22.10.25

தொல்காப்பியத்தில் ஐந்திலக்கணமரபு

தொல்காப்பியம் கூறும் ஐந்திலக்கணமரபு

தொல்காப்பியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பகுத்து இலக்கணம் பேசுகின்றார். எழுத்ததிகாரத்தில் எழுத்தின் இலக்கணமும் சொல்லதிகாரத்தில் செல்லின் இலக்கணமும் பொருள் அதிகாரத்தில் பொருள் இலக்கணமும் யாப்பு இலக்கணமும் அணி இலக்கணமும் கூறுகின்றார். தொல்காப்பியர் பொருள் அதிகாரம் எனப்பெயரிட்டதன் நோக்கம் பொருள் இலக்கணம் கூறும் பகுதியாகையால் அதற்கு அவ்வாறு பெயரிட்டார். பொருள் இலக்கணம் கூறும் போது அதன் வடிவம் செய்யுள் பற்றியும் அதன் யாப்பு பற்றியும் அதன் அணியின் தேவைபற்றியும் தொல்காப்பியர் நன்கு உணர்த்தியிருந்தார். பொருள் இலக்கணம் உணர்த்தும் போது அதன் வடிவம் அதன் உத்திகள் எல்லாவற்றையும் பொருள் அதிகாரத்தில் குறிப்பிட்டார். தொல்காப்பியர் ஐந்திலக்கண மரபு பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றார். பிற்கால இலக்கணகாரருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் நூன் மரபு, மொழிமரபு. பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் எனப்பகுத்து எழுத்தின் இலக்கணம் பற்றிப் பேசுகின்றார்.

சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம், வேற்றுமையியல் வேற்றுமைமயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல். உரிஇயல், எச்சவியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்து சொல்லிலக்கணம் பேசுகின்றார். சொற்களின் வழ பற்றியும் வழக்காத்தல் பற்றியும் வேற்றுமை, பெயர், வினை, இடை, உரி எனப் பாகுபடுத்தி அவற்றின் இலக்கணத்தினைக் கூறுகின்றார்.

பொருள் அதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல் செய்யுளியல், மரபியல் எனப்பகுத்து இலக்கணம் பேசுகின்றார். அகப்பொருள், புறப்பொருள், களவு, கற்பு எனபொருள் மரபினை பகுத்து தொல்காப்பியர் பேசுகின்றார். செய்யுளின் பொருள் மரபு என்ன என்பதை இவற்றினூடாகச் சொல்கின்றார். செய்யுளின் வடிவம் அதன் யாப்பு பா வகை என்பவற்றை செய்யுளியலில் பேசுகின்றார். செய்யுளின் உத்தி முறைகள் பற்றி உவமையியலில் குறிப்பிடுகின்றார். இதனாலே தான் தொல்காப்பியம் ஐந்து இலக்கணம் கூறும் நூல் என்று குறிப்பிடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக