காசி காண்டம்
1) இதனைப் பாடியவர் கி. பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீரராமபாண்டியர், வட மொழி நூலான சங்கரசங்கிதையில் இருந்து இதற்குரிய பொருள் எடுத்தாளப்பட்டுள்ளது. சங்கர சங்கிதையின் நான்காம்பகுதி காசிக்காண்டம். இது நாற்பத்தொரு பகுதிகளைக் கொண்ட பூர்வ காண்டம், ஐம்பத்தொன்பது பகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டம் என்ற இரு காண்டங்களைக் கொண்டுள்ளது. இது இரண்டாயிரத்து ஐஞ்ஞாற்று இருபத்தாறு விருத்தப்பாக்களால் ஆனது.
2) இப்புராணம் காசிநகரப் பெருமையைக் கூறுவதோடு பிரமச்சரியம். இவ்வாழ்க்கை, மகளிர் பண்பு, வாழ்வொழுங்கு. காலக்கோட்பாடு அறிதல், மறுமையில் பெறும் பேறுகள் என்பன பற்றிக் கூறுகின்றது. இதன் ஆசிரியர் வடமொழிக்கருத்தைத் தமிழில் தந்துள்ளதால் ஆசிரியரின் தனித்தன்மை, கருத்தாற்றல் கற்பனைத்திறன் என்பன வெளிப்படவில்லை.
3) இந்நூலில் உள்ள சிலபாடல்கள் தெரிந் தெடுக்கப்பட்டுத் தனிநூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் ஐந்தாம் பகுதியில் அகத்தியர் இலக்குமியை வணங்கிப் போற்றும் பாடல்கள் ஆறு அமைந்துள்ளன. இவை இலக்குமி தோத்திரம் என வழங்கும். பத்தாம் பகுதியில் எட்டுப்பாடல்கள் 'சிவாட்டகம்' எனத் தொகுக்கப்பட்டுள்ளன. இது மக்கட் பேறு விரும்புவோரால் ஒதப்படும் என்பர்.
4) எழுபத்திரண்டாம் பகுதியில் 'வச்சிர பஞ்சா கவசம்' எனப்படும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதனைப் பன்னிரண்டு பாடல்களாக்கிச் சக்தி கவசம் என ஒதுவர். காசிக்காண்டம் பகுதிகள் ஒவ்வோர் தனித்தனி நூல்களாக வழங்கும் தன்மைகளைப் பெற்றுள்ளன.
5) காசியில் இறந்தோரை விசாலாட்சி தன் ஆடையால் விசிறி ஆறுதல் செய்வாள் என்றும், விசுவநாதர் அவர்கள் செவிகளில் மந்திர தீட்சை கொடுத்து முத்திப்பேறு கொடுப்பர் என்றும் கொள்வர். அதனை,
6) இத்தலம் எய்தி இறக்குனர் யாரும் இளைப்பாற உத்திரியங் கொடு மாதுமை வீசிட உமை ஓர்பால் வைத்து வரும் பொருள் மேவரு தாரக மறை ஓதி முத்தி அளித்திடும் இப்பதி அளவிட முயல்வாரே என்ற பாடல் மூலம் இந்நூல் விளக்குகின்றது.
7) காசி நகரின் சிறப்பையும் சமூக அமைப்பினையும் இந்நூல் விளக்கிக் கூறும் தன்மையினையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக