6.9.25

சங்ககால இலக்கியப் பண்பு

சங்ககாலம்

சங்ககால இலக்கியங்களின் இலக்கியப் பண்புகளை விளக்குக?

தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆரம்பமாக அன்புத்தமிழ் இலக்கியங்களால் அலங்கரிக்கப்பட்ட காலம் சங்ககாலம். முடியுடை வேந்தர்களும் பாரி, ஓரி முதலான குறுநில மன்னர்களும் தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்தகாலம். செந்தமிழும் வீரத்தமிழர் பண்பாடும் சேர்ந்திருந்து. குடித்தனம் நடாத்தியகாலம். காதலும் வீரமும் தமிழர் வாழ்நெறியிலும் வாழ்நெறியைப் படம்பிடிக்கும் இலக்கியங்களிலும் தனியாட்சி செலுத்தியகாலம். கி.பி 1ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான இக்காலத்தில் சங்கங்கள் கூடியிருந்து சமைத்த முத்தமிழில் சமைந்த இலக்கியங்கள் பதினெண்மேற்க்கணக்கு நூல்கள் என சிறப்பாக அழைக்கப்படுகின்றன. இவை பத்துப்பாட்டு நூல்கள் எட்டுத்தொகை நூல்களென இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு நூல்களை பின்வரும் வெண்பாவால் அறியலாம்.

முருகு பொருநாறு பாண்இரண்டு முல்லை

பெருகுவள மதுரைக்காஞ்சி - மருவினிய

கோலநெடு நல்வாடை கோலகுறிஞ்சிப்பட்டினப்

பாலை கடாத்தொடும்பத்து"

இவ்வாறே எட்டுத்தொகையில் உள்ள இலக்கியங்களையும் மேல்வரும் வெண்பாவால் அறியமுடிகின்றது.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்தபதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று

இத்திறத்த எட்டுத்தொகை |

மேற்கூறப்பட்ட சங்க இலக்கியங்கள், இயற்கையை இணை பிரியாத அங்கமாகக்கொண்டு அமைந்திருக்கும் பண்புடையனவாகக் காணப்படுகின்றன. சங்கமக்கள் இயற்கை நிலப்பிரிவுகளுக்கு ஏற்ப வாழ்ந்து இயற்கை லாவண்யத்தில் தம்மனதைப் பறிகொடுத்து இயற்கை ஊட்டும் இயலபுணர்ச்சிக்கு மதிப்பளித்து வாழ்ந்தவர்கள். இதற்கேற்ப சங்கச்சான்றோர்களாகிய தமிழ்ப்புலவர்களும் இயற்கையோடு பின்னிப்பிணைத்திருந்த தமிழர் வாழ்வின் அழகை தம்பாக்களில் பொருத்தமுற அமைத்தளித்தனர். முதற்பொருளாகிய நிலமும் பொழுதும் கருப்பொருளாகிய மா, மரம், புல், உணவு முதலிய இயற்கை பொருட்களையும் உரிப்பொருளாகிய வாழ்வியல் ஒழுக்கத்திற்கு பின்னணியாக அழகுபெற அமைத்திருப்பதை சங்கப்பாக்களில் காணலாம். எனவே இங்கு முதலையும் கருவையும் இணைத்து மக்களது காதல் ஒழுக்கத்தை பாடும் பண்பையும் காணலாம். எடுத்துக்காட்டாக பின்வரும் பாடலைச்சுட்டலாம்.

நின்னேபோலும் ஆலம்மஞ்ஞை

நின்னுதல் நாணும் முல்லை மலர

நின்னே போலமாமருண்டுநோக்க

நின்னே உள்ளவந்தனன் நன்னுதல் அரிவைக்காரினும் விரைந்தே"

இப்பாடலில் தலைவன் உன்னைப்போலவே மயில் ஆடவும், உனது நெற்றியைப்போலவே முல்லை மலர் மலர்ந்து மணம் வீசவும், உன்னைப்போலவே மான் மருட்சியுடன் பார்க்கவும், நல்ல நெற்றியை உடைய பெண்ணே உன்னையே நினைந்து வேகத்திலும் விரைவாக வந்தேன். என்று கூறுகின்றான். இங்கு முல்லை நிலக் கருப் பொருட்களாகிய முல்லை, மயில், மான்ஆகியன கூறப்பட்டுள்ளதனால் இடம்பெற்ற ஒழுக்கம் இருத்தல் ஒழுக்கமே என்பதை அறியலாம்.

உள்ளதை உள்ளவாறே கூறுதலும் சங்க இலக்கியப் பண்புகளில் ஒன்றாகும். இங்கு பகுத்தறிவிற்கு புறம்பான கற்பனை இல்லை. புலவர்கள் தாம்கண்டு, கேட்டு, உண்டு களித்தவற்றையே செய்யுட்களில் படைத்தனர். புனைத்துரைத்தவற்றில்கூட நம்பக்கூடியதும் நடக்கக்கூடியதுமான யதார்த்தநெறியில் நின்றே கற்பனைகளாக்கிப் பாடினர். எடுத்துக்காட்டாக ஐங்குறுநூற்றில் உள்ள பின்வரும் பாடலைச்சுட்டலாம்.

 

மறிஇடைபடுத்த மான்பிணைபோலப்

புதல்வன் நடுவணன் ஆகநன்றும்

இனிதுமன்றவர் கிடைக்கை முனிவின்று

நீனிற வியலகங் கவைஇய

ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே"

இப்பாடலில் இல்லறம் தளைக்கிறது காதற்கருவில் இருந்து குழந்தைக்கனி பழுக்கிறது. இன்பக்குழவியை இடையூறு என்று என்னாது மறியிடை மான்போல நடுவே கிடத்திப் பெற்றோர் இருபாலும் துயில்கின்றனர். காதல் அகலுகின்றது. கடமை குறுக்கிடுகின்றது.) என்றவாறாக யதார்த்த வாழ்க்கைச்சூழல் பாடப்பட்டுள்ளதனைக் காணலாம்.

இவ்வாறு உள்ளதை உள்ளவாறு கூறி தேவையற்ற கற்பனைகளுக்கு இடமளிக்காததாலும் இயற்கையோடு ஒட்டி அமைந்தமையாலும் பாடப்படுகின்ற விடயம் மிகச்சுருக்கமாக அமைந்து ஒரு பாடலில் ஒரு செய்தியைக் கூறுகின்ற போக்கு இக்கால இலக்கியங்களில் உதயமானது. அகப்பாடல்கள் புறப்பாடல்கள் என்பன எவ்வளவு நீண்டு இருந்தாலும் குறுகியிருந்தாலும் அவை ஒரு பாடலில் ஒரு செய்தியையே கூறின. இம்மரபானது அடுத்துவரும் காலப்பகுதியில் ஒரு பாடலில் பல செய்தியைக் கூறுவதாக மாற்றம் அடைகிறது. உதாரணமாக சிலப்பதிகாரம், திருக்குறள் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

இயற்கை நிகழ்ச்சிகளையும் பொருட்களையும் உவமை களாகவும் வர்ணனைகளாகவும் கையாண்டமையும் சங்க இலக்கிய பண்பெனலாம். தாம் கூறவிளைந்த பொருளை கருத்தாளத்தோடும் கவித்துவத்தோடும் கவிகளில் படைத்தளிப்பதற்கு இயற்கைக் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையுமே புலவர்கள் துணைக்களைத்துக் கொண்டுள்ளனர். முன் பின் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலினால் இதயம் மாறிப்புகுந்து இரண்டறக் கலந்த நிலையை

யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளீர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப்பெயல்நீர்போல

அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே

எனவரும் குறுந்தொகைப்பாடலில் தலைவன் தலைவிக்கு செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அந்நிலத்தின் நிறத்தோடு இரண்டறக் கலந்ததுபோல் நமது உள்ளங்கள் கலந்துவிட்டது என்று கூறுகின்றான். இங்கு அன்பினால் நெஞ்சங்கள் இரண்டு சங்கமமாகும். நிலையை ஆழமாக விளக்க செம்மண்நிலம், மழைநீர் என்னும் இயற்கைப் பொருட்கள் உவமையாக்கத்துக்கு எடுத்தாளப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டலாம்.

இன்னபொருளை இவ்வாறுதான் பாடவேண்டும் என்ற வரையறைக்கு உட்பட்டனவாகவும் சங்க இலக்கியங்கள் அமைந்து கிடக்கின்றன. அகத்திணையை எடுத்துக்கொண்டோமாயின்| இவ்வகையான காதலை இவ்வகையாகத்தான் பாடுவது என்ற கட்டுப்பாடே அகத்தினையின் சிறப்பாக அமைந்துள்ளது. காதற் பொருளிலும் கட்டுப்பாடு; அதனைச் சொல்லும் முறையிலும் கட்டுப்பாடு இவை அகத்திணை நெறிகள். காதலுலகம் மிகப்பெரியது அங்கே கள்ளக் காதல், விட்டோடுதல், சந்தேகம், கட்டாயமணம் எனப் பலவுண்டு. இவற்றையெல்லாம் காவியம் முதலான இலக்கியங்கள் சுவைபட எடுத்தாண்டுள்ளன. இவை தனிமனிதன் அறிவிற்கு சுவையாகவுள்ளன. ஆனால் தனிமனிதனுக்கும் சமுகத்திற்கும் கேடாகவுள்ளன. இவற்றில் இருந்து விடுபட்டு அகத்திணை அன்புக்காதலை மட்டுமே பாடும்; அறிவுறுத்தும்; இயல்பாக சில சிக்கல்கள் தோன்றும் போது காதலர்களும் உறவினர்களும் எப்படி அன்பாக நடந்து இணைந்து கொள்ள வேண்டுமென வழியும், பொறுப்பும் காட்டும் எடுத்துக்காட்டாக கலித்தொகையில் அமைந்த

அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக்கண்சேந்து

ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்தாறி

இருவர் கட்குற்றமும் இல்லையால் என்று

தெருமந்து சாய்த்தார் தலை |

எனவரும் பாடலில் மகள் ஒருவனோடு காதலுறவு கொண்ட போது பிடிக்காத அண்ணன்மார் அம்பும் வில்லும் கையில் எடுத்து ஒரு நாள் முழுதும் சினந்தனர். பின்பு தங்கை என்ன குற்றம் செய்தாள் அவளை காதலித்தவன் என்ன குற்றம் செய்தான். தம் வாழ்வுக்குரியவர்களை அன்பினால் தேர்ந்து கொள்வது குற்றமில்லை. அதுதானே கற்பு என்று அறிவுவந்து சினம் தணிந்து தாம் வெட்கப்பட்டனராம் என எடுத்துரைக்கப்பட்டதை குறிப்பிடலாம். இங்கு அகத்திணை அன்பைச் சொல்லி நேர்வழி காட்டுகிறது.

சங்க அகத்திணை இலக்கியப்பாக்கள் பெயர்சுட்டாக் காதல் பாக்களாக அமைகின்ற பண்புடையனவாகவும் காணப்படுகின்றன.

மக்கள் நுதலிய அகனைந்திணையும்

சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்

என்கிறது தொல்காப்பியம் பெயர்தாங்கிவரும் பாட்டு காதற்பாட்டு ஆகுமேயன்றி அகப்பாட்டாகாது அகப்பாட்டு பொதுவானது, பெயரில்லாமையால் படிப்பவர் ஒவ்வொருவரும் தமக்கு தமக்கு என்று கொள்ளத்தக்க உரிமையுடையது. தலைவி தன் காதலனுடன் கொண்ட தொடர்புப் பெருமையைக் கூறும் குறுந்தொகைப்பாடல் ஒன்று வருமாறு

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று,

நீரினும் அரளவின்றே; சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

என் காதலனுடைய நட்பு நிலத்தைக்காட்டிலும் அகலமானது, வானத்தைக்காட்டிலும் உயரமானது, கடலைக்காட்டிலும் ஆழமானது. எவ்வகையிலும் அளவை கூறமுடியாத நிறையுடையது. என்று பெயர்சுட்டின்றி வரும்போது இப்பாடல் ஒவ்வொருவருக்கும் உரியதாகின்றது. தலைவன், தலைவி, காதலன், காதலி, தாய், தந்தை, செவிலி, தோழி என்று உறவுப்பெயர் அமையலாம். மலை, கடல், நாடு, ஊர், என்று நிலப்பெயர் அமையலாம். ஆயர், வேட்டுவர், கூத்தர்> பாணன் என்று தொழிற்பெயர் சொல்லலாம் எப்படியும் பெயர் ஒருவரைச் சுட்டாமல் பொதுமை கொள்ளவேண்டும் என்பதே அகப்பாக்களின் மாறாத அமைப்பாகவுள்ளது.

அகத்திணை இலக்கியங்கள் அன்பின் ஐந்திணை முறையில் அமைத்துப்பாடப்பட்டுள்ளன. அவை புணர்தல்> இருத்தல்> ஊடல்> ) இரங்கல்> பிரிதல் என்பனவாகும். இவற்றிற்கு புறம்பாக கைக்கிளை, பெருந்திணை என்னும் இரு ஒழுக்கங்கள் அமைக்கப்பட்டு அகவொழுக்கங்கள் ஏழாகவுள்ளன. இவ்வாறே புறத்திணை இலக்கியங்களிலும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பவற்றறோடு காஞ்சித்திணை பாடாண்திணையும் சேர்க்கப்பட்டு புற ஒழுக்கங்கள் ஏழாக உள்ளன. உள்ளுறை உவமைகளையும் இறைச்சிப் பொருளையும் கொண்டிருத்தல் என்ற பண்பினாலும் சங்க இலகக்கியங்கள் சிறப்புப்பெற்றுத் திகழ்கின்றன. உள்ளுறை உவமைகள் நேரடியான கருத்தொன்றை உணர்த்தும் அதேவேளை தொடர்புடையவர்கள் மட்டும் உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளுறையான கருத்தினையும் புலப்படுத்தும் வகையில் உவமைகளைக் கொண்டமைகின்றன. வெளிப்படையாகக் கூற விரும்பாத ஒன்றைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்கே இவ்வகையான உவமைகள் பயன் செய்யப் பட்டுள்ளதனைக் காணலாம். குறுந்தொகைச் செய்யுளொன்றில் தோழி திருமணத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும்போது,

சிறுகோட்டப் பெரும்பழம் தூங்கியவாங்கு இவள்

உயிர் தவம்சிறிது காமமோ பெரிது

என்று தலைவனுக்கு கூறுகின்றாள். இப்பாடல்வரிகளில் சிறிய காம்பில் பெரிய பலாப்பழம் தொங்குவது போல் தலைவியினது சிறிதான உயிரில் உன்மீது கொண்ட பெரிதான காதல் தொங்குகின்றது என்பது மேற்கூறப்பட்ட உவமையுணர்த்தும் நேரடியான கருத்தாகும். சிறியகாம்பு பலாப்பழச் சுமையை தாங்க முடியாமல் முறிந்து பழம் கீழே விழுந்து பயனற்றுப்போகலாம். அதேபோல் தலைவி உயிர், உன்மேல்க்கொண்ட காதல் சுமையை தாங்கமுடியாமல் நீங்கிப்போகும் நிலை உருவாகலாம். அதற்குமுன் விரைந்து திருமணத்தைச் செய்துகொள் என்பது உள்ளுறையான கருத்தாக அமைந்துள்ளது. இத்தகைய உவமைச் சிறப்புக்களால்த்தான் ஈராயிரம் ஆண்டுகள் மறைந்தும் சங்கத்தமிழ் இலக்கியங்கள் காலத்தால் கரவாத உயிர் ஓவியங்களாக இன்றுவரை ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.

முடத்தாழை பூமலர்ந்தவை போல்

புள்ளல்கும்

என்ற பாடல் வரிகளிலும் உள்ளுறை உவமைச்சிறப்பைக் காணலாம்.

புலப்படுத்த விரும்பிய கருத்தொன்றை மறைமுகமாக எடுத்துரைப்பது இறைச்சிப் பொருளாகும். இதனை இறைச்சிதானே பொருள் புறந்ததுவே என்றவரிகளினூடாக அறிந்துகொள்ளலாம்.

சிறுவெண்காக்கைபலவுடன் ஆடும்

என்ற பாடல்வரிகளில் சிறிய காக்கைகள் ஆணும் பெண்ணும் நீர்ப்புடைத்தாடுவது நேர்ப்பொருளாகும். ஆனால் இங்கு அந்நேர்ப் பொருளுக்கு அப்பால் பிறிதொரு கருத்து இறைச்சிப்பொருளாக விளங்குகின்றது. அதாவது தலைவி முன்னரே தலைவனுடன் அந்த நீர்துறையில் நீராடியுள்ளா . இப்பொழுது தலைவன் இல்லாமல் அந்த நீர்த்துறையை தனித்து நோக்கும்போது மிகவும் கவலை தருவதனால் அந்த நீர்த்துறையிலே தலைவனோடு மீண்டும் நீராட வேண்டும் என்பது இறைச்சிப் பொருளாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்கள் யாவும் கூற்று வடிவிலேயே அமைந்துள்ளன. இயற்கை நெறிக்காலமாக இருப்பதால் உணர்வுகளை உள்ளது உள்ளபடியே வெளிக்காட்டுவதற்கு கூற்று வடிவங்கள் பெரிதும் பயனுடையதாக காணப்பட்டதனால் அவ்வாறு அமைந்துள்ளன எனலாம். தலைவன், தலைவி, புலவர்> தோழி, செவிலி, பாணன், பாடினி முதலியோரில் யாரேனும் ஒருவர் கூற்றாகவே பாடல் அமையும். தலைவி கூற்றாக அமைந்த பின்வரும் பாடலை எடுத்துக்காட்டாகச் சுட்டலாம்.

அன்னாய் வாழிவேண்டு அன்னைநம் படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு

உவலைக் கூவற் கீழ

மானுண்டெஞ்சிய கலிழிநீரே

இப்பாடலில் தலைவனுடன் உடன் போக்காகச் சென்ற தலைவி | சிலநாட்கள் சென்றபின் தாய்வீடு திரும்பியவேளை பெற்றோருக்கு, தலைவனுடன் சென்ற காலத்தில் இலைகள் அழுகியிருப்பதும் வழிவிலங்குகள் உண்டு எஞ்சியிருப்பதுமான கழிவுநீர் தேனை விட இனியதாக இருந்தது என்று தன்கூற்றாகக் கூறுகின்றாள்.

சங்க இலக்கியங்கள் மனித நேயம்> உலகநீதி> நெறிமுறைகள் என்பவற்றையெல்லாம் வலியுறுத்தும் பண்புடையனவாகக் காணப்படுகின்றன. ஒருபொழுது பூஞ்சோலை ஒன்றினூடாக சென்று கொண்டிருந்த தலைவன்> தன் தேரில் இருந்து கிண்கிண் என்று எழும் ஓசை> இன்பவேட்கைக்காகப் பூஞ்சோலையிற் பிணைந்து கிடக்கும் வண்டுகளின் இன்பத்தைக் கலைக்கலாமா என்று தேர்மணிநாவைக் கட்டினான் என்பது எத்தகைய மனிதநேயம் இதனை பின்வரும் அகநானூறுற்றுப் பாடல் விளம்பிநிற்கின்றது.

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாதுண்பறவை பேதுறலஞ்சி

மணிநா வார்த்த மாண்வினைத்தேரான் |

சங்க இலக்கியங்களில் காணப்படும் மற்றோர் பண்பு அவலச் சுவைதரும் பாடல்களைக் கொண்டமைந்திருப்பதாகும். ஒல்லையூர் நாட்டு மன்னான பெருஞ்சாத்தன் இறந்தபோது குடவாயிற்கீர்த்தனார் என்ற புலவர் பின்வருமாறு இரங்கிப்பாடுவதைக் காணலாம்.)

இளையோர் சுடார் வளையோர் கொய்யார்

நல்லியாழ் மருப்பின் மெல்லவாங்கிப்

பாணன் சூடான் பாடினி அணியாள்

ஆண்மை தோன்ற ஆடவர்க்கடந்த|

வல்வேற்சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ> ஒல்லையூர்நாடே

சங்க இலக்கியங்களில் இதிகாசபுராணக் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற தன்மையையும் காணமுடிகின்றது. அந்தவகையில் பிரகலாதனுடைய கதையின் விபரங்களையும் கௌதமமுனிவரின் தர்மபத்தினியான அகலிகையை இந்திரன் கற்பழித்த கதையின் விபரங்களையும் பரிபாடலில் காண்கின்றோம். அதுபோலவே புறநானூறு

"கடுந்தெற லிராமன் உடன்புணர் சீதையை

வலித்தகையரக்கன் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை யிழைப் பொலிந்தாங்கு

என்ற பாடலில் இராமாயணக்கதையை உள்வாங்கியுள்ளமையையும் காணலாம். சங்கஇலக்கியங்களில் அகவல், வஞ்சி போன்ற பாவினங்கள் கையாளப்பட்டதோடு தூயதமிழில் அமைந்த பாக்கள் சிறிய சிறிய சொற்களில் பாடப்பட்டதோடு தொகைகளையும் அடைகளையும் கொண்டு சுருங்கியவடிவில் அமைந்திருப்பதையும் காணலாம்.

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக