20.10.25

A/L சிந்து வெளி காலச் சமுதாயம்

சிந்து வெளி காலச் சமுதாயம்

காலக் கணிப்பீடு செய்யும் ஆள்கூற்று நிபுணர்களின் கருத்துப்படி சிந்து வெளியிற் கண்டெடுக்கப்பட்ட என்பு, எச்சங்கள் மத்திய தரைப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதியினத்தின் என்பெச்சங்களை ஒத்தவை எனக் கொள்ளப்படுகின்றது. சிந்து வெளி மக்கள் திராவிட இனத்தவர் என்றே கொள்ளப்படுகிறது. ஆயினும் இதனைத் திடப்படுத்திக் கூற முடியவில்லை.

அளவிற் பெரியனவும் சிறியனவுமான பல கட்டடங்கள் சுட்ட மற்றும் உலர்ந்த செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. வெளிச்சுவர்கள் மழை, வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தன. சுவர்கள், தரை என்பன களிமண்ணாலும் தவிடு கலந்த களி மண்ணாலும் மெழுகிடப்பட்டிருந்தன. பல அறைகள் கொண்ட கட்டடங்கள், உயர்ந்த கூரைகள், காற்று, வெளிச்சம், புகக்கூடிய யன்னல் அமைப்புக்கள் என்பனவும் காணப்பட்டன. நாற்சார் வீடுகள், சாதாரண வீடுகள், அங்காடிகள், களஞ்சியங்கள், தனியான உடைமாற்றும் அறைகள் கொண்ட குளியலறைகள், தடாகங்கள் மற்றும் அடுக்கு மாடிக்கட்டிடங்கள் என்பனவும் காணப்பட்டன. இவ் வீடுகளில் காணப்பட்ட நாற்காலிகள், முக்காலிகள், கட்டில்கள் என்பனவும் பிற பாவனைப் பொருட்களும் இங்கு நாகரிக வளர்ச்சி பெற்ற ஒரு பண்பட்ட சமூக அமைப்பு இருந்தது என்று கொள்ள இடமளிக்கின்றன. இக் கட்டிடங்களில் மாடிகளிலிருந்து கழிவுகளையகற்ற சுட்ட களிமண்ணாலான குழாய்கள் காணப்பட்டன. சிறிய வடிகால்கள் பெரிய வடிகால்களுடன், இணைத்து நகருக்கு வெளியே கழிவகற்றும் ஆமை யோட்டு வடிவ வடிகாலமைப்பு காணப்பட்டமை மற்றொரு சிறப்பம்சமாகும்.

இங்கு வாழ்ந்த மக்கள் தத்தம் வசதிக்கேற்ப ஆடையணிகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட முத்து, மாணிக்கம், மரகதம் என்பன பதித்த ஆபரணங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. அத்தோடு இங்கு பொற் கொல்லத் தொழில் நிகழ்ந்ததையும் இதன் மூலம் அறிய முடிகின்றது. இங்கு காணப்பட்ட மரக்கலங்களின் சிதைவுகள், தூண்டில்கள் என்பன கடல் வாணிபம் மற்றும் மீன்பிடித் தொழில் என்பன நடைபெற்றதையும் மட்டப் பலகைகள், அளவு கோல்கள் என்பன சிறந்த கட்டடக் கலை வளர்ச்சியையும் கொத்து வேலை நிகழ்ந்ததனையும் விளக்கும். அம்மி, ஆட்டுக்கல், உரல் என்பனவும் மற்றும் சட்டி, பானை, கூசா என்பனவும் இங்கு கற்தச்சுத் தொழில் மற்றும் வனைதற் தொழில் சிறப்புற நிகழ்ந்ததனையும் பறை சாற்றுகின்றன. சவரக்கற்கள் காணப்பட்டமை அங்கு நாவிதத் தொழில் சிறப்புற நிகழ்ந்ததனைக் காட்டும்.

சிந்து வெளி நாகரிகம் ஓர் நதிக்கரை நாகரிகம் என்பதால் அங்கு விவசாயம் முக்கிய இடம் பெற்றிருந்தது. சிதைவடைந்த நிலையிற் கிடைக்கப் பெற்ற மரக் கலப்பைகள், மற்றும் எருதுகளின் என்பு எச்சங்கள் என்பனவும் இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர் எனக் கொள்ள இடமளிக்கிறது. இங்க நாய், பூனை ஆகியவற்றின் என்பு எச்சங்கள் பல கண்டெடுக்கப்பட்டன. எனவே இவை அங்கே செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டிருக்கலாம்.

நகருக்குப் புறம்பான இடத்தில் உயரமான இடத்தில் நிமிர்ந்த நிலையில் மனித என்புகள் பல புதைந்திருந்தன. எனவே சிந்துவெளி மக்கள் இறந்தவரைப் புதைக்கும் வழக்கமுடையோராயிருந்திருத்தல் வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ் என்புகளின் காலடியில் பாவனைப் பொருட்களும் புதைந்திருந்தன. எனவே இறந்தவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களையும் கூடவே புதைக்கும்வழக்கத்தையுடையோராய் இருந்திருக்கலாம். இன்றைய இந்துக்களிடம் இந்த வழக்கங்கள் இன்றும் இருப்பதனைக் காணலாம்.

வாள், கத்தி, எறிகத்தி, சூலம் என்பன இங்கு கிடைக்கப் பெற்றமை இங்கு போர்கள் நடந்திருக்கலாமெனக் கருத இடமளிக்கிறது. மேலும் இங்கு சுடுமண்ணாலான சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் பலவும் கண்டெடுக்கப்பட்டன பெரியோர் சதுரங்கம், சொக்கட்டான் ஆகியனவற்றைப் பொழுது போக்காக விளையாடியமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றன.

சிந்து வெளியிலே சங்குதாரோ எனுமிடத்திலே கண்டெடுக்கப்பட்ட சிறிய குப்பியானது மைக்குப்பியாக இருக்கலாமென்று கருதப்படுகிறது. எனினும் இங்கு வாழ்ந்த மக்கள் எழுதப் பயன்படுத்திய பொருட்கள் பற்றி போதுமான ஆதாரங்களேதும் கிடைத்ததில்லை. இலக்கிய ஆதாரங்களும் இருந்திருத்தல் வேண்டுமெனக் கூறப்படுகிறதே தவிர அவையும் கிடைத்ததில்லை.

ஆக, மொத்தத்தில் சிந்துவெளி பற்றிய எந்தவொரு கருத்தையும் உறுதிப்படுத்திக் கூற முடியவில்லை. காரணம் சிந்து வெளியின் ஏறத்தாள பத்தில் ஒரு பகுதி மட்டுமே இதுகாறும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இலக்கிய ஆதாரங்களேதும் இங்கு கிடைக்கவில்லை. கிடைத்த எழுத்துக்களின் வரிவடிவமும் இதுவரை வாசித்தறியப்படவில்லை. அத்தோடு சிந்து வெளி நாகரிகத்தை ஆராய்ந்த அறிஞர்களுள்ளிட்ட ஏனைய அறிஞர்களதும் கருத்துக்கள் கூட ஊகங்களாகவே வெளியிடப்பட்டுள்ளன. எது எவ்வாறாகவிருப்பினும் சிந்து வெளியிற் காணப்பட்ட சமய சமூகக் கட்டமைப்பு பெரிதும் இந்து மத சாயல் கொண்டதாகவே அதாவது பெரிதும் இன்றைய இந்து மதத்தை ஒத்ததாகவே காணப்படுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக