24.10.25

ஒரு நாள் செல்லலம் பாடல் விளக்கம்

 

ஒரு நாள் செல்லலம்

திணை :- பாடாண் திணை

துறை :- பரிசில் கடாநிலை

பாடியவர் :- ஔவையார்

பாடப் பெற்றவர் : அதியமான் நெடுமான் அஞ்சி

பாடல் :

ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம்

பலநாள் பயின்று பலரோடு செல்லினும்

தலை நாட் போன்ற விருப்பினன் மாதோ

அணி பூணணிந்த யானையியறேர்

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்

நீட்டினு நீட்டா தாயினும் யானை தன்

கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத் ததுவது பொய்யாகாதே

அருந்தே மாந்த நெஞ்சம்

வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே.

பதப்பிரிப்பு:

ஒரு நாள் செல்லலம்; இருநாள் செல்லலம்;

பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்

தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ

இழை அணி யானை இயல்தேர் அஞ்சி

அதியமான் பரிசில் பெறூம் காலம்

நீட்டினும், நீட்டாது ஆயினும், களிறு தன்

கோட்டு இடை வைத்த கவளம் போலக்

கையகத்து; அது பொய் ஆகாதே;

அருந்த ஏமாந்த நெஞ்சம்

வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே.

பதவுரை :

நெஞ்சே! ஒரு நாள் செல்லலம் நாம் ஒரு நாள் செல்லவில்லை; இரு நாள் செல்லலம் - இரு நாள் செல்லவில்லை; பல நாள் பயின்று பலரோடு செல்லினும் - பல நாட்கள் பலரோடு தொடர்ந்து சென்றாலும்; தலை நாள் போன்ற விருப்பினன் முதல் நாள் போனது போலவே விருப்பம் உடையவன்; அணி பூண் அணிந்த யானை அழகிய ஆபரணம் அணிந்த யானையையும்; இயல் தேர் அதியமான் விரைந்து செல்லும் தேரையுடைய அதியமான்; பரிசில் பெறூஉம் காலை பரிசில் தருகின்ற காலம்; நீட்டினும் நீட்டாதாயினும் - நீண்டாலும் அல்லது நீளவில்லையாயினும்; யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல - யானை தனது கொம்பினிடையே வைத்த கவளம் போல (அதனைவிட்டு ஒரு காலமும் விலகாதது) கையகத்து நம் கையில் உள்ளது போன்றதாகும். அது பொய்யாகாது அது பொய்க்காது (பெறுவது உறுதி) அருந்த ஏமாந்த நெஞ்சம் உண்பதற்கு ஆசைப்பட்ட நெஞ்சே ஏமாந்து விட்டோம் என்று; வருந்த வேண்டா - வருந்த வேண்டாம்; அவன் தாள் வாழ்க- அவன் தாள் வாழ்வதாக.

அருஞ் சொற்கள் :

பயின்று - தொடர்ந்து;

தலைநாள் - முதல் நாள்;

கோடு - கொம்பு

பொருள்:

நாம் ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல தொடர்ந்து பல நாளும் பலரோடு கூடச் சென்றாலும் முதல் நாளினைப் போலவே விருப்பத்துடன் உதவும் பண்புடையவன். அணிகலம் அணிந்த யானையினையும் விரைந்து செல்லும் தேரையுமுடைய அதியமான் பரிசில்தர காலம் சிறிது தாழ்ந்தாலும் தாழாவிடினும் அப்பரிசில் யானையினது கொம்பிடை வைத்த கவளம் போல நம் கையில் உள்ளது. அது தப்பாமல் கிடைக்கும். உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே! ஏமாந்து விட்டோம் என்று வருந்தாதே. அவன் தாள் வாழ்க.

பாடல் பாடிய சந்தர்ப்பம் :

ஒரு நாள் ஒளவையார் அதியமானிடம் பரிசில் வேண்டி பாடச் சென்றார். ஔவையாரிடம் அஞ்சி மிக்க மதிப்பும் விருப்பமும் உடையவன். இதனால் அதனை கொடுக்காது சிறிது நேரம் தாழ்த்தினான். ஔவையாரின் நெஞ்சில் சிறிது வருத்தம் உண்டானது. ஆயினும் அரசனது மனப்பாங்கை அறிந்திருந்த ஔவையார் தனது நெஞ்சிற்கு, நெஞ்சே வருந்த வேண்டாம் அதியமானின் பரிசிலைப் பெறும் காலம் நீடித்தாலும் நிச்சயம் கிடைக்கும் இது பொய்யாகாது' எனக் கூறிய சந்தர்ப்பம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக