சோழர் காலத்தில் காவிய வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள்
சோழர் காலத்தில் எழுந்த இலக்கியப்பரப்புகளுள் காவியங்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் இலக்கிய மரபிலே புதிய போக்கும் மாற்றமும் கொண்ட இலக்கியமாக காவியம் கொள்ளப்படுகிறது. வடமொழி இலக்கண மரபைத் தழுவி அந்த இலக்கணத்துக்கு ஏற்ப கடவுள் வாழ்த்துடன், தன்னிகரில்லாத் தலைவனை உடைத்தாய் மலை, கடல், நாடு, இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருள் பயப்பதாய் நாட்டு வாணனை, நகர வாணனை மிகுந்து ஒன்பான் சுவைகளும், அணிநயங்களும் நிறைந்து சுவைபட படைப்பது காப்பியம் ஆகும். இவ்வாறு சோழர் காலப் பகுதியில் பெருமையும், சிறப்பும் மிகுந்த எல்லாமே பெருமையும் சிறந்தனவும் ஆனபோது மக்களது எண்ணங்களும் சிந்தனைகளும் பரந்தனவாகவும், விரிந்தனவாகவும் அமைந்தன. அவற்றைப் பிரதிபலிப்பதற்கு பெரியதொரு இலக்கிய வடிவம் தேவைப்பட்டது. அதே காலப்பகுதியில் தண்டியலங்காரம் கூறும் காவிய இலக்கணமும் காவியத்துக்குத் தேவையான அனைத்தையும் வழங்கியமையால் காவியங்கள் பெருந்தொகையாக எழுந்தன. சோழப் பெருமன்னரது ஆட்சித்திறன், வீரம். பண்புநலம் ஆகியவை காவியத்துக்கு தேவையான அனைத்தையும் தன்னிகரில்லாத தலைவனுக்கு கொடுக்க புதியனவும் பெரியனவுமாகிய காவியங்களைப் புலவர் படைத்தனர்.
சோழர்கால நாடு நகரங்கள் காவியத்துக்கு தேவையான நாட்டு வாணனைகளை வழங்கின. எனவே நாடு காவியத்துக்கு வேண்டிய பொருளை வழங்கியமையால் இக்காலப் பகுதியில் காவியங்கள் பெருமளவில் எழுந்தன. சோழமன்னனின் ஆதிக்க எல்லை விரிவடைய பல்வேறுபட்ட மொழி பேசுகின்ற மக்கள் சழுதாயத்தினர் சோழ சாம்ராச்சியத்துக்குள் வாழ வேண்டிய வாய்ப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறு வாழ்ந்து வந்த புலவர்கள் தம்முள் இலக்கிய பரிவர்த்தனை செய்து கொண்டனர். வடமொழியில் காப்பியம் பெருவழக்காக அமைய அதனைத் தொடர்ந்து தமிழிலும் காப்பியம் செய்ய முற்பட காவியங்கள் எழிச்சி பெற்றன.
சோழ சாம்ராஜத்தில் புலவர்கள் பெருமதிப்புடன் வாழ்ந்தனர். அவர்களில் பலர் அவைக்களப் புலவர்களாகக் கௌவிக்கப்பட்டனர். எனவே அப்புலவர்கள் மன்னன் அனுபவித்த சகல போகங்களையும் அனுபவித்தனர். அதனால் தம்மை ஆதரித்துக் காத்த சோழமன்னர்களை பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பெரும் காப்பியங்கள் செய்தனர். மன்னர்கள் பெரும் போர் செய்து வீரதீரச் செயல்களை நிலைநாட்டி சாதனை புரிந்தனர். இப் பெருவீரம் புலவர்கள் மனதில் பதிந்து அவர்களை பேரிலக்கியம் படைக்கச் செய்தது. மகாவீரன் ஒருவன் பிறக்கின்ற போது தான் காவியங்களும் தோன்றும்,அவனது வாழ்வு, வாழ்வு முறை, நாட்டை கைப்பற்றிய முறைமை, நாட்டை காத்த முறைமை ஆகிய எல்லாவற்றையும் விபரிக்கின்ற போது காவியங்கள் தோன்றுவது இயல்பே.
ஒரு காலப்பகுதியில் எழுகின்ற இலக்கியங்கள் அடுத்த காலப் பகுதியில் பேரிலக்கியங்கள் தோன்ற வழிவகுக்கும். அதாவது பல்லவர் காலப்பகுதியில் அகம், புறம், அறம், பக்தி ஆகிய துறைகளில் புலவர்கள் ஆழ்ந்து பெற்ற அனுபவம் காவியங்களுடாக சிறப்பாக அமையவும் காவியங்கள் தோற்றம் பெறவும், பரம்பரை உணர்வுகளுக்கு அத்திவாரம் இடவும் புதிய முனைக்களமாக சோழர்காலம் திகழ்ந்தமையால் இக்காலப்பகுதியில் காவியங்கள் பெருமளவில் எழிச்சி பெற்றன.
காலம் காலமாக சமுதாயத்துக்கும், சமயங்களுக்கும் இலக்கியங்களுக்கும் இடையே இருந்த உறவு தத்துவார்த்தப் பொருளுடன் இணைவு பெற்று முழுமை பெற சோழர்கால அரசியல் பொருளாதார சமுதாய நிலை உதவியமையால் அது காவியங்களின் எழுச்சிக்கு வழி கோலியது. மேலும் தமிழ் நாட்டில் இருந்த அமைதியான சூழ்நிலை, இலக்கிய மரபும், வாழ்வியல் மரபும் சிறப்புற உதவியது. இதனால் கவிச்சக்கரவர்த்திக்கும் புவிச்சக்கரவர்த்திக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சமய சமரசம் உன்னத நிலையில் பேணப்பட்டது. இத்தகைய சூழ்நிலை காவியங்கள் பல எழிச்சி பெறக் காரணமாயிற்று.
காவியம் பற்றிய இலக்கணம் சிறப்பாக நூலின் முகப்பு, நூலின் பயன், நூலின் வாணனை, நூலின் பொருள், நூலின் அமைப்பு ஆகிய ஐந்து அம்சங்களைக் கொண்டதாக அமையும். வாழ்த்து, வணக்கம், வரு பொருள் ஆகியன நூலின் முகப்பினுள் அடங்கும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் நூலின் பயனில் அடங்கும். மலை, கடல், நாடு, நகரம், பருவம், சூரியபோதயம், சந்திரோதயம் ஆகிய வர்ணனைகள் நூலின் வர்ணனையில் அடங்கும். தன்னிகரில்லாத தலைவன், அவனுடைய வீரதீரச் செயல்கள், அவனது திருமணம் பற்றியவை நூலின் பொருள் என்ற பகுதியில் அடங்கும். மற்றும் தலைமகனது இல்லற வாழ்வும், அரசியல் வாழ்வும் அதாவது அவனது திருமணம், மகளிருடன் இன்புறுதல், நீர் விளையாட்டு புத்திரப் பேறு, முடிசூடி அரசாளல், மந்திராலோசனை, தூது பிறநாட்டுப் படையெடுப்பு, போர். வெற்றி ஆகிய யாவும் நூலின் பொருள் என்ற பகுதியினுள் அடங்கும். சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் முதலியனவாக நூல் பகுக்கப்பட்டு ஒன்பது சுவைகளும் நிறைந்து அமைப்பது நூலின் அமைப்பினுள் அடங்கும்.
இவ்வாறு எல்லோரும் விரும்பும்படி அமைவதே காப்பியம் ஆகும். மேற் கூறப்பட்ட இலக்கியங்களுள் அடங்கும் வகையில் சோழர்காலப்பகுதியில் பெருங்காப்பியங்கள் எழுந்தன. திருத்தக்க தேவரது சீவக சிந்தாமணி பெருங்காப்பியங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிறது. சமண நூலாகிய வளையாபதியும், நாதகுத்தனார் என்பவரால் செய்யப்பட்ட பௌத்த காப்பியமான குண்டலகேசியும், சங்க மருவிய காலப்பகுதியில் தோற்றம் பெற்ற சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஐம்பெருங்காப்பியங்களுள் அடங்கும்.
மேற்குறிப்பிட்ட காவிய இலக்கணங்களுள் காப்பியத்தின் பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுள் ஒன்றேனும் குறைவு படின் அவை சிறு காப்பியத்தினுள் அடக்கப்படும். சமண முனிவர்களால் செய்யப்பட்ட நீலகேசி, சூளாமணி, (தோலாமொழித்தேவர்)உதயணன் வரலாற்றைக் கூறும் உதயண குமார காவியம், யசோதரனது வரலாறு கூறும் யசோதர காவியமும், நாக குமார காவியம் ஆகிய ஐந்தும் சிறுகாப்பியங்கள் ஆகும்.
இவற்றை விட கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் கம்பரால் எழுதப்பட்ட கம்பராமாயணம், 63 நாயன்மார்களது வரலாற்றைக் கூறும் சேக்கிழாரது பெரியபுராணம், கச்சியப்பரது கந்த புராணம் ஆகியனவும் காப்பிய இலக்கணத்துக்கு அமைவாகவே எழுதப்பட்டுள்ளன. எனவே இவையும் காப்பியம் என்ற வகையினுள் அடங்குகின்றன. அதனையே பேராசிரியர் S.வையாபுரிப்பிள்ளை அவர்கள் சோழர்காலத்தை காவிய காலம் என்று குறிப்பிடுவர். வேறு எந்தக் காலப்பகுதியிலும் தோன்றாத பல காப்பியங்கள் சோழர் காலப்பகுதியில் எழுந்தமையால் அவற்றை பெருங்காப்பியங்கள் என்றும், சிறு காப்பியங்கள் என்றும் வகைப்படுத்தி கூறும் அளவிற்கு வளர்ச்சி கண்டது. எனவே சோழர்காலத்தின் பொருள் மரபு, செய்யுள் மரபு, மொழி மரபு ஆகியவற்றை நோக்கும் போது அக்கால கல்விப் பரிமாணம், மனநிறைவு, பேரரசர் மகிமை, வடமொழிச் செல்வாக்கு ஆகியன காவியங்களின் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தன எனலாம்.
சோழர்காலத்தில் இடம் பெற்ற அரசியல், சமூகப் பின்னணியானது பரந்து பட்ட சாம்ராஜ்ய ஸ்தாபிதத்தை ஏற்படுத்தியதுடன், கல்விப் பரப்பு விசாலம் அடைந்தமையையும், வடமொழிச் செல்வாக்கு, சமய சமரசஉணர்வும், மக்கள் உள்ளங்களில் ஏற்பட்ட மனநிறைவும் பரந்துபட்ட இலக்கியங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின எனலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக