2.10.25

A/L மானுடம் தழுவிய கவிஞர் வினா விடை

மானுடம் தழுவிய கவிஞர்

வினா விடைகள் :

1. மானுடம் தழுவிய கவிஞர் என்ற இக் கட்டுரையில் ஆசிரியர் கூறவந்த விடயம் என்ன?
வள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி ஆகிய கவிஞர்கள் தமது படைப்புக்களை மானுடம் பயனுற வாழ்வதற்கு கூறியதோடு, காலத்திற்கேற்ப சமூகம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற உணர்வையும் வெளிப்படுத்தி இருந்தமையால் அவர்கள் மானுடம் தழுவிய மகா கவிஞர்கள் என நிலைபெற்றனர்.

2. அதனை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் என கூறுக?
பாரதியின் அபிப்பிராயங்களை அடிப்படை உண்மை களாக உலகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறி, பாரதியாரே வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோரை மகா கவிஞர் என கூறியுள்ளார் என தன் கருத்தை நிறுவ முற்பட்டமை.
நான்கு கவிஞர்களும் தமது சொந்த அனுபவங்களுடன் உலகளாவிய கண்ணோட்டத்தில் பொதுமை உணர்வுடன் படைப்புக்களை படைத்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டிக் கூறுதல்.
ஆய்வு நிலைப்பட்ட நியாயங்களை எடுத்துக்காட்டி வெளிப்படுத்தியமை.

3. வள்ளுவர், இளங்கோ, கம்பர் ஆகிய மூவரையும் பாரதி மகா கவிஞர் என குறிப்பிடுவதற்கான காரணத்தை கட்டுரை யாசிரியர் எவ்வாறு வெளிப்படுத்துகின்றார்?
வள்ளுவர் :
இவரது குறள் அடிகளைப் பயன்படுத்தாதவர் எவருமேயில்லை.
மானுடன் வாழ்வாங்கு வாழும் சமுதாய நெறியை காட்டியவர்.
இளங்கோ :
சிலம்பின் செல்வாக்கு நாட்டார் இலக்கியம் வரை சென்றுள்ளமை.
அறம், அரசியல் வாழ்க்கை இவற்றுக்கிடையேயுள்ள தொடர்பை குடிமக்கள் காப்பியத்தினூடாக வெளிப் படுத்தியமை.
கம்பர் :

கல்வியில் பெரியர் கம்பர்' என்ற நிலைத்த வாக்கு.
இராம இராச்சியம் என்ற கற்பனைக்கு அடிப்படையிலான இலட்சிய அரசு ஒன்றினை இலக்கியத்தில் உருவாக்கியமை.
மேற் குறிப்பிட்ட தனித்தனியான சிறப்புக் காரணங் களை விட பொதுவாக சில காரணங்களையும் குறிப்பிடு கின்றார்.
இம் மூவரும் தனி ஒரு அரசனையோ, தெய்வத்தையோ பாடாது மனுக்குலம் பற்றியே பாடியமை 'மானுடம் வென்றதம்மா' என்றார் கம்பர்.
மானுடம் கெடுதலின்றி வாழத்தக்க கற்பனை உலகைப் படைத்தமை.
காலத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்கள் காலத்தைக் கடந்து சிந்தித்து செயலாற்றியமை.

4. இலக்கியம் தொடர்பாக பேராசிரியர் முன்வைத்துள்ள கருத்துக்கள் எவை?
இலக்கியம் என்று கூறும்போது நம் உள்ளத்தில் சிந்தனையில் பல எண்ணக்கூறுகள் ஒரே நேரத்தில் தோன்றுதல்.
ஒருவரது கல்வி, பயிற்சி, உணர்வு, அனுபவம், உலக நோக்கு இவற்றுக்கேற்ப இலக்கியம் பற்றிய வரைவிலக்கணமும் வேறுபடும்.
சொல்லலங்காரம், சப்த நயம்,உவமை, உருவகம் முதலியன உணர்வினைத் தாக்கி வாழ்க்கைக்கு புதிய
விளக்கம் தரும் கருத்துக்களே இலக்கியத்தின் உயிர்நாடியாகும்.

5. மகா கவிஞர்கள் தொடர்பாக அவர்களது பண்பு நலன்கள் தொடர்பாக பேராசிரியர் கைலாசபதி கூறுமாற்றினை துலக்குக?
மகா கவிஞர்கள் குறைவில்லாத மொழியாற்றலைப் பெற்றிருப்பர்.
தமது சமகால சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சினை களை அறிந்து அவற்றிற்குப் பரிகாரம் காண முற்படுவர்.
தமது சொந்த அனுபவங்களை மாத்திரம் பொருளாக கொள்ளாது மனுக்குலத்தின் நிலையினை உணர்ந்து எழுதுவர்.
உலகளாவிய கண்ணோட்டத்தில் பொதுமை உணர் வோடு எழுத முற்படுவர்.
மானுடம் கெடுதலின்றி வாழ்வதற்கேற்ற கற்பனை உலகைப் படைப்பர். அதனால் காலத்தை கடந்து சிந்தித்து செயலாற்றுவர்.

6. காலத்தை வென்ற கவிஞர்கள் என்று பேராசிரியர் கூறும் கருத்தை தெளிவுபடுத்துக?
காலத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலும் காலத்தை கடந்து சிந்தித்து செயலாற்றுதல்.
தமது காலத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் உணர்வு பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் தெளிந்து கொண்டு செயலாற்றுபவர்.
சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தொழிற்படும் ஆற்றல் உடையவர்.

7. பேராசிரியர் கைலாசபதி பாரதியின் படைப்பாற்றலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை இக்கட்டுரையினூடாக எடுத்துக்காட்டுக?
தமிழ்க் கவியாக தோன்றிய பாரதியை உலக கவிஞராக மகா கவியாக காணுதல்.
பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகள், ஏனைய படைப்புக்கள் யாவற்றையும் தமிழுலகம் உவந்து அங்கீகரித்து இருப்பதாக கூறுதல்.
பாரதியின் அபிப்பிராயங்களை அடிப்படை உண்மை களாக உலகம் ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறுதல்.
அடிமைத்தனத்தை உள்ளும் புறமும் கண்ட பாரதி வேறு நாடுகளும் தாழ்வுற்று அல்லற்படுவதைக் கண்டு, 'மண்ணுலகத்து மானுடன் தன்னைக் கட்டிய தளை யெலாம் சிதறுக' எனக் குரல் எழுப்பியதை வியந்து கூற முற்பட்டமை.
வள்ளுவர், இளங்கோ, கம்பன் போன்ற பெரும் புலவர்களுடன் பாரதியையும் இணைத்து மகா கவிஞர் எனக் கூறியமை.

8. பேராசிரியர் கைலாசபதி இக் கட்டுரையில் பயன்படுத்திய மொழிநடைச் சிறப்பினை ஆராய்க?
பழைய செந்தமிழ் நடையை இலகுவாக்கி, உள்ளத் தெளிவும் உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயிரோட்ட மான மொழிநடையாக அமைந்துள்ளது.
தனது எண்ணக்கருத்துக்களை தர்க்க ரீதியாக நியாயப் படுத்தும் செழுமையான மொழிநடையாக உள்ளது.
ஆய்வு நிலைப்பட்ட இயல்பினை சிக்கலற்ற வகையில் எளிமை, தெளிவு, சுவை போன்ற பண்புகளை உள்ளடக்கிய மொழிநடை.
சிறந்த சொற்களை தெரிந்து வாக்கியங்களில் அழகுற அமைத்து பிறமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழ் நடை போலவும் அமைந்துள்ளது.
வாக்கியங்கள் சற்று நீண்டனவாக அமைந்துள்ளன. அவை ஆழமான கருத்தை வெளிப்படுத்த உதவின.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக