்பாடல்கள் என்பவற்றையும் சேர்த்து இசையுடன் பாடி தமிழச் சங்கம் திருமணத்தை நடாத்திவருகின்றது. திருக்குறள் ஓதியே நடைபெறும் தமிழ்த் திருமணங்களுக்கு மதிப்பளித்து ஊக்கம் அளிப்பது இலங்கையிலே கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கமே. இச்சங்கம் நடத்தும் திருமணம் தமிழகத்தைப் போன்று பெருமளவில் தமிழ்த்திருமணங்கள் ஈண்டு நடைபெறாததற்குக் காரணங்கள் தமிழ்ச்சங்கங்கள். முத்தமிழ் மன்றங்கள், தமிழ்இலக்கிய மன்றங்கள் என்பவற்றில் உள்ள பலரும் தமிழ் மொழிப்பாடத்தில் பட்டம் பெற்றவர்களிற் பலரும் தங்கள் இல்ல திருமணங்களைக் கூட தமிழிற் செய்கிறார்களில்லை. இவர்கள் தமிழுக்காக வாழாமல் தமிழால் வாழ்வோர் எனலாம்.
கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கம் எங்கும் எதிலும் தமிழ் வளரவேண்டும் என்ற கொள்கையை மக்களிடத்திற் பரப்பி வருகின்றது. அதற்கான நடவடிக்கைகளையும் முன் எடுத்து வருகின்றது.
திருக்குறட்பாக்களும், மணமக்கள் வாழ்த்துப் பாடல்களும் இசை ஆசிரியர்களால் திருமணங்களில் பாடப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினர் திருக்குறள் ஓதி திருமணம் செய்தவர்களைத் திருக்குறள் மாநாட்டில் பொன்னாடை போர்த்தி, தங்கப்பதக்கம் அணிவித்து, பாராட்டுச் திருவள்ளுவர் திருவுருப்படம் பொறிக்கப்பெற்ற சான்றிதழ்களையும் வழங்கி மணமக்களின் பெற்றோர்களுக்கும் நன்மதிப்புச் செய்துவருகின்றனர்.
நிறைவுரை
திருக்குறள் மாந்தனை வளர்ப்பதற்காக மாந்தனையே மையமாக கொண்டு செய்யப் பெற்ற நூல். மாந்தராகப் பிறந்தோர் பேசுகின்ற வேறு எம்மொழியிலும் திருக்குறளைப் போன்றதோர் வாழ்க்கை நூல் இதுவரையில் தோன்றவில்லை. திருக்குறள் அறநூல், நீதி நூல் மட்டுமல்ல வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் நூல். இவ்வுலகப் பொதுமறை தமிழரின் மாமறை கொண்டு திருவள்ளுவர் நெறியில் இந்த வையகம் நடைபோடுமானால் இன்று இந்த உலகத்தை வருத்தும் இடர் அனைத்தும் அகலும்; அன்பு வளரும்; அறம் வளரும்; பண்பாடு வளரும்; வள்ளுவனை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழரின் தாய்மொழி தமிழ். தன்னேரில்லாத் தமிழ். உயர் தனிச் செம்மொழி உலக மாந்தர் பேசிய முதன் மொழி; சங்கத்துத் தொன்மை மொழி; சங்குபோல் தூய்மை மொழி. எனவே அயல் மொழி மயக்கம் தெளிந்து நம்மொழி உயர்ந்தது; நாம் யார்க்கும் அடிமை இல்லை; அடிமையாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை என்று துணிந்து எழுவோம். திருக்குறள் நெறித்திருமணஞ் செய்வோம் என உறுதி கொள்வோம். தமிழ் நெறியில் குறளாயத் திருமணம் செய்வோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக