20.10.25

A/L சிந்து வெளி காலச் சமய நிலை

சிந்துவெளி நாகரிகம்

இந்து சமயம் எங்கே? எப்போது? யாரால்? தோற்றுவிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை. ஆன்மீக வாதிகளைப் பொறுத்தவரை ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அரும் பெரும் சோதி' போலத் தோற்றமும் முடிவும் இல்லாதது இந்து மதம் ஆயினும் வரலாற்றாய்வாளர்களின் ஆய்வுகள் கூட இந்து மதத்தின் தொன்மையை ஆராய முடிந்ததே தவிர அதன் தோற்றம் பற்றிய கால வரையறுப்பை ஊகங்களாகக் கூட வெளியிட முடியவில்லை. இற்றைவரை நிகழ்த்தப்பட்ட வரலாற்று ஆய்வுகளின்படி, இந்து மதத்தின் தொன்மை பற்றி நாமறிந்த முதலாவது காலப்பகுதியாக விளங்குவது சிந்துவெளிக் காலமாகும். இக்காரணம் பற்றிச் சிந்துவெளிக் கால சமய, சமூக, பண்பாட்டு அம்சங்களை ஆராய்தல் பொருத்தமானதாகும்.

சேலம், சேனாப், இராவி, பியர், சாட்லேஜ் ஆகிய ஐந்து கிளை நதிகளும் இமயத்திலிருந்து வரும் சிந்து நதியுடன் கலக்கும் பகுதி 'பஞ்சாப்' என அழைக்கப்படுகின்றது. ஐந்து ஆறுகள் கலக்கும் இடம் என்பது இதன் பொருளாகும். இன்று இப்பகுதி பாகிஸ்தானின் எல்லைக்குள் உள்ளது. இப்பகுதியில் புகையிரதப் பாதை அமைப்பதற்காக மண்மேடுகளைத் தோண்டிக் கற்கள் எடுக்கப்பட்ட போது, அக்கற்கள் பலவற்றிலே சித்திர எழுத்துக்கள் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது. அத்தோடு ஆய்வுகளும் ஆரம்பமாயின. சேர். ஜோண் மார்ஷல், சேர். வில்லியம் ஜோண்ஸ், சேர். அலெக்ஸாண்டர் கணிங்கம், சேர். மோட்டீமர் உவீலர், கலாநிதி மைக்கே வட்சி ஆகியோரை உள்ளடக்கிய ஆய்வாளர் குழு 1920 முதல் 1924 வரை இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டது. இவ்வாராய்ச்சியின் பயனாக வியக்கத்தக்க பல விடயங்கள் கண்டறியப்பட்டன. கி.மு. 2500 இற்கும் கி.மு. 1500 இற்கும் இடைப்பட்டதெனப் பொதுவாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்காலப் பகுதியில் இந்து மதம் என்று கொள்ளத்தக்க, அல்லது இந்து மத சார்புடைய ஒரு மதம் நிலவி வந்தமை கண்டறியப்பட்டது.

மேற்குறித்த ஆய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட தாயத்துக்கள், பதக்கங்கள், முத்திரைகள், களிமண் தகடுகள், சுடுமண் பொருட்கள், பாவனைப் பொருட்கள், என்பு எச்சங்கள் மற்றும் அழிந்தும் அழியாமலும் காணப்பட்ட கட்டடங்கள் என்பனவும் அக்காலத்து மக்களின் சமய, சமூக, பண்பாட்டு நிலைகளையும், பழக்கவழக்கங்கள் என்பனவற்றையும் நிர்ணயிக்க உதவுகின்றன.

சிந்து வெளி காலச் சமய நிலை

சமய நிலையென்பது வழிபடப்பட்ட தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், சமய நம்பிகைகள் ஆகிய மூன்று முக்கிய அடிப்படைகளில் ஆராயப்பட வேண்டியது. முதலில் வழிபடப்பட்ட தெய்வங்கள் என்ற அடிப்படையில் நோக்கும் போது, இன்றைய இந்து மதத்தைப் போலவே சிந்து வெளியிலும் 'பல தெய்வ வழிபாடு' நிலவி வந்ததை அவதானிக்க முடிகிறது. இன்றும் நாம் வழிபட்டுவரும் சிவன், சக்தி, இலிங்கம், சூரியன், நாகம், பறவை, மரம், அக்கினி, தேவதைகள் என்று கருதத்தக்க தெய்வஙகள் பலவற்றைச் சிந்துவெளி மக்கள் வழிபட்டு வந்தமையை அங்கு நிகழ்த்திய ஆய்வுகள் விளக்குகின்றன.

சிந்து வெளியிலே சுட்ட மண்ணினாலான பெண் பாவை உருவங்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இவ்வுருக்களை ஆய்வாளர், சாந்த முகம் கொண்டவை, கோரமுகம் கொண்டவை என இரண்டாக வகுத்து ஆராய்கின்றனர். இன்றும் இலக்குமி, சரஸ்வதி, உமை, கெளரி போன்ற சக்தியின் சாந்த வடிவங்களையும் காளி, துர்க்கை, நீலி, சூலி, போன்ற கோர வடிவங்களையும் நாம் வழிபட்டு வருகின்றோம். இங்கு கண்டெடுக்கப்பட்ட குழந்தையைக் கையிலேந்திய பெண்ணுருக்களின் வளர்ச்சிப்படியாக இன்றைய சோமஸ்கந்த மூர்த்தம் இருக்கலாமென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

மரமொன்றின் மீது இரு கொம்புகளுள்ளதும், தலைவிரிகோலத்துடனுமான ஒரு பெண் நிற்பது போலவும், கீழே ஒரு பெண் மண்டியிட்டபடி இருப்பதும், அவளருகே கட்டைப் பாவாடை அணிந்த ஏழு பெண்கள் நிற்பதுமான ஓர் உரு அங்கு கண்டெடுக்கப்பட்டது. இது வனதேவதை வழிபாடாக இருக்கலாமென்று ஆய்வாளர் கூறுகின்றனர். சிந்து வெளியிற் கண்டெடுக்கப்பட்ட ஒரு இலட்சினையில் கருவுற்ற நிலையில் ஒரு பெண்ணும் அவளது கருப்பையிலிருந்து செடியொன்று கருத்துயிர்ப்பது போலவும் காணப்படுகிறது. இது பூமியைப் பெண்ணாக வழிபடுகின்ற தரைப் பெண் வணக்கமாக இருக்கலாம். இந்துக்களிடையே 'சக்தி புவனம் ஏழையும் பூத்தவள்' எனும் கருத்து நிலவி வருவதைக் காணலாம். இவ்வாறாக சிந்து வெளியிற் கண்டெடுக்கப்பட்ட பெண்ணுருக்கள் இன்றைய சக்தி வழிபாட்டோடு தொடர்புபடுத்தி நோக்கக் கூடிய ஒரு பெண் தெய்வ வழிபாடு அங்கு காணப்பட்டதை உறுதி செய்கின்றன.

சிந்து வெளியிற் கண்டெடுக்கப்பட்ட உருவச்சிலை ஒன்றின் முகத்தின் இருபுறமும் இரு படைப்புக்கள் காணப்படுகின்றன. இது இன்றைய மும்மூர்த்தி வழிபாட்டின் அன்றைய நிலையாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட யோகி வடிவமானது, யோகிகளுக்கெல்லாம் தலைவன் எனும் பொருளில் சிவனுக்கு வழங்கும் யோகீஸ்வரன் என்ற பெயரை நினைவூட்டுவதா கவுள்ளது. இங்கு காணப்பட்ட யோகி வடிவத்தைச் சூழ யானை, புலி, கரடி, சிங்கம், மான் முதலான விலங்குகள் காணப்படுவது உயிர்களுக்கெல்லாம், தலைவன் எனும் பொருளில் சிவனுக்கு வழங்கும் 'பசுபதி' என்ற பெயரை விளக்குவதாக இருக்கலாம். இரு கொம்புகளும் நடுவில் பூங்கொத்தும் கொண்டதாக இங்கு ஓர் இலட்சினை கண்டெடுக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் திரிசூல வழிபாடாக மாறியிருக்கலாமென ஆய்வாளர் கருதுகின்றனர். இவற்றிற்கெல்லாம் மணிமுடி வைத்தது போல விளங்குவது சிந்து வெளியிற் கண்டெடுக்கப்பட்ட காலைத்தூக்கி ஆடும் ஓர் வெண்கலச் சிலையாகும். இது நடராஜப் பெருமானின் தில்லையம்பலத்திருக்கூத்து எனும் பஞ்ச கிருத்திய நடனத்தை விளக்குவதாயிருக்கலாமென்பது ஆய்வாளர் கருத்து.

உருவிற் சிறியனவும் பெரியனவுமான பல இலிங்கங்கள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டன. சிறிய இலிங்கங்கள் பலவற்றில் தொளைகள் காணப்பட்டன. எனவே இவை தாயத்துக்களாக அணியப்பட்டிருக்கலாம். அளவிற் பெரிய இலிங்கங்கள் பூஜையறையில் வைத்துப் பூசித்திருக்கலாம். இன்றும் இலிங்கத்தை மூலஸ்தானத்தில் வைத்துப் பூசிக்கும் வழக்கம் உண்டு. இவ் இலிங்கங்களிலே இலிங்கம் சிவனையும், பீடம் சக்தியையும் குறிப்பதாகும். இவ் இலிங்கங்கள் என்று கொள்ளத்தக்க உருக்களைக் கொண்டு சிலர் சிந்து வெளி மக்கள் ஆண், பெண் குறி வழிபாடு (இலிங்க யோனி வழிபாடு) உடையவர்கள் என்றும் குறிப்பிடுவர்.

சிந்து வெளியிற் கண்டெடுக்கப்பட்ட எருமை, யானை, புலி, மான், வெள்ளாடு போன்ற மிருகங்களின் இலட்சினைகள் அங்கு மிருக வழிபாடு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாக இருக்கலாம். இன்றும் மிருகங்கள் இந்து தெய்வங்களின் வாகனங்களாக விளங்குவதைக் காணலாம். அத்துடன் நந்தி வழிபாடும் காணப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு இலட்சினையில் யோகி ஒருவரின் முன் காளைமாடொன்று காணப்படுகிறது. இது சிவ வழிபாட்டுடன் நந்தி வழிபாட்டின் தொடர்பை விளக்குவதாக இருக்கலாம்.

இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு இலட்சினையில் முக்காலி ஒன்றின் மீது பாற் கிண்ணமும், அதன் முன் படமெடுக்கும் நாகமும் காணப்படுகின்றது. இதனைக் கொண்டு சிந்து வெளியில் நாக வழிபாடு நிகழ்ந்ததை அறிய முடிகிறது. மற்றும் இங்கு புறா, கருடன் போன்ற பறவைகளின் உருக்கள் கொண்ட இலட்சினைகளும் காணப்பட்டன. கருடன் மகா விஷ்ணுவின் வாகனமாகவும், மயில் முருகனின் வாகனமாகவும் கொள்ளப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மரவழிபாடு நிகழ்ந்தமையை விளக்கும் வகையில் கிளைகளுக்கிடையே கொம்புள்ள பெண்ணொருத்தியின் இலட்சினை விளங்குகிறது. இன்றும் விநாயகர், வைரவர் போன்ற தெய்வங்கள் மரத்தடியில் வைத்து வழிபடப்படுகின்றன. இங்கு ஆறு தலையையுடைய ஒரு விலங்குருவம் கொண்ட இலட்சினை ஒன்று காணப்பட்டது. இதில் சூரியக் கதிர்களை ஒத்த வட்டமாக நெருங்கிய தலைகள் காணப்படுகின்றன. இதனைக் கொண்டு அங்கு சூரிய வழிபாடு நிகழ்ந்திருக்கலாமெனக் கொள்ள முடிகிறது. இன்றும் இந்துக்கள் தைப்பொங்கல் பண்டிகையை சூரிய வழிபாடாகக் கருதிக் கொண்டாடி வருகின்றனர்.

சிந்து வெளியிற் கண்டெடுக்கப்பட்ட பல இலட்சினைகளிலும், உருவச் சிலைகளிலும் நான்கு கைகளையுடையவை பல காணப்பட்டன. அத்தோடு மனித உருவும் மிருகத் தலையும் கொண்டவையும், மிருக உருவும் மனிதத் தலையும் கொண்டவையுமாகக் கலப்புருவங்கள் பலவும் இங்கு கண்டெடுக்கப்பட்டன. இன்றும் இந்துக்களினால் வழிபடப்படும் பல தெய்வங்கள் நான்கு கைகளைக் கொண்டிருத்தலையும் விநாயகர், நரசிம்மர் போன்ற கலப்புருக் கொண்ட தெய்வங்கள் வழிபடப்படுவதனையும் காண முடிகிறது.

இனி சிந்து வெளி கால மக்களது வழிபாட்டு முறைகள் பற்றி நோக்குமிடத்து அவை இன்று நடைமுறையிலுள்ள இந்து வழிபாட்டு முறைகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. இங்கு காணப்பட்ட இலட்சினை ஒன்றில் தட்டுக்களை ஏந்திய பெண்கள் காணப்படுகின்றனர். இது சிந்து வெளி மக்கள் இறைவனுக்கு உணவு படைத்து வழிபட்டிருக்கலாமெனக் கொள்ள இடமளிக்கிறது. தெய்வத்தின்முன்னே குழந்தையைக் கையிலேந்திய பெண்ணின் உருக் கொண்ட இலட்சினை நேர்த்திக்கடன் கழிக்கும் நடைமுறை இருந்ததற்கான ஆதாரமாகுமென ஆய்வாளர் கூறுவர். மேலும், இங்கு கண்டெடுக்கப்பட்ட வாளேந்திய ஆடவன் முன்னே மண்டியிட்ட பெண் இலட்சினையும், வெள்ளாட்டைப் பிடித்தபடி ஓர் ஆடவனும் அவனெதிரே பலர் வரிசையாக நின்று வணங்குவது போன்றதுமான இலட்சினையும் அங்கு 'பலியிடல்' நிகழ்ந்திருக்கலாம் என்ற ஊகத்திற்கு இடமளிக்கிறது. இசை, நடனமூலம் வழிபாடு நிகழ்ந்ததை இங்கு காணப்பட்ட எருதின் முன் நடனமாடும் பெண்ணின் இலட்சினையும் மத்தளம் அடிப்பவனும், மாடும் பெண்ணும் கொண்ட இலட்சினையும் விளக்குகிறது. கற்கள், தட்டுக்கள், வீட்டுச் சுவர்கள் என்பவற்றில் புகைபடிந்திருந்தமை தூப தீப வழிபாட்டுக்கான ஆதாரங்களென்றும், ஒரு உருவத்தை நால்வர் தூக்கிச் செல்வது இறைவனை ஊர்வலமாய் கொண்டு வருதல் என்று கொள்ளலாமென்றும் ஆய்வாளர் கூறுவர்.

அடுத்து இவர்களது சமய நம்பிக்கைகள் பற்றிக் கூறுமிடத்து, முக்குறிகளையுடைய பானைகள் பல இங்கு காணப்பட்டதாகவும், சுவஸ்திகா 5 எனும் யோகக் குறியுடைய பதக்கங்கள் காணப்பட்டதாகவும், இவர்கள் நோய் தீர்க்க அவற்றைத் தாயத்துக்களாக அணிந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர் கூறுகின்றனர். மேலும் இங்கு, உயிர் பிரிந்து சொர்க்கம் செல்வது போன்றதும், யமன் வருவது போன்றதுமான இலட்சினைகளும் கண்டெடுக்கப்பட்டன. வீட்டுச் சந்துகளில் காணப்பட்ட என்பும், சாம்பலும் கொண்ட குவளைகள், இவர்களிடம் அஸ்தியைப் பாதுகாக்கும் வழக்கம் இருந்ததைக் காட்டுவதாகுமெனக் கருதப்படுகிறது.

ஆக மொத்தத்தில் தொகுத்து நோக்குமிடத்து சிந்து வெளியிலே தற்கால இந்து மதத்தை ஒத்ததான தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் சமய நம்பிக்கைகளும் விளங்கியதை ஊகிக்க முடிகின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக