1.10.25

A/L மானுடம் தழுவிய கவிஞர்கள் கட்டுரை

 

மானுடம் தழுவிய கவிஞர்கள்

இவ்வாண்டு தமிழ் கூறும் நல்லுலகம் மகாகவி சுப்பிரமணியப் பாரதியாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் பாரதிக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. சில மொழிகளில் பாரதியின் ஆக்கங்கள் பெயர்க்கப்படுகின்றன. தமிழ்க் கவியாகத் தோன்றிய பாரதி, நாளடைவில் அனைத்திந்தியக் கவியாகவும் உலகப் பெருங் கவிஞருள் ஒருவனாகவும் ஏற்றுக் கொள்ளப்படும் நிலை எழுந்துள்ளது. இப்பெருமை பாரதிக்கு எவ்வாறு கிட்டியது? அவனது உள்ளார்ந்த ஆற்றலையும் உலக நோக்கையும் பலரும் உணரத்தொடங்கியதும் அவன் ஒரு மகாகவி என்னும் உண்மை உறுதிப்படலாயிற்று. இலக்கிய கர்த்தாக்களின் புகழுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு.

உலக இலக்கிய ஆசிரியர்களின் உன்னதமான வரிசையில் பாரதியாரை வைத்து நாம் எண்ணுவதைப் போலவே தமிழ் இலக்கியப் பரப்பிலும் காலத்துக்குக் காலம் உருவாகிய பெரும்புலவர்களின் வரிசையில் அவரை வைத்துப் பாராட்டுகின்றோம். வள்ளுவர், இளங்கோ, கம்பர். பாரதி என்று வரிசைப்படுத்துவது இப்பொழுது வழக்கமாகிவிட்டது. கால அடைலை ஒட்டியது இவ்வரிசை. சங்ககாலத்தில் வாழ்ந்த சான்றோரில் ஒருவரான பரணரிலிருந்து நமது காலத்தில் வாழ்ந்த பாரதிதாசனார் வரையில், தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் சிறப்புக்குரிய புலவர்கள் எத்தனையோ பேர் தோன்றியிருக்கின்றனர். ஆயினும் மகாகவிகள் என்று விதத்துரைக்கக் கூடியவர்கள் வெகு சிலரே.

ஆற்றல் வாய்ந்த கவிஞராக விளங்கிய பாரதியாரே தனக்கு முன் சென்ற கவிகுல திலகங்களைத் தமிழ்ப்பெருங் கவிஞரை நினைவு கூர்ந்த வேளைகளில், வள்ளுவர், இளங்கோ, கம்பர் ஆகிய மூவரையுமே குறிப்பிட்டிருக்கிறார். ஒளவையார் முதல் இராமலிங்கர் வரை பல புலவர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் சிறப்பியல்புகளை விவரித்திருக்கிறாரெனினும் வேற்று மொழியாளரும் ஏற்றுப் போற்றக்கூடிய தமிழ்க் கவிஞர்களாக முற்கூறிய மூவரையுமே குறிப்பிட்டார். பாரதியாரின் கவிதை களையும் கட்டுரைகளையும் ஏனைய படைப்புக்களையும் தமிழுலகம் உவந்து அங்கீகரித்துக் கொண்டிருப்பதைப் போலவே அவரின் அபிப்பிராயங்கள் பலவற்றையும் அடிப்படை உண்மைகளாக ஏற்றுக்கொண்டுள்ளது. வள்ளுவரும், இளங்கோவும், கம்பரும் பாரதிக்கு முன்னரே தமிழ் இலக்கிய உலகில் பெருமைக்குரியவர்களாய்க் கருதப்பட்டவர்கள். "கல்வியிற் பெரியர் கம்பர்" என்ற முதுமொழி நன்கு பிரசித்த மானதே.

வள்ளுவரின் குறளடிகளை எடுத்தாளாத தமிழ்ப்புலவர்கள் இல்லை என்றே கூறி விடலாம். சிலம்பின் செல்வாக்கு நாட்டார் இலக்கியம் வரை படர்ந்திருப்பதை நாம் அறிவோம். ஆயினும் முப்பெரும் கவிஞர்களைப் பாரதியார் சிறப்பித்துக் கூறியபின் அதுவே நம்மவர்க்கு ஆதாரமான அளவு கோலாயிற்று. பாரதியார் பாராட்டியதாலும் முன்சென்ற மூவர்க்கும் பெருமை பெருகியிருக்கிறது.

இவ்விடத்தில் ஒன்று கவனிக்கத்தக்கது. தனக்கு முன்னிருந்த பெருங் கவிஞரை இனங்கண்டு வரிசையறிந்து பாரதியார் கூறும் பொழுது அறிந்தோ அறியாமலோ தனது இலக்கிய நோக்கினை அடிப்படையாகக் கொண்டே அவர்களை வரிசைப்படுத்தியிருப்பான் என்று கூறுவது தவறாகாது. பொதுவில் நாம் "இலக்கியம்" என்று கூறும்பொழுது நம் உள்ளத்தில், சிந்தனையில் பல எண்ணக்கூறுகள் ஏககாலத்தில் எழுகின்றன. ஒருவரது கல்வி, பயிற்சி, உணர்வு, அனுபவம், உலகநோக்கு இவற்றுக்கேற்ப இலக்கியம் பற்றிய 'வரைவிலக்கணம்' வேறுபடும். எனினும் சாதாரணமாக சொல்லலங்காரம், சப்தநயம், உவமை, உருவகம் முதலிய சிறப்புக்களும் உணர்வினைத் தாக்கி வாழ்க்கைக்குப் புதிய விளக்கத்தைத் தரவல்ல கருத்துமே கவிதைக்கு உயிர்நாடியாக இருப்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வர். இது ஒரு கவிஞனின் பொது இலக்கணம். எல்லாக் கவிஞர்களுக்கும் இச்சிறப்பியல்புகள் ஏதோ ஒரு அளவில் அமைந்திருத்தல் வேண்டும். இவர்களுள் பெருங் கவிஞராகப் பரிணமிப்பவர்கள் மொழியாற்றல் முதலியவற்றைக் குறைவின்றிப் பெற்றிருக்கும் அதே வேளையில், தாம் வாழும் காலத்துச் சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை அறிந்து, அவற்றுக்குப் பரிகாரம் காண முற்படுபவர்களாகவும் இருக்கின்றனர். தத்தம் அனுபவங்களின் துணை கொண்டு கவிபாடத் துவங்கும் பலர் அவ்வதுபவங்களின் மட்டத்திலேயே தங்கிவிடுகின்றனர். ஆனால் பெருங்கவிஞன் தன் சொந்த அநுபவங் களை மாத்திரம் பொருளாகக் கொள்ளாது மனுகுலத்தின் நிலைமையினை உணர்ந்து அதனோடு தாள் கலந்து எழுதுகின்றான். உதாரணமாகப் பாரதி அடிமைப்பட்டுக் கிடந்த பாரத சமுதாயத்தில் வாழ்ந்தவன் தன்னளவிலும் தனது சமுதாயத்தைப் பொருத்த அளவிலும் அடிமைத்தனத்தை அறிந்தவன். அடிமைத்தனத்தை உள்ளும் புறமும் கண்டவன். அது அவனது அடிப்படை அறுபவம். அவ்வநுபவத்துடன் உலகை நோக்கிய பொழுது வேறுபல சமுதாயங்களும் நாடுகளும் அடிமைத்தனத்திலும் தாழ்வுற்று இழி நிலையிலும் அல்லற்படுவதைக் கண்டார். அங்கே பொதுமை உணர்வு எழுகிறது. 'மண்ணுலகத்து மானுடன் தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுக' என்று உலகளாவிய கண்ணோட்டத்தில் அவன் குரல் எழுப்பினான். இந்த உணர்வுடனேயே பழந்தமிழ்ப் பனுவல்களையும் நோக்கினான்.

வையத்தில் மானுடன் வாழ்வாங்கு வாழ வழிகாண முற்பட்ட வள்ளுவன், இராமராச்சியம் என்ற கற்பனைக்கு அடிப்படையான இலட்சியமான அரசு ஒன்றை இலக்கியத்தில் உருவாக்கிய கம்பன், அறம், அரசியல், வாழ்க்கை இவற்றுக்கிடையே இருக்கக்கூடிய தொடர்பு எத்தகையது என்பதைக் குடிமக்கள் காப்பியம் ஒன்றின் மூலம் அலசி ஆராய்ந்த இளங்கோ ஆகியோரைப் பாரதி கண்டான். இம்மூவருமே தனி ஒரு அரசனைப்பற்றியோ, தெய்வத்தைப்பற்றியோ, வள்ளலைப்பற்றியோ, அல்லது குறிப்பிட்ட குலம், சாதி என்பனவற்றையோ பாடினார் அல்லர். மனுகுலம் பற்றிப் பாடினர். "மானுடம் வென்றதம்மா என்றே கம்பனும் குறிப்பிட்டாள். தாம் வாழ்ந்த காலத்துச் சமுதாய நிறுவனங்களும் நியதிகளும் குறைபாடுடையவை என்னும் நம்பிக்கையுணர்வின் உந்துதலினாலேயே இப்பெருங் கவிஞர்கள் மானுடன் கேடின்றி வாழத்தக்க கற்பனை உலகுகளைப் படைக்க முற்பட்டனர்.

காலத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்கள், காலத்தைக்கடந்து சிந்தித்தனர், செயலாற்றினர். அதனாலேயே காலத்தை வென்ற களிஞராகினர். வள்ளுவன் வகுத்த அறம் அவன் காலத்து நடைமுறைகளின் திரட்சி அன்று மனிதன் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவன் விழைந்த சமுதாய நெறியை நூலில் வடித்தான்.

தனது காலத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் உணர்வு பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் தெளிந்து கொள்ளும் ஒருவனே கால உணர்வுடன் செயற்பட முடியும். அவன் கூறும் முடிவுகள் பூரணமானவையாக அமையாமற் போகலாம். ஆனால் இவ்வுலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியவுடனேயே அவனது படைப்புக்குத் தனியாற்றல் பொருத்தி விடுகின்றது. அத்தகைய ஆற்றலை அளவு கோலாகக் கொண்டே பெருங்கவிஞர்களை இனங்கண்டு கொள்கின்றோம். அந்த முறையிலேயே வள்ளுவர். இளங்கோ, கம்பன், பாரதி முதலியோர் மகாகவிகள் என மதிக்கப்படுகின்றனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக