22.10.25

தமிழில் ஐந்திலக்கண மரபு அறிமுகம்

ஐந்திலக்கண மரபு

இலக்கண வகை ஐந்தினையும் கொண்டமைவது ஐந்திலக்கணம் எனப்படும். எழுத்து, சொல், பொருள் யாப்பு அணி என்ற ஐந்து இலக்கணத்தையும் கூறுவது ஐந்திலக்கணம் எனப்படும். தமிழ் மொழியில் ஐந்திலக்கண மரபு நீண்டபாரம்பாரியமுடையதாக அமைகின்றது. "முழுமையான இலக்கணம் என்றால் அது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்தினையும் உடையதாக அமைய வேண்டுமென்ற கருத்து அன்று நிலவியது. எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறிய நன்னூல் ஐந்திலக்கணம் கூறுகின்றது என வாதிட்டமை இதனை நன்கு தெளிவுறுத்தும்" என பேராசிரியர் .சண்முகதாஸ் அவர்கள் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. நன்னூல் இலக்கணத்திற்கு யாரோ ஒருவர் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார். சிறப்புப்பாயிரம் வேறு யாராலோ பிற்காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம்.

"நான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்

அரும் பொருளைந்தையும் யாவரு முணரத்

தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்""

என நன்னூல் சிறப்பாயிரத்தில் அரும் பொருள் ஐந்தையும் யாவரும் உணர என்ற அடி ஐந்து இலக்கணத்தை நன்னூல் கூறும் எனக் கூறப்பட்டுள்ளது. எழுத்தும் சொல்லுமே இன்று கிடைத்துள்ளன. பொருள், யாப்பு அணி என்பன காலப்போக்கில் அழிந்து விட்டன என கூறமுற்பட்டுள்ளனர். நன்னூல் அவ்வாறு ஐந்திலக்கணம் கூறுவதாகக் கொள்வதற்கு வேறு சான்றுகள் எதுவும் இல்லை. ஐந்திலக்கணம் கூறினால்தான் அது முழுமையான இலக்கணமாக இருக்கும் என்ற கருத்தை ஒட்டியே சிறப்புப்பாயிர ஆசிரியரும் நன்னூல் ஐந்திலக்கணம் கூறும் எனக் கூறுகின்றார் எனக்கொள்ள முடிகின்றது. நன்னூல் எழுத்தும் சொல்லுமே கூறுகின்ற நூல் என்றே கொள்ளமுடியும். மேலும் கி.பி 12ஆம் நூற்றாண்டில் தமிழ் நெறி விளக்கம் எழுந்தது. ஐவகை இலக்கணமாக அமைந்த முழு நூலாக விளங்கியிருத்தல் வேண்டுமென அதன் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. அதில் அகப்பொருள் பற்றிய இலக்கணமே கூறப்பட்டுள்ளது. 25 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. இதுவும் ஐந்திலக்கணத்தின் இன்றியமையாமையை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. 0.1

சங்ககாலச் சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு சங்கச் செய்யுட்களைப் படிக்கவேண்டும். அன்றைய காலம் செய்யுள் நடைக்காலம் (அதற்குபின்னாளும் கூட) அச்செய்யுட்களை விளக்குவதற்கு விளங்கிக் கொள்வதற்கு ஐந்திலக்கண அறிவு தேவைப்பட்டது, செய்யுளை விளக்கும் போது எழுத்தையும் சொல்லையும் மாத்திரம் விளங்கினால் போதாது. எழுத்து, செலல்லினால் அமைந்த யாப்பு பற்றியும் யாப்பினால் அமைந்த செய்யுள் பற்றியும் அச்செய்யுளில் அமைந்துள்ள அணிபற்றியும் அச்செய்யுள் உணர்த்தும் பொருள் பற்றியும் அறிவதற்கு ஐந்திலக்கண அறிவு தேவைப்பட்டது. ஐந்திலணக்கண அறிவு இருந்தால் தான் செய்யுள்களை விளங்கிக் கொள்ளமுடியும்.

இத்தகைய ஐந்திலக்கண மரபு மேலைத் தேய இலக்கணகாரரிடம் இருந்ததை ஏற்கனவே பேராசிரியர் .சண்முகதாஸ் அவர்கள் கூறியுள்ளார். "கிரேக்க மொழிக்கு இலக்கணம் எழுதிய டயனோஸியஸ் திராக்ஸ் என்பவர் இலக்கணம் என்றால் என்ன என்று கூறும் போது இவ்வாறு குறிப்பிடுவார்.

Grammar is the practical knowledge of the general usages of poets and prose writers it has six parts. First accurate reading (aloud) with due regard to prosodies, second explanation of the literary expressions in the works, third the provision of notes on the phraseology and subject matter, fourth, the discovery of etymologies fifth, the working out of analogical regularities sixth, the appreciation of literary compositions which is the noblest part of grammar.

இவ்விலக்கணம் ஆறு பகுதிகள் கொண்டதாக கூறப்பட்டுள்ளது"" "முதலாவது செய்யுள் வடிவத்தினை வாசித்தல். "இரண்டாவது" நூல்களிலுள்ள இலக்கிய வெளிப்பாடுகளின் விளக்கம், மூன்றாவது, நூற்பொருள் தொடரமைதிகள் பற்றிய குறிப்புக்கள், நான்காவது, பதங்களை அறிதல், ஐந்தாவது, ஒற்றுமை ஒழுங்குகளை அறிந்து கொள்ளுதல், ஆறாவது. இலக்கிய ஆக்கங்களை நயத்தல். இதுவே இலக்கணத்தின் அதியுன்னத பகுதி" எனப் பேராசிரியர் .சண்முகதாஸ் அதனை மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்தை ஆராய்வதற்கு இலக்கணம் அடிப்படையாக மேலைத்தேயத்தில் அமைகின்றது. தமிழ் மொழி மரபிலும் இலக்கியத்தை ஆராய்வதற்கு இலக்கணம் அடிப்படையாக அமைகின்றது. ஐந்திலக்கண மரபின் தேவையும் இதனையே வெளிப்படுத்துகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக