26.10.25

சோழர்கால சிற்றிலக்கிய வளர்ச்சி

சோழர்கால சிற்றிலக்கிய வளர்ச்சி

சோழர்காலப்பகுதியில் வளர்ச்சி பெற்றுக் காணப்பட்ட மற்றொரு வகை இலக்கியம் சிற்றிலக்கியம் ஆகும். தமிழில் காணப்படும் பரணி, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், தூது, கோவை,மாலை போன்ற 96 வகை பிரபந்தங்களும் சிற்றிலக்கியங்கள் என்ற வகையில் அடங்கும். சிற்றிலக்கியம் இயற்றிய பெரும் புலவர்களுள் சயங்கொண்டார், ஓட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், நம்பியாண்டார் நம்பி, பட்டினத்துப்பிள்ளையார். கருவூர்த் தேவர் முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். பேரரசின் ஸ்தாபிதமும் சக்கரவர்த்திகளான சோழப் பெருமன்னர்களது சிறப்பும், புலவர்களால் பெரிதும் சிறப்பிக்கப்பட்ட போது மன்னர்களைப் பாராட்டிப் பாட விரும்பிய புலவர்களுக்கு புதிய இலக்கிய வடிவங்கள் தேவைப்பட்டன. அதற்கு வாய்ப்பான இலக்கியங்களாக சிற்றிலக்கியங்கள் அமைந்ததால் இக்காலப் பகுதியில் சிற்றிலக்கியங்கள் பெருமளவில் எழுந்தன.

சோழர்காலத்தில் எழுந்த சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பரணிக்கோர் சயங் கொண்டார் என்று போற்றப்படும் ஜயங்கொண்டாரால் 11ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப்பரணி 'ஆயிரம் யானைகளை அமரிடை வென்ற வீரனைப்பாடுவது பரணி" என இலக்கண விளக்கப் பாட்டியல் குறிப்பிடுகிறது. பன்னிரு பாட்டியலிலும் பரணி பற்றிய கருத்து காணப்படுகிறது. யானை மீது அமர்ந்து எதிரிகளை வருத்துவதால் பரணி என்று பெயர் பெற்றதாக குறிப்பிடுவர்.

"வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்

தும்பையிற் சென்ற கொடு தொழில் மன்னன்

வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்

குருதிப் பேராறு பெருகும் செங்களத்து

ஒரு தனி ஏத்தும் பரணியது பண்பே"

இவ்வாறு கற்பனைப் பாத்திரங்களின் ஊடாக பாட்டுடைத் தலைவனுடைய புகழைப்பாடுவதே இதன் நோக்கம். கடவுள் வாழத்து, கடை திறப்பு, காடு பாடியது, தேவி பாடியது, பேய் பாடியது. இந்திரஜாலம், இராஜபாரம்பரியம், பேய் முறைப்பாடு காளிக்கு கூழி கூறியது. போர்பாடியது, களம் பாடியது என வகுக்கப்பட்டிருக்கிறது. பரணிப் பிரபந்தத்தின் ஊடாக மன்னனின் போர்த்திறன், வீரம், நகை, பெருமிதம் எனப் பல்வேறு சுவைகளும் பொருந்த வாணிக்கப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழனுடைய படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் கலிங்கநாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டை அழித்த செய்தியைக் கூறுவது கலிங்கத்துப்பரணி. பெரும் போர்க்களத்தைப் பெற்ற பேய்கள் பரணி நாளில் கூழ் அட்டு உண்டு மகிழ்ந்து மன்னனை வாழ்த்தி முடிப்பதாக கூறப்படுவதால் நாட்டின் பெயராலும், நட்சத்திரத்தின் பெயராலும் "கலிங்கத்துப் பரணி" என வழங்கப்படுகிறது. கொற்றவையைத் தெய்வமாகப் பெற்ற பரணி எனும் நாண் மீனால் இப்பெயர் பெற்றது எனவும் கூறுவர். பொதுவாக காப்பியங்களிலே மக்களைக் கதாபாத்திரங்களாக அமைத்து பாடுவது மரபு. இப் பிரபந்தத்தில் காளியும் அதற்கு ஏவல் செய்யும் கூழிப்பேய்களும் பாத்திரங்களாக அமைகின்றன. அவற்றின் உரையாடல் வாயிலாக மன்னனின் போர், வெற்றி முதலியன வீரச்சுவை மிக்கதாக விளம்பப்படுகிறது. காப்பிய மரபைப் பின்பற்றி இப் பிரபந்தத்தில் நாட்டு வர்ணைகளுக்கு பதிலாக காளி உறையும் கோயில், காடு, பேய்களின் வாணனை முதலியன தனிச்சிறப்பு வாய்ந்த வகையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையும், வியப்புச்சுவையும் நிறைந்து பல்வகை அணிகளும் விரவப்பெற்று, ஒன்பான் சுவைகளும் பொருந்த அமையப் பெற்றதே பரணி.

சிற்றிலக்கிய வகைகளுள் அடுத்து சிறப்பிடம் பெறுவது உலா. இவ் இலக்கியம் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அரசன் தோ அல்லது யானை மீது உலாவருகின்ற போது அவன் செல்கின்ற காட்சியை "ஊரொடு தோற்றமும் உருத்தன மொழிப என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பல்லவர் காலப்பகுதியில் சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்ட திருக்கைலாய ஞானஉலாவே ஆதி உலா. இறைவன் பவனி வரும் போது அவன் மீது காதல் கொண்டு ஏழுவகைப் பெண்களும் மயங்குவதாகப் பாடப்பட்டது. அதைப் பின்பற்றி சோழர்காலப்பகுதியில் ஓட்டக் கூத்தரால் செய்யப்பட்ட உலாவே மூவர் உலா. உலா வரைவிலக்கணம் பற்றிக் குறிப்பிடுகையில் இறைவனோ அல்லது அரசனோ அல்லது உலகம் போற்றும் பெருமகனோ யானை அல்லது குதிரை மீது சுற்றம் புடை சூழ மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியில் பவனி வருவான். அவனது அழகைக் கண்டு அவன் மீது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் முதலிய ஏழு பருவத்தினரும் காதல் கொள்வதாக கற்பனைச் செறிவும், ஓசை நயமும் மிகுந்ததாகப் பாடப்படும் பிரபந்தமே உலாப் பிரபந்தம் எனப்படும்.

"பாட்டுடைத் தலைவன் உலாப் புற இயற்கையும்

ஒத்த காமத்து இளையாள் வேட்கையும்

கலியொடு தழுவிய வெள்ளடி இயலால்

திரிபின்றி நடப்பது கலிவெண்பாட்டே"

(பன்னிரு பாட்டியல்)

ஒட்டக்கூத்தர் சோழ மன்னர்களாகிய விக்கிரமசோழன், 2ம் குலோத்துங்க சோழன், 2ம் இராஜ ராஜ சோழன் ஆகிய மூவர் மீதும் தனித்தனி உலாக்கள் பாட, அம் மூன்றினையும் ஒன்றிணைத்து மூவர் உலா எனச் சிறப்பிப்பர். உலா இலக்கிய வகைகளுள் சிறப்பிடம் பெறுவது மூவர் உலா. பல்வேறு இலக்கிய கர்த்தாக்களின் இலக்கிய முயற்சிகளுக்கு கால்கோளாக இருந்தவர் ஓட்டக்கூத்தர். இதனால் தமிழ் இலக்கியச் செல்வாக்கில் ஒட்டக்கூத்தரின் பங்கு முக்கியமானது.

ஒட்டக்கூத்தர் பரணி உலா, பிள்ளைத்தமிழ் என்ற மூன்று இலக்கிய வடிவங்களையும் ஒரே காலப்பகுதியில் ஆக்கிய பெருமைக்கு உரியவர். இதனாலேயே ஓட்டக்கூத்தரின் வரவு தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த புது வரவு" என்பர்.

"கோவை, உலா அந்தாதிக்கு ஓட்டக்கூத்தர் என்று சிறப்பிக்கப்படுகிறார். சோழப் பெருமன்னரது குலப் பெருமை, சிறப்பு, வீரம், உலாவரும் தலைவனது அலங்காரம், காதல் கொண்ட பெண்களது மனநிலை, அவர்களது செயல்கள் இதில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழ் பிரபந்தமும் ஒன்று. மன்னனையோ, கடவுளையோ, பெரியோரையோ, நாயகராகக் கொண்டு அவரது குழந்தைப் பருவ வாழ்க்கையை பத்து பருவங்களாக பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கும் பத்து, பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் கொண்ட தாய் பாடப்படும் பிரபந்தமே பிள்ளைத் தமிழிப் பிரபந்தம். தமது அன்பை மிகவும் உருக்கமாக வெளிப்படுத்த சிறந்த ஊடகமாக அமைவது பிள்ளைத்தமிழ் பிரபந்தம். பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் பல்லவர் காலப்பகுதியில் வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக வைத்துப் பாடிய பெரிய திருமொழி பிள்ளைத் தமிழ் பிரபந்தத்தின் தோற்றுவாய், பிள்ளைத் தமிழ் பிரபந்தம் ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, சப்பாணி, வருகை, தாலாட்டு, முத்தம், அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாலாருக்கும் பொதுவானவை. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கு இவற்றுடன் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்ற மூன்றும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கு கழங்கு, அம்மானை, ஊசல் ஆகிய மூன்றுமாக பத்து பருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்காலப்பகுதியில் "வெண்பாவிற் புகழேந்தி" எனப்போற்றப்படுகின்ற புலவரால் செய்யப்பட்ட நளவெண்பா சிறு நூலாக இருந்த போதிலும் காப்பிய இலக்கணங்கள் நிரம்பப் பெற்று ஓசை விகற்பங்களும், உணர்ச்சி வேறுபாடுகளும் கொண்டதாய் கீர்த்தியோடு பாட்டால் உயர்ந்தது. வெண்பாவில் சிறப்பாகப் பாடப்பட்ட இந்நூல் உணர்ச்சி மிக்க பாடல்களைக் கொண்டதாய் பிரபந்த வகைகளுள் அடக்கப்படுகிறது. இவற்றை விட பட்டினத்துப் பிள்ளையார் பாடிய பக்தி அனுபவங்கள் நிறைந்த பிரபந்தங்கள், மெய்க்கீர்த்திகள் ஆகிய யாவும் சிற்றிலக்கியங்கள் என்ற வகையினுள் அடங்குகின்றன. எனவே தான் சோழர்காலம் தமிழ் இலக்கியப்பரப்பில் சிறப்பிடம் பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக