6.9.25

G.C.E A/L கட்டுரை தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம் பற்றிய சிந்தனை இன்று வேகமாக வளர்ச்சி பெற்று பலராலும் ஆராயப்பட்டு வருகிறது. எனவே அதுபற்றி சிந்திக்கவேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். தகவலை உருவாக்குவதற்கும் பரிவர்த்தனை செய்வதற்கும் பயன்படும் நவீனத்துவமான தொழில்நுட்பமே தகவல் தொழில்நுட்பம் - எனப்படும். உலகம் உருவாகிய காலத்திலிருந்தே தகவல் தொடர்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தகவல் அளித்தல், கல்வி, பொழுதுபோக்கு எனும் மூன்று வழக்கமான பணிகளைச் செய்வதுடன் பொதுக்கருத்தை உருவாக்குவதற்கும் தகவல் தொடர்பு அவசியமானது. அதாவது மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரை சகல நடவடிக்கைகளும் தகவலுடன் தொடர்புபட்டது. தகவல் அறிவுடன் தொடர்புபட்டது. தர்க்க ரீதியில் ஆராயப்பட வேண்டியது.

மனிதன் தனித்து வாழ முடியாது. அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக்கொண்டே இருக்கின்றனர். எனவே மனித சமுதாயத்தின் தோற்றமே தகவல் பரிமாற்றத்தால் தான் சாத்தியமானது. ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் சில மணி நேரங்களாவது தகவல் பரிமாற்றத்துக்கெனச் செலவிடுகின்றான். தகவல் ஒரு சமூகத்தையும் நாட்டையும் உருவாக்கும் ஆற்றல் பெற்றது. தகவல் பரிமாறிக் கொள்வதில் வயது முதிர்ந்தவர்களும், குழுமங்களும் கூடிய பங்காற்றுகின்றன. ஏனெனில் அவர்களே நீண்டகாலம் வாழ்ந்து உலக அறிவைப் பெற்றவர் என்பதனால் அவர்களுக்கு இப்பொறுப்பு வழங்கப்படுகின்றது. எனவே சரியான முறையில் சரியான தகவலைப் பயன்படுத்தும் போதே நாம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும் என்பதில் ஐயம் இல்லை.

மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே அதாவது மொழி தோன்றுவதற்கு முன்னரே தகவல் இடம் பெற்றுவிட்டது. அது இயற்கையாக உயிரினங்கள் உள்ள இடங்களில் எல்லாம் இடம் பெற்றுவிட்டது. விலங்குகள் பறவைகள் கூட தகவல்களைக் குரலொலிகள், சமிக்ஞைகள் மூலம் பரிமாறிக்கொள்கின்றன. தகவல் பரிமாற்றம் இது தான் என வரையறை செய்யமுடியாது. ஆரம்பத்தில் சைகைகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட தகவல்கள் பின் ஒலிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டன. அவ்ஒலிகளே பேச்சொலிகள் ஆகியன. பேச்சொலிகள் அதன் கூறுகளின் தன்மைக்கேற்ப எழுத்துக்களாக வடிவமைக்கப்பட்டன. ஆகவே தகவல் என்பது ஒரு செயற்பாட்டினை ஆற்றுவதற்கும் அதனை எவ்வாறு ஆற்றுவது என்பதைப் பிறருக்கு அறிவிக்கவும் உதவும் ஒரு ஊடகம். அதாவது தகவல் என்பது ஒரு செய்தி. தகவல் பரிமாற்றம் ஒவ்வொருவருக்கும் இடையே அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும்.

சக மனிதரோடு உறவாட

தான் வரும் உலகத்தைப் புரிந்து கொண்டு செயற்பட

தன்னை வளர்த்துக் கொள்ள

என்று தகவல் அளிப்பவர்களையும், தகவல் பெறுநர்களையும் இணைக்கும் செயற்பாடே தகவல் தொழில்நுட்பம் ஆகும். ஆரம்பகால மனிதர்கள் சைகைகளையும் ஒலிகளையுமே பயன்படுத்தினர். இன்று தொழிநுட்ப வளர்ச்சி காரணமாகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி, மின்னஞ்சல் உருநகல், தந்தி, கணினி, இணையம், குறுந்தகடு என தொழில்நுட்ப சாதனங்கள் பெருகி விட்டன. எனினும் தகவலை வினைத்திறனும், பயனுறுதியும் மிக்க வகையில் செயற்படுத்துவதே அதன் நுட்பமாகும். ஏனெனில் தகவல் பரிமாற்றத்தில் பல்வேறு தடங்கல்கள் ஏற்படுகின்றன. அதாவது.

புலன் ரீதியான தடங்கல்கள்

உள்ரீதியான தடங்கல்கள்

சாதன ரீதியான தடங்கல்கள்

மொழி ரீதியான தடங்கல்கள்

என்பனவாகும். எனவே தகவல் பரிமாற்றம் மிக நுணுக்கமாகச் செய்பட வேண்டிய ஒன்றாகும். தகவல் பரிமாற்றம் பற்றிய பல்வேறுபட்ட செய்திகள் காணப்படுகின்றன. ஜேர்மனியில் குதிரை வடிவ சிற்பமொன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் செதுக்கப்பட்ட சிற்பம் பரிமாற்றமாக இருக்கலாம் என நம்புகின்றனர். பிரான்சில் கடல் நாய், மான் கொம்புகள் போன்றனவும், மொசாப்பெத்தேமியாவில் கண்டெடுக்கப்பட்ட களிமண தட்டுக்கள், சித்திர எழுத்துக்கள் போன்றனவும், எகிப்தில் ஹயரோகிளிபிக்ஸ் என்ற சித்திர வடிவமும், சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட களிமண் தட்டுக்களும், சீனாவின் எலும்பெழுத்துக்களும், குகை ஓவியங்களும் தகவல் பரிமாற்ற சாதனங்களாக விளங்கியிருக்கலாம் என நம்புகின்றனர். தமிழ் நாட்டில் முரசறைந்தும், ஊதுகுழல்களைப் பயன்படுத்தியும், புகை எழுப்பியும், தீப்பந்தங்களைப் பயன்படுத்தியும், புறாக்கள், குதிரைகள் மூலமும் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. அத்துடன் ஒற்றர்கள் மூலமாக இரகசியத் தகவல் பரிமாற்றம், ஓடிச்சென்று தகவல்களைப் பரிமாறுதல், புலவர்களின் இலக்கிய வெளிப்பாடுகள் போன்றனவும் தகவல் பரிமாற்ற சாதனங்களாக விளங்கின.

அச்சியந்திர வருகை தகவல் பரிமாற்றத்தின் ஒரு திருப்புமையம் எனலாம். தொடர்ந்து தொழினுட்ப சாதனங்களால் ஏற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கு தொழில்நுட்பத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சமுதாய மாறுதலுக்கு ஏற்ப நவீன உலகோடும் வலைப்பின்னலோடும் மனிதனைத் தொடர்புபடுத்தி மனிதவாழ்விற்கு பெருந்துணை புரிகின்றது எனலாம். அம் மாற்றங்களின் ஒரு மைல்கல்லாக கணினியும், தொலைபேசியும் சிறப்பிடம் பெறுகின்றன. அவை உலகம் முழுவதுமான தொடர்புகளைப் பேண உதவுவதுடன் தொழில் துறைகளின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றுகின்றன. மின்னல் வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய மின்னஞ்சல், இணையம், கணினிதொழில்நுட்பம் என தொழில்நுட்பங்கள் விரிவடைந்து வருகின்றது. அதாவது தகவல் பரிமாற்ற உலகம் இன்று பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மிகப்பெரிய சமுதாய பொருளாதார மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. உலகையே இணையம் மூலம் இணைத்துள்ளனர். அதாவது காலம், இடம் என்பவற்றை எளிதாகக் கடந்து உலகளாவிய வலைத்தொடர்பை பேணிக்கொள்ள உதவுகின்றது. எனவே இன்று தகவல் பரிமாற்ற உலகம் மனித வாழ்க்கையோடு இணைந்து சொல்லாத செய்திகளையும், சொல்லியறிந்த விடயங்களையும் அறிய வைத்து உலகவலைப்பின்னலோடு மனிதனைத் தொடர்புபடுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ உதவுகின்றது. எனினும் தகவல்கள் மிகவும் துல்லியமானதாகவும், சுருக்கமானதாகவும், எளிமையானதாகவும், எல்லோருக்கும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் அமைவதுடன் நம்பகரமானதாக அமைதல் வேண்டும் அத்துடன் உரிய நேரத்தில் தகவல் சென்றடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

தகவல் தொழில் நுட்பம் என்ற சொல் நவீன உலகின் தாரக மந்திரம். இன்றைய உலகின் புதிய போக்குகள் அனைத்துமே தகவல்தொழினுட்பத்தின் ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன. தற்காலத்தில் கணினி முதலிய தொடர்பாடல் சாதனங்களும், நவீன பிற இலத்திரனியல் சாதனங்களும் ஒன்றுசேர்ந்து தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றுகின்றன. கணினித்தரவைப் பெற்றுக் களஞ்சியப்படுத்தி அவற்றை நிரற்படுத்தி தகவல்களை அளிக்கும் தன்னியக்க இலத்திரனியல் சாதனம். இதன் விளைவாக தகவல் தொழினுட்பத்தின் வளர்ச்சி இன்று பன்மடங்கு வேகமாகப் பரவி உலகை வலம் வருகின்றது. எனவே கணினிப் பொறிமுறை தொழில்நுட்பம் தொடர்பியல் கருவிகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது எனலாம். இவ்வாறு புதிய அறிவுத்துறைகளின் வளர்ச்சி தகவல் தொழினுட்பத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல் எந்த ஒரு செயற்பாட்டிலும் தீமைகளும் ஏற்பட இடமுண்டு. சாதாரண மொழிவழித்தகவல்கள், சமிக்ஞைகள், குறியீடுகள் ஒரு தனி மனிதனையோ அல்லது ஒரு சில நிறுவனத்தையோ மட்டும் பாதிக்கும். ஆனால் தகவல் தொழினுட்பத்தில் ஒரு சிறு தவறு ஏற்படுமாயின் அதனால் முழு உலகமும் பாதிக்கப்படுவதுடன் அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது. எனவே மனித நாகரிகத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை படிப்படியாக வளர்ச்சி பெற்று முழு உலகையும் தமது ஆதிக்கத்துள் கொண்டு வந்துள்ளது. எனவே சரியான முறையில் பயன்படுத்தும் போது தகவல் தொழினுட்பம் மனித வாழ்வை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக