பகவத் கீதை
பகவத்கீதை என்ற சொல்லுக்கு தெய்வப் பாடல் என்பது பொருள் குருஷேத்திரப் போர்க்களத்தில் பாண்டவ-கௌரவ அணிகளுக்கிடையில் போர்மூளவிருந்த சூழலில் பாண்டவ வீரனான அருச்சுனன் உறவுசார் உணர்வுகளாற் பாதிக்கப்பட்டு மனச்சோர்வடைகிறான். இந்நிலையில் சாரதியாகக் கண்ணன் அவனது மனச்சோர்வுக்கான அடிப்படைகளை அகற்றும் வகையில் புத்தி புகட்டுகிறான். தனது தெய்வீகக் காட்சியை வழங்கி அதன்மூலம் அவனைப் பேரூக்கத்துக்கு நெறிப் படுத்துகிறான். ஈற்றில் சோர்வு அகன்ற அருச்சுனன் கண்ணன் சொற்படி செயற்பட ஆயத்தமாகிறான். மகாபாரதக் கதையமைப்பிலே கீதை உபதேசிக்கப்பட்ட சந்தர்ப்பம் இது.
கௌரவ-பாண்டவர்களுக்கிடையில் நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளை அஸ்தினாப்புரத்து அரண்மனையில் இருந்த திருதராஷ்டிர மன்னன் கேட்டுக்கொண்டபடி. சஞ்சயர் நேர்முக வர்ணனையாக எடுத்துரைத்தார். இவ்வாறு தொடங்கிய கீதை இறுதி இயலின் முடிவுரையும் சஞ்சயர் கூற்றாகவே அமைந் துள்ளது. போர்க்களத்தில் தன்னால் எதிர்க்கப்பட வேண்டிய கௌரவப் படையை நோக்கிய அருச்சுனனுக்கு அதில் தனது உறவினர்களும் நண்பர்களும் வணக்கத்துக்குரியவர்களும் இருப்பதைக் கண்டபோது பாசபந்த உணர்வுகள் மேலிட உடல் தளர்ந்து, மெய் நடுங்கி தேர்த் தட்டில் அமர்ந்து விட்டான். அவனது மனச்சோர்வைப் போக்கி ஆன்ம அறிவை மேன்மையுறச் செய்யும் நோக்கில் கண்ணனால் அருச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்ட கீதையில் எழுநூறு வாக்கியங்கள் இடம்பெற்று உள்ளன. இலட்சம் சுலோகங்களோடு கூடிய மகாபாரதத்தில் பீஷ்ம பருவத்தில் 25ஆம் அத்தியாயத்திலிருந்து 42ஆம் அத்தியாயம் வரை இவ்வுபதேசம் இடம்பெற்றுள்ளது இதில் உள்ள பதினெட்டு அத்தியாயங்களும் மூன்று சட்கங்களாகப் (மூவாது) அத்தியாயங்கள்) பகுக்கப்பட்டு முறையே கர்மம் பக்தி ஞானம் என்னும் மூன்றுக் காண்டங்களைக் கொண்டதாக அமைகின்றது பதினெட்டு அத்தியாயங்களிலும் கர்மயோகம் இராஜயோகம் பக்தியோகம். ஞானயோகம் என்ற நான்கு யோகங்கள் பேசப்படுகின்றன. தொடக்க நிலையில் இருக்கும் கருமயோகம் பின் இராஜயோகமாகப் பரிணமித்து பக்தியோகமாகிப் பின் ஞானமாக முற்றுப் பெறுகிறது. என்பதை இவ்வத்தியாயங்கள் தெளிவுபடுத்துகின்றன இதில் கூறுப்படும் நான்கு யோகங்களும் ஒன்றை விட மற்றது மேலானதென்று கூறவியலாதபடி அனைத்து யோகங்களையும் சமமாகக் காட்டுவது கீதையின் சிறப்பாகும். இவை நான்கும் ஒரே காலத்தில் சேர்ந்து கடைப்பிடிக்கப்படும் போது வாழ்க்கையின் குறிக்கோள் நிறைவேறுவதாகக் கீதை கூறுகிறது.
இந்நூலில் முதலாவது இயல் அருச்கனவிவாத யோகம் அருச்சனனுக்கு ஏற்பட்ட மனத்துயர் இங்கு எடுத்துக் கூறப் பட்டுள்ளது. இரண்டாவது இயல் சாங்கிய யோகம் ஆகும். சாங்கியம் என்பது நிறைஞானம் எனப் பொருள்படும். அருச்சுனனின் மனக் குழப்பத்திற்குரிய அடிப்படை அறியாமையை அகற்றி அவனுக்கு ஆத்ம அறிவு புகட்டும் நிகழ்ச்சி இது 72 சுலோகங்களில் நீண்டமைந்த இந்த இயலில் முதலில் கண்ணன் அர்ச்சனனின் கோழமையைக் கண்டிக்கின்றான்.
"அழியாப் பொருளாகிய உயிருக்காகவோ அன்றேல் அழியும் பொருளாகிய உடலுக்காகவோ கவலை கொள்வது அறிவீனம்"
என்கின்றான். பின்னர் இன்பதுன்பங்களைச் சமமாக நோக்க வேண்டுமென அறிவுறுத்துகிறான். இறுதியாக இவ்வாறு சமத்துவ நோக்குடன் செயல்படும் முற்றறிஞனின் இயல்புகளை விவரிக்கின்றான். இம் முற்றறிஞனை கீதை ஸ்திதப்ரக்ஞன் (நிலையான உணர்வினன்) என்று குறிப்பிடுகிறது. ஆசைகளை அகற்றி புலன்களை ஒடுக்கி. இன்ப துன்பங்களைச் சமமாக மதிப்பவனே முற்றறிஞன். இத்திறன் கைவரப் பெற்றவன் சாந்தி அடைகிறான். அதுவே பிரம்ம நிலைபேறு ஆகும்.
இவ்வாறு இரண்டாவது இயலில் கூறப்பட்டவற்றால் அர்கனனுக்குத் திருப்தி ஏற்பட்டிருப்பின் கீதை அவ்வளவுடன் நிறைவு பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை அர்ச்சுனனுக்கு ஐயமே ஏற்படுகிறது. அவன் வினா எழுப்புகிறான்
செயலைவிட அறிவு சிறந்ததாயின் என்னை ஏன் கொடுந்தொழிலுக்குத் தூண்டுகிறீர் இந்த வினாவுடன் மூன்றாம் இயலான கர்மயோகம் தொடங்குகிறது. அறிவுநிலை முற்றறிவினர்கே (சாங்கியர்) உரியது அர்ச்சுனன் அந்நிலையினன் அல்லன் அவன் செயலாற்ற வேண்டியவன் அதனைத் துறந்து அவன் விலக முடியாது. அப்படித் துறப்பது பயனும் தராது எனவே கண்ணபிரான் அர்சுனனை சத்திரிய தர்மத்தை மேற்கொள்ளும்படி கர்மயோகம் பற்றிக் கூறுகிறான். கருமத்தைச் செய்தற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு அதன் பலனுக்கு நீ உரிமை பாராட்டக் கூடாது. பலனைக் கருதி வினையைச் செய்யாதே. அதே போலக் கடமையைச் செய்யாமலும் பின்வாங்காதே" என்று கூறி சத்திரியருக்குரிய ("துஷ்ட நிக்காரக இஷ்ட பரிபாலன ) தலையாய கடமையை வலியுறுத்துகிறான். அடுத்து வரும் ஞானகர்மஸந்யாஸ யோகம் ஸந்யாஸ யோகம் ஆகிய இரு இயல்களுள்ளும் கர்ம யோகத்தின் விரிநிலை விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு செயல்புரியும் நிலையில் பற்றின்றி இருப்பதற்கான வழிநிலையாக தியான யோகம் கூறப்படுகிறது. புலனடக்கம். மனவடக்கம். அறிவினாலும், அனுபவத்தாலும் திருப்தி அடைதல் ஆகியன மூலம் இறைவனைச் சரணடைதல் இதில் விபரிக்கப்பட்டுள்ளது.
7-12 வரையான இயல்கள் சரணாகதி அடைவதற்குரிய பரம் பொருளின் பரத்துவம். சரணடைவதற்கான அணுகு முறைகள் ஆகியன பற்றிக் கூறப்படுகின்றது. இதில் முதல் நான்கு இயல்களும் உலகின் தோற்ற. ஒடுக்கத்திற்கு காரண கர்த்தாவாக கண்ணன் உள்ளதைப் பேசுகின்றது. இதை நிரூபிக்கும் விதத்தால் தன் ஒப்பற்ற விஸ்வரூபத்தை அர்ச்சுனன் தரிசிக்கும் வகையில் காட்டுகிறான். அதனைப் பற்றி 11ஆம் இயலான விஸ்வரூப தர்சன யோகம் விபரிக்கிறது.
இவ்விளக்கங்களுக்குப் பின்பும் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு கண்ணன் தரும் விரிவுரைகளாகவே 13முதல் 18 வரையான இயல்கள் அமைகின்றன. 13ஆம் இயல் உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசுகிறது. அடுத்து வரும் இயல் முக்குண இயல்புகளை விபரிப்பது ஆகும். 15ஆம் இயலில் பிரபஞ்சம். மூலப் பிரகிருதி என்பவற்றிலிருந்து விடுபட்ட நிலையிலுள்ள புருஷோத்தமனாகிய தனது இயல்பைக் கண்ணன் கூறுகிறான். 16ஆம் இயல்பு தெய்வசம்பத்து அசுரசம்பத்து என்னும் பெயர்களில் நல்லோரியல்பு. தீயோரியல்பு என்பனவற்றை வேறுபடுத்தி இயம்புகின்றது. 17ஆம் இயல் முக்குணங்களுடனும் செயற்படுவோர் இயல்பு கூறுகின்றது. இறுதியாகவுள்ள 18ஆம் இயல் "மோகவுசன்யாஸ யோகம்"
"என்னிடம் முழுமையாக உன்னை ஒப்படைத்து விடு என்ற சரணாகதி மார்க்கத்தை முன்வைக்கிறது. இவ்வுபதேசங்கள் அனைத்தையும் கூறிய பின் "தனஞ்சயா உன் அறியாமை நீங்கிற்றா" என்ற வினாவுடன் போதனையை நிறைவு செய்கிறான்.
இந்து சமயத்தின் ஆதார நூல்களாகக் கொள்ளப்படும் "பிரஸ்தானத்திரையத்தில் (உபநிடதம். பிரம்ம சூத்திரம் பகவத்கீதை) ஒன்றாகக் கருதப்படும் பகவத்கீதையை பொதுவாக வேத இலக்கியத்தின் -குறிப்பாக உபநிடதங்களின் சாரம் என்பது மரபு. கீதையின் ஒவ்வொரு இயலின் இறுதியிலும் 'இதிஸ்ரீமத் பகவத்கீதாஸீபநித்ஸீ என அமையும் தொடர் இந்நூல் ஒரு உபநிடதமாகவே கணிக்கப்பட்டு வந்தமையை உணர்த்து வதாகும். கீதைப் பதிப்புகளின் முன்னீடாக அமைந்த தியான சுலோகங்களில் ஒன்று இதனை உபநிடதப் பசுக்களின் பால் என வர்ணிக்கிறது.
"உபநிடதங்கள் யாவும் பசுக்கள்: பால் கறப்பவன் கோபால நந்தன். (கண்ணன்) அருச்சுனன் பசுக்கன்று அருந்துவோர் பேரறிவாளர். (இவ்வாறு இருந்தப் பெறும்) கீதை ஆகிய அமிழ்தம் மேன்மை மிக்க பால் ஆகும்"
இவை கீதையை உபநிடதங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டும் சான்றுகளாகும். அமைப்பு நிலையில் கீதை உபநிடத மகாவாக்கியமான 'தத்துவமஸி' என்பதன் விளக்கமாக உளது என்ற கருத்து அறிஞர் மத்தியில் நிலவுகிறது. கீதைக்கு உரை வகுத்தோரில் ஒருவரான சுவாமி சித்பவானந்தர் தமது முகவுரையில் இதனைச் சுட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக